Wednesday, March 14, 2012

ஷிராந்திக்களும் பக்‌ஷேக்களும் - சிறுகதை

ஒரு வாரம் கடலில் மிதக்கப்போகும், இந்த மத்தியத் தரைக்கடல் சொகுசு கப்பலில் கூட்டம் குறைவாக இருப்பதன் காரணங்களை யோசித்துக்கொண்டிருக்கையில்

நீங்கள் வங்காளதேசத்தவரா?” எதிரில் கைக்கோர்த்தப்படி உலாவிக்கொண்டு இருந்த சிங்கள தம்பதியினர் என்னைப்பார்த்துக் கேட்டனர். வட்ட வடிவ முகம், மாநிறத்திற்கும் குறைவான நிறம் ஆகியனவற்றால் ஒருவேளை என்னை வங்காளதேசத்தவன் என நினைத்திருக்கலாம். தெம்பல தெம்பல என அவர்களுக்குள் கிசுகிசுவெனப் பேசிக்கொண்டிருந்ததை வைத்தும், முகத்தில் தெரிந்த நமட்டுத்தனமும், கண்களில் இருந்த மெல்லிய குரூரமும் நிறமும் உடையும் அவர்களை சிங்களவர்கள் என அடையாளப்படுத்தின.

“ஆமாம்” என நான் சொன்ன பொய் அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. புன்னகைக்கான காரணம், ஒரு வேளை நான் தமிழன் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதானால் இருக்கலாம்.

ஐந்து வருட ஐரோப்பிய வாழ்க்கையில் இதற்கு முன்னர் சிங்களவர்களைச் சந்தித்து இருக்கின்றேன். தமிழ் என பொய் சொல்லி அகதி அந்தஸ்துகளைப் பெற்றுக்கொண்ட சிலர், சுற்றுலாவிற்கு வந்த ஐரோப்பியர்களை உடலால் கவர்ந்து, மண்முடித்து ஐரோப்பாவிற்கு வந்த சில சிங்களப் பெண்கள், ராணுவத்தில் கொஞ்ச நாள் இருந்துவிட்டு, அரைப்பைத்தியமாகி, ஏகப்பட்ட லட்சங்கள் லஞ்சமாகக் கொடுத்துவிட்டு தப்பித்து வந்த சில இளைஞர்களையும் சந்தித்து இருக்கின்றேன். அவையெல்லாம் 2009 க்கு முன்னர்.

கடைசி மூன்று வருடங்களாக சிங்களவிகுதிப் பெயர்களைப் பார்த்தாலோ கேட்டலோ, நரகலைப்பார்த்த குமட்டல்தான்... நரகல் ஓர் ஆணாகவும் பெண்ணாகவும் எனக்கு முன்னர் அமர்ந்து கொண்டு, என்னைக் கேட்ட கேள்விக்குப் பதிலாக,

”நீங்கள் சோமாலியாவா?” வேண்டுமென்றே கேட்டேன்.

அவர்கள் பதறியபடி, “இல்லை இல்லை ஸ்ரீலங்கா”

தம்மை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்புமைப் படுத்தினால், முதலில் கோபப்படுவது துணைக்கண்டத்தினர்தான்...

“ஓ அப்படியா, ... தமிழ் புலிகள், பிரபாகரன்... கேள்விப்பட்டிருக்கின்றேன்”

“அவர்கள் பயங்கரவாதிகள்... தீவிரவாதிகள்... எங்களது அரசாங்கம் அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டது” இருவரும் ஒருசேர,

கடலில் அவர்களைத் தள்ளிவிட்டுவிடலாம் என்பதைப்போல எனக்கு ஆத்திரம் வந்தது. ஆத்திரத்தை ஒத்திவைத்தேன்.. ஒரு பக்கம் பாவமாகவும் இருந்தது. ஊடகங்களாலும் அரசாங்கத்தினாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட சாமானியர்களாய் இருந்தால் என்ன செய்வது ... பதிலேதும் பேசாமல், சிறிது நேரம் அமைதி காத்தேன்.

“ நீங்கள் இத்தாலியில் என்ன செய்கிறீர்கள்”

“படிக்கின்றேன், பன்னாட்டு மனித உரிமைகள் சம்பந்தபட்ட மேற்படிப்பு” இந்த முறை உண்மையைச் சொன்னேன்.

“தீவிரவாதிகளைக்காட்டிலும், மனித உரிமைகள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களால் தான் எங்கள் நாட்டிற்கு தொடர்ந்து ஆபத்து”

கொதிப்பின் உச்சத்தை புன்னகையால் அடக்கிக்கொண்டு, படிப்பினாலும் அனுபவத்தினாலும் கற்றுக்கொண்ட மனித விழுமியங்களை நெருக்கடியின் போதும் பயன்படுத்துவதே சிறப்பு என இயல்புக்குத் திரும்ப,

“நீங்கள் இத்தாலியில் என்ன செய்கிறீர்கள்.. படிப்பு .,. அல்லது வேலை ... அல்லது தேனிலவு சுற்றுலா” தேனிலவு என அவர்களைப் பார்த்து கேட்க காரணம் அவர்களின் அணைத்துக்கொள்ளலும், முத்தமிடலும்தான்

“இல்லை, இல்லை நாங்கள் தம்பதிகள் அல்ல, ஜெனிவாவில் மனித உரிமைகள் சம்பந்தமாக நடப்பவைகளை கவனிப்பதற்காக வந்த அரசாங்க பிரதிநிதிகள், நேற்று ரோமில் நடைற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டதால் எங்கள் அரசாங்கம் இந்த சுற்றுலாப்பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது~ .

எனது வன்மத்திற்கு நட்பின் உருவம் கொடுத்தேன்.நாங்கள் மூவரும் ஒன்றாக மது அருந்தினோம், இரவு நடமாடினோம்... நட்பும் இறுகியது, எனக்குள் வன்மமும் இறுகியது ... மகிழ்ச்சியின் உச்சத்தில், அவர்களின் கைப்பைகளை என்னிடம் கொடுத்துவிட்டு நெருக்கமாக ஆடத்தொடங்கி இருந்தனர். கைப்பையில். பாஸ்போர்ட், கைபேசிகள், பயணச்சீட்டுகள், சிலநூறு ஈரோக்கள் இருந்தன. லிவர்னோ துறைமுகத்தில் சில மணி நேரம் நிற்கும் என்ற அறிவிப்பு வந்தது. மெய் மறந்து ஆடிக்கொண்டிருந்த அவர்களை விட்டு நகர்ந்து , எனது அறைக்குச் சென்று எனது உடமைகளை எடுத்துக்கொண்டேன். மனிதவிழுமியங்களை மதிக்காத போரிலும் காதலிலும், பிரதியாகத் திருப்பிக்கொடுக்கப்படும் அனைத்துமே நியாயங்களுக்கு உட்பட்டதுதான் என என்னை நானே சமாதனப்படுத்திக்கொண்டு, அவர்களின் கைப்பைகளைக் கடலில் வீசிவிட்டு கப்பலைவிட்டும், துறைமுகத்தை விட்டும் வெளியேறினேன்..