Wednesday, January 09, 2013

சிகரெட் பற்ற வைக்கும் நேருவும் ஹிட்லருடன் கைக்குலுக்கும் சுபாஷ் சந்திரபோஸும்ராமாயணத்தாலும் மகாபாரதத்தாலும் 80 களில் கொஞ்சம் எட்டிப்பார்க்கத் தொடங்கிய “இந்துத்வா” சார்ந்த இந்தியா மனோபாவத்தில் முதலில் அடி வாங்கியது சுதந்திர இந்தியாவைக் கட்டமைத்த நேருவின் பிம்பம்தான். 90 களில் வாசல், கொல்லைக் கதவு, சன்னல் என அனைத்தையும் மேற்கிற்கு திறந்துவிட்டப் பின்னர், அதுவரை இருந்த அத்தனைப் பிரச்சினைகளுக்கும் முன் முதலான காரணம் திருவாளர். நேரு , என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. காந்தி - நேரு இருவரும் தான் பிரிவினைக்குக் காரணம் என்றும், போஸ் வெற்றிப் பெற்று இருந்தாலோ அல்லது படேல் பிரதமர் ஆகி இருந்தாலோ இந்தியா என்றோ சுபிட்சமாகியிருக்கும் என நவ - ஏகாதிபத்திய கூலிகளால் அவ்வப்பொழுது சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுவதுண்டு..

கோட்சே காந்தியை கொல்ல , கையில் துப்பாக்கியுடன் காந்தியின் எதிரில் நிற்பதாக ஒரு புகைப்படம் அடிக்கடி வலைத்தளங்களில் பகிரப்படும். வேறொரு படத்தில் காந்தி வெள்ளைக்காரப் பெண்மணியுடன் நடனமாடிக் கொண்டிருப்பதாக இருக்கும். முதல் படம் Nine Hours to Rama, (http://www.youtube.com/watch?v=ZtxRUXo9Wjo&feature=relmfu) என்ற திரைப்படத்தில் வரும் காட்சி. இரண்டாவது படம் காந்தியாக நடித்தவர், அதே உடையுடன் இரவு விருந்தில் நடனமாடியது.  (தவறான படங்களை மீண்டும் பரப்ப வேண்டாம் என்ற எண்ணத்தில் அவை இரண்டும் இங்கு பகிரப்படவில்லை)நேரு, எட்வினாவிற்கு சிகரெட் பற்ற வைக்கும் படம், பாரீர் பாரீர் , நேருவின் லட்சணத்தைப் பாரீர் என்று தூற்றியும் அருகிலேயே , சுபாஸ் சந்திரபோசின் படமும் போட்டு, இருவரையும் ஒப்பிட்டு போஸை கதாநாயகன் ஆக்கி, ஒரு கட்டுரை ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது.  சகத் தோழிக்கு சிகரெட் பற்ற வைக்க உதவுதல் தவறு என்றால், தொடர்ந்து கடிதங்கள் எழுதி ஒதுக்கப்பட்டாலும் வலிய போய் , ஹிட்லருடனும் அவரின் கூட்டாளி ஹிம்லருடனும்  கைக்குலுக்கி நட்புப் பாராட்டும் போஸின் செயல் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு.  அந்தப் படம் எல்லாம் பகிரப்படாது.  அப்படி எல்லாம் ஒன்று நடந்திருக்கிறதா என்று கூட பலருக்குத் தெரியாது. (நேருவின் எட்வினா படம் விமர்சனம் செய்யப்படுவது பொறாமையான ஆணாதிக்க மனோபாவத்தினால் என்ற வகையிலும் பார்க்கலாம் )எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் தான் ஹிட்லருடன் சேர்ந்தார் என்ற சப்பைக் கட்டு கட்டப்பட்டாலும், ஹிட்லரின் இன்வெறி கொள்கைகள் பகிரங்கமாக்கப்பட்ட பின்னரே, பகவத் கீதையை விரும்பிப் படித்த போஸ் அவருடன் கைக்கோர்த்தார்.  யோசித்துப் பார்த்தால், ஒரு வேளை ஹிட்லர் வெற்றி பெற்று, போஸ் அதிபர் ஆகி இருந்தால் நாடு கண்டிப்பாக சுபிட்சமாகி இருக்கும். ஆனால் யாருக்கு சுபிட்சம் என்பதைத் தான் யோசிக்க வேண்டும். இந்திய துணைக்கண்டத்தில் பொற்காலம் என வர்ணிக்கப்படும் குப்தர்களின் காலமாகக் கூட இருந்து இருக்கலாம்.

காந்தியால் ஒருங்கிணைக்கப்பட்ட, இந்தியம் சார்ந்த உணர்வு, நேருவால் திடமாக்கப்பட்டது.  அவரின் முற்போக்கு, சீர்திருத்த எண்ணங்களாலும் அனுசரித்துப் போகும் அரசியலாலும்தான் இன்று புனிதமாக்கப்படும் இந்திய தேசியம் சாத்தியமானது. இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கும் பாகிஸ்தான் சிரமமான நிலைக்கும் ஒரே காரணம், முதல் தலைமை. நேரு இந்தியாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஜின்னாவோ சொற்ப மாதங்களில் இயற்கை எய்தினார். அடுத்து வந்த லியாகத் அலிகானும் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு பின்னர் இன்று வரை பாகிஸ்தான் படும் பாட்டை உலகமே அறியும்.

இந்தியா  சுதந்திரம் பெற்ற முதல் மூன்று வருடங்களுக்கு அரசர் நான்காம் ஜார்ஜின் ஆட்சியின் கீழ் தான் இருந்தது. காந்தியும் இல்லாத சூழலில் , சுற்றிலும் வலது சாரி தலைவர்களால் சூழப்பட்டு இருக்கையில் நேருவும் இல்லாது போய் இருந்தால், இன்று ஐபில் போட்டிகளில் ஆடுவதைப்போல சிலப்பல கிரிக்கெட் அணிகள் பன்னாட்டு அளவில் ஆடிக்கொண்டிருந்து இருக்கும்.

முரண் நகை என்னவெனில், இந்து தேசியம் அமைக்க திட்டமிடுபவர்கள், அப்படியான ஒரு சூழலை , தளத்தை அமைத்துக் கொடுத்த காந்தியையும் நேருவையும் தூற்றுவதுதான்.


உண்மையில் நேருவைத் திட்ட வேண்டியவர்கள் இந்தியத் தேசியத்தினால் பயனற்றுப் போய் இருப்பதகா நினைக்கும், கங்கைக்கு அப்பால் இருக்கும் வடகிழக்கு மாநிலத்தவரும், போறவன் வருபவன் எல்லாரிடமும் அடிவாங்கும் தமிழர்களும், முள் கீரீடம் ஆக இருக்கும் காஷ்மிரத்து மக்களும் தான். ஆனால் தீட்டிய மரத்திலேயே காலம் காலமாய்  கூர் பார்க்கும் கோடாலிகள் திட்டுவதில் வியப்பில்லை


இந்தியக் குடியரசைப் பொருத்த மட்டில், அன்றும் இன்றும் என்றும் நேருவைப் போன்ற தலைவர்களே தேவை, அதனால் தான் கோட்டிற்கு வலதுப் பக்கம் இருந்தாலும் வாஜ்பாயை எல்லோருக்கும் பிடித்து இருந்தது.  சவார்க்கர்களின் பிம்பம் எடுபடாத நிலையில், போஸை முன்னிறுத்தி, இந்துத்வா வாதிகளால் கட்டமைக்கப்படும் தேசிய அபிமானம் ,  இந்திய தேசியம் ஆதிக்க சாதியினருக்கான ஒன்றாக மட்டுமே அமையும். வில்லன்களுடன் கைக்குலுக்கியவரை கதாநாயகன் ஆக்கக் கூடாது என்பதல்ல, ஆனால் அவருக்காக ஏனையவர்களைத் தூற்ற வேண்டியதில்லை என்ற நோக்கத்தில் இந்த பத்தி எழுதப்பட்டது.

தரவுகள் - Bose's meeting with Hitler happened on May 29, 1942.  Subhas Chandra Bose: A Biography By Marshall J. Getz , Page 65.