Saturday, September 22, 2012

அகதி - சிறுகதை

காத்திருத்தல் எனக்குப் பழகிய விசயம்தான் என்றாலும், தகிக்கும் வெயிலில் பேருந்தை எதிர்பார்த்தல் கொஞ்சம் கடினமானதுதான். ரோம் நகரில் கோடையில் வெப்பநிலை 40 யை சர்வசாதாரணமாகத் தொடும் என்பதையும் வெள்ளையாய் இருப்பவர்கள் ஊரில் எல்லாம் வெயில் அடிக்காது என்பதையும் தெரிந்து கொண்டேன்.  என் விடுதிக்குப் போகவேண்டிய பேருந்து ஒவ்வொரு 35 நிமிடங்களுக்கு ஒரு முறைதான், அந்தப் பேருந்தும் ஊர் சுற்றி உலகம் சுற்றி ஒரு 30 நிமிடங்கள் பயணப்படும். ஒரு கையில் கிட்டத்தட்ட 10 கிலோ சுமையுள்ள பை, மறுகையில் ஆண்டிராய்டு சிறுகணினி என மேலடுக்கு கீழடுக்குத் தெரிய சிறு உடைகளில் உலாவிக்கொண்டிருந்த  இத்தாலியப்  பெண்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.

ரோமின் ஓர் எல்லையான,  அனாநீனா பேருந்து நிலையத்தில் மறு ஓரத்தில் கடைகளை விரித்திருந்த வங்காளதேசத்தவர்களை காவல்துறையினர் வழமைப்போல கடவுச்சீட்டு சான்றிதழ்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் என்னைக் கடந்துதான் சென்றார்கள், இருந்த போதிலும் ஏறத்தாழ வங்கத்தவனை போலக்காட்சியளிக்கும் என்னை எதுவும் கேட்கவில்லை, ஒரு வேளை எனது பொறியியாளர் தோற்றக் கண்ணாடியும், கைக்கணினியும் தேவைப்பட்ட நன்மதிப்பைக் கொடுத்திருக்கலாம். அறிவுசார்ந்த வேலைக்கு வந்திருந்தாலும், கைக்காசைக் கொட்டி படிக்க வந்திருந்தாலும், வெள்ளையர்களைப் பொருத்த மட்டில், மாநிற, கருப்பானவர்கள் எல்லோருமே அகதிகள்தான்.  ஆனாலும் சில சமயங்களில் தோரணையும் , திமிரான பார்வையும் , தேவையற்ற,  இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றும்.

கையில் இருக்கும் 10 கிலோ சுமையில், என் அம்மா எனக்காக தயார் செய்து இத்தாலி வந்த நண்பனிடம் கொடுத்தனுப்பிய , பருப்பு சாம்பார், கோழிக்கறி , ஆட்டுக்கறி சமைக்கத் தேவையான வாசனைப்பொருட்கள்,  காயவைத்த கறிவேப்பிலை, நம்ம ஊர் மல்லிப்பொடி என ஐரோப்பாவில் வசிக்கும் தமிழ் மாணவர்களுக்கு அரிதற்கரிய விசயங்கள் அனைத்தும் இருக்கின்றன.  இந்தப் பையை வாங்குவதற்காகவே 100 ஈரோ செலவழித்து, விடியற்காலையில் மிலான் வரை சென்று, வாங்கி வருகின்றேன்.  காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை, கையில் இருந்தது பத்து ஈரோ மதிப்புள்ள தாளும், இரண்டு ஈரோ மதிப்புள்ள நாணயமும்தான். இரண்டு ஈரோவிற்கு பழச்சாறு வாங்கிக்கொண்டு ஒரு வழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

திக்காலுக்கு திக்கால், சிலப்பிரயாணிகள் என பேருந்து வறட்சியாக இருந்தது.

ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருந்த “இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்” படத்தின் முன்னோட்டக்காட்சிகளைப் பார்க்க ஆரம்பித்த பொழுது,

“அஸ்லாம் அலைக்கும்” என யாரோ ஒருவர் தோளைத் தொட,  திரும்பிப்பார்த்தேன்.  என் நிறத்தில் ஒருத்தன் என்னைப்பார்த்து சிரித்தான்.

. பார்த்துக்கொண்டிருந்த ஒளிக்காட்சியை சடுதியில் மாற்றிவிட்டு,  அவனை என்னவேண்டும் என்ற தொனியில் பார்த்தேன்.

அனேகமாக வங்காளத்தேசத்தவன் என்பது அவன் பேசிய உடைந்த இந்தி,  சுமாரான இத்தாலியத்தை வைத்து தெரிந்தது. எனக்கு இரண்டு மொழிகளும் அரைகுறை என்றாலும் அவனுக்குப் பசிக்கிறது என்பதும், காசு தரமுடியுமா எனக் கேட்கிறான் என்பது புரிந்தது.  உறுதிப்படுத்திக் கொள்வதற்காக

”இங்கிலீஷ் இங்கிலீஷ்” என்றேன்.

கொச்சையான ஆங்கிலத்திலும் அதையேத்தான் சொன்னான்.

“இருந்தால் கொடுங்கள், இல்லை என்றாலும் பரவாயில்லை, காலையில் இருந்து கடையில் நின்றதால், எதுவும் சாப்பிடவில்லை. காவல்துறை வருவதால் எனது முதலாளி என்னை வீட்டுக்குப்போய்விட்டு நாளைக்கு வரச்சொல்லிவிட்டார்”

அவனின் சூழல் புரிந்தது.  பிச்சையோ உதவியோ , யாராவது என்னிடம் காசு கேட்டால், என்னிடம் அந்த சமயத்தில் பணம் இருந்தால் யோசிக்காமல் கொடுத்துவிடுவேன்.  அது அவனை திருடனாவதில் இருந்து காப்பாற்றுகிறது என்பது என் எண்ணம். ஏதாவது, நாணயங்கள் இருக்கின்றதா என யோசித்ததில், எதுவும் தட்டுப்படவில்லை. இருக்கின்ற பத்து ஈரோவை வைத்துத்தான், அடுத்த படிப்பு உதவித் தொகை வரும் வரை ஒரு வாரம் ஓட்டவேண்டும்.

“காசு இல்லை , வேண்டுமானால் இந்த பழச்சாறை எடுத்துக்கொள்... அண்ணாந்துதான் குடித்தேன்”  என்றேன் ஆங்கிலத்தில்.

அவன் குடித்த வேகம், எத்தனைப் பசியில் இருந்திருப்பான் என்பதைக் காட்டியது.  நன்றி சொல்லிவிட்டு கடைசி இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.

கள்ளச்சிரிப்புடன், “இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்” முன்னோட்டக்காட்சிகளைப் பார்த்துவிட்டு விடுதி நிறுத்தத்தில்,  பேருந்தைவிட்டு இறங்கி நடந்து கொண்டிருந்தபோது,  வாசனைப்பொருட்கள் அடங்கிய பையை பேருந்திலேயே விட்டுவிட்டேன் என்பதை உணர,  அந்த வங்கதேசத்தவன் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே அடுத்த நிறுத்தத்தில் இருந்து என் பையுடன் ஓடி வந்து கொண்டிருந்தான்.

“சகோதரா, நீங்கள் இதை மறந்து வைத்து விட்டீர்கள்”

பத்து ஈரோத்தாளை எடுத்துக் கொடுத்து ஏதாவது சாப்பிடு என  சொல்லுவதை விட, அவனை எனது விடுதிக்குக் கூட்டிப்போய் சமைத்துப்போடுவது  சரியாக இருக்கும் எனத் தோன்றியது.  அந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சிகளை நிரந்தரமாக அழித்துவிட்டு, அவனுடன் எனதுவிடுதி அறையை நோக்கி நடந்தேன்.

Friday, September 07, 2012

கருப்பு வெள்ளை கனவு - சிறுகதை


நடிகனாக ஆசைப்பட்டு,  துணை இயக்குனராக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் நான், பொழுது போகாத ஒரு பின்னிரவில், இணையத்தில் பழங்காலத்துப் படமான   கன்னிகா  என்ற  படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது , சிறு வயதில் கதவு வைத்த சாலிடர் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி நினைவுக்கு வந்தது.

அதில் ஒளியும் ஒலியும் , கிரிக்கெட் பார்த்த காலங்களில் இருந்த ஒரே ஆசை, வண்ணங்களில் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்பதுதான். வண்ணங்களில் முக்கி எடுத்த பிற்கால எம்.ஜி.ஆர் படங்கள்,  கருப்பு வெள்ளையல்ல என்பதைத் தெரிந்து கொள்ளகூட பதினைந்து வருடங்கள் ஆனது.   40 வருடங்கள் முன்பு வரை, உலகம் கருப்பு வெள்ளையில்தான் இருந்திருக்குமோ என நினைத்தக் காலங்களை கடந்து, வண்ணக் காட்சிகள் வாழ்க்கையில் பழக்கப்பட்டபின்னர், எம்.ஜி.ஆர் களும் சிவாஜிகளும், ஏன் கமலும் ரஜினியும் கூட கருப்பு வெள்ளையில்தான்  மிக அழகாகஇருப்பதாகத் தோன்றியது.

92 உலகக்கோப்பைப் போட்டிகளின் பொழுது, இந்திய அணிக்கான உடை அடர் நீல நிறம் என்பதை என் கனவில்தான் தெரிந்து கொண்டேன். வீட்டுத் தொலைக்காட்சியில், அந்த உடை கருப்பாக இருந்தாலும் இந்தியா ஒரு ஓட்டத்தில் தோற்ற அன்று, கவலையில் தூங்கிய பொழுது, அதே அடர் நீல நிற உடையுடன் கடைசி ஆட்டக்காரர் வெங்கடபதி ராஜுவிற்குப் பதிலாக நான் களம் இறங்கி  , கடைசி ஓட்டத்தை நிறைவு செய்து, ஆட்டத்தை சமனிலை செய்தேன். மறுநாள் காலையில் என் வீட்டில் கனவை சொன்னபொழுது   , கனவில் சரியான நிறத்தைக் கண்டுபிடித்ததை அவர்கள் கவனிக்காமல், ராஜுவிற்க்கு பதிலாக நான் ஆடியதற்காக சொல்லி சொல்லி சிரித்தார்கள்.

அந்தக்கால முறைப்படி, சபையில் ஆடும் பரதநாட்டியத்துடன் திரைப்படம் ஆரம்பமானது. மாயாஜால வித்தைகள் தெரிந்த நாயகனும் கெட்ட ராஜாவின் மகளும் காதலிக்கின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன் , மதுரம் முறையே நாயக, நாயகியின் தோழன், தோழி. என படம் நாடகத்தனமாக நகர, அப்படியேத் தூங்கிவிட்டேன். ஆனால் கனவில் படம் பலப் பாடல்களுடன் தொடர்ந்தது, இறுதியில், உயிரை ஒளித்து வைத்திருக்கும் கெட்ட ராஜாவின் கூடான புறாவின்  கழுத்து   என்.எஸ்.கிருஷ்ணனால் திருகப்பட்டு ராஜா கொல்லப்படும் பொழுது, திடுக்கிட்டு கண் விழித்தேன். திடுக்கிடலுக்கு இரண்டு காரணங்கள், முதலாவது நகைச்சுவை நடிகரால் எப்படி எதிர்மறை நாயகன் கொல்லப்படுவான், இரண்டாவது, கனவில் வந்தப் படம் முழுவதும் நேரில் பார்த்ததைப் போல வண்ணத்தில் இருந்தது. கொஞ்சம் மனது திகிலாக இருந்தாலும், முழுப்படத்தையும் நிஜத்தில் பார்த்துவிடுவது என முடிவு செய்து பார்த்த பொழுது, ஏற்கனவே இருந்த திகில் இரண்டு மடங்கானது. காட்சிக்கு காட்சி அப்படியே கனவில் வந்தது படத்தில் இருந்தது. கடைசிக் காட்சியில் என்.எஸ்.கிருஷ்ணன் தான் புறாவைக் கொல்லுகிறார்.

கருப்பு வெள்ளை திரைப்படம், கனவில் கலரில் வந்தது என்று சொன்னால் மக்கள் சிரிப்பார்கள். மறுநாள் வேண்டாத வேலையாய், வீணை எஸ்.பாலசந்தரின் ”நடு இரவில்” படம் முழுவதும் பார்த்து விட்டுத் தூங்கிய பின்னரும் கனவு வந்தது.  நடு இரவில் படம் கனவில் வரவில்லை. ஆனால் இந்தக் கனவில், வீணை.எஸ்.பாலச்சந்தருடன் சிவாஜி கணேசனும் பத்மினியும் வண்ணத்தில் நடித்துக் கொண்டிருந்தனர். நடு நடுவே எம்.ஜி.ஆரும் பானுமதியும் வேறு வந்துப் போயினர்.  பயத்தின் உச்சக்கட்டம் வீரம், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கனவு கலைந்து எழுந்தவுடன், சிவாஜி கணேசன் , பத்மினி , வீணை. எஸ். பாலசந்தர் என கூகுளில் தேடினால், மரகதம் என்றத் திரைப்படம் அகப்பட்டது. கன்னிகா படத்திற்கும் மரகதம் திரைப்படத்திற்கும் என்னவொரு ஒற்றுமை என தேடியதில் உணர்ந்தது பக்‌ஷிராஜா நிறுவனம்தான் இரண்டையும் தயாரித்து ஸ்ரீராமுலு இயக்கி இருக்கிறார்.

முடிவு - 1

இந்தப் படங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று தூங்கிப்போனபொழுது,”இந்த இதை உடுத்திக்கிட்டு, அந்த ரயில் பொட்டில போய் உட்கார்ந்து வேடிக்கைப்பாரு” என இயக்குனர் சொல்ல,

"சீன் 22, டேக் 1” எனக் காட்சியின் படமாக்கல் ஆரம்பிக்க, கிளாப்போர்டில் மலைக்கள்ளன் என எழுதியிருந்தது.

தூங்கிக்கொண்டிருந்த என்னால் கனவைக் கலைத்து எழுந்திருக்க முடியவில்லை,  நாளைகாலை எனக்காக அழும் மக்களிடம் சொல்லிவிடுங்கள், பக்‌ஷிராஜா ஸ்டுடியோ எடுத்தப் படங்களில் நான் உதிரி நடிகனாக, துணை இயக்குனராக 40 களையும் 50 களையும் 60 களையும் வண்ணத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என !!!

முடிவு - 2


கன்னிகா படத்திற்கும் மரகதம் திரைப்படத்திற்கும் என்னவொரு ஒற்றுமை என தேடியதில் உணர்ந்தது பக்‌ஷிராஜா நிறுவனம்தான் இரண்டையும் தயாரித்து ஸ்ரீராமுலு இயக்கி இருக்கிறார். எம்.ஜி.ஆர் பானுமதி நடித்து, ஸ்ரீராமுலு சம்பந்தப்பட்ட படம் மலைக்கள்ளன்.  இந்தப் படங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அடுத்த அடுத்த நாட்களின் வேலைப்பளுவால், மறந்து போனது, பார்த்த கன்னிகா படமும் மறந்துப்போனது. கடும் போராட்டங்களுக்குப் பின்னர், தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தலை சிறந்த இயக்குனர் என்ற பெயர் பெற்றேன். ஏதோ ஒரு நாள், மீண்டும் கன்னிகா, மரகதம், மலைக்கள்ளன் படங்கள் நினைவுக்கு வர, அவற்றை எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வண்ணத்தில் மறு உருவாக்கம் செய்ய முடிவெடுத்தேன், சொல்ல மறந்துவிட்டேன், எனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பக்‌ஷிராஜா ஸ்டுடியோஸ்  !!!!Tuesday, September 04, 2012

பெருந்தன்மை - சிறுகதை

அவள் பெயர் கீர்த்தனா மதிவதனி,  அவளை மதிவதனி எனக்கூப்பிட்டால் அவளுக்குப்பிடிக்காது, தலைவரின் மனைவி எங்கே , நான் எங்கே, கீர்த்தனா என்றே கூப்பிடுங்கள் என்று முதன்முறை அவளை நான் சந்திக்கும்பொழுது திருத்தமாகச் சொன்னாள். கீர்த்தனா ஈழத்தைச் சேர்ந்தவள், அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது, குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கும், பின்னர் இத்தாலியின் மிலான் நகருக்கும் புலம் பெயர்ந்தவள்.  நான் படிக்கும் ரோம் ப்ல்கலை கழகத்தில்தான் மொழியியலில் ஆராய்ச்சிப்படிப்புப் படிக்கிறாள்.

அவளின் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்படக் காரணம், தமிழும் ஈழமும் காரணமல்ல. அவளின் சக்கர நாற்காலி சார்ந்த வாழ்வும், திராவிட களையான முகமும், எப்பொழுதும் மகிழ்ச்சியான முகமும் , ஒவ்வொரு புதன்கிழமை அவளின் துறைக்கு, இத்தாலிய மொழி கற்றுக்கொள்ள போகும்பொழுதெல்லாம் என் கவனத்தைத் திருப்பியது.

” நீங்கள் தமிழா !! “ என உடைந்த இத்தாலியத்தில்கேட்டதற்கு ,

”நான் மட்டுமல்ல, என் சக்கர நாற்காலியும் கூட தமிழ்தான்”

துறுதுறுவென கிரிக்கெட், தமிழ், அரசியல் என சகலத்தையும் மும்மொழிகளிலும் பேசினாள்.

அவளின் சக்கரநாற்காலியைத் தள்ளி, அவளுக்கு உதவவேண்டுமா என அனுதாபமாக யாராவதுக் கேட்டால் கூட, உடனே சரி எனச் சொல்லுவாள்.

“அனுதாபம் கூட அன்பின் மற்றோர் வடிவம்தான், அதை ஏன் நிராகரிப்பானேன்”,

கீர்த்தனாவைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பன்னாட்டு நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள், பாலஸ்தீனியத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவர்கள் தாம் இவளின் நெருங்கிய நண்பர்கள்.

”பாலஸ்தீனியர்களும், ஆப்பிரிக்கர்களும், நானும் நிறம், கலாச்சாரம் வேறாகி இருந்தாலும், ஒடுக்கப்பட்டதில் நாங்கள் எல்லாம் ஒன்றுதான்”

“எப்படி உனக்கு மட்டும் இவ்வளவு நண்பர்கள்?”

“எல்லோரும் ஒவ்வொருவரை சார்ந்துதான் இருக்கின்றோம், ஒவ்வொருத்தருக்கும் ஒரு தேவை, சிலருக்கு படிப்பில் உதவி தேவை, சிலருக்கு அவர்களின் மனத்தாங்கல்களை யாராவது கேட்டாகவேண்டும், சிலருக்கு வெறும் கடலை போட வேண்டும், தொடர்ந்து வந்த வாரங்களில் கீர்த்தனாவுடன் நெருங்கிய நண்பன் ஆகிப்போனேன்.

“நானும் தமிழன் தான், உனக்கு மட்டும் ஏன் தமிழின் மேல் இவ்வளவு ஆர்வம்?”

”உங்கட தமிழ்நாட்டவர்களுக்கு தமிழ் வெறும் மொழி, எங்களுக்கு தமிழ் ஓர் அடையாளம், தமிழ் என்றாலே அரசியல், தமிழ் என்றால் போராட்டம், ஐந்து வயதில் அப்பாவின் முதுகில் தொத்தியபடி, மூன்று கிலோமீட்டர்கள் ராமேசுவரம் கடலில் நடந்த குடும்பங்களில் நாங்களும் ஒன்று,  நீ பேசும் மொழியால் நீ , நிராகரிக்கப்படும்பொழுது நான் சொல்லுவதன் அர்த்தம் புரியும்”

மறுநாள் கீர்த்தனாவுடன் அவளின் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு மளிகைக்கடைக்கு சென்ற பொழுது, வழியில் எங்களது நிறத்த்துடன், சில அடிகள் தள்ளி ஒரு குடும்பம் வந்து கொண்டிருந்தது. கீர்த்தனா என்ன நினைத்தாளோ, சக்கரநாற்காலியை என்னிடம் இருந்து விடுவித்து வேகமாக கடைக்குள் சென்றுவிட்டாள். எதிரே வந்த குடும்பம்

”நீங்கள் பங்களாதேஷியா” என இத்தாலிய மொழியில் கேட்டது.   ரோம் நகரத்தில் ஏகப்பட்ட வங்காளதேசத்தினர் இருக்கின்றனர். யாரவது என்னை வங்காளதேசத்தவனா எனக்கேட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும்.

“இல்லை” என்றேன் எரிச்சலுடன்

“ஸ்ரீலங்கா ?? “

”இல்லை, இந்தியா, தமிழ்நாடு”

“ஓ, நாங்கள் சிங்களவர்கள் , நானும் என் மனைவியும் இலங்கைத் தூதரகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றோம்”

தூரத்தில் கீர்த்தனா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். எனக்கு அறிமுகமான அந்தக் குடும்பம், “பிழைக்க வந்த வங்காளதேசத்தவர்களினால், எப்படி நம்மைப்போன்ற மேற்தட்டு இந்திய இலங்கை மக்களின் மேலான பார்வை எப்படி பாதிக்கப்படுகின்றது” என்று சொல்லிக்கொண்டிருந்தது.

“இத்தாலியர்களுக்கு, இலங்கை, இந்தியா, வங்காளதேசம் என்ற வித்தியாசம் தெரியாது” என மேலும் தொடர்ந்தது.

அவர்களைக் கூட்டிக்கொண்டு, கீர்த்தனாவிடம் அறிமுகம் செய்துவைத்தேன்.

தனது பெயர் மதிவதனி என அறிமுகம் செய்து கொண்ட, கீர்த்தனாவின் கண்கள் ஆத்திரத்திலும் கோபத்திலும் கலங்கியிருந்தன.

“கார்த்தி, நான் எனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்கின்றேன்” எனச் சொல்லிவிட்டு, அவளுக்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க பகுதி வாரியாக செல்லத்தொடங்கினாள்.  ஐந்தாம் அடுக்கில் இருந்த ஒரு பொருளை அவள் எடுக்க முயற்சி செய்கையில், அருகில் இருந்த அந்த சிங்கள குடும்பத்தின் தலைவர் உதவி செய்ய வர,

கடுமையான முகத்துடன் மறுத்த கீர்த்தனா, தானே எம்பி அதனை எடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டாள். அடுத்தப் பகுதியில் வேறு ஏதோ எடுக்க முயல, எட்டாமல் போக ஒட்டு மொத்த சிங்களக்குடும்பமும் அவளுக்கு உதவ முன்வர,

“நான் உங்களை உதவிக்கு கேட்டேனா, எதற்கு என்னை அனாவசியமாகத் தொந்தரவு செய்கிறீர்கள்” என ஒரு கத்து கத்தினாள்.

பின்பு அவளே, அங்கு வேலை செய்யும் ஒரு வங்காளதேசத்தவனை அழைத்து, தனக்கு தேவையானதை மேலடுக்கில் இருந்து எடுத்துக் கொண்டாள்.  எனக்கு முதன்முறையாக அவளின் மேல் கோபம் வந்தது.

”அவங்க சிங்களிஸ்னாலதானே , அவங்களை இன்சல்ட் பண்ணே”

“ஆமாம், ஆனால் அது இன்சல்ட் இல்லை, என்னோட 25 வருஷத்து வலி வேதனைக்கு ஒரு சின்ன வடிகால்,  தேவ தூதர்களாகவே இருந்தாலும் எங்களை வெறுத்தவர்களிடம் இருந்து நான் எதுவும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை”

அவளுடைய நியாயம் எனக்குப்புரியவில்லை, பிடிக்கவும் இல்லை. அதன்பிறகு ஒருவாரம் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை.

பின்னொருநாள், இந்தியத் தூதரகத்தில், ஒரு சான்றிதழுக்கு அரசாங்க முத்திரை பெறுவதற்காகப் போய் இருந்த பொழுது, இந்தியில் பேசிய அதிகாரியிடம், ஆங்கிலத்தில் பதில் சொல்ல,

“மதறாசி, ஹிந்தி நஹின் மாலும்... சாலா “ என அதிகாரி எரிந்து விழுந்துவிட்டு,

அகர்வால்களும், படேல்களும் ஒரு மணிநேரத்தில் வாங்கிய சான்றிதழ் முத்திரையை  பெற,

“பார்ட்டி டேஸ், யூ வெயிட், நௌ கோ” என நான் விரட்டப்பட்டேன்.

என்னமோத் தெரியவில்லை, கீர்த்தனாவிடம் பேச வேண்டும் போலத் தோன்றியது, அவளின் கைபேசி எண்ணிற்கு அழைத்தேன்.

------