Sunday, March 31, 2013

இனவெறி தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணி

இனவெறி தென்னாப்பிரிக்காவைப் புறக்கணித்தோம், இலங்கையையும் புறக்கணிக்க வேண்டும் என்று மனித உரிமைப் போராளிகளுடன், மனிதாபிமானம் நிறைந்தவர்களும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் சூழலில்,  வெள்ளையரல்லாதவர்களை வன்கொடுமைகளுக்கு ஆளாக்கி , நிறவெறிக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்து தென்னாப்பிரிக்க நாட்டிற்கு கிரிக்கெட் ஆட சென்ற முதல் “வெள்ளையரல்லாத அணி” இலங்கையின் “கலக” அணி என்பதை கிரிக்கெட் விரும்பிகள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் முதல் டெஸ்ட் அணியின் தலைவர் யார்?
இலங்கைக் காக டெஸ்ட் போட்டிகளில் முதல் பந்தை சந்தித்தவர் யார்?
இலங்கையின் முதல் டெஸ்ட் ஓட்டத்தை அடித்தவர் யார்?
இலங்கையின் அறிமுக டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் ஆட்டமிழந்தவர் யார்?
இலங்கை அணியில் இருந்து கிரிக்கெட் ஆட தடை செய்யப்பட்ட முதலாம் நபர் யார்?

இவற்றிற்கு எல்லாம் ஒரே பதில். பந்துல வர்ணபுரா (Bandula Warnapura). இந்தப் பெயரை கடைசி இரண்டு வாரங்களில் ஏதேனும் கிரிக்கெட் இணையதளங்களில் பார்த்து இருந்திருக்கக் கூடும். இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவராக வர முன்னணியில் இருந்தவருக்கு வயது காலை வாரிவிட்டது.  இலங்கையைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார், போப் பதவிக்கு வரமுடியாது ஆனது போல, இதுவும் நல்லதற்குத்தான். இல்லாவிடின், கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரும் களங்கம் ஆகி இருக்கும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆட வரக்கூடாது என்று தடைசெய்யப்பட்டிருக்கும் இலங்கை வீரர்கள் தங்களது கிரிக்கெட் திறனை வளர்த்துக் கொண்டதே, தமிழ் நாட்டு அணியுடன் கோபாலன் டிராபிக்கான ஆட்டங்கள் ஆடித்தான். அப்படி ஆடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில்தான், இலங்கைக்கு பலத்த தயக்கத்துடன் ஐசிசி டெஸ்ட் அங்கீகாரம் கொடுத்தது. டெஸ்ட் அங்கீகாரம் கொடுக்க வைத்ததில், இந்தியா கிரிக்கெட் வாரியம் மிகப்பெரும் லாபி செய்தது என்றும் சொல்வார்கள்.

1982 யில் முதல் நான்கு டெஸ்ட் ஆட்டங்கள் எல்லாம் நல்லபடியாகத்தான் சென்றன. முக்கியமான ஆட்டக்காரர்களைக் கொண்ட இங்கிலாந்தின் கலக அணி ஒன்று , அந்த சமயத்தில் தான், தென்னாப்பிரிக்காவிற்கு சென்று வந்திருந்தது.

இப்பொழுது இலங்கையின் முத்தையா முரளிதரன், எங்களது நாட்டில் எல்லாம் வளமும் நலமுமாக இருக்கின்றது என  அரசாங்கத்தின் ஆளாகச் சொல்வதைப்போல , தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்கள் பாலும் தேனும் அருந்தி மேல்தட்டில் வசிக்கின்றனர்,  நாங்கள் வேறுபாடு காட்டுவதில்லை என அந்த நாட்டின் வாரியமும் காட்டிக்கொள்ள ஆசைப்பட்டு ஒரு வெள்ளையரல்லாத அணியை தென்னாப்பிரிக்காவிற்கு கொண்டு வர விரும்பியது.

எப்படி இப்பொழுது இலங்கை விரித்த வலையில் மற்ற அணிகள் விழுகின்றனவோ, அப்படி, அப்பொழுது, தென்னாப்பிரிக்கா விரித்த வலையில் இலங்கையில் ஒட்டு மொத்த அணியும் சிக்கிக்கொண்டது. வர்ணபுராவுடன், அஜித் டி சில்வா, அனுரா ரனசிங்கே,  மகேஷ் குணதிலகே, டோனி ஒபாதா ஆகிய பன்னாட்டு வீரர்களுடன் சில கிளப் கிரிக்கெட் வீரர்கள் கொண்ட அணி தென்னாப்பிரிக்கா பயணப்பட்டது.

இதில் ஆட்களைச் சேர்த்தவர் என டோனி ஒபாதா முத்திரைக் குத்தப்பட்டாலும், கூட்டுத்திட்டத்தில் இருந்த, துலீப் மெண்டிஸூம் ராய் டியாஸும் கடைசி நேரத்தில் கவிழ்த்து, அடுத்து வந்த ஆட்டங்களில் கேப்டனாகவும் துணை கேப்டனாகவும் ஆக அமைச்சர் காமினி திசநாயகாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். மெண்டிஸும் டியாஸும் இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும், வர்ணபுரா , அவர்கள் கையெழுத்து இட்ட ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாயகனாக கருதப்படும் அர்ஜுன ரணதுங்கா வும் கலக அணியில் சேர விரும்பினாராம். ஆனால் வர்ணபுரா, அன்று பதினெட்டு வயதே நிரம்பிய ரணதுங்கா வயதில் இளையவர், நல்ல எதிர்காலம் அணியில் இருக்கின்றது, என அவரை சேர்க்க மறுத்துவிட்டார்.

சாதாரணமாகவே இரண்டாந்தர அணிதான்,அதில் பாதி ஆட்டக்காரர்கள் இல்லாது, தென்னாப்பிரிக்கா சென்ற இலங்கையின் கலக அணி மரண அடி வாங்கி வந்தது.  தென்னாப்பிரிக்க சென்ற ஆட்டக்காரர்கள் 25 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டனர்.  இலங்கை கிரிக்கெட் வாரியம் என்ன நினைத்ததோ,  தமிழர்களுக்கு எதிரான இனவெறிக் கொடுமைகள் உச்சத்தில் இருந்த சமயத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தடைகளை நீக்கிக் கொண்டது.
தாங்களும் தென்னாப்பிரிக்கா அன்று இருந்த நிலையில் என்றாவது ஒரு நாள் இருப்போம், இந்தத் தடை ஒரு முன்னுதாரணமாக இருந்து தங்களுக்கு எதிராக என்றாவது ஒருநாள் திரும்பிவிடக்கூடாது என்பதனால் கூட தடை நீக்கப்பட்டு இருந்து இருக்கலாம்.

பந்துல வர்ணபுரா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முக்கியப் பொறுப்பில் இருக்கின்றார். இந்த அவமானகரமான கலக சுற்றுப்பயணத்திற்கு காரணமாக இருந்த துலீப் மெண்டிஸும் ராய் டியாஸும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் மிகப் பெரியப் பதவிகளை அடைந்தனர். இதில் சிலர் கிரிக்கெட் பயிற்சியாளர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் வியாபாரிகளாகவும் ஆகிவிட்டனர்.

தென்னாப்பிரிக்காவின் நல்ல குணங்களை நிலைநாட்ட, இலங்கை கலக அணியின் பயணத்தை முன்னோட்டமாகப் பயன்படுத்திக் கொண்ட, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் , அடுத்து மேற்கிந்திய கலக வீரர்களைக் கொண்ட அணியை வரவழைத்து ஆடியது. நகை முரணாக, மேற்கிந்திய கலக அணியில் ஆடியவர்கள் இன்றும் மதிக்கப்படுவதில்லை. ஆனால் இலங்கை  மக்கள், கொத்துக் கொத்தாய் கொலைகள் விழுந்த பொழுதே, கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் என இருப்பவர்கள், சாதாரண கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கா வருந்தப் போகின்றார்கள். யார் கண்டது, எதிர்காலத்தில் இலங்கை தடை செய்யப்பட்டாலும், தமிழகத்தில் இருந்து , கருங்காலிகள் கொண்ட அணியை அங்கு வரவழைத்து ஆடச் செய்தாலும் செய்வார்கள்.