Tuesday, November 22, 2011

கறி வாங்க உதவிய கடவுள் - சிறுகதை

மாணவர் விடுதியின் வரவேற்பறையில் இருந்த பொறுப்பாளர் மக்டலீனாவிடம் என் அறையின் சாவியைக் கொடுத்த பின்னர் , தலைக்கு மேலே படத்தில் இருந்தபடி சிரித்து
கொண்டிருந்த நல்ல மேய்ப்பாளன் இயேசுவைப் பார்த்து நானும் புன்னகைத்துவிட்டு அருகில் இருந்த மளிகைக்கடைக்கு நடக்கலானேன்.இத்தாலி வந்து இரண்டு வாரங்கள் ஆகின்றன, இன்னும் குறைந்தது நான்கு வருடங்களாவது வாழ்ந்தாக வேண்டும், ஸ்வீடனில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றியதைப்போல இங்கு
நிச்சயம் முடியாது, மண்ணிற்கு கொடுக்கும் மரியாதை அந்த மண்ணின் மொழியை அறிந்து கொள்வது, இணையத்தில் மனனம் செய்து வைத்து இருந்த ஒன்று இரண்டு மூன்று எண்
வரிசையை ஜெபித்தபடியே அருகில் இருந்த கடைக்கு வந்தேன். அடடா, எழுதி வைத்திருந்த , தேவையான பொருட்களின் இத்தாலிய இணை வார்த்தைகள் அடங்கிய சீட்டை
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

“கார்த்தி கண்ணா, நம்ம வீட்டுல மட்டன் குழம்பு, நீ இல்லை என்பதுதான் குறை” என அம்மா வருந்தியபொழுது, “மதியம் நானும் ஆட்டுக்கறி குழம்பு வச்சி சாப்பிடுறேன், கவலைப்படாம நீ சாப்பிடு ” என ஆறுதல் படுத்தியது நினைவுக்கு வந்தது.

ஆட்டுக்கறியை கடைசியாகத் தேடுவோம், முதலில் அரிசி, தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிப்பொடி என ஒவ்வொன்றாக அமைப்பை வைத்தோ, ஆங்கிலத்திற்கு நெருங்கியப் பெயர்களை வைத்தோ எடுத்துப்போட்டுக்கொண்டே , மாமிசம் இருக்கும் பகுதிக்கு வந்தேன்.

கண்ணாடித்தாள்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை , அதன் சிறிய கால்களினால் எளிதாக அடையாளம் காண முடிந்தது, எது மாட்டுக்கறி, எது பன்றிக்கறி எது
ஆட்டுக்கறி என பிரித்தறிவதில் குழப்பம். ஏனைய கறிகளை சாப்பிடக்கூடாது , சாப்பிட்டால் பாவம் தீட்டு என்பதெல்லாம் கிடையாது. ஆட்டுக்கறி குழம்பு செய்யவேண்டும் என முடிவு
செய்த பின்னர் அதை மட்டுமே வாங்கிப்போக வேண்டும் தானே...

“உங்க நாட்டில் மாட்டுக்கறி சாப்பிட மாட்டீர்கள் தானே, மாடு உங்களுக்குத் தெய்வம் தானே” என முன்பு ஒரு முறை ஆண்டர்சன் நக்கலாக ஸ்டாக்ஹோல்ம் கல்லூரிக் கொண்டாட்டத்தின்பொழுது கேட்டான்.

மாமிசத்தில் கூட அரசியலைக் கலந்து வைத்திருக்கும் நமது சமுதாயக் கலாச்சாரக் கூறுகளை விளக்க விரும்பாமல், எல்லோருக்கும் சரி என ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் ஒன்றைக்
கொடுத்தேன்.

“விவசாயம், பொழுது போக்கு, வாகனப்போக்குவரத்து என அனைத்திலும் உங்களுக்கு உபயோகரமாக இருக்கும் குதிரையின் மாமிசத்தை ஐரோப்பாவில் சாப்பிடுவீர்களா?”

“நீ அருவெறுப்பாக பேசுகிறாய்” இது லிண்டா , ஆண்டர்சனின் காதலி.

”அதே அதே ... உங்களுக்கு குதிரைகள் அனைத்திலும் பயன்பட்டதைபோல, இந்தியத் துணைக்கண்டத்தில் மாடுகள் அன்றாட வாழ்வில் இன்றி அமையாததாக மாறிப்போனது,
பொதுவாக இந்திய துணைக்கண்ட மக்கள் நல்லதை நேரிடையாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள், தண்டனை உண்டு என்றால் கேட்பார்கள், கடவுள் கண்ணைக்குத்துவார், இது
சாமியின் வடிவம் என்று சொன்னால் தான் மாடுகளைப் பாதுகாக்க முடிந்தது, நவீன உலகத்தில் எது நமக்கு வசதியோ அதைப்பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற மேற்கத்திய சிந்தனை ஓட்டங்களுக்கு இந்திய மக்களும் பழகிவிட்டார்கள், ஆட்டுக்கறி கோழிக்கறி கிடைக்காத பட்சத்தில் எனக்கு மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை”

”அட்டகாசமானப் பதில் “ என்றபடி தலையை வருடிக்கொடுத்தாள் ஹன்னா, ஒரு விதத்தில் ஆண்டர்சனை வெறுப்பேற்றக்கூட இருக்கலாம், லிண்டாவின் வரவிற்குப்பின்னர்
ஹன்னாவின் பார்வை என் மேல் விழுந்து விட்டது. ம்ம்ம் அது எல்லாம் பழையக்கதை.

மாமிசக்கூட்டத்தில் மறைந்து இருக்கும் எனக்கான இன்றைய ஆடு எங்கே எனத் தேடுவதில் சில நிமிடங்கள் ஓடிப்போனது. கோழி, பன்றி, மாடு மூன்றும் சேர்ந்த படங்களையே எல்லா
கண்ணாடிக்கதவுகளிலும் ஒட்டி வைத்திருந்தார்கள். மொழியின் தேவை சாப்பாட்டிற்கு வரும் என ஒருபொழுதும் நினைத்தது கிடையாது.

“சாவ்” என ஒருக் குரல் கேட்க , அது மக்டலீனா.

அட, கடவுளே அனுப்பி வைத்திருப்பார் போல, மக்டலீனா ஆங்கிலம் நன்றாகப் பேசுவாள்.

“மக்டா, உனக்கு ஆட்டுக்கறி எது எனத் தெரியுமா” நான் ஆட்டுக்கறி என்பதை மட்டன் எனக்கேட்டதால் அவளுக்கு விளங்கவில்லை.

இது மாட்டுக்கறி , இது பன்றிக்கறி, இது கோழிக்கறி என ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு வந்தாள். “நீ எந்தக் கறியைக் கேட்கிறாய், மீன் வேண்டும் என்றால் வலது புறம் இருக்கின்றது”

“இல்லை, இல்லை, எனக்கு மட்டன் வேண்டும், கோட் அல்லது லாம்ப்” ஒரு வேளை என்னுடைய ஆங்கில உச்சரிப்பு அவளுக்கு விளங்காமல் கூட இருந்திருக்கலாம்.

“மன்னிக்கவும் நீ சொல்லுவது எனக்கு விளங்கவில்லை”

பன்றியைப்போல உருவத்தில் சிறியதாக இருக்கும், தலையில் கொம்பு இருக்கும், நம்ம ஊர் ஆட்டின் நினைவாக கருப்பாக இருக்கும் என ஆங்கிலத்திலும் சைகை மொழியிலும் விளக்க முயன்றும் முடியவில்லை.

எந்திரன் ரஜினியைப்போல ம்மெமேஹே எனக்கத்திக் காட்டிவிடலாம் என்ற பொழுது இயேசு நினைவுக்கு வந்தார்.

“உனது கடவுள் இயேசு கூட கையில் வைத்திருப்பாரே ... ஆங்கிலத்தில் குட் ஷெப்பர்ட் என்றெல்லாம் சொல்லுவார்களே, அந்தக்கறி வேண்டும்”

“ஓ அன்யெல்லோ, அல்லது ரோம் நகரத்து வழக்கு மொழியில் அப்பியாச்சி, அது இந்தக்கடையில் கிடைக்காது , அடுத்தக் கடையில் புத்தம் புது கறிக்கிடைக்கும் அங்கு போகலாம் வா” என்றாள்.

அடுத்தக்கடையில் ஆட்டுக்கறி வாங்கிவிட்டு மக்டலீனாவுடன் வெளியே வரும்பொழுது,

“இன்றைக்கு உன் அறையில் ஆட்டுக்கறி குழம்ப்பா, இந்தியர்களும் இத்தாலியர்களைப்போல காரச்சாரமாக சமைப்பார்கள் எனக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்” என்றாள்.

“உனக்கு நேரம் இருந்தால் வாயேன், உனக்கும் சேர்த்து தமிழ் நாட்டுப்பாணியில் சமைத்துத் தருகின்றேன்”

“இன்றைக்கு வேண்டாம், அடுத்த வாரம் என் வீட்டிற்கு வா, கொஞ்சம் இத்தாலியம் , கொஞ்சம் ஆங்கிலம் நிறைய ஆட்டுக்கறி சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டே கோப்பை வைனுடன்
பேசுவோம்” என்றபடி மக்டலீனா என்னிடம் இருந்து விடைபெற்றாள்.

இனி மொழிக்கும் பிரச்சினையில்லை இனி, செத்தெ, செய், ஜின்குவே, க்வாத்துரோ , துவே, ஊனோ என அடுத்த ஏழு நாட்களை எண்ணியபடி ஆட்டுக்கறியில் அடுத்த அத்தியாயத்தை எழுத தயாராக வேண்டியதுதான். விடுதியின் வரவேற்பறைப்படத்திலிருந்த இயேசுவின் புன்னகை சில மில்லிமீட்டர் அகன்றிருந்ததுபோலத் தோன்றியது.

Sunday, November 20, 2011

விடைகள் - கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு (Cricket Quiz with Answers)
1. இந்தப்புகைப்படத்தில் இருப்பவர் யார், நவீன கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஒரு விசயத்தை முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக டெஸ்ட் ஆட்டங்களில் செய்தவர். இவர் செய்த விசயம்தான் என்ன?

கிரஹாம் யலுப் - அடிவயிற்றுப் பாதுகாப்பு உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்குப்பின்னரே , தலைக்கவசம் கிரிக்கெட் ஆட்டத்தில் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வந்தது. மனிதனின் மூளையும் முக்கியமானது என உணர ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டுள்ளது என நகைச்சுவையாக கூறுவார்கள். கவாஸ்கர் , தலையைச் சுற்றி அடிபட்டால் கட்டும் கட்டுபோல போல ஒரு வடிவுடன் ஒரு கவசத்தை அணிந்து ஆடியிருக்கிறார்.
டென்னிஸ் அமிஸ், பெக்கர் உலக(கலகத்) தொடர் போட்டிகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டும்பொழுது பயன்படுத்தப்படும் தலைக்கவசத்தை சில மாறுபாடுகள் செய்து ஆடினார். ஆனால் அதிகாரப்பூர்வ டெஸ்ட் ஆட்டங்களில் , முதன் முறையாக தலைகவசத்தை அணிந்து ஆடியவர் கேள்வியின் படத்தில் இருக்கும் கிரஹாம் யலுப் என்ற ஆஸ்திரேலிய வீரர். மேற்கிந்திய தீவுகளுடன் உடன் ஆனா டெஸ்ட் தொடரில், பார்படாஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தலைகவசத்துடன் இறங்கி ஆடினார். பயந்தாங்கோலி என மேற்கிந்திய ரசிகர்களால் இவர் எக்களிக்கப்பட்டர்.

2. கிரிக்கெட் விதி எண் இரண்டின்படி மாற்று ஆட்டக்காரராக வருபவர் , விக்கெட் கீப்பிங் பணியை செய்ய இயலாது. டெஸ்ட் ஆட்டங்களில் ஒரு முறை இந்த விதி இரண்டு அணித்தலைவர்களின் ஒப்புதலோடு மீறப்பட்டுள்ளது. அந்த டெஸ்ட் ஆட்டம் எது? அந்த டெஸ்ட் ஆட்டத்தில் முதல் தர ஆட்டங்களில் அதிக அளவில் விக்கெட் கீப்பிங் முறையில் ஆட்டக்காரர்களை வீழ்த்தியவர் என்ற பெருமை உடைய ஒருவர் பன்னாட்டு ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்களுக்குப்பிறகு மாற்று விக்கெட் கீப்பராக சில நேரம் இருந்தார்.

பாப் டெய்லர் தான் அந்த விக்கெட் கீப்பர் . 86 ஆம் ஆண்டு லார்ட்சில் நடந்த நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் ஒன்றில், இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் புருஸ் பிரெஞ்ச், பேட்டிங் செய்யும்பொழுது காயமடைந்து விட , அணியில் இருந்த பில் அத்தே சில ஓவர்களுக்கு விக்கெட் கீப்பராக இருந்தார், சிறப்பாக கீப்பிங் செய்யத் தடுமாறிய பில் அத்தே விற்குப்பதிலக சிறப்பு விருந்தினர்களுடன் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பாப் டெய்லர் இங்கிலாந்திற்கான விக்கெட் கீப்பராக இருக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.கிட்டத்தட்ட 70 ஓவர்கள் கீப்பிங் செய்த டெய்லரின் பணியை ஹாம்ப்ஷையர் விக்கெட் கீப்பர் பாபி பார்க்ஸ் தொடர்ந்தார்.

ஒரு ஆட்டத்தில் 4 விக்கெட் கீப்பர்கள் பயன்படுத்தப்பட்டது இந்த ஆட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம். இத்தனை மாற்றங்களுக்கும் நியுசிலாந்து அணியின் தலைவர் ஜெரமி கோனே பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். துணைத் தகவல் - ஜெரமி கோனே ஒரு முறை , அவரின் பந்து வீச்சை கபில்தேவ் துவம்சம் செய்தபொழுது வெள்ளைக்கொடி காட்டி அரங்கையே சிரிப்பில் ஆழ்த்தியவர்.

3. கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எனப்படுவது தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவது. பலர் ஒரே ஓவரில் எடுப்பார்கள். சிலர் இரண்டு ஓவர்களில் எடுத்திருப்பார்கள். அதாவது முதல் ஓவரில் கடைசி பந்துகளில் ஒரு விக்கெட்டோ அல்லது இரண்டு விக்கெட்டுகளோ, அதே பந்துவீச்சாளர் மறுமுறை பந்துவீசும்பொழுது மீதமுள்ள விக்கெட்டுகளை எடுப்பது. டெஸ்ட் ஆட்டங்களில் ஒரு பந்து வீச்சாளர் மூன்று ஓவர்களில் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். எப்படி எடுத்தார் மேலும் அந்த பந்துவீச்சாளர் யார்?

ஆஸ்திரேலியாவின் மீசைக்கார வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியுஜஸ் தான் மூன்று ஓவர்களில் ஹாட்ரிக் எடுத்தவர். பெர்த்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் , அம்புரோஸ் ஹாட்ரிக்கின் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார், அந்த பந்துடன் ஓவரும் முடிந்தது. ஹியுஜஸ் தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் பாட்ரிக் பட்டர்சனின் விக்கெட்டை எடுத்தார். அத்துடன் மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய பேட்டிங்கிற்குப்பின்னர் , மீண்டும் களம் இறங்கி ஆடிய மேற்கிந்தியத்துவுகளின் இரண்டாவது இன்னிங்க்சில் பந்து வீச வந்த ஹியுஜஸ் தனது முதலாவது பந்திலேயே கர்டன் கிரினிட்ஜை ஆட்டமிழக்கச் செய்து சிறப்பம்சம் பொருந்திய இந்த ஹாட்ரிக் சாதனையுடன் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.4. ஆமை முயலாகுமா எனத் தெரியாது. ஆனால் தனது ஆமை வேக ஆட்டத்தை தேவைப்பட்ட சமயங்களில் முயலென்ன, சிறுத்தை வேகத்தில் கூட மாற்றிக்கொள்ளக்கூடிய ஆட்டத்திறன் பெற்றவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் மட்டையாளர் சந்திரபால். இவர் பன்னாட்டு ஒருநாள் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹாரிம்சன் வீசிய ஒரு ஓவரை துவம்சம் செய்தார். 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என தூள் கிளப்பி ஆடிய கீழ்க்காணும் காணொளியின் ஆட்டத்தின் முடிவு என்ன? அந்த முடிவில் இருந்த சுவராசியமும் என்னவென்று சொல்லுங்களேன்.விடை :

மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வருண பகவனும் இணைந்து விளையாடிய இந்த ஆட்டத்தில் வெற்றி இலக்கு ௨௭௧ என களமிறங்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஏழாவது விக்கெட்டாக ராம்தின் வீழ்ந்தார். டக்வோர்த் லூயிஸ் முறையின் படி இரண்டு ஓட்டங்கள் பின் தங்கி இருப்பதைக் கவனிக்காத பயிற்சியாளர் ஜான் டைசன் , மட்டையாளர்களை மழை காரணமாகத் திரும்ப உத்தரவிட்டார். நமுட்டு சிரிப்புடன் இங்கிலாந்து வெற்றியை எடுத்துக்கொண்டது.

Score Card - http://www.espncricinfo.com/wiveng2009/engine/current/match/352665.html

5. கொஞ்சம் எளிமையான கேள்விதான், நியுசிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் மார்ட்டினுக்கும் , முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? பந்து வீச்சில் இருவரும் 200 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள், அதைத்தவிர வேறு ஒரு சுவாரசியமான ஒற்றுமை உள்ளது, அது என்ன?

விடை :

இருவரும் டெஸ்ட் ரன்களை விட அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்.

6. சடகோபன் ரமேஷ் முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரர், ஓரளவிற்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் ஒரு நாள் ஆட்டங்களிலும் சோபித்தார். கால்களை நகர்த்தாமலேயே ஆடி 1000 ரன்கள் எடுப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல. கிரிக்கெட் ரசிகர்கள் மறக்காமல் இருக்க இவர் ஒரு சுவாரசியமான ஒருநாள் ஆட்ட சாதனையை தன் வசம் வைத்துள்ளார். உலக அளவில் 16 பேர் செய்து இருந்தாலும் இந்திய அளவில் இவர் ஒருவரே வைத்துள்ளார். 16 பேர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் இன்சாமம் உல் ஹக். அது எத்தகைய சாதனை என்பதுதான் இந்த வினாடிவினாப் பதிவின் கடைசிக் கேள்வி.

விடை :

ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த ஒரே இந்தியர்.

------------
அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த முகிலனிற்குப் பாராட்டுக்கள்

Thursday, November 17, 2011

உறைநிலை மனங்கள் - சிறுகதை

நான் அனுபவித்த வரையில் குளிர் மூன்று வகையானது, தமிழ்நாட்டில் கிடைக்கும் மார்கழி மாதக் குளிர், சுகமான குளிர் அது, சின்ன ஸ்வெட்டர் அணிந்து ஏழு மணி வாக்கில், அருகில் இருக்கும் டீக்கடைக்கு சென்று , தினத்தந்தியை மேய்ந்தபடி, பக்கத்து கடைக்கு காய்கறி வாங்க வரும் அம்முவை சைட் அடிப்பதில் ஏலக்காய் டீ துணையுடன் மென்மையான குளிர் மேலும் சுவாரசியப்படும்.

ஃப்ரிட்ஜைத் திறந்தவுடன் முகத்தில் அடிக்கும் குளிர், சில வினாடிகளுக்கு நன்றாக இருக்கும், இது இரண்டாவது வகையிலான குளிர், ஸ்வீடனைப் பொருத்தமட்டில் இது மிதமான குளிர். இந்த மிதமான குளிருக்கே ஸ்வீடன் வந்த முதல் வாரத்தில் ஒரு பனியன், பின்னர் கழுத்து வைக்காத டீஷர்ட், அதன் மேல் ஒரு சட்டை,அதற்கு மேல் ஸ்வெட்டர், கடைசி அடுக்காக ஒரு ஓவர்கோட் என தனுஷ் மாதிரி இருந்தவன், பூசணிகாயிற்கு சின்னக் கத்தரிக்காயைத்தலையாக வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி மாறிப்போனேன். அம்முவிற்கு அனுப்பவேண்டும் என, கார்ல்ஸ்க்ரோனா ரயில் நிலையத்திற்கு வெளியில் வெறும் சட்டையுடன் ஸ்டைல் போட்டோ எடுக்க நான் பட்டபாடு தனிக்கதை. கடைசிவகை குளிர் ஃப்ரீசரில் அடிக்கும் குளிர், இது ஆரம்பித்து சில வாரங்கள் ஆகின்றது. உடன் பிறப்பாக பனி மழையும் ஆரம்பித்துவிட்டது.முதலிரண்டு நாட்களில் பனிப்பொழிவைப் பார்த்த மகிழ்ச்சி, அடுத்தடுத்த நாட்களில் கரைந்துப்போனது. வீட்டிற்குள் இருந்தபடி, சன்னலின் வழியாக, கையில் தேநீர் கோப்பையுடன் இளையராஜாவின் பின்ணனி இசையில், புது வெள்ளை மழை எனப்பார்க்கும் உற்சாக உணர்வு, பனியில் அலுவலகம் போகும்பொழுது வருவதில்லை. அலுவலகம் பத்து நிமிட நடைதான், பாதையில் வழுக்கி விழுந்துவிடக்கூடாது எனக் கவனத்துடன் நடக்கும்பொழுது, மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகும். இதில் இன்னொரு பிரச்சினை, நான் வீட்டில் இருக்கும்பொழுது அம்மு மிஸ்ட் கால் கொடுக்க மாட்டாள், அலுவலகத்தில் இருக்கும்பொழுதும் கொடுக்க மாட்டாள். சரியாக உறைபனிக்குளிரில் நடக்கும்பொழுதுதான் கொடுப்பாள். ஒரு நிமிடத்திற்குள் திருப்பிக்கூப்பிட்டாகவேண்டும், இல்லை என்றால் மண்டகப்படிதான். கையுறையைக் கழட்டி, திரும்பக்கூப்பிட்டு கண்ணே மணியே எனக் காதல் மொழிப் பேசி முடிப்பதற்குள் எனது கை ஃப்ரீசரில் வைத்தக் கோழியைப்போல விறைத்துவிடும்.

பனிக்காலத்தில் இவர்களுக்கு இருக்கும் ஒரே மகழ்ச்சி, கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்கள், ஊரே பனிப்படர்வில் பிரகாசிக்கும் மின்னொளி வெள்ளத்தில் மிதக்கும்,
நான் இருக்கும் குடியிருப்பு கட்டிடம் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. மொத்தம் இருபது வீடுகளில் நான் ஒருவன் மட்டுமே வெளிநாட்டுக்காரன் அதிலும் மாநிறத்திற்கு சற்றுக்குறைவானவன், மற்றவர்கள் தங்க நிறக் கூந்தலுடன் 14 தலைமுறைகளாக தங்களது ஏழாம் அறிவைப் பாதுகாத்து கொண்டு வருபவர்கள். கருப்பாக இருப்பவர்கள் என்றால் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்ற தோரணையுடன் இருப்பவர்களாக எனக்குப்பட்டது, தீவிர வலதுசாரி, வெளிநாட்டவர் எதிர்ப்பு கட்சி, கடைசியாக நடந்தத் தேர்தலில், இந்தப்பகுதியில் 95 சதவீத வாக்குகளைப் பெற்றது என எனது அலுவலக பாகிஸ்தானியத் தோழன் சொன்னான். எனக்கு எப்படி அந்த குடியிருப்புப் பகுதியில் வீடு கிடைத்தது என்ற வியப்பு அவனுக்கு எப்பொழுதும் உண்டு.

நான் வேலைப்பார்க்கும் ஸ்வீடன் நிறுவனத்தைப் பொருத்தமட்டில் நான் அவர்களுக்குக் கிடைத்த அடிமைகளில் நான் மிகவும் திறமைசாலியானவன், அருகில் வைத்துக்கொண்டால் என்னை அதிக நேரம் சாறு பிழியலாம் என்பதால் எனது மனிதவள மேலாளார் இந்த வீட்டைப் பெற்றுத்தந்தார், உடல் உழைப்பு சார்ந்த அடிமைகளை விட, அறிவுசார் அடிமைகளுக்கு எங்கும் மதிப்புதான். நான் வீட்டு வாடகைத் தரவேண்டியதில்லை என்றாலும், ஏழால் பெருக்கி இந்திய பணத்திற்குப் பார்க்கும்பொழுது ஒரு இந்திய கடைநிலை அரசாங்க ஊழியனின் இரண்டு வருட சம்பளம்.அழகு மனிதர்களின் மத்தியில் நான் பார்த்த ஒரேஅழுக்கு மனிதர், கார்ல்ஸ்க்ரோனா ரயில் நிலையத்தின் மூலையில் இருக்கும் ஒரு பெஞ்சில் தனது அழுக்கு மூட்டையுடன் அடிக்கடி
தென்படும் ஒரு வயதானவர். வெளிநாட்டுக்காரர் அல்ல, ஸ்வீடிஷ் மண்ணின் மைந்தர்தான். நான் எப்பொழுது ரயில் நிலையம் சென்றாலும் அங்கு தென்படுவார், சில சமயங்களில் அருகில் இருக்கு அரபுக்கடை ஒன்றில் ஏதேனும் வாங்கிக்கொண்டு இருப்பார். வீடில்லாதவர்கள் ஸ்வீடனில் இல்லை என்ற எண்ணத்தை இது உடைத்து நொறுக்கியது. பகலில் சரி, இரவில் என்ன செய்வார், ஸ்வீடனின் அனைத்து ரயில் நிலையங்களும் நள்ளிரவைக் கடந்த பின்னர் பூட்டப்பட்டு விடும். முதன் முறையாக ஸ்டாக்ஹோல்ம் மைய ரயில்நிலையத்தில் அடித்துத் துரத்தாதக் குறையாக அனைவைரையும் வெளியேற்றினர். நல்லவேளை நமது மார்கழிக்குளிரைத் தரும் ஸ்காண்டிநேவிய கோடையாக இருந்ததால் தப்பித்தேன்.

இந்த வயதானவர் இரவில் எங்குத் தங்குகிறார் என்பதைக் கண்டுபிடித்தாகவேண்டும், என வெறுமனே 10 மணியில் இருந்து கோபன்ஹேகன் போகும் ரயில்களை வேடிக்கைப்பார்த்தபடி, காத்திருந்தேன். வயதானவர் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டார், 7 ஆம் எண் பேருந்தைப்பிடித்தார், கடைசி நிறுத்தத்தில் இறங்கினார். அவரைப்பின் தொடர்ந்தேன். அகதிகள், ஏழைகள், மாணவர்கள் தங்கி இருக்கும் ஊருக்கு வெளியே இருக்கும் அந்தக்குடியிருப்புப் பகுதியினுள் நுழைந்தார், தமிழகத்தில் இருப்பது போல, காவலாளிகள் கிடையாது. எல்லாம் தானியங்கு முறை. குடியிருப்பின் வாசலில் சிலவினாடிகள் காத்திருந்த பின்னர், என்னைப்பார்த்து, உள்நுழையும் கடவு எண் தெரியுமா என ஸ்வீடிஷில் கேட்டார். பதில் சொல்வதற்குள்,

பால்கனியில் இருந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்த ஒரு ஆப்பிரிக்க கருப்பன் எங்களைப் பார்த்ததும் கீழே வந்து உள்ளிருந்து கதவைத் திறந்துவிட்டான். தனது வீட்டிற்குப்போவார்
எனப்பார்த்தால், வயதானவர், மாடிப்படிகளுக்குக் கீழ் இருந்த இடத்தில் தனது படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் ஏதேச்சையாகப்பின் தொடருவதைப்போல அவரைத்தொடர்ந்தேன். அதேக்குடியிருப்புப் பகுதி, ஆனால் வேறுக்கட்டிடம், வேறு ஒரு ஆள் கதவைத் திறந்துவிட, மாடிப்படிகளின் கீழ் உள்ள இடத்தில் அவரின் வாசம். வார இறுதிக்கொண்டாட்டங்களை கோபன்ஹேகனில் கோலாகலமாகக் கொண்டாடிவிட்டு , கடைசி ரயிலில் கார்ல்ஸ்க்ரோனா வந்திறங்கியபொழுது, அந்த முதியவர் என்னைப்பார்த்து சிரித்தபடி பின் தொடர்ந்தார். வாசலில் குடியிருப்பில் உள்நுழைவதற்கான எண்ணை அடித்துவிட்டு, கதவை அவருக்காக திறந்துவிட்டேன். எனது குடியிருப்பின் மாடிப்படிகளில் கீழ் இருக்கும் இடத்தில் ஒரு குடும்பமே நடத்தலாம். அத்தனை விசாலமானது. தொடர்ந்த நாட்களில், நான் அலுவலகம் முடிந்து வரும் வழியில் காத்திருந்து என்னைப் பின் தொடர்ந்து, இரவு தங்கிவிட்டு, விடியற்காலையில் ரயில் நிலையம் திறக்கும் சமயத்தில் சென்றுவிடுவார்.

மூன்றாம் நாள், இரவு இரவு பதினொரு மணி அளவில் அழைப்பு மணி அடிக்கப்பட்டது, யார் இந்த வேளையில், ஒரு வேளை அந்த வயதானவர் அழைக்கிறாரோ என்ற எண்ணத்துடன் கதவைத் திறந்தால், எனக்கு மேல் தளத்தில் இருக்கும் இளம் தம்பதியினர் முகத்தில் கடுமையுடன், சிறு குழந்தையுடன் இவர்களைப் பார்த்திருக்கின்றேன். நான் ஒரு முறை நட்புப்புன்னகை செய்தபொழுது வறட்டுப்புன்னைகையைத் திரும்பக்கொடுத்ததால் அவர்களை அதன்பின்னர் கண்டுகொண்டதில்லை.

”நீ தான் அந்த வயதான மனிதருக்கு கதவைத் திறந்துவிட்டாயா?” அந்த இளம் மனைவி கேட்டார்.

“ஆமாம், வெளியே கடும் குளிர் அடிக்கின்றது, அதனால் தான் திறந்துவிட்டேன்”

“இது சிறு குழந்தைகள் இருக்கும் பகுதி, அந்த நபர் நோயாளியைப்போலவும் தெரிகிறார், அநாமதேய நபர்கள் வருவதை நாங்கள் விரும்புவதில்லை”

“மனிதாபிமான அடிப்படையில்தான் திறந்துவிட்டேன், இனிமேல் அவ்வாறு நிகழாது, சிரமத்திற்கு மன்னிக்கவும்” என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.

அடுத்த நாள் வயதான மனிதரிடம் சென்று கடவு எண்ணைக் கொடுத்துவிட்டு, இனிமேல் என்னை எதிர்பார்க்க வேண்டாம், அவராகவே திறந்து வந்து மடிப்படிகளில் கீழ்
படுத்துக்கொள்ளவும் எனச்சொல்லிவிட்டேன்.

மூன்று தினங்கள் எந்தப்பிரச்சினை இன்றி சென்றது, நான்காம் நாள், எனது வீட்டின் அழைப்பு மணி அடிக்கப்பட்டது, இந்த முறை போலிஸ், போலிஸிற்குப்பின்னர் அந்த தம்பதியினர் மற்றும் மேலும் சில குடியிருப்பு வாசிகள்.

காவலதிகாரிகள் கதவை இனி அந்த முதியவருக்கு திறந்துவிடக்கூடாது என என்னை எச்சரிக்கை வந்தார்களாம்.

“அந்த முதியவர் ஒரு நாள் நான் கடவு எண்ணை அடிக்கும்பொழுது பார்த்துவிட்டார், ஒரு வேளை அதன் மூலம் உள்ளே வந்து இருக்கலாம், எனக்கு இது பற்றி எதுவும் மேலேத்
தெரியாது” என்றேன்.

எனது பதிலில் திருப்தி அடையாவிட்டாலும், வேறு வழியின்றி அவர்கள் சென்றனர். பால்கனி வழியே வெளியேப்பார்த்தேன். அந்த முதியவர் காவல்துறையின் காரில் ஏற்றப்பட்டிருந்தார்.

மறுநாள் கடவு எண் அடித்து உள்நுழையும் முறை மாற்றப்பட்டது. வீட்டிற்கு இரண்டு ஸ்மார்ட்கார்ட்கள் கொடுக்கப்பட்டன. ஏடிம்மில் கார்டை நுழைத்தை கடவுச்சொல்லை அடிப்பது போல , கதவைத் திறக்க புது வழிமுறை. எனக்கு மட்டும் ஒரு அட்டை மட்டும் கொடுக்கப்பட்டது. சில நாட்கள் காணாமல் போய் இருந்த முதியவரை மீண்டும் வழியில் பார்த்தேன்.7 ஆம் எண் பேருந்திற்காகக் காத்திருப்பதாகக் கூறினார். 7 ஆம் எண் பேருந்து வருவதைப்போலத் தெரியவில்லை. அந்த வாரத்தில் கடும்பனிப்பொழிவும் கடுமையான குளிரும் இருக்கும் என வானிலை எச்சரிக்கை இருந்ததால், அவரை நான் என்னுடன் அழைத்துச் சென்றேன். வீட்டின் அருகில் அந்தத் தம்பதியினர் என்னைப்பார்த்தனர்.

“உனக்கு அறிவு இல்லையா, இனியும் இவருக்காகக் கதவைத் திறந்துவிட்டால் நீயும் இவருடன் வெளியேற்றப்படுவாய் ” என்பதை பக்குவமான மொழியில் சொன்னார்கள். .

“இவர் என் வீட்டு விருந்தாளி, என் விருந்தாளியை என் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு எனக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றது” எனச்சொல்லிவிட்டு வீட்டிற்கு அழைத்துச்சென்றேன்.

மறுநாள் என்னிடம் “எனக்கு நான் வாழும் வாழ்க்கை முறையேப்பிடித்து இருக்கின்றது, வீடுகளில் வழக்கமான படுக்கை விரிப்புகள் தூக்கம் எனக்குப் பிடிக்கவில்லை ஆனாலும் உன் அன்புக்கு நன்றிகள்”

எனச் சொல்லிவிட்டு கிளம்பினார். ஏதோ ஒரு உந்துதலில் என் வீட்டு விருந்தாளி எனக்கூட்டிவிட்டு வந்துவிட்டேன், ஒரேயடியாக இங்கேயேத் தங்கிவிடுவாரோ என்ற பயம் உள்ளூர இருந்தது, அவரே போறேன் என்று சொன்னதும் மகிழ்ச்சியாகவே வழியனுப்பும் முன்னர்,

“ஒரு வேளை 7 ஆம் எண் பேருந்து கிடைக்கவில்லை என்றாலோ, அதிக பனி குளிர் என்றாலோ தாரளமாக இங்கு வரலாம்” என எனது கைபேசி எண்ணைக்கொடுத்தேன்.

வரும் நாட்களில் பனியும் குளிரும் மேன்மேலும் அதிகமாகும் என்ற ஒவ்வொரு எச்சரிக்கையின் போதும் முதியவர் நினைவுக்கு வருவார், பின் அம்முவின் உரையாடல்களில் காணாமல் போய்விடுவார். புதுவருட ஆரம்பத்தில் அலுவலக நிமித்தமாக ஸ்டாக்ஹோல்ம் செல்ல வேண்டி இருந்தது. சக்கையையும் மறு முறை பிழிவதைப்போல இரண்டு நாட்களில் இரண்டு வார வேலையை வாங்கிக்கொண்டார்கள். பல எடுக்காத கைபேசி அழைப்புகள். பெரும்பாலனவை அம்முவினது, சிலவை புதிய எண்கள், கார்ல்ஸ்க்ரோனா எண்கள் போல இருந்தன.

விடியற்காலையில் 8 மணி நேர பேருந்து பயணத்திற்குப்பின்னர்,ஸ்டாக்ஹோல்மிலிருந்து கார்ல்ஸ்க்ரோனா வந்தடைந்த பொழுது சுத்தம் செய்யப்படாத சாலைகளில் கணுக்காலுக்கும் மேலே பனிபடர்வு இருந்தது. எனது தெருவின் முனையில் ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு போலிஸ் வாகனம். ஏற்கனவே கதவைத் திறந்த விசயத்தில் என்னை விசாரித்த அதிகாரியும் அங்கு இருந்தார்.

அவரிடம் போய் என்னவென்று கேட்டபொழுது, “அந்த முதியவர் பனிக்குளிரில் இறந்துவிட்டார், அவரின் உடலை எடுத்துப்போகத்தான் வந்து இருக்கின்றோம்”

ஸ்வீடன் வந்த பின்னர் முதன் முறையாக கண்கலங்கியது. ஒருத்தர் கூடவா கதவைத் திறந்துவிடவில்லை. எனக்கு வந்திருந்த அறிமுகமில்லாத எண்களை மீண்டும் ஒரு முறைப்
பார்த்தேன். கடைசி அழைப்பு நேற்றிரவு 11 மணிக்கு, கடவுளே , நான் கதவைத் திறப்பேன் என்ற நம்பிக்கையில் அல்லவா வந்திருப்பார். சிறிய கூட்டத்தில் என்னை எச்சரித்த
தம்பதியினரும், வேறு சில குடியிருப்பு வாசிகளும் இருந்தனர். என்னை கண்ணுக்கு கண் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தபடி இருப்பதாக பாசாங்கு செய்து கொண்டிருந்தனர்.
பாசாங்கையும் மீறி குற்ற உணர்ச்சி தெரிந்தது. அவர்களை விட எனக்கு அதிகமாவே இருந்தது. ஒரு நிமிடம் எனது கையுறையைக் கழட்டிவிட்டு அந்த மைனஸ் 10 டிகிரியில் வெறும் கையுடன் இருந்தேன். கையில் மரத்துப்போன உணர்ச்சியை மீட்டு எடுக்க அன்று பகல் முழுவதும். ஆனது. கை உணர்ச்சி வந்தாலும் மனது மரத்தேப்போனது. மறுநாளும்
அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு பால்கனி சன்னலின் வழியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். பனி மழைக் கொட்டிக்கொண்டிருந்தது.

மேல்தள தம்பதியினரில் இளம் மனைவி தனது கைக்குழந்தையுடன் வெளியில் கதவைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். கடவு அட்டையை மறந்து வைத்து விட்டாள்
போலும். நான் பால்கனியில் இருப்பதைப்பார்த்தவுடன் என்னைப்பார்த்து கையை ஆட்டி சைகையில் கதவைத் திறந்துவிட சொன்னாள்.

நான் அவளையே புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக மற்றவர் படும் கஷ்டம் ஆனந்தமாக இருந்தது. நான் திறக்கப்போவதில்லை என்பதைப்புரிந்து கொண்டாளோ என்னவோ, கையுறையைக் கழட்டிவிட்டு கைபேசியை எடுத்து அவளின் கணவனிட்ம் பேசினாள் போல, சில நிமிடங்களுக்குப்பிறகு அவளின் கணவன் கதவைத் திறந்துவிட்டு உள்ளே அழைத்து செல்லும் முன்னர், இருவரும் என்னைப்பார்த்தனர். குரூர சிரிப்புடன் உறைந்த மனங்களுக்கு மத்தியில் மரத்துப்போன மனிதத்துடன் அவர்களுக்கு நடுவிரலைக் காட்டினேன்.

Friday, November 11, 2011

ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் - இது ஒரு விளம்பரப் பதிவு

மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் படித்த என்னுடைய நண்பர் ஒருவர் சென்னையில் நடத்தும் ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் பெண்கள் ஆடைகளுக்கான பிரத்யோக துணியகம் நடத்தி வருகிறார். அவருடைய வியாபார முயற்சிக்கு சிறு ஊக்கமாக , இந்த விளம்பர பதிவு எழுதப்படுகிறது.

ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் யின் தனித்துவமான விற்பனை சூட்சுமம் , நாம் விரும்பிய வகையில் அவர்கள் வடிவமைத்து தருகிறார்கள். வடிவைமைப்புகள் , வேலைப்பாடுகள் நாம் தேர்ந்தேடுத்தபடி சேலை ஆகட்டும் , சுடிதார் ஆகட்டும் அருமையாக செய்து கொடுப்பார்கள். தபால் ,மின்னஞ்சல் , தொலைபேசி வழியாகவும் தங்களின் தேர்வுகளைச் சொல்லலாம்.

You can find ‘’Fancy Sarees, Embroidery Sarees, Work Sarees (Kundan Works, Stone Works, Thread Works, Sequins Work & Bead work Sarees ) Chudidar Materials, Georgette Sarees, Net Sarees, Vazhai Naaru Sarees, Lazer Sarees, Crepe Sarees, Patola Sarees, Cotton Sarees, Vail Sarees, Masakali Sarees, Rasakali Sarees & Surat Cutpiece Joint Sarees with High Good Quality at Cheaper Rates’’.


இவர்களிடம் இருந்து துணி வகைகளை பெற்றுக்கொண்டு , வியாபாரம் செய்யும் Re-sellers தேவைப்படுகிறார்கள்

தொடர்புக்கு
Shree Textiles
40/2 Kappal Polu Street,
Old Washermanpet,
Chennai - 600021.
Phone: +91 9840819501

Email:
shreetextiles.sgc@gmail.com
shreetextilessgc@yahoo.com
போலாந்து - ஃபீனிக்ஸ் தேசம்

ஒரு பக்கம் வாசனைத் திரவியங்களுக்காகவும் தங்கத்திற்காகவும் நாடு பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐரோப்பிய மன்னாராட்சி வல்லரசுகளின் மத்தியில், அமைதியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஒற்றுமையே பலம் என்ற தற்கால ஐரோப்பிய ஒன்றிய கோட்பாடுகளை அன்றே செயற்படுத்திய போலாந்து இன்று (நவம்பர் 11) தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
சோவியத் ரஷியாவின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு மாநிலமாக 50 ஆண்டுகள் பொதுவுடைமை சித்தாந்த அடிப்படையில் ஆட்சி நடைபெற்ற போலாந்து தேசம் தான், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்களாட்சி தத்துவத்தை ஆட்சி முறையில் நடைமுறைப்படுத்தியது என்பதைக் கேட்க வியப்பாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் எப்பொழுது ஏப்பம் விடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கும் ரஷியா, மறுபக்கம் கடல் வாணிபம் என்ற பெயரில் கடற்கொள்ளையர்களாகத் திரியும் சுவீடன் தேசத்து கடற்படை, வேறொரு பக்கம், மேற்கு ஐரோப்பா முழுவதையும் தனதாக்கிக்கொண்டிருக்கும் துருக்கிய ஆட்டோமான், இவற்றிற்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டு, தங்களுக்குள்ளும் அடித்துக்கொண்டிருந்த லித்துவேனியாவும் போலாந்தும் கூட்டமைப்பாக இருப்பது என முடிவு செய்தன.அரசன், கடவுளுக்கு அடுத்தபடி என ஐரோப்பாவே மந்திரித்து திரித்துவிட்டதுபோல இருந்த சமயத்தில், மன்னனின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி தேர்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் வழியாக கூட்டாட்சித் தத்துவம் செயற்படுத்தப்பட்டது. லித்துவேனியா - போலாந்து கூட்டமைப்பில் தற்கால பெலாரஸ் , எஸ்தோனியா ,லாட்வியா, ருமேனியா, ஸ்லோவேக்கியா, உக்ரைன் மற்றும் ரஷியாவின் சிலபகுதிகளும் அடங்கி இருந்தன. பலதரப்பட்ட இன மக்கள், அவர்களில் பல்வேறு மொழிகள் பேசும் இனக்குழுக்கள், ஆதி தெய்வங்கள் முதற்கொண்டு ஆபிராகமிய மதங்கள் வரை பின்பற்றும் மக்கள் சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தது இன்றளவிலும் வரலாற்று ஆசிரியர்களால் பாராட்டப்படுகிறது.போலிஷ் மொழி முதன் அதிகாரப்பூர்வமாக இருந்தாலும் லத்தீன், ஜெர்மன், ஹீப்ரூ, ஆர்மீனியன், ஸ்லேவேனியன் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருந்தன. பிரெஞ்சு நீதிமன்ற தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டது.சோழ சாம்ராஜ்யத்தைப்போல பண்பட்டு 1569 முதல் 1795 வரை கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள் வெற்றிகரமாக செயற்பட்ட லித்துவேனியா - போலாந்து கூட்டமைப்பு வீழ்ந்ததன் காரணங்கள் பலவாக இருந்தாலும் மாகாணங்களின் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் முக்கியமானதாக சொல்லபடுகிறது. தற்பொழுதைய ஐ.நா சபையின் பாதுகாப்புக்குழுவில் இருக்கும் ரத்து அதிகாரத்திற்கு நிகரானது. பலமிழக்கும் கூட்டமைப்பை வலுப்படுத்த, திருத்தி வடிவைமைக்கப்பட்ட அரசியலைப்பு சட்டம் 18 ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டாலும், தொடர்ந்த ஆஸ்திரிய, பிரஷிய , ரஷிய தாக்குதல்கள் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த அரசாங்கம் அப்பத் துண்டுகள் போல தனித்தனியே வெட்டி எடுக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது. வாழ்ந்து கெட்டவர்கள் படும் துன்பங்களை ஏனைய ஐரோப்பா கொண்டாடிக்கொண்டிருக்கையில் ஆட்டோமான் துருக்கிய அரசு, கூட்டமைப்பு உடைந்ததை அங்கீகரிக்கவில்லை.

நூற்றாண்டுகள் தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த போலாந்து இன மக்கள், தனது மொழியைப் பேச மறுக்கப்பட்டனர், ரஷிய , ஜெர்மானிய அடையாளங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். பதுங்கு அறைகளில் போலாந்திய மொழி அடுத்து வரும் தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது. அடையாளங்கள் உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கப்பட்டது. இடையில் நெப்போலியன் ஒரு பரப்பளவில் சிறிய நாட்டைப் பெற்றுத்தந்தாலும், மீண்டும் நெப்போலியனின் தோல்விக்குப்பிறகு போலாந்திய மக்கள் அகதிகள் ஆகினர். தற்கால தமிழர்களைப்போல தமிழன் இல்லாத நாடில்லை, தமிழர்களுக்கு என ஒரு நாடில்லை கதியில் போலாந்து மக்களின் துயரம் தொடர்ந்தது.
கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் நாடற்று இருந்த போலாந்திய இனம், முதலாம் உலகப்போரின் முடிவில், ரஷியாவின் உள்நாட்டுக்குழப்பம், ஜெர்மனியின் பின்வாங்கல் ஆகியனவற்றுடன், சுதந்திரக் காற்றை சுவாசிக்க இரண்டு தலைமுறையாய் காத்துக்கொண்டிருந்த போலாந்து மக்கள் ஜோசஃப் பிலுட்ஸ்கி தலைமையில் ஒன்று திரண்டனர். எஞ்சி இருந்த ஜெர்மானிய ஆதிக்கத்தை துரத்தி அடித்து ஜோசஃப் பிலுட்ஸ்கி தலைமையில் இரண்டாம் போலாந்து குடியரசு உதயமான நாள் தான் நவம்பர் 11.உணர்ச்சிப்பூர்வமாக நான்கு ஒன்றுகள் அடுத்தடுத்து இருக்கும் இந்த நாள், ஒவ்வொரு போலாந்தை சேர்ந்தவரும் தன அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் நாள். இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் வந்த ரஷியாவின் பொம்மை அரசாங்கம் அரை நூற்றாண்டு காலத்திற்கு , இந்த நாளுக்கான மரியாதையை குப்பையில் போட்டது.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்கள், போலாந்தில் இருந்த யூதர்களை வேட்டையாடியபொழுது, உயிரைக்கொடுத்தாலாவது யூதர்களைக் காப்பாற்ற வேண்டும் என போலாந்து மக்கள் பிரயத்தனப்பட்டார்கள். இலங்கையில் 80களின் இடையில் ஜேவிபி இளைஞர்களுக்கு அடைக்கலம் அளித்த தமிழ் குடுமபங்கள் இங்கு நினைவுக்கு வருவது தடுக்க முடியாதது. வரலாற்றுப்பூர்வமாக நோக்கினால் , ஐரோப்பா முழுமைக்கும் நிலவிய யூத எதிர்ப்பு போலாந்து சமுதாயத்தில் ஒப்பீட்டளவில் மிக மிகக்குறைவு, இதற்கு ஒரு காரணம் லித்துவேனிய-போலாந்து கூட்டமைப்பு காலம் தொட்டு ரத்தத்தில் ஊறி இருந்த சகிப்புத்தன்மை, பெருந்தன்மை. யூதர்களுக்கு சமமாக போலாந்து மக்களும் கொல்லப்பட்டாலும் (முதலில் ஜெர்மானிய ராஜிக்கள், பின்னர் ரஷியா), யூதப்படுகொலைக்கு ஈடாக போலாந்திய இனப்படுகொலை வரலாற்றில் உணரப்படுவதில்ல்லை. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் போலாந்து ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்தபின்னர், போலாந்து தேசியவாதிகளில் நாடுகடந்த அரசாங்கம் முதலில் பாரிஸில் இருந்தும் பின்னர் லண்டனில் இருந்தும் செயற்படத் தொடங்கியது.

ஏட்டளவு அரசாங்கமாக இருந்தாலும், நாடுகடந்த அரசாங்கத்தின் தொடர் இயக்கம் போலாந்து மக்களின் ரஷிய ஏகாதிபத்திய எதிர்ப்பை உள்ளுக்குள் கணர வைத்துக்கொண்டே இருந்தது. தங்களின் இன மொழி தேசியத்தின் அடிப்படையில் தனிநாடு கோரிப்போராடி வருபவர்களுக்கு இந்த போலாந்தின் நாடுகடந்த அரசாங்கம் பற்றிய பார்வை ஒரு உற்சாக மருந்து. நாடுகடந்த அரசாங்க செயற்படுகளின் தொடர் முயற்சிகளில் , 80 களின் தொடக்கத்தில் ரஷியாவின் பொம்மை அரசாங்கத்தின் அடித்தளம் கிடான்ஸ்க் நகரில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் ஆடத் துவங்கியது. உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து முதன் முதலில் மீண்டும் ஒருமுறை ஃபீனிக்ஸ் பறவையாய் சுய அடையாளத்தைக் கண்டது. மீண்டும் நவம்பர் 11 சுதந்திர தினம் ஆனது. மக்களாட்சித் தத்துவத்தை உலகிற்கு நடைமுறைப்படுத்திக் காட்டிய போலாந்து மக்கள் பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு எதிராக கிளம்பினர் என்பதை விட, ஆதிக்க ரஷியாவிற்கு எதிராக நூற்றாண்டுகளாகப் போராடியதைப்போல, 80 களின் பிற்பகுதியில் போராடி சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினர். வோட்காவிலும் வினிகரிலும் எழுச்சியை முடக்க நினைத்தாலும், இறுதியில் வைராக்கியம் வென்றது. மக்களாட்சியாகட்டும் பொதுவுடமைத் தத்துவமாகட்டும் முழு அதிகாரங்களுடன் நிறுவனமயப்படுத்தப்பட்ட எந்த ஒரு தத்துவமும், அது சார்ந்த அரசாங்கமும் தோல்வியில் முடிவடையும் என்பது போலாந்தின் வரலாற்றில் கற்றுக்கொள்ளப்படவேண்டிய பாடமாகும்.
தொடர் வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது கண்ணிமைக்கும் நேரம், அடையாளங்களைத் தொடர்ந்து எழுச்சியுடன் வைத்திருப்பது எப்படி என்பதை தமிழ்ச் சமுதாயம் போலாந்து தேசியத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கின்றது. உலகிற்கே உதாரணமாக விளங்கிய சில நூற்றாண்டுகள், ஒடுக்கப்பட்டு ஓடி ஓளிந்து பாதாள அறைகளில் விழுமியங்களையும் மொழியையும் அடையாளங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது, வல்லரசுகள் மத்தியில் நசுங்கி சின்னா பின்னம் ஆனாலும், ஏகாதிபத்திய திமிங்கல வாயில் நுழைந்து விடாமல், நாடுகடந்த அரசாங்கங்களின் ஊக்கத்தில் விசுவரூபம் எடுத்து அடையாளாங்களை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் போலாந்து தேசியத்திடம் இருந்து தமிழர்களும் தமிழ் தேசியமும் கற்றுக்கொள்ள ஏராளமாக இருக்கின்றனர். அப்பொழுதுதான் தமிழர்கள் நண்டுகள் அல்ல , அவர்கள் ஃபீனிக்ஸ் பறவைகள் என வரும் வரலாறு சொல்லும் காலமும் கனவும் நிறைவேறும். ஆம் நவம்பர் 11 ஆம் தேதிக்கும் நவம்பர் 27 ஆம் தேதிக்கும் பெரிய இடைவெளி இல்லை.

---

போலாந்து தேசத்தின் வரலாற்றை விரிவாகப்படிக்க Norman Davies எழுதியிருக்கும் God's Playground நூலின் இரண்டு தொகுதிகள் பரிந்துரைக்கப்படுகிறது.


Saturday, October 08, 2011

இணைய வெளியில் தமிழுக்கென தனிக்கொற்றம் ( .Tamil - gTLD) - தேவையான முன்னெடுப்புகள்

நம்முடைய வலைப்பூக்கள், இணையத்தளங்களின் கொற்றங்கள் (domain).com , .net, .in என அல்லாது .Tamil (உதாரணமாக www.india.com என்பதற்குப் பதிலாக www.india.tamil )என்ற வகையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நீங்கள் எண்ணியதுண்டா? ஆம் எனில் இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமான பார்சிலோனாவில் இருந்து ஒரு நண்பரை நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்தது. சிலப்பல ஸ்பானிய மொழி வாக்கியங்களுடன் அவரைச் சந்திக்க தயாராக இருந்தபோது, தன்னை ஒரு கட்டலோனியன் (Catalonia) என அறிமுகப்படுத்திக் கொண்டார். வடகிழக்கு ஸ்பெயினின் தனியான சுதந்திர அந்தஸ்துடன் இருக்கும் ஒரு மாநிலம் கட்டலோனியா, கட்டலோனிய மொழிப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பு அது. தனித்துவமான இன, மொழிகுழுக்கள் தேசியங்களாக மேலெழும்புவதைப் பார்ப்பது மனதுக்குப் பிடித்தமான ஒன்று ஆதலால், அவருடன் தொடர்ந்து பேசத்தொடங்கியபோது , நிறையப் பேருக்கு வெளியில் தெரியாத ஒரு விபரத்தைக் கூறினார்.

இணைய வெளி வரலாற்றில், மொழி மற்றும் கலாச்சாரக் கூறுகளின் அடிப்படையில் இணையத்தில் உயர்நிலைக் கொற்றதைப் பெற்றவர்கள் கட்டலோனியர்கள். ஆம், .cat என்ற உயர்நிலைக் கொற்றம் (TLD - Top level domain)கட்டலோனிய மக்களுக்காக 2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. .cat கொற்றத்தின் வழியாக 50,000 க்கும் மேலான இணைய தளங்கள் கட்டலோனியன் மொழியில் செயற்பட்டு வருகின்றன.

2004 ஆம் ஆண்டு ICANN நிறுவனத்தால், உபயதாரர்கள் உயர்நிலைக் கொற்றங்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது, .asia, .jobs, .travel, .mobi ஆகியனவற்றுடன் .cat கொற்றத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது. ICANN என்பதின் முழுவடிவம், Internet Corporation for Assigned Names and Numbers, அதாவது இணைய தள முகவரிகள், எண்கள் வழங்குபவதை நிர்வாகிக்கும் உச்ச அமைப்பு.
இடையில் காதல்-கலவிக் கான இணையத்தளங்களுக்கான .xxx அனுமதி அறிவிப்புப்பிற்குப்பின்னர், இணைய வெளியின் மற்றும் ஒரு மறுமலர்ச்சித் திட்டமாக மேலதிக உயர்நிலைக் கொற்றங்களை அனுமதிக்கும் ஒரு திட்டத்தை ICANN ஆரம்பித்துள்ளது.அறியாமை, முன்னெடுப்பு இல்லாமை, நிதிக்கட்டுப்பாடுகள், ஒருங்கிணைப்பு இன்மை என ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் தமிழுக்கான உயர்நிலைக் கொற்றம் பெறும் வாய்ப்பை 2004 ஆம் ஆண்டில் தவறவிட்டாலும், இந்த முறை ICANN அறிவித்து இருக்கும் gTLD கொற்றங்கள் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.

தனித்தமிழ் முன்னெடுப்புகள், திராவிட அரசியல் இயக்கங்கள், இளையராஜாவின் இசை, செயற்கை கோள் தமிழ் தொலைகாட்சி ஊடகங்கள், ஒருங்குக்குறி எழுத்துருக்கள் என தமிழுக்கு அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மறுமலர்ச்சிகளும், உணர்வூட்டங்களும் கொடுக்கப்பட்டு நீரில் அமுக்கப்பட்ட காற்றடைத்தப் பந்தைப்போல தமிழ் மேல் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் தமிழுக்கான கொற்றம் அருமையான வாய்ப்பு.

தேவையான முன்னெடுப்புகள்

1. கட்டலோனியர்களின் விண்ணப்பப் படிவத்தை ஆழ்ந்து வாசித்து, அதைத் தரவாக வைத்து தமிழுக்கென ஒரு விண்ணப்பத்தைத் தயார் செய்வது. கருத்தியல், அரசியல், நடைமுறைப்யன்பாடு முதலிய காரணங்களைக் காட்டி எழுந்த எதிர்ப்புகளுக்கு அவர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பது பற்றிய ஆழ்ந்த வாசிப்பு. தமிழ் என வந்து விட்டால் சுண்டைகாய் பெறாத விடயங்களைக்கூட காரணம் காட்டி எதிர்ப்பார்கள். புதிய gTLD யில் கலாச்சார மொழிக்கான கொற்றங்கள் கொடுப்பதற்கு எதிர்க்கும் காரணங்களில் தமிழை ஒரு உதாரணமாக ஒரு வேளை தமிழ் தனக்கெனக் கேட்டால் இலங்கை அரசாங்கம் எதிர்க்குமே என விவாதங்களில் காட்டியுள்ளார்கள்.


கட்டலோனியர்களின் விண்ணப்பம் = http://www.icann.org/en/tlds/stld-apps-19mar04/cat.htm


விண்ணப்பத்தின் மீதான விவாதங்கள் - http://forum.icann.org/lists/stld-rfp-cat/

2. ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் / அரசாங்கங்கள் தமிழுக்கென தனி இடத்தை வாங்கும் திட்டம் வைத்து இருந்தால், அவற்றை ஒருங்கிணைத்து கூட்டாக முயற்சித்தால் பெரிய இடையூறுகள் இன்றி பெறலாம்.

3. ICANN நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய gTLD திட்டத்தின் கீழ் வர்த்தக நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், அரசாங்கங்கள், சமுதாய,கலாச்சர,மொழிக்குழுக்கள் என கொற்றங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

4. புதிய உயர்நிலைக் கொற்றங்களைக்கோரும் விண்ணப்பங்கள் ஜனவரி 12, 2012 ஆம் ஆண்டில் இருந்து ஏப்ரல் 12, 2012 ஆம் தேதிவரை ICANN பெற்றுக்கொள்ளும்.

5. உயர்நிலைக் கொற்றம் பெருவதில் மிகப்பெரும் வியாபர சந்தையும் இருப்பதால், இதற்கான விண்ணப்பக் கட்டணமும் மிக மிக அதிகம். சாமானிய மனிதனால் இந்த முன்னெடுப்பைத் தனியாக செய்ய இயலாது. நிறுவனங்கள், அரசாங்கங்கள் என கூட்டு முயற்சியில் மட்டுமே தமிழுக்கென தனிக்கொற்றம் வாங்க முடியும். தனிக்கொற்றம் பெற்று அதற்கான இரண்டாம் நிலை கொற்ற விற்பனை சந்தையினால், விண்ணப்பம் கோரும் நிறுவனம் அதற்கான சிறந்த வியாபரத்திட்டத்தையும் கையகத்தே வைத்திருத்தல் வேண்டும்.

6. விண்ணப்பத்திற்கான முன் வைப்புத் தொகை - 5000 அமெரிக்க டாலர்கள்
ஒட்டு மொத்த விண்ணப்பத் தொகை - 1,85,000 அமெரிக்க டாலர்கள்

7. இயல்பாக எழும் அடிப்படைக் கேள்விகளுக்கு இந்தக் கோப்பை வாசிக்கலாம் http://www.icann.org/en/topics/new-gtlds/gtld-facts-31jul11-en.pdf

8. விண்ணப்பத்தாரர்களுக்கான முழு வழிகாட்டி இந்த சுட்டியில் கிடைக்கும் http://www.icann.org/en/topics/new-gtlds/rfp-clean-19sep11-en.pdfவிண்ணப்பங்களை அனுப்ப இன்னும் 90 நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது. ஐந்து நாடுகளில் மக்கள் செல்வாக்குடன் அரசியல் செல்வாக்கையும் பெற்றிருக்கும் தமிழுக்கு தனிக்கொற்றம் வேண்டும் என்பது பேராசை அல்ல. இயல்பாக தன்னிடம் வரவேண்டிய விசயங்கள்,தகுந்த முன்னெடுப்புகள் இல்லாமல் இலவு காத்த கிளியின் நிலை போல் ஆகிவிடக்கூடாது. தமிழக அரசாங்கமோ, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ, அல்லது தமிழை நேசிக்கும் பெரும் நிறுவனங்களோ இணைந்து இந்த முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.

முக்கியமான விசயம் என்னவெனில் இதில் வெறும் ஆர்வம் சார்ந்து, கொடை சார்ந்த விசயம் மட்டும் அல்ல. இதில் வியாபாரம் வணிகம் சார்ந்த கூறுகளும் அடங்கியுள்ளது. வெறுமனே மொழி சார்ந்து மட்டும் பார்க்காமல் சந்தை ரீதியில் பார்த்தாலும் மிகப்பெரும் லாபம் ஈட்டக்கூடிய ஒரு விசயம் இது.

இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெறப்பட்ட .cat கொற்றம் இன்று வருடா வருடம் ஒன்பதரைக் கோடி ரூபாயை தோராயமாக ஈட்டி வருகிறது. கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம் மக்கள் தொகை / சந்தை கொண்ட தமிழால் மேலும் லாபம் ஈட்டித்தர முடியும்.

மாட்ரிக்ஸ் படத்தில் வருவதைப்போல உலகம் இணையம் சார்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பூமிப்பந்தில் தனித்த இடம் இல்லாது போதிலும், எல்லையற்ற இணையவெளியில் தமிழுக்கென கொற்றத்தைப்பெறுவொம்.

தமிழுக்காக மட்டும் இன்றி , ஏனைய மொழிகளுக்கும், அவற்றின் மொழி ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கும் ஆனா ஒரு கொற்றத்தை பெற வைக்க முன்னெடுப்புகளையும் செய்ய வேண்டும்.

தமிழும் ஈழமும் ஒன்றுக்கொன்று சமமானவை. தமிழுக்கு கொற்றம் பெறும் அதே வேளையில் ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி, .eelam or .eezham கொற்றத்தினைப் பெற முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். அரசியல், அறப்போராட்டங்களுக்கு, அறிவுசார்ந்த வெற்றிகளும் மிகப்பெரியத் துணைக்கொடுக்கும்.

இரண்டு வருடங்களில் www.tamil.eelam எனவும் www.eelam.tamil எனவும் தளங்கள் அமைய இன்றே விதைப்போம்.

உசாத்துணைகள் / தரவுகள்
1. http://www.icann.org/
2. http://www.mindsandmachines.com/tag/new-gtlds/
3. http://newgtlds.icann.org/

நன்றி - கலைச்சொற்கள் மற்றும் மேலதிக விவாத விபர உதவிகளுக்காக - டாக்டர். புருனோ - http://www.payanangal.in/

Tuesday, August 30, 2011

சரப்ஜித் சிங் - தூக்கின் வாசலில்

இந்த வருடத்திய ஆகஸ்ட் மாதம்அதிகாரப்பூர்வ உயிர்க்கொலைகளை ஆதரிக்கும் மாதம் போல் இருக்கிறது. இந்தியக் குடிமகனும் , பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட21 வருடங்களாக பாகிஸ்தானிய கடுஞ்சிறை வாசத்தை அனுபவித்து வரும் மரண தண்டனை கைதி சரப்ஜித் சிங்கிற்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது என்றும் உடனடியாக தூக்கில் ஏற்ற வேண்டும் பாகிஸ்தானிய வழக்கறிஞர் இராணா இலாமுதீன் காசா அந்நாட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. ஏற்கனவே பாகிஸ்தானிய மாணவர்கள் சங்கம் சரப்ஜித் சிங்கிற்கு உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என 2008 ஆம் ஆண்டில் இருந்து அடிக்கடி போராட்டங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டுதான் சரப்ஜித்தின் தூக்கை அப்பொழுதைய பிரதமர் யூசுப் கிலானி காலவரையின்றி ஒத்தி வைத்தார். பஞ்சாப் முதல்வர் பிரதமருக்கு நேரிடை கோரிக்கை, இரு நாட்டு பேச்சுவார்த்தைகளில் இடம்பெறும் அளவிற்கு அப்படி என்ன முக்கியத்துவம் இந்த மரணதண்டனைக்கு?சுள்ளிப்பொறுக்கவும் , சாராயம் கடத்தவும் எல்லைக் கடந்த மன்ஜித் சிங்கை, 90ஆம் ஆண்டு லாகூரிலும் , முல்தானிலும் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அதனால் ஏற்பட்ட 14 உயிர்ப்பலிகளுக்கும் காரணமான தீவிரவாதி எனச் சித்தரித்தும், இந்திய உளவுத்துறையின் கூலி எனவும் கைது செய்து மனிதாபிமான அற்ற முறையில் தனிமைச் சிறையில் அடைத்தது. உலகத்தில் இருக்கும் அனைத்து விதமான கொடூரமான சித்ரவதைகளைச் செய்தால் எந்த சாமானிய மனிதனும் செய்யாதக் குற்றத்தையும் ஒப்புக்கொள்வான். மன்ஜித் சிங்கும் ஒப்புக்கொண்டார், பாகிஸ்தானிய காவல்துறை அவருக்கு சரப்ஜித் என்ற பெயரையும் சூட்டியது.

மற்ற நாட்டுக் காவல்துறைகளுக்கு பாகிஸ்தானிய காவல்துறை சளைத்ததா என்ன? அற்புதமாக சாட்சிகளையும் சந்தர்ப்பங்களையும் ஜோடித்து , நமது ஊருக்கு இணையான தடா போன்ற தீவிரவாதக் கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றில் 1991 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையும் வாங்கிக்கொடுத்தது. வழக்கு விவாதங்கள் ஆங்கிலத்தில் நடைபெற்றன. அடிப்படை தடயவியல் சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை. எல்லாவித ஓட்டை ஒடிசல்களைக் காரணம் காட்டி சிலக் கருணை மிகுந்த பாகிஸ்தானிய மனித உரிமை வழக்கறிஞர்களின் உதவியுடன் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் வரைச் சென்றாலும் ஒவ்வொரு முறையும் மரண ஓலை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்டது. நூறுகோடி முகமுடைய இந்தியத் தேசத்திற்கு சரப்ஜித்தின் ஒருமுகம் தெரியவே இல்லை. முன்னாள் அதிபர் பர்வேஷ் முசாரஃபும் 2006 ஆம் ஆண்டு கருணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.சரப்ஜித் என்ற மன்ஜித்தின் முற்பிறவி பலனோ என்னவோ, இந்திய செய்தி ஊடகங்கள் மழைக்காளான்கள் போல 2000ம் ஆண்டுகளில் பெருக ஆரம்பித்தன. அவர்களுக்கு இந்த சரப்ஜித் விவகாரம் வசமாக கையில் சிக்கியது. சரப்ஜித்திற்கு எதிராக சாட்சி சொல்லிய ஒருவரை நேரிடையாகப்பேட்டி எடுத்து, அவர் காவல்துறையின் வற்புறுத்தலால் தான் சரப்ஜித்திற்கு எதிராக சாட்சி சொன்னதாகக் கூறியதை ஒளிபரப்பியது.


புது நூற்றாண்டில் இந்தியா ஊடகங்களால்தான் ஆளப்படப்போகிறது என்பதற்கு முன்னோட்டமாக சரப்ஜித்தின் விடயம் இந்திய அரசாங்கத்தின் உயர்தளம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அப்பாவி சரப்ஜித்திற்கும் நம்பிக்கைக் கீற்று தெரியத் தொடங்கியது. ஏறத்தாழ இதேக் காலக்கட்டத்தில்(2005-08) பாகிஸ்தானிய மனித நேய ஆர்வலர் அன்ஸர் பர்னே எடுத்த முன்னெடுப்புகளால், வேவுப்பார்க்க வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்கள் தனிமைச் சிறையில் வாடிய காஷ்மிர் சிங் என்பவர், அதிபர் முசாரஃபால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சரப்ஜித்தின் பொது மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பாக கேள்விகளும் விளக்கங்களும் கோரப்பட, அப்பொழுதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் இதுத் தொடர்பாக பாகிஸ்தானிய உயரதிகரிகளிடம் பேசி மனிதாபிமான அடிப்படையில் சரப்ஜித்தை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அன்றைய பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் ஊடக ஆலோசகர் ஹர்சரன் சிங் பெயின்ஸ் ஒரு படி மேலே சென்று, “ஒரு வேளை சரப்ஜித் குற்றவாளியாக இருந்தாலும் கூட இந்திய துணைக்கண்டத்தின் அமைதிக்காக பாகிஸ்தான் அவரைப் பெருந்தன்மையாக மன்னித்துவிடவேண்டும்” எனப் பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டார். சரப்ஜித்தின் குடும்பத்தினர் பாகிஸ்தான் சென்று சரப்ஜித்தைப் பார்க்க பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியது.

மின்மினிப் பூச்சியாக இருக்கும் இந்திய பாகிஸ்தானிய உறவில் மீண்டும் ஒரு துளிர்ப்பு ஏற்பட்டது. காஷ்மிர் சிங்கை முன்மாதிரியாகக் கொண்டு சரப்ஜித் விடுதலைச் செய்யப்படுவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்ததை உறுதி செய்யும் வகையில் பிரதமர் கிலானியும் மரணதண்டனையை காலவரையின்றி ஒத்திப்போட வைத்தார்.
வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் கசாப் பம்பாயை கசாப்பு கடையாக்க, வருங்கால மரணதண்டனைக் கைதியால் தன் மரணதண்டனை நிர்ணயிக்கப்படும் என சரப்ஜித் எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஏற்கனவே விடுதலை ஆன காஷ்மிர் சிங் , இந்திய எல்லையை அடைந்தவுடன், “ஆமாம் , நான் இந்திய உளவு ஆள்தான்” எனப் பெருமையடித்துக்கொள்ள, அவருக்கு ஏற்கனவே உதவி செய்து இருந்த அன்ஸர் பர்னே மிகப்பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஏற்கனவே ஒரு முறை சூடுபட்டுக்கொண்டதால், அன்ஸரும் சரப்ஜித்திற்கு உதவ முன்வரவில்லை.

சொர்க்கத்தின் எல்லையான வாகாவை சில வாரங்களில் கடந்து இரண்டு மகள்களையும் மனைவியையும் பார்க்கலாம் என எண்ணிக்கொண்டிருந்த சரப்ஜித் மீண்டும் நரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மரணதண்டனையை உடனடியாக நிறைவேற்றவேண்டும் எனத் தொடர்போராட்டங்கள் நடைபெற்றன. கசாப் கடல் கடந்து மாட்டிக்கொண்ட தருணத்தில் இருந்து நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தான் சரப்ஜித் வாழ்ந்து வருகின்றார். உலகத்திலேயே கொடுமையானது தனது உயிர் பழிக்குப்பழி என்ற வகையில் துருப்புச்சீட்டாக இருக்கிறது என்பதை உணரப்படும்பொழுதுதான்.

இந்தியாவின் வாதத்தின் படி அவர் எல்லையோரப் பாமரன் மன்ஜித்தாக இருந்துவிட்டுப் போகட்டும் அல்லது பாகிஸ்தானிய நீதிமன்ற தீர்ப்பின்படி தன்னாட்டு மக்களைக் கொன்ற தீவிரவாதி சரப்ஜித்தாக இருந்துவிட்டுப்போகட்டும்.எப்படி இருந்தாலும் இந்த 21 வருடங்களில் மரணத்தையும் விட கொடுமையான துன்பங்களையும் சித்ரவதைகளையும் ஒரு உண்மையான தீவிரவாதி அனுபவிப்பதைக்காட்டிலும் அதிகமாகவே சரப்ஜித் அனுபவித்துவிட்டார். கால் லிட்டர் சாரயத்திற்கு 21 வருடங்கள், மேலதிகமாக மரணதண்டனை என்பது மிகக் கொடுமையானதுதான். செய்த குற்றத்திற்கே இரு தண்டனைகள் நியாயம் ஆகது என்ற நிலையில் செய்யாத குற்றத்திற்கு இரண்டு கடும் தண்டனைகளை அனுபவிக்க வைப்பது மனிதத் தன்மையாகாது.

இயற்கையால் அளிக்கப்பட்ட உயிர் இயற்கையாக மட்டுமே பிரிதல் வேண்டும். வலுக்கட்டாயமாக எடுக்க தனக்கே உரிமை இல்லாத பொழுது, எந்தவொரு தனி மனிதனுக்கோ அரசாங்காத்திற்கோ கிடையாது. பாகிஸ்தானிய அரசாங்கம் பெருந்தன்மையாக இளமையின் பசுமையை சிறையில் தொலைத்த சரப்ஜித் சிங்கை மன்னித்து விடுதலை செய்து எஞ்சியுள்ள காலத்திலாவது குடும்பத்தினருடன் வாழ வழிவகை செய்யவேண்டும். இதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய ஊடகங்களும் தங்களால் ஆன முன்னெடுப்புகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், தனக்கு ஒரு குடம் மாமியாருக்கு ஒரு குடம் என பாரபட்சம் இல்லாமல் ஒட்டுமொத்த மரணதண்டனைக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.Sunday, July 17, 2011

கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு

1. ராஜேஷ் சௌகான் ஒரு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர். 90களில் அனில் கும்ப்ளே, வெங்கடபதி ராஜுவுடன் மற்றும் ஒரு மும்மூர்த்தியாய் வலம் வந்தவர். பாகிஸ்தானுக்கு எதிரான, கராச்சியில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சிக்ஸர் அடித்து வெற்றியை எளிதாக்கியதில் பலரால் நினைவுக்கூறப்படுபவர். வீடியோ இங்கே

கேள்வி என்னவெனில் இந்த ராஜேஷ் சௌகான் மற்றும் ஒரு நினைவுகூறத்தக்க ஒரு சாதனையையும் வைத்துள்ளார். அந்த சாதனைதான் என்ன?

2. கிரிக்கெட் ஆட்டத்தின் தாய்வீடான லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டங்களில் முதன் முதலில் இந்திய அணி சார்பில் சதம் அடித்தவர் வினு மன்காட். அதன் பின்னர் திலீப் வெங்சர்க்கார் மூன்று சதங்களும், குண்டப்பா விஸ்வநாத், அசாரூதின், கங்குலி, ரவி சாஸ்திரி ஆகியோர் சதம் அடித்துள்ளனர். இவர்களைத் தவிர லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்துள்ள மற்றும் ஒரு இந்திய வீரர் யார்?

3. தற்பொழுது திரைப்பட நடிகராகிவிட்ட இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சடகோபன் ரமேஷ் பன்னாட்டுப்போட்டிகளில் அடித்த ஒரே சிக்ஸரின் காணொளி கீழே இருக்கின்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சார்பாக அதிக ஓட்டங்கள் அடித்தவரும் இவரே ...
காணொளியைப் பார்த்து இருப்பீர்கள். இப்பொழுது கேள்வி என்னவெனில் , இந்த ஆட்டத்தின் முடிவு என்ன?

4. ககன் கோடா என்ற ஒருவர் இந்திய அணிக்காக இரண்டு ஒரு நாள் ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார். அதே போல ஆஸ்திரேலியாவிற்காக அந்தோனி ஸ்டுவர்ட் என்பவர் மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் ஆடி இருக்கிறார். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரு சுவாரசியமான ஒற்றுமை என்ன?

5. தற்பொழுது மூன்றாம் நடுவர்கள், தீர்ப்புகள் வழங்கும்பொழுது ஆட்டமிழப்பை சிவப்பு விளக்கிலும், தொடர்ந்து ஆடச்சொல்வதை பச்சை என்ற வகையிலும் அறிவிக்கின்றனர். ஆனால் மூன்றாம் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பத்தில் எந்த நிறத்தை ஆட்டமிழந்தார் என்பதை அறிவிக்கப் பயன்படுத்தினர்?

6. பொதுவாக கிரிக்கெட் மைதானங்களில் , எல்லைக்கோடு வரை எந்த கம்பங்களோட இடையூறோ இருக்காது. இதற்கு விதிவிலக்காக இரண்டு மைதானங்கள் மட்டும் எல்லைக்கோட்டிற்குள் மரங்கள் கொண்டிருக்கின்றன.அந்த மைதானங்களில் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளும் நடைபெற்று இருக்கின்றன. அந்த மைதானங்கள் எவை?

---


விடைகள்

1. ராஜேஷ் சௌகான் இந்தியாவுக்காக ஆடிய 21 டெஸ்ட் போட்டிகளில் எந்தபோட்டிகளிலும் , இந்திய அணி தோற்றது கிடையாது.
ராஜேஷ் சௌகான் ஒரு விரும்பத்தகாத சாதனையும் வைத்துள்ளார், இந்திய பந்து வீச்சாளர்களில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தவரும் இவர்தான். இலங்கைக்கு எதிரான 97 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 1 விக்கெட் எடுத்து 276 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். (http://www.espncricinfo.com/ci/engine/match/63762.html)

2. மட்டையடிக்க தெரியாதவர் என அனைவராலும் கேலி செய்யப்பட்ட அஜித் அகர்கார் தான் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்தவர். அதன் காணொளி கீழே3. லீசெஸ்டரில் நடைபெற்ற 99 உலகக்கோப்பை முதல் சுற்று ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது. ஹென்றி ஒலங்கா கடை ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/65200.html

காணொளி கீழே4. ககன் கோடாவும், அந்தோனி ஸ்டுவர்டும் தங்களது கடைசி ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப்பெற்றவர்கள். துரதிர்ஷ்டவசமாக அதன் பின்னர் அவர்கள் எந்தப்பன்னாட்டு போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புக்கிடைக்கவில்லை.

5. இன்றைய நிலைமைக்கு நேர் எதிராக பச்சை விளக்கு ஆட்டமிழப்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. காணொளி கீழே6. மரங்கள் இருக்கும் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள்

செயிண்ட் லாரன்ஸ் - காண்டர்பெர்ரி - கெண்ட் (http://www.espncricinfo.com/england/content/ground/56869.html)

சிட்டி ஓவல், பியத்தர்மரிட்ஸ்பெரி , தென்னாப்பிரிக்கா
http://www.espncricinfo.com/southafrica/content/ground/59151.html

இந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரும், கங்குலியும் நமீபியாவிற்கு எதிரான உலகக்கோப்பை ஒன்றில் சதமடித்துள்ளனர்.

லவ்வர்ஸ் - திரைப்பார்வை

அருமையான சினிமா க்விஸ் கேள்வியான ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து, ரஞ்சித் பாரோட், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து, சிவா மற்றும் கௌதம் இயக்கிய திரைப்படம் எது என்பதற்கான விடைதான் லவ்வர்ஸ் என்ற ஒரு காக்டெயில் சினிமா.

மாதவன் , ஜோதிகாவுடன், ஷோபனா, நாசர், சௌகார் ஜானகி, பிரதாப்போத்தன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருப்பதுடன் , தியா மிர்ஸா கௌரவ வேடத்தில், (அவர் இந்த வேடத்தில் நடித்திருப்பது அவருக்குத் தெரியுமா தெரியாதா எனத் தெரியவில்லை) நடித்திருக்கின்றார்.
பாதி மீந்து போன நம் வீட்டு சாம்பாரை, பக்கத்துவீட்டு கோழிக்குருமாவுடன் கலந்தால் என்ன கிடைக்குமோ அதுதான் இந்தப்படம். ஒரு படத்தின் கதையையே எடுக்கவா கோர்க்கவா என இயக்குனர்கள் திண்டாடும் இந்தக்காலக்கட்டத்தில், இரண்டுப்படங்களை, அதிலும் இரு வெவ்வேறு மொழிப்படங்களை ஒன்று சேர்த்து, (அதில் ஒன்று தமிழில் ஏற்கனவே சக்கைப்போடு போட்டப்படத்தின் மொழிமாற்று வடிவம்) , கடைசிவரை பார்க்க வைத்ததிலேயே இயக்குனர் பாரட்டப்படவேண்டியவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணவம்சியின் இயக்கத்தில் அந்தப்புரம் என பாதி மொழிமாற்றம், மறுபாதி பார்த்திபன் நடிப்பில் நேரடிப்படம் என வந்து சுமாரான வரவேற்பைப்பெற்றது.

ஆனால் லவ்வர்ஸ் பட இயக்குனர் ஒரு படி மேலேயே சென்றுவிட்டார். ஆர்.மாதவன் , ஜோதிகாவை வைத்து எடுத்திருந்த பாதிப்படத்தை, அப்படியே கைவிடாமல், இந்தி மின்னலேயின் தேர்ந்து எடுத்தக் காட்சிகளைக் கோர்த்து, (வசீகரா பாடலின் அசைவுகளுக்கு வேறு ஒரு மெட்டுடன்) ஒரு முழுநீளப்படமாகக் கொடுத்து விட்டார்.

மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் கட்டிடப்பொறியியல் படித்துவிட்டு சென்னையில் வேலைத்தேட வரும் மாதவனுக்கு , சார்லி , விற்பனை பிரதிநிதி வேலை வாங்கித் தருகிறார். மாதவனுக்கு பீட்ஸா கடையில் வேலைப்பார்க்கும் ஜோதிகாவின் காதலும், செஸ் ஆட்டத்தில் விருப்பம் உள்ள பிரதாப் போத்தனின் நட்பும் கிடைக்கிறது. இடையில் நாசரின் மகள் ஷோபனா , மற்றும் ஷோபனாவின் கணவர் கே.எஸ் ரவிக்குமாரைக் காட்டுகிறார்கள். நாசரினால் ஒரு திருட்டு வழக்கில் மாதவன் மாட்டிவிடப்பட , சிறைக்குச் சென்றுத் திரும்பும் மாதவன் , ஷோபனாவின் குழந்தையைக் கடத்துகிறார். அந்தக் குழந்தையை அவரிடம் இருந்து கே.எஸ்.ரவிக்குமார் கடத்துகிறார். இடையில் பாம்பாயில் இருந்து வரும் நண்பர் , மாதவனின் பழையக் கதையை சொல்கிறார். அதுதான் இந்தி மின்னலே. இந்தி தியா மிர்ஸாவின் கோபத்தினால் சென்னைக்கு வந்துவிடும் மாதவனின் காதலை மீண்டும் சேர்த்து வைக்க ஜோதிகா முடிவு எடுக்கிறார். தனது சொத்துக்களை விற்றுவிட்டு , மாதவனுக்கு உதவி செய்து அமெரிக்கா போய்விடுகிறார். இது எல்லாவற்றையும் துண்டு காட்சிகளில், பின்குரலின் மூலம் படத்தில் சொல்லிவிடுகிறார்கள். கடைசிக்காட்சியில் தியா மிர்ஸாவுடன் மாதவன் சேர்ந்து விடுகிறார்.


படத்தில் இருந்து அழகிய கொலைகாரியே பாடல் காட்சி கீழே

உண்மையாக எடுக்கப்பட வேண்டிய படம் ஏன் கைவிடப்பட்டதென தெரியவில்லை. கோழிக்குருமா கலந்த சாம்பார் என்றாலும், ஒட்டு மொத்தமாக படத்தைக் கைவிடாமல் இரண்டுக் கதைகளைச் சேர்த்து ஏதோ ஒன்றைக் கொடுத்த இயக்குனரைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஐயா திரைப்படத்தில், வடிவேலு அருணாசலம் படத்தின் இறுதிக்காட்சிக்கு, பாட்ஷா படத்தின் இறுதிக்காட்சியை வைத்து ஒப்பேற்றுவதைப்போல இந்தப் படத்தின் தயாரிப்பு இயக்கம் இருந்தாலும், ஒரு கைவிடப்பட்ட படத்தை முயற்சி செய்து வெளிக்கொண்டு வந்ததற்காகவே இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாரட்டலாம்.

அதிவேக இணைய இணைப்பு இருப்பவர்கள், வேறு எதுவும் முக்கியமாக வேலை இல்லாத பட்சத்தில் , இணையத்தில் தேடி இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

Tuesday, May 17, 2011

புத்தர் சிலையும் சிலத் துளிகள் ரத்தமும் - சிறுகதை

கண்ணில் குருதி வழிந்தோடி வானுயர்ந்து இருக்கும் புத்தர் சிலையை, மண்ணோடு மண்ணாக்க காடு மேடு எல்லாம் தாண்டி ஓடி வருகின்றேன். என்னுடன் ஓடிவருபவர்கள் பிண்டங்களாய் சிதறி விழுந்தாலும் ரத்தசகதியில் நான் மட்டும் ஓடிவருகின்றேன். இதோ இன்னும் சில அடிதூரம்தான்.புத்தர் சிலையை தகர்த்து எனது சோழதேசத்து புலிக்கொடியை நடப்போகின்றேன். என்ன ஒரு முரண், பிடித்தமான புத்தரின் சிலை கீழேவிழுந்து சுக்குநூறாக விழுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கின்றதே!!. புலிக்கொடி பட்டொளி வீசிப்பறப்பதை ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில் “ராஜ ராஜ சோழன் நான், எனை ஆளும் காதல்தேசம் நீ ” பாடல் கனவைக் கலைத்தது. கீர்த்தனா தான் கூப்பிடுகிறாள். நேரத்தைப் பார்த்தேன் சுவீடன் நேரம் விடியற்காலை 3 மணி. இந்தியா மூன்றரை மணி நேரம் முன்னதாக இருக்கின்றது.கீர்த்தனாவிற்கும் எனக்கும் ஒரு உடன்பாடு என்னவெனில் உயிர்ப்போகின்ற விசயத்தைத் தவிர வேறு எந்த விசயத்திற்காகவும் அதிகாலை நேர உறக்கத்தை கலைக்கும் விதத்தில் தொலைபேசியில் அழைக்கக்கூடாது என்பதுதான். என்ன பிரச்சினையோ என யோசித்துக்கொண்டே “குட் மார்னிங் அம்மு' என்றேன்.


கார்த்தி, இப்போதாண்டா பேப்பர்ல பார்த்தேன், சுட்டுக்கொன்னுட்டாங்கன்னு போட்டு இருக்கு,கவலையா இருந்துச்சுடா, அதுதான் கூப்பிட்டேன்'

அம்மு, டோண்ட் வொர்ரி, அவரை இதுவரைக்கும் ஏகப்பட்ட தடவை கொன்னு இருக்காங்க,கடைசியா சுனாமி வந்தப்பக்கூட ஒரு தடவை செத்துப்போனாரு..”


கடந்த ஒருவார காலமாக போர்க்கள செய்திகளை இணையத்தில் படிக்கும் போது மனதுக்குப்பாரமாகவே இருக்கிறது. எது நடக்கக்கூடாது என்றெல்லாம் மனது தவிக்கின்றதோ அவைப்பற்றிய செய்திகள் தாம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இரண்டு நாளுக்கு முன்னர் இவைப்பற்றி நான் கீர்த்தனாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது


கார்த்தி, நீ அங்கே படிக்கப்போயிருக்க, படிக்கிற வேலையை விட்டுட்டு சும்மா, தமிழ் , இனம்,போராட்டம் அப்படி இப்படின்னு எதுனாச்சும் உளறிக்கிட்டு இருந்தீன்னா, அப்ரப்டா உன்கிட்ட பேசுறதை நிறுத்திடுவேன்”

என சொன்னவள் இப்பொழுது அவளேக்கூப்பிட்டு கேட்பது வியப்பாய் இருந்தது.


அம்மு, அவர் உலகத்தில எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்வார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு”


சரி கார்த்தி, நான் ஆபிஸுக்கு ரெடியாகனும், உன்னைத் தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி”


பரவால்ல அம்மு, ஹேவ் எ நைஸ் டே”

எனச்சொல்லிவிட்டு மனதைப் பிசையும் வலியுடன் மடிக்கணினியை திறந்து வழக்கமாக செய்திவாசிக்கும் இணையதளங்கள் எதிலும் உள்ளேப் புகாமல், இன்றைக்கான பாட அட்டவணையை மட்டும் குறித்துக்கொண்டு மடிக்கணினியை அணைத்தேன்.

காலை எட்டு மணிக்கே முதல் பாடவேளை, கணிப் பொறியியலில் எப்படி ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தொடர்ந்து நான்குமணி நேரப்பாடம். கட்டாய வகுப்பு கிடையாது என்றாலும் வீட்டில் இருந்தால் செய்திகளைப் படித்து வருத்தங்கள் மேலும் அதிகமாகும் என்பதால் கல்லூரிக்கு கிளம்பினேன். ப்ரூன்னஸ்பார்க் காட்டுவழியே வாடைக்காற்று முகத்தில் அடிக்க பழைய நினைவுகள் வந்தன.


ஒரு கோடைவிடுமுறை தினத்தன்று வீட்டின் நடுவே பெரியாருக்கு அருகில் மாட்டி இருந்த அவரின் புகைப்படத்தை என் அப்பா அகற்றியபோது , யாரோ திரையுலகக் கதாநாயகன் என நினைத்துக்கொண்டிருந்தேன். பின்னொரு நாள் வரலாற்று நாயகன் மீசையின்றி எம்மொழியில் பன்னாட்டு ஊடகங்கள் முன்னிலையில் பேசும் நேரலையைக் கண்டு கொண்டிருக்கையில் ”அப்பா,போட்டோவை திரும்ப ஹால்ல வச்சா என்ன?”


எனக்கும் ஆசைதான்.. ஆனால் அனாவசிய பொல்லாப்பு வேண்டாமுன்னுதான் வைக்கல” என வருத்தத்தோடு அப்பா சொன்ன பதிலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பின்பு , முதன் முறையாக சுவீடன் வரும்பொழுது ஃபிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இணைப்பு விமானத்திற்காக காத்திருக்கையில் அருகில் இருந்த டேனிஷ் காரர், நான் தமிழ் பேசுபவன் என்று தெரிந்தவுடன் ‘டைகர்' எனச்சொன்னபோது மனதுக்குள் பெருமிதமாக இருந்தது. மனதுக்குள் ஆதரிப்பதை எந்த தேசத்தின் சட்டதிட்டங்களும் கட்டுப்படுத்த முடியாதல்லவா!!யோசித்துக்கொண்டே நடக்கும்பொழுது லேசாகப் பசி எடுத்தது.


வகுப்பு ஆரம்பிக்க 15 நிமிடங்கள் இருந்தன. நிசந்த வோட இந்திய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு செல்ல நேரம் இருக்கும். நிசந்த வோட முழுப்பெயர் நிசந்த விக்கிரமசிங்கே, போர்க்காலத்தில் அகதி என்ற போர்வையில் சுவீடன் வந்தவர். இந்திய உணவகம் என்ற பெயரில் அரிசி சாதம், சப்பாத்தி போன்ற வகையறாக்களை இங்கு சுவீடிஷ் மக்களுக்கு ஏற்ற வகையில் காரம் குறைவாகப் பரிமாறி உணவகம் நடத்துபவர். எங்கள் குடும்பத்திலேயே சுமாராக சமைக்கும் அத்தையின் சாப்பாட்டை விட சுவைக் குறைவாக இருந்தாலும் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. உள்ளே நுழைந்ததும் 'வாங்க கார்த்தி, இன்றைக்கு எல்லோருக்கும் இனிப்பு இலவசம்”' என்று சுவீடீஷ் மொழியில் சொன்னபொழுது விசயம் புரிந்து விட்டது. நிசந்த விற்கு தமிழ் ஓரளவுக்குத் தெரியும்.நான் தமிழ் பேசுபவன் என்றுத் தெரிந்தாலும் தமிழில் என்னிடம் பேசமாட்டார். ஆரம்பத்தில் ஏதோ இவரின் உணவகத்தில் அன்னதானத்தில் வந்து சாப்பிடுவதைப்போல நடந்து கொண்டதை நிறுத்தியது அவர் கார்ல்ஸ்க்ரோனா இரவு மதுவிருந்து விடுதியில் எங்களிடம் ஏற்கனவே வம்பு செய்து இருந்த இரண்டு அரபு இளைஞர்களிடம் அடிவாங்கிக் கொண்டிருந்தபோது நானும் அன்பரசனும் காப்பற்றியபின்னர்தான்.


என்னப்பா இது, அவனும் அகதி , நானும் அகதி, இந்த நாய்ங்க என்னை அடிக்குதுங்க' என நீண்ட நேரம் உளறிக்கொண்டிருந்தார்.


'இனிப்புக்கான காரணத்தை ஊகித்துக்கொண்ட நான் “ஹே- டோ”' எனக்கூறிவிட்டு வெளியேறிய பொழுது நிசந்தா வேகமாக வந்து 'இன்று மாலை என் குழந்தைக்குப் பிறந்த நாள், நீ கண்டிப்பாக வரவேண்டும்”' என்றார் திரும்பவும் சுவிடீஷ் மொழியில்.


நிச்சயமாக” ' என நான் ஆங்கிலத்தில் பதிலளித்துவிட்டு வகுப்புக்கு வந்தேன். வகுப்பில் மனம் பாடத்தில் செல்லவில்லை. பசியும் வயிற்றைக் கிள்ளியது. எங்கோ நடக்கும் விசயத்திற்கு நிசந்தவை நொந்து கொள்வதில் என்ன பயன். காந்தியை மானசீகமாக ஏற்றுக்கொள்ளும் நான் இப்படி நடந்து இருந்திருக்கக்கூடாதே .. வெறுப்பு என்பது முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய விசயம் அல்லவா!! இல்லை நான் காட்டியது வெறுப்பு இல்லை. எதிர்ப்புக் கூட கிடையாது. இயலாமை.குறைந்த பட்சம் என் 50 க்ரோனர் என் மக்களைக் கொன்றுபோடுகின்ற தேசத்திற்குப்போக வேண்டாமே!! இனி நிசந்த வின் உணவகத்தில் சாப்பிடக்கூடாது என முடிவு செய்தேன். அதே சமயம் நிசந்த வின் பழக்கத்தில் எந்த வித மாறுதலும் காட்டக்கூடாது. இன்று மாலை கண்டிப்பாக அவரின் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ச் செல்ல வேண்டும். வகுப்பு முடிந்த பின்னர் மூலைக்கு ஒன்றாக ரோன்னிபே நகரத்தில் இருக்கும் அரபு பீட்சா உணவகத்தில் ஒரு பீட்சாவை விழுங்கிவிட்டு அருகில் இருந்த கடையில் குழந்தைக்கு என்ன பரிசுப்பொருள் வாங்கலாம் எனத் தேடினேன். வெண்ணிறத்தில் அழகான புத்தர் சிலை இருந்தது. அட ,இடதுக்கண்ணில் சிறியதாக சிவப்புக்கோடு கீழ் நோக்கி.. பிடித்திருந்ததால் 100 க்ரோனர் கொடுத்து வாங்கிக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்றேன். எனது புத்தர் சிலைப் பரிசை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட நிசந்தவின் மகள் அதை நிசந்த விடம் கொடுத்தாள். கண்ணில் இருந்த சிவப்புக் கோட்டை கையால் அழித்துவிட்டு என்னைப் பார்த்து “' கார்த்தி இதில் மட்டும் அல்ல, எங்கள் நாட்டிலும் சிவப்பு என்பது இனிக்கிடையாது ” ‘ 'என்றார்.

அது சாதாரணக் கோடு அல்ல , குருதியில் எழுதப்பட்ட வரலாறு, வரலாறுகள் திரும்புவதை பலமுறைப் பார்த்திருக்கின்றோமே' எனச் சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லாமல் குழந்தையை வாழ்த்திவிட்டு ஏதும் சாப்பிடாமல் இல்லம் திரும்பினேன்.


ராஜராஜ சோழன் நான், எனை ஆளும் காதல் தேசம் நீதான்”' என கீர்த்தனாவின் அழைப்பு வர “அம்மு சொல்லுடா!!”

'கார்த்தி , நமக்கு ஃபர்ஸ்ட் பையன் பிறந்தா அர்ஜுன்னு மட்டும் வைக்க வேண்டாம் , அவர் பெயரையும் சேர்த்து அர்ஜுன் பிரபாகரன் என வைக்கலாம் ..... ஒகேவா!! ”

-------

இந்தக் கதை தமிழோவியம் இணைய இதழில் (ஆகஸ்ட் 6, 2009) வெளிவந்தது. தமிழோவியம் இணைய இதழைப் பார்வையிட இங்கேச் சொடுக்கவும்