Tuesday, November 23, 2010

கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு

1. ஹான்ஸி குரோனியே, உஜேஷ் ராஞ்சோட், ருவான் கல்பகே, மார்க் எல்ஹாம், நீல் ஜான்ஸன், ஜேக்கப் ஓரம், மோண்டி பனேசர், கேமரூன் வைட், பீட்டர் சிடில், பீட்டர் ஜார்ஜ் சமீபத்தில் ஆண்டி மெக்கே இவர்கள் அனைவரும் டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி பந்து வீசவும் செய்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பட்சம் ஒரு விக்கெட்டாவது எடுத்தவர்கள். இவற்றைத் தவிர இவர்களுக்குள்ளாக வேறொரு ஒற்றுமை உள்ளது , அது என்ன?

2.1998 ஆம் ஆண்டு ஷார்ஜா போட்டிகளில் ஒன்றில், வெற்றி இலக்கு 50 ஓவர்களில் 285, ஆனால் இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற 46 ஓவர்களில் 237, மணற்புயலுக்கு நடுவே சுழன்று சுழன்று சச்சின் டெண்டுல்கர் காஸ்ப்ரோவிக்ஸையும் ஷான் வார்னேயையும் அடித்து நொறுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இலக்கை அடைந்த பின்னர், வெற்றியை நோக்கி நகரும் முயற்சியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். கேள்வி டெண்டுல்கரைப் பற்றியது அல்ல, இந்த ஆட்டத்தில் டெண்டுல்கருக்கு உறுதுணையாக இணையாட்டமாக நூறு ஓட்டங்களுக்கு மேல் எடுக்க துணையாக ஆடியவர் யார்?

3. வி.வி.எஸ் லக்‌ஷ்மணன் ஒரு நாள் ஆட்டங்களில் ஆறு சதங்கள் அடித்துள்ளார். அவற்றில் நான்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரானவை. டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவரும் இவர் தான். இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் 25 சதங்கள் 12 பேரின் சார்பில் அடிக்கப்பட்டுள்ளன. இந்த 12 நபர்களில் ஒருவர் இன்று உயிருடன் இல்லை. இந்த நபர் யார்?


4. முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் ராமன் லம்பா, 86 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித்தொடரில் அறிமுக வீரராக களமிறங்கினார். இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் ஆகியவற்றுடன் இந்தியா தொடரை வெல்ல காரணமாக இருந்ததுடன் , ஆட்டத்தொடர் நாயகன் விருதையும் பெற்றார். இவரும் ஸ்ரீகாந்தும் இணையாட்டமாக ஆடிய ஆட்டங்கள் இன்றைய சேவக் - டெண்டுல்கர் இணைக்கு முன்னோடியாக அமைந்தவை. இன்றைய தோனி அடிக்கும் அடியைப்போல அன்றே ஆடிய ராமன் லம்பா அதன் பின் வந்த தொடர்களில் சோபிக்காததால் கழட்டிவிடப்பட்டார். ராமன் லம்பாவைப்போல, 99 ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தொடர் ஒன்றில் ஆட்டத்தொடர் நாயகன் விருதைப்பெற்றவர் பின்னாளில் காணாமல் போன கீழ்கண்ட புகைப்படத்தில் இருக்கு ஆட்டக்காரர் யார்?

5. பாகிஸ்தான் அணிக்கு எப்படி புற்றீசல் போல வேகப்பந்துவீச்சாளார்கள் வருகின்றனரோ அதுபோல இந்திய அணியைப்பொருத்தவரை, சுழற்பந்துவீச்சாளர்கள், மழைக்காளான்கள் போல அடிக்கடி மின்னி மறைவார்கள். 90 களின் இறுதியில் ஏனோதானோவென ஆடிக்கொண்டிருந்த இந்திய அணி அவ்வப்பொழுது வியத்தகு வெற்றிகளை ஈட்டும். (பின்னோக்கிப் பார்க்கும்பொழுது அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டாலும்) டெண்டுல்கர், அசாரூதின் இல்லாத சமயங்களில் சுறுசுறுப்பாக வழி நடத்திய அஜய் ஜடேஜாவின் தலைமையில் ”சுள்ளான்” இந்திய அணி, பலமான தென்னாப்பிரிக்கா அணியை 117 ஓட்டங்களுக்கு, கென்யா தலைநகர் நைரோபியின் ஜிம்கானா மைதானத்தில் சுருட்டியது. அறிமுகவீரர் விஜய் பரத்வாஜ் 10 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து தென்னாப்பிரிக்க அணியில் அதிக ஓட்டங்களை எடுத்த காலிஸை வீழ்த்தினார். இன்னொரு சுழற்பந்துவீச்சாளார் நிகில் சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணியின் அனுபவமின்மையைக் கருத்தில் கொண்டால் இதுவே பெரிய விசயமாக இருக்கும்பொழுது, மற்றொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளர் 10 ஓவர்கள் வீசி 6 மெயிடன்களுடன் வெறும் ஆறு ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் யார்?

6. இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களை தான் ஆடும் ஆட்டங்களில் எல்லாம் சுளுக்கு எடுப்பதால், இந்திய அணியில் பல சமயங்களில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுவதை சவுரவ் கங்குலி விரும்பியதில்லை. கங்குலி இந்திய அணித்தலைவராக இருந்தபொழுது , ஓரங்கட்டப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முரளி கார்த்திக் மற்றும் சுனில் ஜோஷி. இருவருமே ஓரளவிற்கு நல்ல மட்டையாளர்களும் கூட. முரண் நகை என்னவெனில் அணித்தலைவராக கங்குலி தான் முதன்முதலில் களமிறங்கிய டெஸ்ட் ஆட்டத்தை ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் தோல்வியில் இருந்து காப்பாற்றியவர் சுனில் ஜோஷி. நைட் வாட்ச்மேனாக களமிறங்கி முரளி கார்த்திக்கும் தன் பங்கிற்கு 43 ரன்கள் எடுத்தார். ராமன் லம்பா, விவிஎஸ் லக்‌ஷ்மண் போல ஆஸ்திரேலியா அணிக்கெதிராக என்றால் முரளி கார்த்திக்கும் சிறப்பாக விளையாடுவார். ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஆட்டத்திறனில் கலக்கி, மும்பை வான்கடே மைதானத்தில் தலா ஒரு டெஸ்ட் , ஒரு, ஒருநாள் ஆட்டம் ஆகியனவற்றை வெல்ல உதவிய முரளி கார்த்திக்கிற்கு வேறொரு சிறப்பம்சம் இருக்கின்றது.(விடைக்கான உதவி : தனது ஒரே ஒரு டி20 பன்னாட்டுப்போட்டியை மும்பை வான்கடேயில் ஆடினார்)

விடைகள்

1. அனைவருக்கும் சச்சின் டெண்டுல்கர்தான், தங்களின் முதல் டெஸ்ட் விக்கெட்.

2.வி.வி.எஸ் லக்‌ஷ்மண் , ஒரு பக்கம் டெண்டுல்கர் அடித்தாடிக்கொண்டிருந்தாலும், தனக்கு வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் ஒரு ஓட்டம் எடுத்து மறுமுனைக்கு வந்து , டெண்டுல்கருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்துக்கொண்டே வந்தார். அந்த ஆட்டம் அவருக்கும் வெறும் மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்.

3. ராமன் லம்பா. பங்களாதேஷில் உள்ளூர் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தபொழுது , கிரிக்கெட் பந்து தலையில் பட்டு , அதன் தொடர்ச்சியாக மரணம் அடைந்தார்.

4. விஜய் பரத்வாஜ்.

5. சுனில் ஜோஷி

6. ஐபில் , ஸ்டான்ஃபோர்ட் டி20 இரண்டிலும் முதல் போட்டித்தொடரிலேயே பங்கேற்ற ஒரே வீரர் உலகளாவிய பெருமை முரளி கார்த்திக்கிற்கு உண்டு.


முதல் ஐந்து கேள்விகளின் விடைகள் அதற்கடுத்த கேள்விகளில் வரும்படியான Pattern இல் கேள்விகள் அமையப்பெற்று இருக்கின்றது.

Saturday, November 20, 2010

கல்கத்தா விஸ்வநாதன் - மும்மொழிகள் , பலப்பரிமாணங்கள்
தமிழ் திரைப்படங்களில் நாடகத்தனமாக மேல்தட்டு மக்களின் உடல் மொழிகளை திரையில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில், ஆங்கில உச்சரிப்புகளாகட்டும் , மேனாட்டு பாவனைகளை வெளிப்படுத்துவதாகட்டும் இருவர் தனித்து நினைவுக்கு வருவார்கள் ஒருவர் வீணை எஸ்.பாலசந்தர். மற்றொருவர் கல்கத்தா விஸ்வநாதன் என தமிழ்ப்பட உலகில் அறியப்படும் பேராசிரியர் என்.விஸ்வநாதன். திரையுலகில் இருந்தாலும் திரையுலகிற்கு அப்பாற்பட்டு வேறு துறைகளில் பிரகாசித்தவர்கள், அதுவும் தமிழ்த்திரை வரலாற்றில் மிகவும் குறைவு. சமீபத்தில் 90 களில் கனவு நாயகனாக இருந்த அரவிந்த்சுவாமி பின்னாளில் தகவல் தொழில்நுட்ப துறையில் பிரகாசித்தார். பணக்காரத் தோரணை நடிப்பில் கல்கத்தா விஸ்வநாதனுக்கு முன்னோடியான எஸ்.பாலசந்தர் வீணை மீட்டுவதில் சக்கரவர்த்தியாய் ஆகி, வீணை எஸ்.பாலசந்தர் என்ற அடையாளத்துடனேயே இன்று நினைவு கூறப்படுகிறார். கல்கத்தா விஸ்வநாதன் பிரகாசித்ததோ கல்வித்துறையில், ஆம் கல்கத்தாவின் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித சேவியர் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்.விஸ்வநாதன். லக்‌ஷ்மி மித்தல் புனித சேவியர் கல்லூரியில் படித்தபொழுது அவரின் ஆங்கில ஆசிரியர் என்.விஸ்வநாதன் தானாம்.திராவிடமொழி திரைப்படங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பிரபலமாய் இருப்பதில் பெரிய வியப்பில்லை. உதாரணமாக எஸ்.வி.ரங்காராவ் தெலுங்கிலும் மதிக்கப்படும் அளவிற்கு தமிழிலும் அறியப்படுகிறார். மலையாளத்தைபொருத்தவரை பிரேம் நசீர், பின்னர் மம்மூட்டி, இன்று பிரித்விராஜ். கன்னட மொழி திரைப்படங்களை எடுத்துக் கொண்டோமானால் ரமேஷ் அரவிந்த் , மோகன் (கன்னடத்தில் கோகிலா மோகன் என அறியப்படுகிறார்) ஆகிய ஒரு சிலர்தான். ஆனால் கிட்டத்தட்ட இரு வேறு துருவங்களாக இருக்கும் வங்காள மொழி திரைத்துறை, தமிழ் திரையுலகம் ஆகியன இரண்டிலும் பிரபலமாக இருந்தவர் என்.விஸ்வநாதன்.

”அந்தநாளில்” இவர் நடித்து இருந்தால் கல்கத்தா விஸ்வநாதனாக இல்லாமல் வேலூர் விஸ்வநாதனாகவே தமிழில் நிரந்தர இடம் பிடித்து இருப்பார். முதலில் தவறிய திரை அறிமுகம் மும்மொழிப்படமான “ரத்ன தீபம்” படத்தில் தேவகி குமார் போஸ் என்பவரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.வேலூரில் பிறந்த இவர், கல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்ததனால் புனித சேவியர் கல்லூரியில் ஆங்கிலம் பயின்று கல்வியாளராய் ஆகி கல்கத்தா விஸ்வநாதனாய் தமிழ் உலகிற்கு வந்தார். இவரின் பெயர் தெரியாதவர்கள் கூட மூன்று முடிச்சில் கிட்டத்தட்ட மூன்றாவது கதாநாயகனாக , ரஜினிகாந்தின் அப்பாவாக ஸ்ரீதேவியின் கணவனாக நடித்திருப்பது நினைவிருக்கும். மூன்று முடிச்சு படத்தில் நடித்திருப்பவர்களின் பெயர்கள் போடப்படும்பொழுது பேராசிரியர்.N.விஸ்வநாத் எனக்குறிப்பிடப்படுகிறது.
ரஜினிகாந்தின் சிகரெட் பிடிக்கும் முறை எத்தனை ஸ்டைலாக இருக்கிறதோ , அத்தனை ஸ்டைலாக இவரது பைப் சிகரெட் பிடிக்கும் விதமும் இருக்கும். தமிழில் இவர் கடைசியாக பாபா திரைப்படத்திலும் ரஜினிகாந்தின் தந்தையாக நடித்தார்.நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரான விஸ்வநாதன், சிவாஜி கணேசனுடன் வெள்ளைரோஜா, கவரிமான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.பாலுமகேந்திராவின் மூடுபனியிலும் விஸ்வநாதன் நடித்துள்ளார். அரபிந்த் கோஷு வங்காளத்திற்கும் தமிழகத்திற்கும் இணைப்புப் பாலம் ஆனதைப்போல, தமிழ் கலையுலகிற்கும் வங்காள கலையுலகிற்குமான சந்திப்புப் புள்ளி ஆனார். வங்காள நாடக, திரையுலகில் பெரிதும் மதிக்கப்படும் நடிகராக மட்டும் அல்லாமல் , நாடக , திரைப்பட கதாசிரியராகவும் விளங்கிய விஸ்வநாதனின் மகன் அசோக் விஸ்வநாதன் வங்காள மொழியில் குறிப்பிடத்தகுந்த முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.

சத்யஜித்ரே, மிருனாள் சென், பஹாரி சன்யால், உத்பல் தத், சோபி பிஸ்வாஸ் ஆகியோரின் விருப்பத் தேர்வு நடிகராக விளங்கிய விஸ்வநாதன் , சத்யஜித் ரேயின் முதல் வண்ணப்படமும் ,சத்யஜித் ரேயின் முதல் சொந்த கதை, திரைக்கதை முயற்சியுமான “கஞ்சன்ஜங்கா” திரைப்படத்தில் மேனாட்டில் கல்வி கற்ற கனவானாக நடித்த பானர்ஜி கதாபத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அவரின் அளவான நடிப்பைக் கீழ்காணும் காணொளியில் காணலாம்.பல்கலை கழக வளாகத்தில், பிரிட்டிஷ் உச்சரிப்பு, நடை உடை பாவனைகளுக்காகவே வெகுவாக மாணவர்களால் விரும்பப்பட்டதுடன் மட்டுமல்லாமல், கல்வித்துறை, நாடகம், இரு வேறு திரையுலகங்கள் என தனது தடத்தை திடமாகப் பதித்த பேராசிரியர் என்.விஸ்வநாதன் 17, நவம்பர் 2010 அன்று மாரடைப்பால் காலமானர். அன்னாருக்கு வயது 81. கல்கத்தா விஸ்வநாதன் கடைசியாக நடித்தப்படம் கும்ஸுதா , மகன் அசோக் விஸ்வநாதனின் இயக்கத்தில் இந்தி மொழியில் வெளிவந்த இப்படத்திற்கு கதை, திரைக்கதை திரு.விஸ்வநாதன். கும்ஸுதா என்பதன் தமிழாக்கம் இழப்பு. பேராசிரியர் விஸ்வநாதனின் மறைவு நிச்சயம் வங்காள நாடக, திரையுலகிற்கு மட்டும் அல்ல, தமிழ் திரைப்பட உலகிற்கும் ஒரு இழப்புதான். அவரின் ஆன்மா நிம்மதி அடையட்டும்.

Friday, November 12, 2010

புகலிடம் - சிறுகதை

என்னுடைய பாகிஸ்தானிய கல்லூரித் தோழன் ஷாகித் அலி எதிரே வருவதைப் பார்த்த பின்னர், அதுவரை, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் செல்லும் கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் அடுத்த சில நிமிடங்களைத் தொலைக்க, நோக்கிக்கொண்டிருந்த சுவிடீஷ் மங்கையின் மேல் இருந்த பார்வையை எடுத்துவிட்டு,ஷாகித்திற்குப் புன்னகையைத் தந்தேன்.

மதம் அபின் மட்டும் அல்ல, அது ஒரு வைரஸ், மனித குலத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய், நோயின் பக்கவிளைவுகள் கடவுள்கள் என்று எழுதி இருந்த பேஸ்புக் முகப்பு செய்திக்கு, கோப வார்த்தைகளில் ஆனாலும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும்படியான எதிர் வாதங்களைப்புரிந்தவன் என்பதனால் ஷாகித்தின் மேல் எனக்கு மரியாதை உண்டு.

அவனைச் சந்திக்கும்பொழுதெல்லாம் ஏதாவது சீண்டும் விதமாக கேள்வி கேட்டு என் குசும்புத்தனங்களை வெளிப்படுத்தினாலும், நான் எப்படி வெள்ளைக்கார ஐரோப்பியர்களின், இந்தியாவைப் பற்றிய சில்லறைத் தனமான கேள்விகளுக்கு தெளிவாகப் பதிலளிக்க முயற்சிப்பேனோ, அதேபோல் அவனும் தன்னாட்டு பெருமையை நிலைநிறுத்தும் விதத்தில் சில புள்ளிவிபரங்களுடன் பதில் தருவான். அவன் இந்தியாவைப் பற்றி கோபமாக பதிலளித்தது ஒரே ஒரு முறைதான்.

”ஷாகித், பாகிஸ்தானே தண்ணீரில் மிதக்கிறது போல, அறுபது வருடங்களில் உள்கட்டமைப்பை சரியா கொண்டு வந்திருக்கலாமே” என்றேன் ஆங்கிலத்தில்.

”நீங்கள் நதி நீர் பயங்கரவாதத்தை நிறுத்தினாலே நாங்கள் பிழைத்துக்கொள்வோம், நீங்கள் பஹ்லிஹர் அணையைத் திறந்து விட்டு விட்டீர்கள், நாங்கள் மிதக்கிறோம், கேட்கும்பொழுது கொடுக்காதீர்கள். எங்கள் வெள்ளத்திற்கு காரணம் நீங்கள் தான் ”

அதன் பின்னர் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான அரசியலையும் கடவுளையும் பற்றி பேசுவதில்லை. கிரிக்கெட் மதம் ஆனால் நானும் ஆன்மீகவாதியாக மாறுவதில் பிரச்சினை இல்லை என்பதால் கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் அவ்வப்பொழுது பேசுவேன்.”பாவம், ஜூல்கர்னைன் ஹைதர், நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன், பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என நினைத்தேன். அவன் இப்படி ஓய்வுபெற்றது துரதிர்ஷ்டம்”

“அவன் ஒரு துரோகி, தேசத்துரோகி. பிரச்சினை என்றால் சொந்த நாட்டிற்கு வரவேண்டியதுதானே” சில உருது கெட்ட வார்த்தைகளை இடையில் சேர்த்து ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.

“சிறிய வயது, கொல்லப்படுவோம் எனப் பயப்படுமொழுது பாதுகாப்பான நாட்டிற்குப் போவதுதானே சரி. பிரிட்டிஷ் அரசாங்கம் எப்பொழுதுமே மனித உரிமைகளின் பாதுகாவலர்கள், குடியுரிமை கிடைத்துவிடும். எதிர்காலத்தில் ஹைதர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பு இருக்கிறது ”

“உங்களின் ஜம்மு காஷ்மீரை விட, இந்தியாவின் கிழக்கு, வட கிழக்கு மாநிலங்களை விட எங்கள் நாட்டு மக்களுக்குப் பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகம்” உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

ஜனகண மன என ரட்சகன் நாகார்ஜுன் போல நரம்புகள் புடைத்தாலும், ரயில் சரியான நேரத்தில் வந்துவிட்டபடியால் ஷாகித் சென்ற நேர் எதிர் திசை பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஷாகித்தையும் ஜனகன மன வையும் மறந்துவிட்டு நாளை சமர்ப்பிக்கவிருக்கும், டென்மார்க் நாட்டிற்கான வேலை வாய்ப்புக்கான அனுமதி விண்ணப்பத்தையும் அதற்கான சான்றிதழ் நகல்களையும் சரிப்பார்க்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன்கார்டு மாதிரியானது.தொடர்ந்து வேலை கிடைத்து நிரந்தரக் குடியுரிமைக் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. உலகத்திலேயே அதிகத் தரத்தில் சம்பளம், பாதுகாப்பான வாழ்வு என எனது அடுத்தத் தலைமுறையை நிம்மதியாக வாழ வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்கிப்போனேன்.

மறுநாள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பொழுது, பரிச்சயமான குரல் கேட்பதை உணர்ந்து திரும்பிப்பார்த்தேன், தூரத்தில் ஷாகித் அலி கிரீன்கார்டு விண்ணப்பப் படிவத்தின் சில சந்தேகங்களை அங்கு இருக்கும் அலுவலர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அந்த வெள்ளைக்கார அலுவலர், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் அவனுக்கு உதவிக்கொண்டிருந்தார்.

Thursday, November 04, 2010

காப்பி டம்ளர்கள் - சிறுகதை

மூன்று வருடங்கள் என்பது குறுகிய காலமாக இருந்தாலும், காதலில் தோற்றுப்போனவனுக்கு முப்பது வருடங்கள் போலத் தெரியும். இதேத் தெரு, இதே மார்கழி மாத குளிர்கால நாட்கள், இதே போல ஐந்து மணிக்கே இருட்டிய மாலைப்பொழுதுகளில் அம்முவுடன் எத்தனை சண்டைகள், சமாதானங்கள், ஒவ்வொரு சமாதானமும் காப்பி குடிப்பதில் தான் முடியும்.

என் அம்முவிற்கு சமாதானம் என கன்னத்தைக் காட்டுவதற்கு முன்னர் ஒரு காப்பி வாங்கித் தரவேண்டும், அதுவும் எதிர்த்த சந்தில் இருக்கும் நாதன் மெஸ்ஸில் தான் வாங்கித் தரவேண்டும். ஆவடியில் இருந்தாலும் சரி, கோவளத்தில் இருந்தாலும் சரி, மந்தைவெளிக்கு வந்து இதேக் கடையில் தான் குடிக்க வேண்டும், எல்லா விசயங்களையும் விட்டுத்தரும் அம்மு, இதில் மட்டும் பிடிவாதக்காரி. இரண்டு காரணங்கள், மெஸ்ஸின் அடுத்த தெருவில் அவளின் லேடிஸ் ஹாஸ்டல், இரண்டாவது இந்த மெஸ்ஸை நடத்திவரும் பாட்டி, அம்முவின் பாட்டியைப்போலவே இருக்கிறாராம். சுவீடன் போவதற்கு முந்தைய நாளில் காப்பி சுவையுடன் முதல் முத்தம் கிடைத்ததும் இந்த மெஸ்ஸில்தான்.

காப்பித் தூளின் விலை , டீத்தூளின் விலையை விட, அதிகம் என நடுத்தரக்குடும்பச் சூழலில் சிறுவயது முதல் டீ குடித்துப் பழக்கப்பட்டவனாதலால் காப்பியின் மேல் அவ்வளவு விருப்பம் இருந்தது இல்லை.

“உலகத்துல எனக்கு கார்த்திப்பிடிக்கும் , அதுக்கப்புறம் காப்பி பிடிக்கும்” என்றபடி

எவர்சில்வர் டம்ளரின் விளிம்பிற்கு இணையாக கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மடக்கிற்கும் இடையில் ஒரக்கண்ணை சிமிட்டியபடி அம்மு காப்பிக் குடிக்கும் அழகே தனி. மெஸ்ஸில் ஏலக்காய் தட்டி தொண்டைக்குழியில் எப்பொழுதும் நிற்கும் சுவையுடன் கூடிய டீ கிடைத்தாலும், நான் காப்பி மட்டுமே குடிக்க வேண்டும் என்பது அம்முவின் கட்டளைகளில் ஒன்று.

முதல் தடவை காப்பிக் குடித்து முடித்தவுடன் அம்மு எவர்சில்வர் டம்ளர்களை ஒன்றினுள் ஒன்றாக இறுக்கமாக பிரித்து எடுக்க முடியாமல் வைத்து விட்டு, “நாம ரெண்டு பேரும் கடைசி வரை இப்படி பிரியாமல் இருக்கனும்” ஒவ்வொரு தடவையும் இப்படி டம்ளர்களுக்குள் கல்யாணம் நடக்கும்.

ஒரு தடவை அம்மு இரண்டு டம்ளர்களை ஒன்றினுள் ஒன்றாக வைக்க முயற்சிக்கும்பொழுது கடை பாட்டி வந்து சத்தம் போட்டுவிட்டார்.

அதற்கடுத்தாற்போல வரும் பொழுதெல்லாம், பாட்டியை வெறுப்பேற்ற அம்மு வேண்டும் என்றே டம்ளர்களை ஒன்று சேர்ப்பது போல பாவனை செய்து காட்டுவாள்.

“இனிமேல் உங்களுக்கு இதில் தான் காப்பி, உன்னால நாலு டம்ளர் இரண்டு ஆயிடுச்சு ” அம்மு சேர்த்து வைத்த இரு இரண்டடுக்கு டம்ளர்களில் காப்பி கொண்டு வந்து வைத்தார்.

மூன்று வருடங்களில் நாதன் மெஸ், நாதன் ஸ்வீட் ஸ்டால் ஆக சுருங்கி இருந்தது. கடையில் பாட்டி புகைப்படத்தில் மாலையுடன் வரவேற்றாள்.

“பாட்டி போன பிறகு சமைக்க ஆள் கிடைக்கல சார், அதுதான் வெறும் காப்பி, டீ ஸ்வீட் ஸ்னாக்ஸ் மட்டும் வச்சு, முதலுக்கு மோசமில்லாம ஓட்டிட்டு இருக்கேன்” இவர் பாட்டியின் தூரத்து சொந்தமாம், பாட்டிக்குப் பின் கடையை எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

காப்பியின் கசப்புகளின் எச்சம்போல, அம்முவும் கசப்புணர்வுகளை விட்டுவிட்டு போன பின்னர், காப்பியையும் வெறுக்க ஆரம்பித்து விட்டதால் ஏலக்காய் டீ சொல்லிவிட்டு, அம்மு இல்லாத வெறுமையை உணர்ந்து கொண்டிருக்கையில் இரண்டு மேஜைகள் தள்ளி இரண்டடுக்கு டம்ளர் ஒன்றிருப்பது கண்ணுக்குப் பட்டது. மெல்ல நகர்ந்து எச்சில் டம்ளராக இருந்த போதிலும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில்

“சார், இது மாதிரி ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கிற இன்னொரு டம்ளரும் இருந்துச்சு, போன வாரம் தான் ஒரு பொண்ணு அமெரிக்கா போறேன், இது காலேஜ் மெமரீஸுக்காக வேனும்னு வாங்கிட்டுப்போயிடுச்சு”

”அண்ணே, ஏலக்காய் டீ வேண்டாம், ஸ்ட்ராங்கா காப்பி போட்டுடுங்க” சிறிது நேரம் இடைவெளிவிட்டு “இந்த டம்ளரை நான் எடுத்துக்கவா”