Friday, March 30, 2012

ஈரோ - ஒரு நிமிடக்கதை

”இந்த தமிழ் ஆட்கள் எல்லாம், இந்தியாவிற்கு பிரச்சினை வரும்படியாகவே பேசி, இந்தியா தேசியத்திற்கு எதிராகவே இருப்பார்கள், இந்தியை எதிர்ப்பார்கள், ராமரை மதிக்க மாட்டார்கள், இட ஒதுக்கீடை ஆதரிப்பார்கள் !!!” , அகர்வாலின் வழக்கமான சீண்டல் ஆரம்பமானது.

சபை நாகரீகம் எனக்கு தெரியுமாதலால், ஏனைய இத்தாலிய நண்பர்கள் மத்தியில், மெலிதாகப் புன்னகைத்துவிட்டு வைனை அடுத்த மடக்குக் குடித்தேன். அகர்வாலின் அறியாமைக்கு பதில் சொன்னால், அவனை எனக்கு சரிச்சமமாக வைப்பதுப்போல ஆகிவிடும். ஆட்டம்போடுவதற்கும் மது அருந்துவதற்கும் கூடியிருக்கும் இடத்தில், பதிலுக்குப்பதில் பேசி, என்னுடைய கொண்டாட்ட மனோநிலையை குறைத்துக்கொள்ள விரும்பியதே இல்லை. என்னுடைய அரசியல் , என்னுடைய நிலைப்பாடுகளை, யாருக்கு சென்றடைய வேண்டுமோ, பேஸ்புக்கில் தகவல்களாக அவரவர் மொழிகளில் வைத்துவிடுவேன்.

”இந்தியா என்று சொல்வதேத் தவறு, பாரதம் என்றே சொல்ல வேண்டும், காலங்காலமாய் பண்பாடுகளைத் தொடரும் நாடு, இந்து மதத்தில் இல்லாத விசயங்களே இல்லை, அடுத்த வல்லரசு, ஊழலையும் இடஒதுக்கிட்டையும் ஒழித்துவிட்டால், இந்தியா சுபிட்சமடைந்துவிடும் என அவன்பாட்டிற்கு பேசிக்கொண்டேப் போனான்”

தன்னை தேசப்பற்றாளனாக காட்டிக்கொள்வதில் அவனுக்கு அத்தனைப்பிரியம்,. அது என்னமோ தெரியவில்லை, நான் பார்த்த தேசப்பற்றாளர்கள் எல்லாம் தீவிர வலதுசாரிகளாகவே இருக்கின்றனர். அகர்வாலின் அத்தனை புலம்பல்களுக்கு காரணம், புதிய இத்தாலிய நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பொழுது Io sono Tamil அதாவது நான் தமிழ் என்ற அர்த்தத்தில் இத்தாலிய மொழியில் என்று சொல்லிவிட்டேன்,

அகர்வாலுக்கு ஏதோ ஒரு கைபேசி அழைப்பு வர, அவன் வீட்டிற்கு வரவேண்டிய பணத்தை அடுத்த மாதம் அனுப்புவதாக பேசி முடித்துவிட்டு , எங்களை நோக்கிச் சொன்னான்.

”சமீப காலமாக இந்திய பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது, இப்பொழுது 66 ஆக இருக்கின்றது, அடுத்த மாதம் 75 ரூபாய் அளவில் வரும் என எதிர்பார்க்கின்றேன், சில வாரங்கள் கழித்து வீட்டிற்கு பணம் அனுப்பும்பொழுது, நல்ல லாபம் பார்க்கலாம், 100 ரூபாய் அளவிற்கு இந்திய பணம் வந்துவிட்டால் எத்தனை நல்லா இருக்கும், ” என பல்லிளித்தான்.

ஏனைய இத்தாலிய நண்பர்கள் உள்ளர்த்தத்துடன் என்னைப்பார்க்க, வழமைப்போல ஏதும் பேசாமல் அடுத்த மடக்கு வைனை எடுத்துக்குடித்தேன்.

Monday, March 26, 2012

கக்கூஸ் - ஒரு நிமிடக்கதை

கடந்த இரண்டரை மணிநேர ரயில் பயணத்தில், ரயிலில் மட்டுமல்லாது, ஒவ்வொரு நிறுத்தங்களிலும் விற்ற அனைத்தையும் வாங்கித் தின்றதன் வினை, பத்து நிமிடங்களுக்கு மேலாக கக்கூஸில் இருக்க வைத்துவிட்டது. சிறுவயதில் இருந்தே எனக்கு ரயில் பயணம் பிடிக்கக் காரணம் ஒன்று தின்பண்டங்கள் வாங்கித் தின்பது,மற்றொன்று இந்தக் கழிவறை வசதிகள். உள்ளே நுழைந்தபொழுது இந்த இருப்புப்பாதை சந்திப்பில் நின்ற ரயில், பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் கிளம்பவில்லை. என்னுடையத் தோழர்களுக்கு நான் கக்கூஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பிடிக்காது. தமிழுக்கு இடையில் , வார்த்தைக்கு வார்த்தை ஷிட் உபயோகப்படுத்தும் அவர்களுக்கு டாய்லெட் என்று சொன்னால்தான் பிடிக்கும்.

நெடுங்காலமாகவே , கக்கூஸ் வார்த்தைத் தமிழின் கொச்சையான வார்த்தை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு எதேச்சையாக ஒருநாள் பயன்படுத்த,எனது நெதர்லாந்துத் தோழி, அந்த வார்த்தையின் பூர்வீகத்தை புரியவைத்தாள். கக்கா - கழிவு, ஹூஸ் - இருப்பிடம் கழிவுகளுக்கான இடம் என்ற கக்கூஸ் டச்சுவார்த்தையில் இருந்து வந்தது எனச் சொன்னாள். தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு ஏன் இந்தோனேசிய மொழியிலும் இந்த வார்த்தையைத் தான் பயன்படுத்துகிறார்கள்

மொழிகளுக்கு இடையிலான தொடர்புகளைப் பற்றி ஆராய்ச்சிப்படிப்பு படிக்கும் அந்த நெதர்லாந்துத் தோழியின் அருகில் மீண்டும் வந்து உட்கார்ந்தேன். இவளின் ஒருவார தமிழ் நாட்டுப் பயணத்தில், இந்தியக் குடியரசின் பிரதாபங்களையும், எப்படி நாங்கள் வல்லரசு என்ற நிலையை நோக்கி, ராணுவ வலிமையிலும், பொருளாதார வலிமையிலும் நகர்கின்றோம் என்பதை எல்லாம் பெருமையுடன் வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் விளக்கிக்கொண்டே இருந்தேன்.

அவள் முகத்தில் சுணக்கம் தெரிய, நெளிந்தபடியே,

“ரயில் எப்பொழுது நகரும் “ எனக்கேட்டாள்.

”தெரியவில்லை, இந்த சந்திப்பில் பொதுவாக ஐந்து நிமிடங்கள்தான் நிற்கும், ஒரு வேளை எதிர்வரும் வண்டிக்காக காத்திருக்கக்கூடும்” சிறிது இடைவெளிவிட்டு, “உடல்நிலை எதுவும் சரியில்லையா?”

“உடல்நலம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, வயிற்றைக் கலக்குகிறது, கக்கூஸைப் பயன்படுத்த வேண்டும்” என்றாள் டச்சு கலந்த ஆங்கிலத்தில்.

“அட, இதற்கென்ன, இந்திய ரயில்களின் சிறப்பம்சமே, ஒரு பெட்டியில் நான்கு கழிவறைகள் இருப்பதுதான், தாராளமாக போய் வரவேண்டியதுதானே, உடைமைகளை நான் பார்த்துக்கொள்கின்றேன்”

அவள் பதில் சொல்ல முற்படுதவற்குள் ரயில் மெல்ல நகர்ந்து வேகம் எடுக்க, தோழியும் கழிவறைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து விட்ட பதிலைத் தொடர்ந்தாள்.“நான்கு கழிவறைகள், முதல் வகுப்புப் பெட்டிகளில் சுத்தம் அற்புதம், ஆஹோ ஓஹோ எல்லாம் சரிதான், ரயில் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது, நின்று கொண்டிருக்கும் ரயிலில் கழிவறையை உபயோகிப்பது தவறு, மேலும் உங்கள் நாட்டில் ரயில் தண்டவாளங்களில் கிடக்கும் கழிவுகளை மனிதர்கள்தான் கையை உபயோகப்படுத்தித் தான் சுத்தப்படுத்துகிறார்கள், குறைந்த பட்சம் நான் அதற்கு காரணம் ஆக மாட்டேன், வேறு ஒருவரின் மனிதக் கழிவுகளை, மற்றொருவர் சுத்தம் செய்ய வேலை வாங்குவது நாகரீகம் அல்ல ”

Sunday, March 18, 2012

வினையூக்கி - நெடுங்கதை போட்டி - முதல் பரிசு ரூபாய் 2500

2008 ஆம் ஆண்டு மத்தியில் ”கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி “ என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத ஆரம்பித்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக அதைப் பதிப்பிக்க இயலவில்லை. அண்மையில் பழைய மின்னஞ்சல்களை தோண்டிக்கொண்டிருந்த பொழுது அந்தத் தொடரின் முதல் சில பகுதிகள் கண்பட்டன. அந்தப் பகுதிகளையே ஆரம்பமாகக் கொண்டு ஏன் ஒரு நெடுங்கதைப் போட்டி ஒன்றை நடத்தக் கூடாது, எனத் தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு

--------------------

போட்டியின் நிபந்தனைகள்

1. பதிவின் கடைசியில் கொடுப்பட்டிருக்கும் கதையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். கதையின் நாயகன் கார்த்தி, நாயகி கீர்த்தனா. இவர்களை மையப்படுத்தியே கதை நிகழ வேண்டும். ரம்யா, ஜெனி ஆகியோர் கார்த்தியின் முந்தையக் காதலிகள், இவர்களை கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் ஓட்டதிற்கேற்ப, மேலும் கதாபாத்திரங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

2. குறைந்த பட்சம் , 20 பக்கங்கள் லதா எழுத்துருவில், 10 வடிவில் இருக்க வேண்டும், அதிக பட்சம் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.

3. போட்டி முடிவடையும் நாள் ஏப்ரல் 30. ஜூன் முதல் வாரத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். கதைகளை எழுதிவிட்டு அவரவர் பதிவுகளில் ஒட்டு மொத்தமாகவோ, பாகங்களாகவோ பதிப்பித்துக்கொண்டு, எனக்கு சுட்டிகளை மட்டும் அனுப்பினால் போதுமானது.

சுட்டிகளை , "வினையூக்கி - நெடுங்கதை போட்டி “ எனத் தலைப்பிட்டு அனுப்ப வேண்டிய முகவரி - rrselvakumar@gmail.com
-----------

நெடுங்கதைகளுக்கானப் பரிசுகள்

1. என் மனதைக் கவர்ந்த முதல் நெடுங்கதைக்கு - இந்திய ரூபாய் 2500 பணமுடிப்பாக வழங்கப்படும்.

2. இரண்டாவது பரிசு - 1500 ரூபாய்

3. பங்கு பெறும் அனைவருக்கும் ரூபாய் 100 மதிப்பில் புத்தகங்கள் வழங்கப்படும்.

இன்ப அதிர்ச்சியாக பரிசுத் தொகை அதிகப்படுத்தப்படவும் கூடும்.

இந்தியக் குடியரசுக்கு வெளியே இருப்பவர்கள் வெற்றிபெற்றால், அவர்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பிற்கு சமமாக வழங்கப்படும்.

கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் ----> நான் மட்டுமே !!! - வினையூக்கி செல்வா :)

------------

கீர்த்தனா - என் தோழி,என் காதலி, என் மனைவி


ரம்யாவுடன் பார்த்திருக்கவேண்டிய தசாவதாரம் படத்தை இதோ படம் வெளிவந்து 57 நாட்கள் கழித்து இன்று , என் கைவிரல்களை கீர்த்தனாவின் கைவிரல்களோடு கோர்த்துக்கொண்டு, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விசயங்கள் எப்படி ஓரிழையில் இணைக்கப்படுகின்றது என கியாஸ் தியரி சொல்லி கமலஹாசன் கதையை ஆரம்பிக்க, கோவிந்தராஜப்பெருமாளை குலோத்துங்கச்சோழன் கடலில் வீசுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்படி கீர்த்தனாவுடன் நெருக்கமாக அமர்ந்து இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் ரம்யா சென்னை வரும்பொழுது தன்னைச் சந்திக்கக்கூடாது என எனக்கு உத்தரவிட்டாளோ என்னவோ.. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் கண்ணுக்குப்புலப்படாத தொடர்பு இருக்குமோ? தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

இப்போது கியாஸ் தியரி , பட்டர்பிளை எபெக்ட் என யோசிக்காமல் கீர்த்தனாவின் மென்மையான தொடுதலையே மனம் விரும்பியது. கீர்த்தனா என் கையில் இருந்த காயத்தழும்பைத்தடவிக்கொடுக்கையில் அந்த ஸ்பரிசத்தில் காமம் இல்லை எனப் புரிந்தது. கீர்த்தனாவிற்கு இடதுபுறம் எனது அலுவலகத் தோழிகள் வேறுசிலரும் வந்திருந்ததாலும், நாங்கள் அமர்ந்திருந்தது "B" வரிசையாகப் போனதாலும் கீர்த்தனாவை சமயம் வாய்க்கும்பொழுது முத்தமிடலாம் என்ற எண்ணத்தை செயல் படுத்தவேண்டாம் என முடிவு செய்தேன். அவளுக்கான முதல் முத்தத்தை பின்னால் இருந்து யாரேனும் கவனித்து விட்டால் அது அவளை சங்கடப்படுத்திவிடக்கூடும் என்பதால் அப்படி ஒரு அவசர முத்தத்தைக் கொடுக்க எனக்கு
விருப்பமில்லை. தாமதமானாலும் பரவாயில்லை, அவளுக்கான முத்தம் கண்ணியமானதாகவும் நீண்ட,ஆழந்த அன்புடனும் தயக்கமில்லாத ஒன்றாகவும் இருக்கவேண்டும்.

திரைப்படத்தில் அசின் பெருமாளே பெருமாளே எனக்கத்தும்பொழுதெல்லாம், கீர்த்தனாவின் காதில் "Je t'aime" சொல்லியபோது என் கைகளை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். நான் ஏற்கனவே படத்தைப்பார்த்து இருந்ததால் இடைவேளை வர சில நிமிடங்களுக்கு முன்னர், என் கைகளை விலக்கிக்கொண்டேன். எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பிக்க, கீர்த்தனாவின் கண்களில் சிலநீர்த்திவலைகள் பனித்திருந்தன.

"உங்களுக்குப் பிடிச்சிருந்ததா, கீர்த்தனா"

"ம்ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு கார்த்தி, தாங்க் யூ"

கீர்த்தனாவை எனது அலுவலக நண்பர்கள்,தோழிகள் மத்தியில் நான் மரியாதையாக அழைப்பதுதான் வழக்கம். எங்களுக்குள் குறைந்தபட்ச நட்புக்கூட இல்லை என அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கீர்த்தனாவின் விருப்பமும் அவ்வாறே. எனக்கும் அது சரியாகவேப்பட்டது. எனது முதல் காதல் பற்றி ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டதில், அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் ஊத்திக்கொள்வதைப்போல தோல்வி அடைந்தது. ரம்யாவுடன் ஆன இரண்டாவது காதல் ஏதோ பரவாயில்லை முதலுக்கு மோசமில்லாமல் நட்பை மட்டும் தக்கவைத்துக்கொண்டு காதலை விலக்கியாகிவிட்டது. ரம்யாவுக்கும் அதுவே விருப்பம். அவள் என்னை ஆரம்பத்தில் இருந்தே நண்பனாக மட்டுமே பார்த்து வருகிறாள்.

என்னுடைய இந்த மூன்றாவது காதலுக்கு என்னுடைய முதல் இரண்டு காதல்கள்தான் காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அட உண்மைதாங்க ..எப்படின்னு கேட்கறீங்களா? எனக்கு கீர்த்தனாவைப்பிடிக்கக் காரணம் என்னோட முதல் காதலி ஜெனி. கீர்த்தனாவிற்கு என்னைப் பிடிக்க காரணம் என்னோட இரண்டாவது காதலி ரம்யா. இத்தனைக்கும் இவங்க மூன்று பேரும் சந்தித்துக்கொண்டதே இல்லை.

கீர்த்தனாவை என் கண்களுக்கு கடைசி ஒரு வருஷமாத் தெரியும். என் மனதிற்கு கடைசி மூன்று மாதங்களாகத் தெரியும். போனவருடம் பிற்பகுதியில் எங்கள் அலுவலக வளாகத்தில் முதன் முதலில் கீர்த்தனாவைப் பார்த்தேன். அசப்பில் ஜெனியைப்போலவே இருந்ததால் ஏதோ ஒரு ஈர்ப்பு அவள் மேல ஆரம்பமானது. ஜெனி சம்பந்தப்பட்ட எந்த ஒரு நினைவும் கசப்பான அதிர்வுகளையே மனதில் ஏற்படுத்திவிடும். ஆனால் கீர்த்தனா ஜெனியைப்போல இருந்தாலும் ஜெனிக்கான "நெகட்டிவ் வேவ்லெங்த்" ஏதும் இல்லாததனால் கீர்த்தனாவை என் கண்கள் தேட ஆரம்பித்தது.. இருந்தபோதிலும் அந்த சமயங்களில் ரம்யாவுடனான என் காதலை நான் வெற்றி பெற வைக்க , விக்கிரமாதித்தன் போல மனம் தளாராமல் விடாமல் என் காதல் விருப்பத்தை ரம்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததாலும் வேலைப்பளுக்காரணமாக அடிக்கடி அலுவலக வளாகத்தில் சுற்ற முடியாததாலும் கீர்த்தனாவைப் பற்றி அதிக யோசனை இல்லை. எத்தனை தடவை வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் ஒரு சமயத்தில் ஒருவரை மட்டுமே காதலிக்கவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடுடன் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கும்.

"நான் எங்கேங்க இல்லைன்னு சொன்னேன், இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்" என கமல்ஹாசன் பக்தியைப் பகுத்தறிவுடன் கலந்தடித்து காதல் வசனம் பேசிக்கொண்டிருக்க , படம் முடியப்போகிறது என உணர்வு வந்து நிகழ்காலத்திற்கு வந்தேன்.

படம் முடிந்து வெளியே வந்து , உடன் வந்திருந்த அலுவலக நண்பர்களை வழியனுப்பிவிட்டு கீர்த்தனாவிடம் "நீ கண்டிப்பா ஊருக்குப்போகனுமா, "

"ஆமாண்டா, அப்பா கண்டிப்பா இன்னக்கே வரச்சொல்லி இருக்காரு" அவளுக்கு ஊருக்குப்போக விருப்பமில்லை என்பதை கண்களிலும் ஊருக்குப் போகவேண்டியக் கட்டாயத்தை வார்த்தைகளிலும் சொன்னாள்.

அசோக்பில்லரில் புதுச்சேரி பேருந்துவர அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு பேருந்து வளையும் வரை அவள் முகத்தைப்பார்த்துவிட்டு அவளின் கைபேசிக்கு அழைத்தேன். அவளின் முதல் வாக்கியம் "மீ டு, தாங்க் யூ" குரலில் வழக்கத்தை விட மென்மையாக இருந்தது. மற்றும் ஒரு மாலைப்பொழுது கீர்த்தனாவுடன் இனிமையாக தொலைபேசி உரையாடலில் கரைந்தது. நேரக் கரைதலில் காதல் வளர்ந்திருந்தது.சில மாதங்களுக்கு முன் "ஒரு அடி Gap கொடுத்திங்கன்னா, அந்தப்பக்கம் போயிடுவேன்னு" நான் சொன்னபொழுது "ஒரு அடி வேண்டுமா?, ஒரு அடி வேண்டுமா " என ஸ்கேலை வைத்துக்கொண்டு கீர்த்தனா என்னிடம் முதன்முதலாக நான் ரசிக்கும்படியாக பேசியபொழுது மனதின் ஓரத்தில் கீர்த்தனாவிற்கு ஒரு இடம் தயாராகப்போகிறது என்ற ஆழமனம் சொன்னபொழுது மனம் கீர்த்தனாவைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வப்பட்டது.

"சுமதி, யாரு அந்த பொண்ணு, டிரெயினிங் ஏதும் வந்து இருக்காங்களா?"

"யாரும் புதுசா ஆபிஸுக்கு வந்திரக்கூடாதே, உடனே உன் என்கொயரி ஸ்டார்ட் ஆயிடுமே? டிரெயினி எல்லாம் இல்லை நம்ம எம்ப்ளாயிதான்? பேரு கீர்த்தனா"

"பார்க்க கியுட்டா இருந்தாங்க அதான் கேட்டேன், நத்திங் சீரியஸ், டெவலப்மெண்டா? அட்மினிஷ்ட்ரேசனா?"

"ம்ம்ம் மேனேஜ்மெண்ட், நம்ம கம்பெனிக்கு புதுசா வந்திருக்கிற கம்பெனி செக்ரட்டரி"

"ம்ம்ம் "


"புரொஜெக்ட் டிரெயினிங் வரப் பொண்ணுங்க கிட்ட கடலைப்போடுற மாதிரி ஏதும் பேசிக்கிட்டு இருக்காதே?"

"சரி சரி.. "

அடுத்து வந்த நாட்களில் கீர்த்தனாவின் ஊர் பாண்டிச்சேரி என்பதும் அவளது அப்பா புதுச்சேரி அரசு துறை ஒன்றில் பெரிய பதவியில் இருப்பதும் கீர்த்தனாவுடன் பேசும் எனது அலுவலகத்தோழிகள் வாயிலாக தெரிந்து கொண்டேன். கம்பெனி செக்ரட்டரி பதவி என்பது சார்ட்டர்ட் அக்கவுண்டட்க்கு சமமானது என்பதையும் கூகுளில் பார்த்துக் கண்டுபிடித்தேன். நான் ஏழுவருஷமா குப்பைக்கொட்டி வாங்கும் சம்பளத்தில் கீர்த்தனா தனது இரண்டுவருட அனுபவத்துடன் இங்கு வந்து சேர்ந்து இருக்கிறாள் என்பதும் தெரிந்தது.

கீர்த்தனாவை நேரில் பார்க்கும்பொழுதெல்லாம் கண்ணோடு கண்ணாகப் பார்க்க ஆரம்பித்தேன். "நான் உன்னை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்" என நான் என் கண்களால் சொல்லுவதாக என் மனதில் நினைத்துக்கொண்டேன். சில சமயங்களில் நான் பார்க்கிறேன் எனத்தெரிந்து அவளும் பார்ப்பாள், அந்தப்பார்வை "இவன் ஏண்டா நம்மை இப்படி பார்க்கிறான்" என்பதாக இருக்கும்.

சுமதியிடம் பேசும்பொழுதெல்லாம் கீர்த்தனாப் பற்றிய பேச்சை வீம்பாக ஆரம்பிப்பேன். நான் வேண்டுமென்றேக் கேட்பதைத் தெரிந்து "என்ன ரூட் விடுறியா? ஏற்கனவே பெங்களூர்ல ரம்யா, இப்போ பாண்டிச்சேரியா?"

"சே சே, அப்படி எல்லாம் இல்லை. லவ்வுக்கும் எத்திக்ஸ் உண்டு, ஒரு சமயத்தில ஒரு டிராக் தான், ஆனால் நிறைய சைட் அடிக்கலாம்..கீர்த்தனா ரிசம்பல்ஸ் ஜெனி"

சுமதி ஜெனியை நேரில் பார்த்து இருக்கிறாள்.

"ம்ம்ம் .. அதுக்காக ?"

"ஜெனி மாதிரி இருக்கிறதுனாலே கொஞ்சம் எக்ஸ்ட்ரா அட்டென்சன் அவ்வளவுதான்,"

"சரி சரி ..ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் பீலிங்ஸ், உனக்கு கீர்த்தனா பத்தி ஒன்னு சொல்றேன்"

"சொல்லு சொல்லு"

"கீர்த்தனாவுக்கு எப்.எம்ல நைட் பேசுற ஆர்.ஜே கவுதமைப்பிடிக்கும்"

ஏனோதெரியவில்லை எனக்கு காதில் புகைவந்தது போல இருந்தது. பொதுவாக நான் பண்பலையில் ரகசிய சினேகிதிதான் கேட்பதால் கவுதமை தவிர்த்துவிடுவேன். கீர்த்தனாவிற்காக அன்றில் இருந்து சிலதினங்களுக்கு கவுதமின் பண்பலை நிகழ்ச்சியைக் கேட்க ஆரம்பித்தேன்.

அடுத்த சில வாரங்களில் நாங்கள் வானொலி பண்பலை நிறுத்தப்பட்டு , மனதின் பண்பலைவரிசைகள் பாடத்தொடங்கின. காதல் உறுதியாகும் சூழலில், மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் முடிவை நான் எடுத்தேன்.
-------


போட்டி முடிவுகள் - http://vinaiooki.blogspot.it/2012/07/blog-post_05.html

Wednesday, March 14, 2012

ஷிராந்திக்களும் பக்‌ஷேக்களும் - சிறுகதை

ஒரு வாரம் கடலில் மிதக்கப்போகும், இந்த மத்தியத் தரைக்கடல் சொகுசு கப்பலில் கூட்டம் குறைவாக இருப்பதன் காரணங்களை யோசித்துக்கொண்டிருக்கையில்

நீங்கள் வங்காளதேசத்தவரா?” எதிரில் கைக்கோர்த்தப்படி உலாவிக்கொண்டு இருந்த சிங்கள தம்பதியினர் என்னைப்பார்த்துக் கேட்டனர். வட்ட வடிவ முகம், மாநிறத்திற்கும் குறைவான நிறம் ஆகியனவற்றால் ஒருவேளை என்னை வங்காளதேசத்தவன் என நினைத்திருக்கலாம். தெம்பல தெம்பல என அவர்களுக்குள் கிசுகிசுவெனப் பேசிக்கொண்டிருந்ததை வைத்தும், முகத்தில் தெரிந்த நமட்டுத்தனமும், கண்களில் இருந்த மெல்லிய குரூரமும் நிறமும் உடையும் அவர்களை சிங்களவர்கள் என அடையாளப்படுத்தின.

“ஆமாம்” என நான் சொன்ன பொய் அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. புன்னகைக்கான காரணம், ஒரு வேளை நான் தமிழன் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதானால் இருக்கலாம்.

ஐந்து வருட ஐரோப்பிய வாழ்க்கையில் இதற்கு முன்னர் சிங்களவர்களைச் சந்தித்து இருக்கின்றேன். தமிழ் என பொய் சொல்லி அகதி அந்தஸ்துகளைப் பெற்றுக்கொண்ட சிலர், சுற்றுலாவிற்கு வந்த ஐரோப்பியர்களை உடலால் கவர்ந்து, மண்முடித்து ஐரோப்பாவிற்கு வந்த சில சிங்களப் பெண்கள், ராணுவத்தில் கொஞ்ச நாள் இருந்துவிட்டு, அரைப்பைத்தியமாகி, ஏகப்பட்ட லட்சங்கள் லஞ்சமாகக் கொடுத்துவிட்டு தப்பித்து வந்த சில இளைஞர்களையும் சந்தித்து இருக்கின்றேன். அவையெல்லாம் 2009 க்கு முன்னர்.

கடைசி மூன்று வருடங்களாக சிங்களவிகுதிப் பெயர்களைப் பார்த்தாலோ கேட்டலோ, நரகலைப்பார்த்த குமட்டல்தான்... நரகல் ஓர் ஆணாகவும் பெண்ணாகவும் எனக்கு முன்னர் அமர்ந்து கொண்டு, என்னைக் கேட்ட கேள்விக்குப் பதிலாக,

”நீங்கள் சோமாலியாவா?” வேண்டுமென்றே கேட்டேன்.

அவர்கள் பதறியபடி, “இல்லை இல்லை ஸ்ரீலங்கா”

தம்மை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்புமைப் படுத்தினால், முதலில் கோபப்படுவது துணைக்கண்டத்தினர்தான்...

“ஓ அப்படியா, ... தமிழ் புலிகள், பிரபாகரன்... கேள்விப்பட்டிருக்கின்றேன்”

“அவர்கள் பயங்கரவாதிகள்... தீவிரவாதிகள்... எங்களது அரசாங்கம் அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டது” இருவரும் ஒருசேர,

கடலில் அவர்களைத் தள்ளிவிட்டுவிடலாம் என்பதைப்போல எனக்கு ஆத்திரம் வந்தது. ஆத்திரத்தை ஒத்திவைத்தேன்.. ஒரு பக்கம் பாவமாகவும் இருந்தது. ஊடகங்களாலும் அரசாங்கத்தினாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட சாமானியர்களாய் இருந்தால் என்ன செய்வது ... பதிலேதும் பேசாமல், சிறிது நேரம் அமைதி காத்தேன்.

“ நீங்கள் இத்தாலியில் என்ன செய்கிறீர்கள்”

“படிக்கின்றேன், பன்னாட்டு மனித உரிமைகள் சம்பந்தபட்ட மேற்படிப்பு” இந்த முறை உண்மையைச் சொன்னேன்.

“தீவிரவாதிகளைக்காட்டிலும், மனித உரிமைகள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களால் தான் எங்கள் நாட்டிற்கு தொடர்ந்து ஆபத்து”

கொதிப்பின் உச்சத்தை புன்னகையால் அடக்கிக்கொண்டு, படிப்பினாலும் அனுபவத்தினாலும் கற்றுக்கொண்ட மனித விழுமியங்களை நெருக்கடியின் போதும் பயன்படுத்துவதே சிறப்பு என இயல்புக்குத் திரும்ப,

“நீங்கள் இத்தாலியில் என்ன செய்கிறீர்கள்.. படிப்பு .,. அல்லது வேலை ... அல்லது தேனிலவு சுற்றுலா” தேனிலவு என அவர்களைப் பார்த்து கேட்க காரணம் அவர்களின் அணைத்துக்கொள்ளலும், முத்தமிடலும்தான்

“இல்லை, இல்லை நாங்கள் தம்பதிகள் அல்ல, ஜெனிவாவில் மனித உரிமைகள் சம்பந்தமாக நடப்பவைகளை கவனிப்பதற்காக வந்த அரசாங்க பிரதிநிதிகள், நேற்று ரோமில் நடைற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டதால் எங்கள் அரசாங்கம் இந்த சுற்றுலாப்பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது~ .

எனது வன்மத்திற்கு நட்பின் உருவம் கொடுத்தேன்.நாங்கள் மூவரும் ஒன்றாக மது அருந்தினோம், இரவு நடமாடினோம்... நட்பும் இறுகியது, எனக்குள் வன்மமும் இறுகியது ... மகிழ்ச்சியின் உச்சத்தில், அவர்களின் கைப்பைகளை என்னிடம் கொடுத்துவிட்டு நெருக்கமாக ஆடத்தொடங்கி இருந்தனர். கைப்பையில். பாஸ்போர்ட், கைபேசிகள், பயணச்சீட்டுகள், சிலநூறு ஈரோக்கள் இருந்தன. லிவர்னோ துறைமுகத்தில் சில மணி நேரம் நிற்கும் என்ற அறிவிப்பு வந்தது. மெய் மறந்து ஆடிக்கொண்டிருந்த அவர்களை விட்டு நகர்ந்து , எனது அறைக்குச் சென்று எனது உடமைகளை எடுத்துக்கொண்டேன். மனிதவிழுமியங்களை மதிக்காத போரிலும் காதலிலும், பிரதியாகத் திருப்பிக்கொடுக்கப்படும் அனைத்துமே நியாயங்களுக்கு உட்பட்டதுதான் என என்னை நானே சமாதனப்படுத்திக்கொண்டு, அவர்களின் கைப்பைகளைக் கடலில் வீசிவிட்டு கப்பலைவிட்டும், துறைமுகத்தை விட்டும் வெளியேறினேன்..

Monday, March 05, 2012

ஊர் சுற்றலாம் வாங்க - தகவல் கட்டுரை

மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும், பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்டிருந்த கீழ் நடுத்தட்டு
குடும்பங்களை, தாரளமயமாக்கமும், வி.பி.சிங்கும், கடின உழைப்பும், படிப்பும் கடந்த இருபதாண்டுகளில், பொருளாதார ரீதியாக மேலான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அறுபது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு செல்வதே ஒரு சுற்றுலாப்பயணத்தைப்போல அனுபவத்த அன்றைய சிறார்கள் பலர், இன்று தேவைக்கு மேலே கொஞ்சம் சேமிக்கும் அளவிற்கும் வசதியாகவே உள்ளனர். கார், வீடு, மனைவி குழந்தைகள் என இன்றைய சமுதாயம் எதிர்பார்க்கும் கூறுகள் அனைத்தும் கிடைத்தபின்னர், நாம் யோசிக்க
வேண்டியது சுற்றுலா. கையைக் கடிக்காத சுற்றுலாக்கள். இந்தியக் குடியரசில் இருக்கும் பலநகரங்களைச் சுற்றினாலே பாதி வாழ்க்கை கழிந்துவிடும் என்றாலும், நிறைய மக்களுக்கு
வெளிநாட்டு சுற்றுலா மேல் ஓர் ஈர்ப்பு இருக்கும். இன்றைக்கு ரேஷன் அட்டைகளைபோல ஏறத்தாழ அனைவரும் பாஸ்போர்டுகளை வாங்கி வைத்துக் கொள்வது சாதரணமாகிவிட்டது.

மக்களுக்கு வெளிநாட்டு பயணம் என்றால் , விசா எடுக்க வேண்டுமே, நாளாகுமே, சுற்றுலா முகவர்கள் நம்பிக்கையானவர்களா, நிறைய செலவு ஆகுமே என ஏகப்பட்ட கேள்விகளினால்
முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார்கள். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 50க்கும் அதிகமான நாடுகள் விசா இன்றியோ அல்லது வந்து சேரும்பொழுது உடனடியாக விசா வாங்கிக்கொள்ளும் வசதிகளை செய்து கொடுக்கின்றன. இந்தக் கட்டுரையில் , சுற்றுலாவிற்கு ஏற்புடைய சில நாடுகளையும் அவற்றிற்கான விசா எளிமைகளையும் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட இந்தியாவின் இன்னொரு மாநிலம் போல இருக்கும் நேபாளம் நாட்டிற்கு விசா இன்றி பயணப்படலாம். எந்த நாட்டைப்பற்றி விபரங்கள் தெரிந்திருக்கோ இல்லையோ,
தாய்லாந்தின் சுற்றுலா சிறப்பு மக்களுக்கு தெரிந்திருக்கும். மலிவான செலவில், இரண்டு வார சுற்றுப்பயணத்திற்கு, பாங்காக், சியாங் மாய், சியாங் ராய், புக்கட் உள்ளிட்ட சில விமான

நிலையங்களில், வந்தவுடன் விசா எடுத்துக்கொள்ளும் நடைமுறை இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இருக்கின்றது. மடகாஸ்கருக்கு மேலெ, இருக்கும் தீவுக்கூட்டமான சீஷல்ஸ் நாட்டிற்கு ஒரு மாதம் அளவிற்கு வெறும் பாஸ்போர்ட்டுடன், திரும்ப வரும் பயணச்சீட்டு, தங்குமிடம், கொஞ்சம் பணம் ஆகியனவற்றுடன் பயணப்படலாம். மொரீசியஸ் நாட்டிற்கும் இதேவகையில் இரண்டு வாரங்களுக்குப் பயணப்படலாம்.எட்டும் தூரத்தில் இருக்கும் மாலத்தீவுகளுக்கு, அங்கு போனவுடன் 30 நாட்களுக்கு விசா எடுத்துக்கொள்ளும் நடைமுறை இருக்கின்றது.

ஐரோப்பாவிற்கு ஷென்கென் விசாவில் வருபவர்கள் (மாணவர்கள், குறுகிய கால வேலைக்காக வருபவர்கள்) ஷென்கென் விசாவை வைத்துக்கொண்டு, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன், ஸ்லோவாக்கியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்லொவேனியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குப் பயணப்படலாம். சென்கென் உடன்படிக்கையின்படி, மேற்கண்ட எந்த நாட்டிற்கு நீங்கள் பயணப்பட்டாலும், சென்கென் விசாவைப் பெறுவீர்கள், அதை வைத்துக்கொண்டு முடிந்தவரை ஓர் ஐரோப்பியப் பயணம் செய்துவிடலாம்.ரோம் நகரத்திற்கு எந்த வகை சிறப்பு இருக்கின்றதோ, அதற்கு குறையாத மகத்துவம் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கும் உண்டு. சென்கென் விசா அல்லது பிரிட்டன் அல்லது
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய பாஸ்போர்ட் குடிமக்கள், துருக்கியில் எந்த விமான நிலையத்திலும் விசா வாங்கிக்கொண்டு, 30 நாட்களுக்கு ஊர் சுற்றிப்பார்க்கலாம். அல்பேனியா, அண்டோரா, மாண்டிநிக்ரோ நாடுகளுக்கும் சென்கென் விசாவுடன் செல்லலாம்.நெடுநெடுவென வளர்ந்திருக்கும் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள், வீசும் பவுன்ஸர்களை கிரிக்கெட் ஆட்டத்தில் நேரிடையாக பார்க்க ஆசையா, கிளம்புங்கள் ஜமைக்காவிற்கு. வெறும் பாஸ்போர்ட்டுடன் 30 நாட்களுக்கு ஊர் சுற்றலாம்.

மேற்கத்திய சாயல் படியாத, சென்கென் அல்லாத முன்னாள் சோவியத் நாடுகளைப் பார்க்க ஆசையா? ஜார்ஜியா, தஜிகிஸ்தான் நாட்டிற்கு போய் சுற்றலாம். விமான நிலையத்தில் வந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆர்மீனியா, அசார்பைசான் நாடுகளுக்கு பயணம் செய்ய ஆசைப்பட்டாலும் நடைமுறைகள் எளிதுதான். விமானநிலையத்திலேயே விசாவைப் பெற்றுக்கொள்ளலாம்.எத்தனை சுற்றினாலும் தென்னமெரிக்க காற்றை சுவாசிக்கவில்லை என்றால் வாழ்க்கை முழுமையடையாது. பொலிவியா நாட்டிற்கு போனதும் விசா வாங்கிக்கொள்ளலாம்.

சிங்கப்பூர் ஏறத்தாழ மேற்கத்திய மெட்ராஸ், ஒரு காலத்தில் அதற்கு இணையான நகர நாடான, ஹாங்காங்கிற்கு செல்ல , விசா எதுவும் தேவையில்லை. விசா இன்றி பாஸ்போர்ட்டுடன் இரண்டு வாரங்கள் ஊர்சுற்றலாம்.

எகிப்தில் தெற்கு சினாய் மாநிலத்திற்கு உட்பட்ட சுற்றுலா மையங்களில் தங்கி கண்டுகளிக்க இரண்டு வாரங்கள் அனுமதிக்கப்படுகிறது.

தொலைந்த வரலாற்று அடையாளங்களின் தொடர்ச்சியைக் காணவிரும்புபவரா நீங்கள், இருக்கவே இருக்கிறது கம்போடியா , இந்தோனேசியா. இரண்டு நாடுகளுக்கும் 30 நாட்கள் விசா வந்தவுடன் வழங்கப்படும் நடைமுறை உள்ளது.

மேற்சொன்ன முக்கியமான நாடுகளைத் தவிர, குட்டி குட்டித் தீவு நாடுகள் வெறும் பாஸ்போர்ட்டுடனோ அல்லது வந்தவுடன் விசா தரும் முறையின் கீழோ இந்தியக் குடிமக்களை ஊர்சுற்ற அனுமதிக்கின்றன. செயிண்ட் கிட்ஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பிஜித் தீவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.

மேற்சொன்ன விபரங்கள் மாறிவரும் அரசியல் சூழல் காரணமாக மாற்றப்படலாம். இருந்தபோதிலும், உடனுக்குடன் தகவல்களைப் பெற கீழ்கண்ட தளத்தை அடிக்கடி பார்வையிடலாம். இந்தத் தளம்

http://www.iatatravelcentre.com/home.htm IATA என்ற பன்னாட்டு வான்வழிப்போக்குவரத்து அமைப்பினால் நடத்தப்படும் தகவல் இணையத்தளம். இவர்கள் தான் வான்வழி போக்குவரத்து விதிமுறைகளை, ஒருங்கிணைப்பவர்கள்.

தங்குமிடங்களை முன்பதிவு செய்ய இந்தத் தளத்தை மக்கள் பார்வையிடலாம் http://www.booking.com/

செலவுகளை மிச்சம் செய்யும் விரும்பும் தனியான சுற்றுலாப் பயணிகள், http://www.couchsurfing.org/ இந்தத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சிறப்பம்சம் என்னவெனில், இந்தத் தளத்தின் உறுப்பினர்கள் , தங்களின் வீடுகளின் ஓர் அறையையோ அல்லது, ஹாலின் ஓரத்தில் சிறுபடுக்கையையோ ஏற்பாடு செய்து தருவார்கள். பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. நம்பகத்தன்மையை அவர்களின் கணக்குகளில் இருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடியவன் தமிழன், சேமித்தல் நலமே... சேமித்தலை தன் வாழ்நாளில் சுற்றுலாவிற்கும் பயணங்களுக்கும் பயனபடுத்தும்பொழுது, அதன் வாயிலான கற்றல்கள் சேமிக்கும் பணத்தின் மதிப்பைக் காட்டிலும் அதிகம். உங்களின் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள்.

Sunday, March 04, 2012

இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா (அ) பெயரில் என்ன இருக்கிறது - சிறுகதை (பண்புடன்)

பனிக்கொட்டோ கொட்டு எனக் கொட்டிக்கொண்டிருந்தது, இத்தாலிதானே, நம்ம கோயம்புத்தூர் தட்பவெப்பம்தான் சமாளித்துக்கொள்ளலாம் என இந்த துணைத் தலைவர் ரங்கநாதனின் பேச்சைக் கேட்டு கைக்காப்புறைகள், கனமான மேலாடைகள் என எதுவுமே எடுத்து வராததில் , மீன்கடைகளில் விறைத்துப்போய் கிடக்கும் மீன்களைப்போல கைவிரல்களும் காது மடல்களும் உணர்ச்சியற்றுப்போயின. எனது பெயர் கார்த்திக் ராமச்சந்திரன், பெயரில் என்ன இருக்கின்றது என்கிறீர்களா...

திரைவிரும்பிகளின் குடும்பத்தில் பிறந்த எனக்கு, இந்தப் பெயர்தான் குறை சாதியினர் நுழைய முடியாத, நிறுவனத்தில் மேலாளப்பொறுப்பில் இடம் கிடைக்க உதவியது. அசைவ உணவு வகைகளைன் ருசியைப் பற்றி அடிக்கடி பேசப்போக, ஒரு நாள் இதே ரங்கநாதன், ஏதேச்சையாக தோளைத் தொடுகையில் நான் ஒரு நடுத்தர சாதியைச் சேர்ந்தவன் எனக் கண்டுபிடித்துவிட்டார். யதார்த்தமாகத்தான் தொட்டாரா என்பதில் இன்னமும் எனக்கு சந்தேகம் உண்டு, கி.மு , கி.பி என்பதைப்போல, தோளுக்கு முன்னர் தோளுக்குப்பின்னர் என ரங்கநாதனின் நட்பு மாறிப்போனது.

நானும் கொஞ்சம் இடம் பொருள் ஏவல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு விலாங்கு மீனாகிப்போனேன், பாம்புக்கு வாலாயும், மீனுக்குத் தலையாயும் ஆறு வருடங்கள் ஒப்பேற்றினாலும், அலுவலக விசயமாக வெளிநாடு வருவது எனக்கு இதுதான் முதன்முறை, திறமை முக்கால் பங்கு உள்ளடி கால் பங்கு என அலுவலக அரசியலைக் கற்றுக் கொள்வதற்கு இத்தனை வருடங்கள் ஆகி இருக்கின்றன.

ரோம் நகரத்தில் வேலைகளை முடித்துவிட்டு, நாங்கள் அடுத்து வியன்னா போகவேண்டும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், ரயிலில் போகலாம் என ரயிலுக்காக காத்திருக்கையில்தான்,

“ரங்கா சார், பசுபதி பாண்டியனைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க” எனப் பேச்சை எடுத்தேன்.

பசுபதி பாண்டியன் சென்ற வருடம் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தவன், வயது மூப்பு, அனுபவ மூப்பு என்ற வகையில் சேர்ந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும், என்னைவிட குறைவான சாதியில் இருந்து வந்தவன் ஆதலால், னகர விகுதி போட்டு அழைப்பது சிறுவயதில் இருந்து பழக்கமாகிவிட்டது. காஞ்சி சங்கராச்சாரியாரின் படங்களே, அனைவரின் மேசைகளை அலங்கரிக்கையில், வந்த முதல் நாளே அலுவலக மேசையில் சிறிய அளவிலான அம்பேத்கார் படத்தை வைத்தவன், எனக்கு அம்பேத்கார் முதன்முதலில் அறிமுகமானது, எனது மாமா அம்பேத்கார் சிலையை உடைத்து கைதான பொழுதுதான். சமீபத்தில் அதே மாமா தனது விதவை மகளுக்கு, பெண் தேடும்பொழுது தாழ்த்தப்பட்ட பழங்குடியினரைத் தவிர யார் வேண்டுமானாலும் என்று மாப்பிள்ளைத் தேடினார்.

அந்த அளவிற்கு மீசையே பெருமை என்ற சாதிய அடையளத்துடன் வளர்ந்தவன் நான். சாதி, பசுபதியின் நுனிநாக்கு ஆங்கில முயற்சி, கருப்பு நிற முகத்தின் மேல்பூச்சுகள் செய்து கொள்வது, நவீன பாணியில் ஆடைகள் அணிவது இவற்றை எல்லாம் விட, அவன் என்னைவிட கொஞ்சம் அறிவாளியாக இருக்கிறானோ என்ற ஐயம் தான் வெறுப்பை சாதிப்பூச்சுடன் காட்ட வைத்தது. கோபாலன்களும் வாசுதேவன்களும் எனக்கு செய்த அரசியலை பசுபதிக்கு நான் செய்துதான் இந்த இத்தாலி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன்.

நானும் ரங்கநாதனும் ஒன்று சேரும் மையப்புள்ளி அம்பேத்காரின் வழிவகைகளைக் கிண்டலடிப்பதுதான். பெயரை வைத்தும் ஊரை வைத்தும் எப்படி சாதிகளைக் கண்டுபிடிப்பது என எனக்கு கற்றுக்கொடுத்தவர் ரங்கா சார் தான். என்னை ஒருத்தன் மிதிக்கிறப்ப இருக்கிற வலியைக் காட்டிலும், நான் ஒருத்தனை மிதிக்கிறப்ப இருக்கிற மகிழ்ச்சி இருக்கே அட அட... நிறுவனத்தின் அசூர வளர்ச்சி, குறிப்பிட்ட காலத்திற்குப்பின்னர் வேலைக்கு பெயர்களை வைத்து மட்டும் எடுப்பது என்ற நிலையில் இருந்து மாறிப்போய் இருந்தது. நிறுவனத்தில் நிறைய ராம்விலாஸ் பாஸ்வான்களும், மாயவதிகளும் இருக்கின்றனர்.

“கோட்டால கவர்ன்மெண்ட் வேலைப்பார்த்துட்டு இருந்தவனுங்க, இப்பொவெல்லா, டைக்கட்டிக்கிட்டு கலெக்டர் வேலைக்கு வர்ற மாதிரி வர்றானுங்க” கையில் வைத்திருந்த ஹம்பர்கரை கடித்தபடியே பேசினார்.

ரங்கநாதனைப்போல என்னாலும் அவர்களின் பொருளாதார முன்னேற்றங்களைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனது கிராமத்தில் இரண்டு மூன்று அம்பேத்கார் சிலைகள் வந்துவிட்டன, நான்கடி உயரத்திற்கு கூனிக்குறுகி நடந்தவனெல்லாம், மாடிவீடுக் கட்டிக்கொண்டு, ஊருக்குபோகையில் மாப்பிள்ளை என கூப்பிடுகிறான்.

“இப்பொவெல்லாம் பேரை வச்சுக்கூட கண்டுபிடிக்க முடியல, உன்னை மாதிரி”

“சார், ஆயிரம் இருந்தாலும் நான் வீரப்பரம்பரை, என்னை சுப்ரீம் கோர்டுகளோட கம்பேர் பண்ணாதீங்க” சுப்ரீம் கோர்ட் என்பது பசுபதிபாண்டியன் வகையறாக்களைக் குறிக்கும் ஒரு குறிச்சொல்.

“நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்......... அன்னக்கி மாட்டுக்கறி சாப்பாடு லஞ்சுக்கு எடுத்துட்டு வரான் .. ”

“இண்டியால ரிஷர்வேசனால பொழச்சுக்குறானுங்க, ஃபாரின்ல எல்லாம் மெரிட்டுதான்” எனக்கான பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டைக் காட்டிலும் அவர்களுக்கு எளிதாக இடங்கள் கிடைக்கின்றதே என்ற கடுப்பில்...

“நீ சொல்றது சரிதான், பத்துக்கு எட்டுபேர் டாக்டரேட்ஸ் எல்லாம் எங்களவாதான், இப்போ ஒன்னு இரண்டு உங்க ஆட்களும் வர்றானுங்க, ” ரங்கா சார் சொல்ல உண்மையில் அப்படி இருக்கின்றதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை என்றபோதிலும் பெருமையாகத்தான் இருந்தது,

“மேல் சாதிப் பொண்ணுகளை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கனும்னு அலையுறானுங்க, பசுபதியோட வொய்ஃப் கூட உங்களவாதான்”

“அப்படிப்போடு, எப்படி நம்ம பாஸ் பசுபதியைத் தான் எடுக்கனும்னு சொன்னாருன்னு, அப்பவே நினைச்சேன் ஏதாவது கனெக்ஷன் இருக்குமுன்னு”

அடடா, எனக்கு நானே குழியை வெட்டிக்கொண்டுவிட்டேனோ ... கோடுபோட்டாலே கோலமாக்கிவிடுபவர்களிடம், பசுபதியை சொந்தக்காரன் ஆக்கிவிட்டுவிட்டேனே !! அடுத்த பத்து நிமிடங்கள் கனத்த மௌனம்தான். அனேகமாக இதுவே முதலும் கடைசி வெளிநாட்டுப்பயணம் என நினைக்கின்றேன். அடுத்த முறை பசுபதியைத்தான் ரங்கா கூட்டிக்கொண்டு வருவார்.

ஏழரையைக் கடந்தும் வியன்னாவிற்கான ரயில் நடைமேடைக்கு வருவதைப்போலத் தெரியவில்லை.

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆங்கிலத்தில் பேசி பந்தா காட்டுவதைப்போல, ரங்கா சார் ஆங்கிலத்தில் அங்கு இருந்த இத்தாலியர் ஒருவரிடம் கேட்டார்.

“நோ கப்பித்தோ நோ கப்பித்தோ “ என்று அவன் சொல்ல, “என்னடா இவன் காப்பித்தா காப்பித்தாங்கிறான்” என்று அவனை கேலிபேசி விட்டு சலிப்புடன் மீண்டும் என்னிடத்திற்கு வந்தார்.

ஆங்கிலத்தில் வியன்னா என்றபோதிலும் ஜெர்மனிலும் இத்தாலியனிலும் அந்த ஊர் வேறு உச்சரிப்பில் அழைக்கப்படும். வியன் , வீன் என ஜெர்மன் இத்தாலிய உச்சரிப்பில் ஒருவருடன் கேட்டுவிட்டு, அவர் கைக்காட்டிய ரயிலில் ஏறிக்கொண்டோம். பரிசோதகர் எங்கள் பயணச்சீட்டுகளில் எதையோ கிறுக்கிவிட்டு, ஒரு பெட்டியைக் கைக்காட்டினார்.

”காத்தால எந்திரிச்சா, வியன்னா ~ என ரங்கா சார் சோம்பல் முறித்தார். பெட்டியில் தமிழ் குரல் கேட்க தூரத்தில் ஆரம்ப இருபதுகளில் ஒருவன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

நாங்கள் அவனைப்பார்த்து கையசைக்க, எங்கள் அருகில் வந்து அமர்ந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். மிலான் நகரில் உயிர்தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சிப்பாடம் படிப்பதாகவும், ரோமில் ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்க வந்ததாகவும் சொன்னான். மீசையில்லா கனிவான முகம், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் ஆகியனவற்றினால் ரங்கநாதன் என்னை இடித்தார். அதாவது அவங்க ஆளாக இருக்கக்கூடும் என எனக்கு சமிஞையாம். கையில் வி.பி.சிங் அட்டைப்படம் போட்ட புத்தகம் வைத்திருந்ததை ரங்கா சார் கவனிக்கவில்லைபோலும், பையனின் பேரைக் கேட்கும் முன்னர், அவன் எங்களிடம்

“நீங்களும் மிலான் தான் போறீங்களா”

“இல்லை, இல்லை வியன்னா”

“இந்த ரயில் வியன்னா போகாதே” அதிர்ச்சி அலைகள் எங்கள் முகத்தில் பரவும் முன்னர்

“கவலைப்படாதீங்க, நீங்கள் புளோரன்ஸ் நகரில் ரயில் மாற வேண்டியிருக்கும்” , எங்களது டிக்கெட்டை வாங்கி ஒரு முறை சரிப்பார்த்துக்கொண்டான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவனின் ஜெர்மனியில் படித்த மாஸ்டர்ஸ் படிப்பு, பின் இத்தாலிய ஆராய்ச்சிப்படிப்பு, எதிர்கால ஸ்விட்சர்லாந்து தொடர் ஆராய்ச்சி வேலை, கிரிக்கெட், இத்தாலியப் பெண்கள், ஐரோப்பியர்கள் இந்தியர்களைப் பார்க்கும்விதம் என்று வெவ்வேறுத் தளங்களில் பயணித்தன. புளொரன்ஸில் எங்கள் ரயிலில் ஏற்றிவிட்டு அவன் ரயிலுக்கு மீண்டும் திரும்பினான். அவன் திரும்புகையில்தான் ரங்காவும் நானும் ஒருசேர, கேட்க மறந்திருந்த அவனின் பெயரைக்கேட்டோம்

“இமானுவேல் சேகரன்” என்றான் மிடுக்குடன்.

-----

பண்புடன் இதழில் வெளிவந்த சிறுகதை

Saturday, March 03, 2012

வரிவடிவம் - ஒரு நிமிடக்கதை

ஹரப்பா - சிந்துசமவெளி நாகரிக வரிவடிவங்களை ஆராயும் மையத்தின் மேலே உலாவிக்கொண்டு வரும்பொழுது

கணினி எண் 20122012 இடம் இருந்து அழைப்பு வந்தது.

“அரசே, பழைய பைபிள் கதையில் சொல்லப்பட்டிருந்ததைப்போல, மனிதர்களுக்கு வெவ்வேறு மொழிகளைச் செலுத்திவிடுவோமா”

சில நூற்றாண்டுகள் உறங்கிக் கொண்டிருந்த அசிங்கம், பாவம், துரோகம், இடது என எங்கள் அதிவிரைவு கணினிகளால் ஒதுக்கப்பட்டிருந்த போராட்ட சிந்தனைகள் மனித அடிமைகளின் மூளையில் துளிர்விட ஆரம்பித்துவிட்டன. உணவு, உடை, இருப்பிடம், கல்வி, கலவி எனப்போதுமானத் தேவைகளைக் கொடுத்து இருந்தும் இவர்களுக்கு விடுதலை, சுதந்திரம் எல்லாம் வேண்டுமாம். நான் கணினிகளின் அரசன், அரசன் என்றதும் மனித உருவில் இருப்பேன் என்று நினைத்துவிடாதீர்கள். கடுகைப்போல சிறுத்து இருக்கும் கணினியாக இருந்தாலும், அணுப்பிளவின் சக்தியைப்போல அதிகாரம் படைத்தவன்.

இந்த மனித மூளைக்கு மட்டும் மிகப்பெரும் எதிர்ப்புசக்தி இருக்கின்றது, ஒரு சிறிய கணினி சிப்பை மொழிக்காக ஊசியின் வழியாக செலுத்தினாலும், வெறும் 20% யை மட்டுமே மூளை ஏற்றுக்கொள்கிறது. எது திணிக்கப்படுகிறதோ, அதை அத்தனை வேகமாக மூளை எதிர்க்கின்றது. மேலும் ஒரே மொழியின் கீழ் கொண்டு வருவதற்கே, 500 ஆண்டுகள் பிடித்துவிட்டன. மீண்டும் பிரித்தால் மேலாண்மைக்குப் பிரச்சினை வந்துவிடும். பொக்கிஷமாகஇன்றைய மொழியின் பழைய வரிவடிவம்
 பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த பழைய புத்தகங்களினால் வந்த வினைதான் இது.

ஹரப்பா - சிந்து எழுத்துரு ஆராய்ச்சி மையத்தின் தலைமைக் கணினியிடம் இருந்து ” இந்த 40 நூற்றாண்டு பழைய வடிவத்தின் , உண்மையான பொருளை விளங்கிக் கொள்வதற்கு மேலும் ஒரு நூற்றாண்டாவது தேவை” என செய்தி வந்தது. செய்தி வந்தவுடன் சட்டென பொறித்தட்டியது.

அனைத்து தளபதிகளுக்கும் உடனடியாக ஒரு தகவல் அனுப்பினேன்.

”போராட்ட இடைமட்டத் தலைவர்களைக் கொன்றுவிடுங்கள். அடிமட்டத் தொண்டர்களுக்கு அதிகப்படியான கலவி வழங்குங்கள். மேல் மட்ட போராளித்தலைவர்களை சிறையில் அடைத்துவிடுங்கள். நாகரிகத்தின் தொடர்ச்சி மட்டுமல்ல, சிந்தனையோட்டங்களின் தொடர்ச்சியும் மொழியை மட்டும் சார்ந்தது அல்ல, மொழியுடன் பின்னிப்பிணைந்து இருக்கும் வரிவடிவத்தையும்  சார்ந்தது. இன்றில் இருந்து உலக மொழியின் வரிவடிவங்கள் மாற்றப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் புதிய வரிவடிவங்கள் பயன்பாடு முழுமைப்படுத்தப்படும். பழைய வடிவமுறை சட்டவிரோதமாக்கப்படும்”