Wednesday, February 22, 2012

கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு (Cricket Quiz)

1. ஆரம்ப காலங்களில் , சச்சின் டெண்டுல்கர் நடுவரிசை ஆட்டக்காரராக, ஒருநாள் போட்டிகளில் ஆடும்பொழுது நிறைய ஆட்டங்களில் மட்டையடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. 94 ஆம் ஆண்டிற்குப்பின்னர், துவக்க ஆட்டக்காரராக ஆட ஆரம்பித்ததில் இருந்து அவர் ஆடும் எல்லா ஆட்டங்களிலும் அவருக்கு மட்டையடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. கேள்வி இதுதான், கைவிடப்படாத ஒருநாள் ஆட்டமொன்றில்,(அதாவது ஆட்டம் முழுமையாக நடைபெற்றிருக்க வேண்டும்)கடைசியாக, டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்புக்கிடைக்காத ஆட்டம் எது?

2. டெஸ்ட் போட்டிகளின் ஐந்து நாட்களிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மட்டையடிப்பது என்பது கிரிக்கெட்டில் நிகழ்ந்துள்ளது. ஆனால் மட்டையடித்த ஐந்து நாட்களிலும் தலா ஒரு சிக்ஸர்கள் வீதம் ஐந்து சிக்ஸர்கள் மொத்தமாக விளாசிய கிரிக்கெட் வீரர் யார்? தனது 30 வது வயதிலேயே கேப்டன் பொறுப்பில் இருந்தும், ஆட்டத்தில் இருந்தும் அழுதுகொண்டே ஓய்வு பெற்றவர்.

3. கீழ்காணும் படத்தில் இருப்பவர் ஒரு தமிழர். கொழும்பில் பிறந்து சென்னையில் கிரிக்கெட்டைக் கற்று கொண்டு, இரண்டு பன்னாட்டு ஒருநாள் ஆட்டங்களில் ஆடியவர். ஆடிய முதல் ஆட்டத்திலேயே அரைசதம் அடித்த வெகுசில ஒருநாள் ஆட்டக்காரர்களில் இவரும் ஒருவர். இந்தக் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்?4. சமீபத்தில் மன்காடட் ரன் அவுட் ஒரு நட்சத்திர கிரிக்கெட் இறுதி போட்டியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மிகவும் எளிமையான கேள்வி தான், மன்காட்(Mankaded) முறையில் ரன் அவுட் செய்யும் முறை விதிமுறைகளுக்கு உட்பட்டதா இல்லையா

5. ஒரு கற்பனையான முதல் தர ஆட்டம், கடைசி விக்கெட்டிற்கு , இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி. மட்டையாளர் துணை ஓட்டக்காரரை(By-runner) வைத்திருக்கின்றார்.
மட்டையாளர் பந்தை திருத்தமாக அடிக்க, துணை ஆட்டக்காரரும் மறுமுனை ஆட்டக்காரரும் வேகமாக ஓடி முதல் ஓட்டத்தை முடிக்கின்றனர், இரண்டாவது ஓட்டம் முடியும் தருவாயில் பந்து தடகளப்பு செய்யப்பட்டு விக்கெட் கீப்பரிடம் வருகிறது, துணைஓட்டக்காரரும் மறுமுனை ஆட்டக்காரரும் ஓட்டங்களை பிரச்சினை இன்றி முடிக்கின்றனர்.
ஆனால் மட்டையாளர் உற்சாககுதுகலிப்பில், கோட்டிற்கு வெளியே நிற்கிறார். விக்கெட் கீப்பர் மட்டையாளரை ஆட்டமிழக்க செய்கிறார். கேள்வி என்ன வெனில்
இந்த ஆட்டத்தின் முடிவு என்ன? ஏன்?

6. கிறிஸ் கெய்ல் களத்திற்கு வந்தாலே சிக்ஸர்கள் பறக்கும். இருபதுக்கு இருபது பன்னாட்டு போட்டிகளில், இவர் மொத்தம் 34 சிக்ஸர்கள் அடித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உண்மையில் இவர் 37 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவர் அடிக்கும் பந்தைப்போல , காணாமல் போன சிக்ஸர்களுக்கான காரணம் என்ன

---

விடைகள்

1. ஸ்டாண்டர்டு வங்கி முத்தரப்பு போட்டித்தொடரில், 2001 ஆம் ஆண்டு கென்யாவிற்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு மட்டையடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் ஆடிய கென்யா அணி 90 ஓட்டங்களுக்கு சுருண்டுப்போக, குறைவான ஓட்டங்கள் மற்றும் பின்வரிசை ஆட்டக்காரர்களுக்கு மட்டைப்பயிற்சி அளிக்கவும், தீப்தாஸ் குப்தாவும் சேவாக்கும் களமிறங்கி விக்கெட் இழப்பின்றி அணியை வெற்றிபெறச்செய்ததால் டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/66101.html

2. கிம் ஹியுஜஸ் (Kim Hughes) என்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் தான் அந்த வீரர். 80 ஆம் ஆண்டு, லார்ட்ஸில் நடைபெற்ற நூற்றாண்டு நினைவு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில், ஒவ்வொரு நாளிலும் ஒரு சிக்ஸர் அடித்து கேள்வியில் சொன்ன சாதனை இன்னமும் தன்னகத்தே வைத்துள்ளார்.
ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/63271.html


சொந்த ஆட்ட சொதப்பல், அணியினரின் உள்குத்து, ஊடகங்களின் வெளிக்குத்து, மேற்கிந்தியத் தீவுகளின் கும்மாங்குத்து இவைகளை சமாளிக்க முடியாமல் , 84 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்குப்பின்னர், அழுகையை அடக்க முடியாமல், மேலாளரை ராஜினாமா கடிதத்தைப் படிக்கவிட்டு, தலைமைப்பதவியில் இருந்து விலகியவர். ஒட்டுமொத்தமாக விலகாமல், தொட்டுக்கோ துடைத்துக்கோ என அடுத்த இரண்டு ஆட்டங்களில் 3 முட்டை களுடன் ஒட்டு மொத்தமாக ஆட்டத்தை விட்டு மூட்டை கட்ட வைக்கப்பட்டார். பொதுவாக ஆஸ்திரேலியா கேப்டன்கள் பதவி விலகும்பொழுது ஆட்டத்தில் இருந்து ஓய்வும் பெற்றுவிடுவார்கள். ரிக்கிபாண்டிங்கிற்கு முன்னர், கிம் ஹியுஜஸ்தான் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் சில ஆட்டங்கள் ஆடியவர்.


3. கனடா அணிக்காக ஆடிய அரவிந்த் கந்தப்பா - http://www.espncricinfo.com/canada/content/player/313432.html

4. விதிமுறை 42.15 இன் கீழ் மன்காட் முறையில் ஆட்டமிழக்க செய்யலாம்.

5. துணை ஓட்டக்காரர் வைத்திருக்கும்பொழுது, மட்டையடிப்பர், கோட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், எத்தனை ஓட்டங்கள் முழுமையடைந்திருந்த பொழுதும், விக்கெட் கீப்பர் முனையில் மட்டையாளரை ஆட்டமிழக்க செய்யும் பொழுது, எடுத்த ஓட்டங்கள் எதுவுமே கணக்கில் வராது. அந்த வகையில் கேள்வியின் படி, பந்து வீசும் அணி வெற்றி பெறும்.

6. இருபதுக்கு இருபது ஆட்டங்களில், ஆட்டம் சமனில் முடியும்பொழுது , வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க, சூப்பர் ஓவர் நடை முறை உள்ளது சூப்பர் ஓவரில் எடுக்கப்படும் ஓட்டங்கள் , ஆட்டக்காரர்களின் புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படமாட்டாது. நியுசிலாந்துக்கு எதிரான ஒரு 20/20 போட்டியில், கிறிஸ் கெயில் சூப்பர் ஓவரின் போது மூன்று சிக்ஸர்களை விளாசி, வெற்றியைத் தேடித்தந்தார். அந்த மூன்று சிக்ஸர்கள் தான் கெயிலின் காணமல் போன சிக்ஸர்கள்.

ஆட்டவிபரம் இங்கே http://www.espncricinfo.com/ci/engine/match/366707.html

---விடைகளைக் கண்டுபிடிக்க முயற்சித்த அனைவருக்கும் நன்றி ---

பேய் - ஒரு நிமிடக்கதை

பேய்கள் , பிசாசுகளைப் பற்றி நண்பர்கள் சொல்லும்பொழுது எல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். அவர்களிடம் பேயை நேரில் பார்த்து இருக்கிறீர்களா எனக் கேட்டால், பார்த்தது இல்லை என்பார்கள்., அட குறைந்த பட்சம் கேட்டாவது இருக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை ஆனால் எல்லோரும் சொல்லும் ஒரே பதில், வெவ்வேறு தருணங்களில் உணர்ந்து இருக்கிறோம் என்பதுதான்.

இந்த புதுவீட்டுக்கு வந்ததில் இருந்து ஒரு பிரச்சினை, வீட்டினுள் சில உருவங்களைப் பார்க்கின்றேன். உருவங்களை வர்ணிக்க முடியவில்லை, ஆனால் என் உயரத்திற்கும் அகலத்திற்கு இருக்கும்படி சிலவைகள் நடமாடுகின்றன. சத்தம் எதுவும் எழுப்புவதில்லை, என்னைத் தொந்தரவும் செய்வதுமில்லை. முதலில் அசந்த தூக்கத்தில் வரும் கனவுகளோ என நினைத்தேன். சிறு வயது முதல், எனக்கு விவரிக்கப்பட்ட உருவங்களை கனவுகளின் வழியே அடிக்கடிப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் இவை கனவுகள் அல்ல,

நான் தெளிவாக இருக்கும்பொழுதே, அறையினுள் அங்கும் இங்கும் போய் வருகின்றன. பிரச்சினை தராத விசயங்கள் பேயாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என தொடர்ந்து எனக்கான கல்லூரிப் பாடங்களைக் கணினியின் வழியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

மறுநாள் வெளியே என்னைக் கூட்டிச் செல்ல வந்த நண்பனிடம்,

“இந்த அறையில் சில உருவங்களைப் பார்க்கின்றேன், ஒரு வேளை பேயாக இருக்கக்கூடுமோ”

“சொல்லுறேன்னு கோவிச்சுக்காதே, பிறவியிலேயே கண்பார்வை தெரியாத உனக்கு எப்படி உருவங்கள் தெரியக்கூடும்” என சிரித்தான்

அவன் குரல் வந்த திசையை நோக்கி நான்கு உருவங்கள் கைநீட்டுவது போலத் தெரிந்தது.

Monday, February 13, 2012

ரோமில் இருந்து வியன்னா வரை - பயணக்கட்டுரை

கற்றார்க்கு சென்றவிடமெல்லாம் சோறு, எனக்கு சோறு கண்ட இடமே சொர்க்க லோகம் என்பதால், சென்கென் விசாவுக்கு உட்பட்ட நாடுகளில் யார் கூப்பிட்டாலும், நான்கு ஆடைகளை மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவது வழக்கம். ரையான் ஏர் என்ற விமான சேவை, சில சமயங்களில் ஒரு பைசா இரண்டு பைசாவுக்கு எல்லாம் தள்ளுபடியிலோ, வியாபார முன்னெடுப்பிற்காகவோ கொடுப்பார்கள். உறுமீன் வரக் காத்திருக்கும் கொக்காய் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டால், புரவலர்களின் ஆசியுடன் விடுமுறைகளை இனிதே கழித்துவிடலாம். இப்படியான வகையில் நான் திட்டமிட்ட ரோம் - பிராட்டிஸ்லாவா வழியாக வியன்னா பயணத்தில் நான் பெற்ற அனுபவங்களை இங்கே எழுதத் தோன்றியது.பிப்ரவரி முதல் வாரத்தில் எனது பேராசிரியர் ஊரில் இல்லை, சரி திங்கள் செவ்வாய் இரண்டையும் சேர்த்து நான்கு நாட்களுக்கு வியன்னாவில் பொழுதைப்போக்கலாம் என முன்பதிவு செய்த நேரம், ரோம் நகரத்தில் பனிப்பொழிவு வரும் என வானிலை முன்னெச்சரிக்கை விடப்பட்டது. நாங்க எல்லாம் அந்தக் காலத்துல ஸ்வீடனில் பனிச்சறுக்கு விளையாடுறவனுங்க, என்னவோ அண்டார்டிகாவில் பிறந்து வளர்ந்த அளவிற்கு பந்தாவாக பேஸ்புக்கில் நிலைத்தகவல் எல்லாம் வைத்து ரோமில் ஆரம்பித்திருந்த பனிப்பொழிவை குறைவாக எடை போட்டுவிட்டேன். வெள்ளியன்று இரவு கொட்டிய பனியில் ரோம் நகரமே ஸ்தம்பித்துப்போனது. எந்த விசயத்தை மிக அலட்சியமாக நினைக்கின்றோமோ அதுவே பூதகரமாக வெளிப்படும்.

பிப்ரவரி 4, சனிக்கிழமை 12 மணிக்கு ரோமில் இருந்து ஸ்லோவாக்கியா நாட்டின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிற்கு விமானம். பின் பிராட்டிஸ்லாவாவில் இருந்து வியன்னாவிற்கு முக்கால் மணி நேரப் பேருந்து, இப்படியான திட்டமிடலுக்குப்பின்னர், எல்லாம் தயாராகி காலை ஆறு மணிக்கு வெளியே வந்தால் பனிக் கொட்டிக்கொண்டிருந்தது.ரோமில் 86 ஆம் வருடத்திற்குப்பின்னர் இந்த அளவிற்கு பனிக்கொட்டுவது இதுவே முதன்முறை. சாலைகளில் பனியை அப்புறப்படுத்தும் வேலைகளை எப்படி செய்வது என்பதை மறந்தே போய் இருப்பார்கள்.

பனி விழும் மலர்வனம் எல்லாக் காலங்களிலும் சுவாரசியமாக இருப்பதில்லை. பேருந்துகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. வாடகை வண்டிகள் ஒருத்தரும் பனியின் காரணமாக வரவில்லை. என்னுடைய இந்தி பேசும் நண்பர்கள், பயணத்தைக் கைவிடுவதுதான் நல்லது, உன்னை சிரமப்படுத்திக் கொள்ளாதே என அறிவுரை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கடைசி வரை முயற்சிக்காமல் கைவிடுவது எனது பழக்கமல்ல, ஆகையினால் எப்படி விமான நிலையத்தை அடையலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே, எனது மாணவர் விடுதியின் பொறுப்பாளர் தானே கொண்டு வந்து விமான நிலையத்தில் விடுவதாக சொன்னார்.

எங்கு எல்லாம் நான் சிக்கலில் இருக்கின்றேனோ அங்கு எல்லாம் யாராவது ஒருவர் கிருஷ்ணராக வருவார். என் வாழ்க்கையில் வந்த கிருஷ்ணர்களின் எண்ணிக்கை, கோபிகையர்களுக்கு காட்சியளித்த கிருஷ்ணர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.பனிக்கூழில் சிக்கிய பல கார்களை அப்படியே சாலையின் ஓரத்தில் கைவிட்டபடி மக்கள் நடக்கத் தொடங்கி இருந்தனர். அவற்றை எல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி விமான
நிலையத்தை அடைந்தால் அங்கு ஏகப்பட்ட கூச்சல்களும் குழப்பங்களும்., ஸ்பானிய, இத்தாலிய, குரோஷிய , இன்னும் பல ரோமானிய ஜெர்மானிய குடும்ப மொழிகளில் சாபங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். காலையில் முதலில் புறப்பட வேண்டிய எந்த விமானங்களும் புறப்படவில்லை என்பது புரிந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், என்னதான் நடக்கிறது எனப் பார்த்துவிடுவோமே என ரையான் ஏர் செக் இன் நுழைவாயில் முன் காத்திருக்க ஆரம்பித்தேன். மக்களின் முகத்தில் கலவரரேகை விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்பதை காட்டிக்கொண்டே இருந்தன.

கடும்பனியினால் பணியாளர்கள் வராததால் விமான நிலைய உணவரங்கங்களும் மூடிக்கிடந்தன. காத்திருத்தல் இரண்டு வகை, நடந்து விடும் என காத்திருத்தல் ஒரு வகை, ம்ற்றவகையான நடக்குமா நடக்காத என்றவகையில் காத்திருத்தல் கொஞ்சம் தன்னிரக்கத்தைக் கொடுக்கும். மூட்டை முடிச்சுகளுடன், குழந்தைகளுடன் ஏகப்பட்ட பயணிகள், ஒவ்வொருவரும் எப்படியாவது வீடு போய் சேர வேண்டும் என்ற உந்துதலில். வினாடிகள் , நிமிடங்களாகி, நிமிடங்கள் வேகவேகமாக கரைய, விமானங்கள் புறப்படுவதற்கான அறிகுறிகளோ, பயணச்சீட்டு பரிசோதனைக்கான ஆட்களோ தென்படவில்லை. ஒரு வழியாக நான்கு மணி நேர காத்திருப்பிற்குப்பின்னர், பயணச்சீட்டு பரிசோதனை
ஆட்கள் வர, மக்கள் முகத்தில் கொஞ்சம் உற்சாகம்.

பாதுகாப்பு பரிசோதனைகளை முடித்துவிட்டு, விமானத்திற்காகக் காத்திருக்கையில்,. அதிர்ச்சியாக , பிராட்டிஸ்லாவா செல்லும் விமானம் ரத்து செய்யப்படுகின்றது என்ற அறிவிப்பு. நான் செல்ல வேண்டிய விமானத்துடன் நெதர்லாந்து நகரம் ஒன்றிற்கு, ஸ்பானிய நகரம் ஒன்றிற்கு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஏனைய விமானங்கள் எப்பொழுது புறப்படும் என்பதும் சொல்லப்படவில்லை.

நான் ரசித்துக்கொண்டிருந்த ஒரு பெண் உடைந்து அழ ஆரம்பித்தாள், இயலாமை, அங்கும் இங்கு ஓடிக்கொண்டிருந்த தன் குழந்தையை அடித்ததன் வழியாக ஓர் இளம் அம்மாவிற்கு
வெளிப்பட்டது. ரையான் ஏர் வகையிலான மலிவு விலை விமான சேவைகளில் பிரச்சினை என்னவென்றால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டால், ஒன்று காசைத் திரும்பக்
கொடுப்பார்கள் அல்லது வேறு நாட்களில் விமான சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவுதான், குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்க மாட்டார்கள். தன்னிரக்கமும்
இயலாமையும் ஓர் உச்சத்தை அடையும்பொழுது, பெரும் ஆத்திரமாகவும் போராட்டமாகவும் வெளிப்படும். கிட்டத்தட்ட 1000 நபர்கள் ஒன்று கூடி பாதுகாப்பு பரிசோதனை வளையத்தைச்
சுற்றி, சிலர் தடுப்பு வளையங்களின் மேல் ஏறி நின்று, அங்கிருந்த அறிவிப்பு தொலைக்காட்சிகளைத் தட்டியபடி தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். வன்முறை ஏதும் வெடிக்கவில்லை, வன்முறைக்குச் சற்று முந்தையத் தருணம் அது. போராட்டத் தத்துவங்கள் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்த போதும், நேரிடையாக எங்குமே நான் பங்கேற்றதுமில்லை, அருகில் இருந்து பார்த்ததுமில்லை. நானும் என் பங்கிற்கு Ryan Air down down Ryan Air Cheat Cheat என்று சில நிமிடங்கள் கத்திவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தேன்.பயணத்தைக் கைவிட்டு வீடு திரும்ப மனமில்லை, தினமும் வியன்னாவிற்கு நேரிடை ரயில் ஒன்று போவது நினைவுக்கு வந்தது. மதியம் இரண்டரை அளவில் சாலைகள் ஓரளவிற்கு சுத்தம் செய்யப்பட ஆரம்பிக்க, ரோம் மத்திய ரயில் நிலையத்திற்கு சாம்பினோ விமானநிலையத்தில் இருந்து பேருந்துகள் ஓடத்தொடங்கின. அவற்றில் ஒன்றைப்பிடித்து ரோம் ரயில் நிலையம் வந்து, சேர்ந்தால் நீண்ட வரிசை, பயணச்சீட்டுகள் வாங்குவதற்கு..... நாற்காலிகளுக்கு என்றுமே மதிப்பு உண்டு, அதுவும் சக்கரநாற்காலிக்கு ஐரோப்பாவிற்கு சிறப்பு சலுகைகள்... பயணச்சீட்டை வாங்கிவிட்டு, ரயில் ஏற இறங்க உதவித் தரும் அலுவலகத்திலும் (Sala Blu) பதிவு செய்துவிட்டு

“அப்பாடா ஒரு வழியாக இயற்கையை வென்றுவிட்டோம்” என்ற நினைப்பில் மேலும் சில மணி நேரங்கள் ரயிலுக்காகக் காத்திருக்க, அந்த அலுவலகத்தில் உதவி செய்யவரும் நபர்,
நேற்றைய ரயில் ஃபுளோரன்ஸ் (Firenze - Florence) நகரத்திலேயே நின்றுவிட்டதால், ஒரு ரயில் மாறி, ஃபுளோரன்ஸ் வரைச் சென்று பின் வியன்னா ரயிலைப்பிடிக்கவேண்டும் எனக் கூறினார். ஏற்கனவே இருந்த களைப்பில் இது கடுப்பு ஏற்றினாலும், ஃபுளோரன்சிலும் என்னை ஏற்றி இறக்க சாலா ப்ளூ மக்கள் உதவி செய்வார்கள் என்பதால் இன்னும் ஒரேயொரு தடங்கல் தானே என மனதைத் தேற்றிக்கொண்டேன்.ஈரோஸ்டார் அதிவிரைவு ரயில் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றரை மணி நேரத்தில் ஃபுளோரன்ஸில் என்னை இறக்கிவிட்டது. இரவு ஒன்பதரை மணியளவில் வியன்னாவிற்கான ரயிலிலும் ஏறியாகிவிட்டது. வெனீஸ் வழியாக, ஆல்ப்ஸ் மலைத் தொடரைக் கடந்து இந்த ரயில் பயணப்படும். இரவில் பயணப்படுவதால் இருட்டில் அவ்வளவாக ஆல்ப்ஸ் மலைகளைப் பார்க்க முடியாது, போன முறை பேருந்தில் வியன்னாவில் இருந்து ரோம் வந்த பொழுது, இருட்டில் கண்களை
இடுக்கிக் கொண்டு பார்த்ததில் ஒற்றைத் தலைவலிதான் மிச்சம்.

இனி கொஞ்சம் கண்ணசந்தால் , காலையில் வியன்னா , அடுத்த மூன்று நாட்களுக்குக் கொண்டாட்டம்தான் என நினைத்த அடுத்த அரை மணி நேரத்தில், ரயில் திடுமென ஒரு குகைப்பாதையில் நின்றது. இதோ கிளம்பிவிடும் அதோ கிளம்பிவிடும் என நினைத்து அரைத்தூக்கம் தூங்கினாலும் ரயில் நகர்ந்தபாடில்லை. என்னவென்று விசாரித்ததில், ரயில் எஞ்சினில் கோளாறாம், சரி செய்து கொண்டிருக்கிறார்கள் எனச் சொன்னார்கள்.

நினைத்துப் பாருங்கள் அதிவேக விரைவு ரயில்கள் செல்லும்பாதையில் , அதுவும் நீண்ட குகையில் ரயில் திடிரென நின்றுவிட்டால், எனது பெட்டிதான் தொடர்வண்டியின் கடைசிப்பெட்டி. கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது.கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் கழித்து ரயில் மெல்ல நகர, மிதமான வேகத்தில் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பிடித்தன அந்தக் குகைப்பாதை முழுவதும் கடப்பதற்கு. இனி 10 மணி நேரங்கள் கொஞ்சம் தாமதத்துடன் வியன்னா போய்விடலாம் என ஆசுவாசப்படுத்திக்கொண்டபொழுது, திடிரென குளிர் அதிகமாக ஆரம்பித்தது. வெப்பசாதனம் வேலை செய்யவில்லை. வெளியே உறைநிலைக்குக் கீழே 10 டிகிரி இருக்கும், வண்டியினுள் எப்படியும் - 5 டிகிரியாவது இருக்கக்கூடும். பையில் வைத்திருந்த அனைத்து சட்டைகளையும் எடுத்து மாட்டிக்கொண்டு நடுங்கியபடியேத் தூங்கிப்போனேன்.

விடியலில் ஆஸ்திரிய - இத்தாலிய எல்லையில் ரயில் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மாற புதிதாக வந்தவர், பெட்டியில் வெப்பசாதனம் வேலை செய்யவில்லை என என்னை வேறு ஒரு
பெட்டிக்கு மாற்றினார். அங்கு கிடைத்த காப்பி இரவு பட்ட அவதியை கொஞ்சம் தணித்தது. மூன்று மணி நேரத்தில் மூன்று ஐரோப்பியத் தலைநகரங்கள் என நிலைச்செய்தி வைக்கலாம்
என்றிருந்த எனக்கு கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க வெவ்வேறு வகையிலான அனுபவங்களையும் கற்றல்களையும் கொடுத்த இயற்கை இன்னும் ஏதோ ஒன்றை எனக்காக
வைத்திருக்கின்றது என்று மட்டும் பட்டது., அது நிச்சயமாக மகிழ்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கக் கூடும் என்று இருந்த பொழுது, Klagenfurt என்ற ஆல்ப்ஸ் மலை நகரத்தில்
வயதான ஆஸ்திரிய நபர் ஏறினார்.

கிட்டத்தட்ட 70 வயது இருக்கும், மெல்ல நான் பேச்சுக்கொடுக்க, மிடுக்கான அந்தக்கால ஆங்கிலத்தில் அவர் பேச ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பின்னர் ஆங்கிலத்தில் பேசுகிறாராம். தமிழ் மொழி, தமிழர்கள் என நான் ஆர்வமாகப் பேச ஆரம்பித்து இருந்த பொழுது, அருகில் இருந்த சக்கர நாற்காலியைப் பார்த்துவிட்டு

“போரில் ஈடுபட்டதனால் சக்கரநாற்காலி பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதா “ எனக்கேட்டார். “அப்படியான பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை” என்று சொல்லிவிட்டு பேச்சு தொழில்நுட்பம் நோக்கி மாறியது., கிட்டத்தட்ட 40 வருடங்கள் கணினித் துறையில் பொறியியளாராக இருந்த அவர், கடைசி 10 வருடங்களாக கணினி , அது சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு முழுக்குப்போட்டுவிட்டு நண்பர்கள், உறவுகள், வாசிப்புகள் என முன்பு இழந்த விசயங்களை மீட்டு எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம். நான் தனியாகப் பயணப்படுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவருக்கு என்னுடைய பதில்.

”ஐரோப்பவைப் பொறுத்தமட்டில், சக்கரநாற்காலியுடன் பயணம் செய்யும்பொழுது, தனியாக இருந்தால் பேருந்து ஓட்டுனர், மெட்ரோ ரயில் பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் என ஓர் ஊரே உதவி செய்யும், அதுவே கூடத் துணையுடன் இருந்தால் ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். துணையாக இருப்பவர் கவனித்துக்கொள்வார் என சக பயணிகள் ஒதுங்கியே இருப்பார்கள். துணையின்றி தனியாக சக்கர நாற்காலியில் பயணம் செய்தால் ராஜமரியாதைதான்..... “கோபால் நிரல்கள், கப்பாபிளாங்கா செஸ், ஆஸ்திரிய ஹங்கேரியப் பேரரசின் வீழ்ச்சி, கிரிக்கெட் என பலத்தரப்பட்ட விசயங்களில் பேச்சுத் தொடர்ந்தது. அடுத்த மூன்றரை மணி நேரங்களில் பேச்சின் சுவாரசியத்தோடு , ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அழகை பகல் சூரிய வெளிச்சத்தில் ரசிப்பதையும் தவறவிடவில்லை. பனியில் பிரதிபலித்த ஒளி, முந்தைய நாள் பட்ட அனைத்து கஷ்டங்களையும் அழகாக துடைத்து எடுத்தது. ஒவ்வொரு தடங்கல்களும், அதனை சமன் செய்யும் மறைமுகமான மகிழ்ச்சியையும் கொண்டுள்ளது என்பதை மற்றும் ஒரு முறை அனுபவத்தின் வழியினால கற்றல், ரயில் வியன்னா வந்தடைய , பெரியவ்ருடன் விடைபெற்று இனிதே முடிவடைந்தது.

Saturday, February 11, 2012

2012 - ஒரு நிமிடக்கதை

” வரும் 2012 யின் இறுதியில் ஒட்டு மொத்த அழிவு இல்லை என்றாலும் பூமி பெரும் மாற்றத்திற்கு ஆளாகும், இயற்கை மாற்றங்களால் முடிவுக்குப்பின் மீண்டும் ஆரம்பம் என்ற நிலைக்கு மனிதனைக் கொண்டு வரும்” என்ற என் வாதத்திற்கு,

“இருக்கலாம், ஆனால் என்னைப் பொருத்தவரை, உலகத்தின் தோற்றம், உலகமென்ன, இந்த அண்டசராசரங்களின் தோற்றம் என் பிறப்பில் ஆரம்பித்து நான் இறக்கும்பொழுது அழிந்து விடுகின்றது” வழமைப்போல மோகன் தத்துவார்த்தமாகப் பதில் சொன்னார்.

பேரழிவுச் செய்திகளின் மேல் எனக்கு இருக்கும் ஆர்வத்தை பொட்டில் அடித்தால் போல சொல்லி மர்ஃபி விதிகளையும் சொன்னதால், மோகன் பேசும்பொழுது எல்லாம் கவனமுடன் கேட்பேன். சிறுவயது முதலேயே இயற்கைச் சீற்றங்கள், பெரிய விபத்துகள் பற்றிய செய்திகளின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பேரிடர்கள் எங்கேனும் ஏற்படும் சில மணி நேரங்களுக்கு முன்னரே, உள்ளுணர்வில் ஒரு பரபரப்பு என்னைத் தொற்றிக்கொள்ளும். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபொழுது, அய்யோ கட்டிடம் இடிகிறதே, ஏராளமான மக்கள் கட்டிடங்களோடு புதைந்துப் போவார்களே என மற்றவர்கள் சொல்லிக்கொண்டிருக்க, “அட , அடிச்சான் பாரு, இது தில்லு, காலையிலேயே நினைச்சேன், இன்னக்கி செம நியுஸ் இருக்குன்னு ” என்று சொல்லி நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டேன். ஒவ்வொரு டிசம்பர் 26 போது, சுனாமிக்கு ஊரே துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்க, நான் மட்டும், முந்தயதைவிட கொஞ்சம் காட்டம் அதிகமாக இன்னொரு சுனாமி வரக்கூடாதா என ஏங்கிக் கொண்டிருப்பேன். வேறு சில சமயங்களில் பேரிடர்களில் நான் மட்டும் தப்பிப்பதாகவும் கற்பனை செய்துப் பார்ப்பேன்.

விபத்துக்களில் ஒருவர் இருவர் இறந்துப்போனால் எனக்குப் பரிதாபமாகவும் கவலையாகவும் இருக்கும், ஆதலால் பெரும் விபத்துகளே எனது விருப்பங்கள், உதாரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இத்தாலிக் கப்பல் கவிழ்ந்தபொழுது, 4500 பேர் இருந்த கப்பலில் வெறும் 23 பேர் இறந்துபோனது அத்தனை சுவாரசியமாகத் தோன்றவில்லை. இந்த 2012ல் குறைந்த பட்சம், உலக உருண்டையில் சில பாகங்களாவது கூண்டோடு கைலாசம் போகக்கூடும் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

மோகனுக்கு எதிர்மறையாகப் பேசுவது பிடிக்கவே பிடிக்காது என்பதால் அழிவைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு , 2012 புத்தாண்டுக் கொண்டாட்டத்தை பிராட்டிஸ்லாவாவில் கொண்டாடப்போவதாகச் சொல்லி பேச்சை மாற்றினேன்.

புத்தாண்டுத் தினத்தன்று, வியன்னாவில் இருந்து 45 நிமிடங்கள், வண்டியை ஒரு அழுத்து அழுத்தி பிராட்டிஸ்லாவாவிலும் கொண்டாடிவிட்டு, 100 கிமீக்கும் சற்று அதிகமான வேகத்தில் தனியாகத் திரும்பிக்கொண்டிருக்கும்பொழுது ஒன்றுமே இல்லாமல் ஒரு பரபரப்புத் தொற்றிக்கொண்டது, ஆகா 2012 வேலையை ஆரம்பித்து விட்டது போல, காலையில் சுடச்சுட செய்திகள் காத்திருக்கும்போல என ஆர்வமாக வேகத்தை அதிகரிக்க, சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிக நீண்ட கண்டெயினர் லாரியைக் கவனிக்காமல் நேரேக் கொண்டுபோய் அதன் பின்னர் என் காரை சொருகினேன்...அப்பளமாக நானும் காரும் நொறுங்கும் முன், கடைசியாகப் பார்த்தவை,


கண்டெயினர் லாரியின் பதிவு எண் 2012, பதிவு எண் தகட்டிற்கு மேலே வரையப்பட்டிருந்த,பண்டைய அமெரிக்க அஸ்டெக் நாகரிக சூரிய அட்டவணைக்கல் ஓவியம்.

Friday, February 03, 2012

ஞொள்சிரஷாக்ஸ்ப்ளோ - ஒரு நிமிடக்கதை

தொடர்ந்த நச்சரிப்பைத் தாங்க முடியாமல், சில ஆங்கிலப்படங்கள், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் ரத்தம், கொஞ்சம் கிளுகிளுப்பு எனக் கலந்து கட்டி அடித்த திகில் புனைவு ஒன்றை எழுதி முடித்து எனது வார இதழின் ஆசிரியரின் மேசையின் மேல் கொண்டு வந்து வைத்தேன். அவசரப்படுத்தினால், பல இடங்களில் இருந்து அச்செடுத்துத் தான் எழுதிக் கொடுக்க முடியும்.

“அதுக்குள்ள முடிச்சிட்டியா, கதையை கடுகு மாதிரி நச்சுன்னு சொல்லுப்பா”

”கதை இது தான் சார், ஒரு நகரம்,,, அங்கிருக்கும் மக்கள் திடிரென தலை வெடித்து சாகின்றனர், சுடப்படவில்லை, எந்த மின்னழுத்த வேறுபாடுகள் இல்லை.. வரிசையாக சாகிறார்கள். நாயகன், ஏன் சாகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் பொழுது அவனுக்கு ஓர் அதிர்ச்சி, எங்கிருந்தோ வந்த ஒரு குறிப்பிட்ட வார்த்தையை வாய்விட்டு உச்சரிக்கும்பொழுது, தலை வெடிக்கிறது. வார்த்தையை உபயோகப்படுத்திய எல்லோரும் தலைவெடித்து இறந்து விட, காரணத்தைக் கண்டுபிடித்த நாயகனும், இந்த வார்த்தை வேறு யாருக்கும் தெரியக்கூடாது என அது சம்பந்தபட்ட தனதுக் குறிப்புகளை எல்லாம் அழித்துவிட்டு, சத்தமாக சொல்லிவிட்டு இறக்கின்றான்.”


“ஆமாம் அது என்ன வார்த்தை”

”உட்டலாக்கடியா ஒரு வார்த்தையை நானே யோசிச்சி எழுதினேன் அது என்ன வார்த்தை என்பது கடைசி எபிசோட்ல கடைசி வார்த்தையா இருக்கும் சார்”

“இண்ட்ரஸ்டிங், கதையை நான் படிச்சுட்டுக் கூப்பிடுறேன்”

அறையின் கதவை சாத்திவிட்டு அடுத்தக் குற்றப்பின்னணி கொண்ட கதைக்கு கருவைத் தேடிக்கொண்டிருப்பதில் இரண்டு மணி நேரம் கரைந்தது. மேசை தொலைபேசி அடிக்க, ஆசிரியர் எதிர்முனையில்

“பின்னிட்டய்யா, கலக்கல் அருமை தலைப்பு அந்த வார்த்தைதான்யா“ எனச்சொல்லி சில வினாடிகள் இடைவெளிவிட்டு

“ஞொள் சி ர ஷா க் ஸ் ப் ளோ ” என ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தம் திருத்தமாக அவர் சொல்லி முடிக்க மறுமுனையில் டப்பென வெடிக்கும் சத்தம் கேட்க தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

Wednesday, February 01, 2012

இளையராஜா

தமிழ் சுணங்கிப் படுக்கும்பொழுதெல்லாம், மீட்டெடுக்க ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதேனும் ஒன்று தமிழைத் தட்டி எழுப்பி ஃபீனிக்ஸாக மாற்றும். இந்தத் தலைமுறையில் யுனிகோடும், சென்ற தலைமுறையில் செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளும் அதைச் செய்ய, கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என மண்ணின் இசையுடன், தமிழை மட்டுமல்ல,ஒட்டு மொத்த தென்னகத்தின் அடையாளங்களையே மீட்டவர் இளையராஜா.

அது ஒரு சிறிய வார இறுதி விருந்துக் கொண்டாட்டம், அமெரிக்க, ஸ்விடீஷ் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஒருப் பாடல் ஒலிக்கிறது, திடீரென ஒருவர் ஆனந்தத்தில் கத்துகிறார், இது ஐஸ்லாந்து இசை, என் ஊர் இசை ... அப்பொழுதுதான் இத்தனை நாள் வரை ஸ்விடீஷ் ஆள் என நினைத்துக் கொண்டிருந்தவர் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. மொழிக்கு அடுத்தபடியாக இசையே தான் இன்னார் எனக் பெருமையுடன் காட்டிக்கொள்ள ஏதுவாக இருக்கிறது என்பதை வேறு ஒருவர் மூலம் நான் உணர்ந்த தருணம் அது.

மேட்டிமைக் கனவான்களின் இசையையும் ரசிக்க முடியாமல், எங்கே தன் நிலம் சார்ந்த இசையை ரசித்தோமானால் தாழ்ச்சியாகிவிடுமோ என்று அல்லாடிக்கொண்டிருந்த சாமானிய தமிழ் இசை விரும்பிகளை, இதோப்பார் எனக்கான இசை, என் மக்களில் மத்தியில் இருந்து ஒருவனால் இசைக்கப்படுகிறது என இசையின் எந்த இலக்கணங்களும் தெரியாத என்னைப்போன்ற சராசரிகளைப் பெருமை கொள்ள செய்தவர். நல்ல ஆசிரியருக்கான அளவுகோல் , எத்தனைப் பெரிய சூத்திரமாக இருந்தாலும் அதை எத்தனை எளிமையாக சொல்லுகிறார் என்பதில்தான் இருக்கின்றது. இளையராஜா, இசைக்கு அரசனோ, சக்கரவர்த்தியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னைப்போன்றவர்களுக்கு இசை ஆசிரியன். மன்றம் வந்தத் தென்றலுக்கு பாடல் ஒலிக்கும்பொழுதெல்லாம் உடன் பாடும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இசைக்கும் எனக்குமான தூரத்தைக் குறைத்தவர் இளையராஜா என்ற ஆசிரியர் தான்.

நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்னது “இளையரஜா இல்லை எனில் 80 களில் ஒரு இளையத் தலைமுறையே பைத்தியமாகி இருக்கும் அல்லது தீவிரவாதியாகி இருக்கும்”. 80 களின் தலைமுறையென்ன, இன்றும் கூட, பலரின் சோகங்களுக்கு ஆறுதல் சொல்லப்படுவது இளையராஜாவின் இசையினால் தான். கொண்டாட்ட மனோபாவத்தில் இருக்கும்பொழுது நவீன புதுமையான இசை வடிவங்கள் வேண்டுமானால் ரசிக்கப்படலாம். ஆனால் ஆறுதலாக உடைந்திருக்கும் மனதை வருடிக் கொடுக்க பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் நாடுவது இளையராஜாவின் இசையைத்தான். மகிழ்ச்சியை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம், வருத்தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டுமே பகிரப்படும், இளையராஜாவின் இசை அத்தகையது. இரவு பத்து மணிக்கு மேல் இளையராஜாவுடன் தூங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என இது அல்லது அது என அரசியலைக் குழந்தைப் பருவத்தில் இருந்தேத் தொடங்கிவிடும் நாம், இளையராஜாவையும் விட்டு வைக்கவில்லை. இளையராஜாவைப் பிடித்தால் ஏ.ஆர்.ரகுமானையோ அல்லது வேறு யாரையுமேப் பிடிக்கக் கூடாது என்பதில்லை. மேலே சொன்னபடி ஏ.ஆர்.ரகுமானையும் ரசிக்க தேவையான அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தவர் பேராசிரியர் கிராமத்து ராசா. ஒரு வேளை இசை கடவுள் என்றால், இளையராஜா கடவுளின் அவதாரம் அல்லது கடவுளின் தூதர். ஒன்றிற்கு மேற்பட்ட அவதாரங்களையோ கடவுளின் தூதர்களையோ மனிதன் வேண்டாம் என்று சொல்லுவதில்லை. இவர் ராமன் என்றால் அவர் கிருஷ்ணன், இவர் நபி என்றால் அவர் யேசு...

தமிழ் அல்லாத சூழல், இந்தியா என்றாலே பாலிவுட் என்று மட்டுமே அறிந்திருக்கும் சராசரியான ஐரோப்பியச் சூழல், எனது கைபேசி ஒலிக்கிறது. குறைந்தது 5 பேராவது, திரும்பிப்பார்க்கிறார்கள், மூன்று பேராவது இது என்ன இசை, யார் இசைத்தது, எனக் கேட்கின்றார்கள்... ஒருவராவது இதனின் எம்பி3 வடிவத்தை எனக்கு அனுப்புகின்றாய எனக் கேட்பதுண்டு.... ஸ்வீடன், போலாந்து, பின்லாந்து தற்பொழுது இத்தாலி எனத் தொடருகின்றது... அது, பல்லவி அனுப்ல்லவி என்ற கன்னடப் படத்தில் இளையராஜாவால் போடப்பட்ட சின்ன இசைத்துணுக்கு...

சிலமாதங்களுக்கு முன்னர் ஓர் இந்திப் பேசும் மாணவன்,”வடக்குத் தெற்கு இடைவெளியால் நாங்கள் இழந்தது இளையராஜாவின் இசையை” சீனிகம் , பா படப்பாடல்களைக் கேட்டப்பின்னர் சொன்னான்.

“அடேய் நண்பா, இந்தப் பாடல்களை எல்லாம் நாங்கள் 25 வருடங்களுக்கு முன்னரேக் கேட்டுவிட்டோம்” என்றபடி எனது மடிக்கணினியில் வைத்திருந்த அத்தனை இளையராஜாவின் குழந்தைகளையும் கொடுத்தேன்.

சில வகை இசை, வோட்கா என்றால், இளையராஜாவின் இசை வைன், வைனைப்போல எத்தனைக் காலம் கடக்கிறதோ, அத்தனை மகத்துவமும் இனிமையும் ராஜாவின் இசைக்கு. நீருற்றுகள் கோடையில் வறண்டதுப்போலக் காணப்படலாம், அதற்காக அவை கானல் நீராகிவிடாது. இன்று ஆடு தாண்டும் அளவில் ஓடினாலும், இளையராஜாவின் இசையாறு , இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னமும் ஓடும். எனது உற்சாகத்தை மீட்டு எடுக்க ஒவ்வொரு படித்துறையிலும் தினமும் கொஞ்சம் நீரை எடுத்துப் பருகுகின்றேன்.

கடவுள் என்று ஒன்று இருந்தால் நான் கேட்கும் ஒரே வரம், அனுதினமும் குறையா உற்சாகம். அந்த உற்சாகத்தை தவமின்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இளையராஜாவின் இசை. இந்த நூற்றாண்டில் சிலரைக் கடவுளாக்க எனக்கு அதிகாரம் கிடைத்தால், காந்தி, பெரியார், பிரபாகரனுடன் இளையராஜாவின் இசையையும் வைப்பேன். நிச்சயம் தமிழும் தமிழ்ச் சமுதாயமும் இளையராஜாவின் இசைக்குக் கடமைப்பட்டிருக்கின்றது. எனது ஒவ்வொரு வெற்றியிலும் இளையராஜாவின் இசையின் பங்கும் இருக்கின்றது என்ற வகையில் இந்தப் பதிவு இளையராஜாவின் இசைப் பயணத்திற்கு சமர்ப்பிக்கபடுகிறது.