Friday, July 23, 2010

முகமது அலி, முரளிதரன் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள்

என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ ,போராளியோ அல்ல !! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் (அமெரிக்க இஸ்லாமிய தேசியத்தில் பரம்பரைப் பெயர்கள் நீக்கப்பட்டு எக்ஸ் என
வைத்துக்கொள்ளப்படும் )என்றழைக்கப்பட்ட முகமது அலி, விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டுவீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.

என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுது,, பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட, ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவருடைய பட்டங்கள் பறிக்கப்பட்டன. குத்துச்சண்டை உரிமம் ரத்து செய்யப்பட்டது. குத்து சண்டை சங்கங்கள் அவரை நீக்கின. உயிருக்குயிரான குத்துச்சண்டையில் ஈடுபடாதபடி ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டார்.

வியட்நாமில் மூக்குடைபட்டு அமெரிக்கா திரும்பிய பின், ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப்பின்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம் முகமது அலியைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கிறது. அதன் பின்னர் ஒரு குத்துச்சண்டை சகாப்தம் உருவானதை உலகமே பார்த்தது. ஆதிக்க அரசாங்கங்களின் அடக்குமுறை செயற்பாடுகளை முதுகெலும்புடன் எதிர்க்காமல், தன்னைப்போன்ற மக்கள் எத்தனை நசுக்கப்பட்டாலும் விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு என வாய்மூடி மௌனியாக இருந்து ஒட்டுண்னி வாழ்க்கை வாழ்ந்திருந்தால் வெறும் விளையாட்டு
வீரனாக வேண்டுமானால் முகமது அலி வரலாற்றில் இடம்பெற்றிருப்பார், மனிதநேயமிக்க மனிதனாக அழியாபுகழுடன் அல்ல.சமகாலத்தில் முகமது அலியைப்போல தன் அரசாங்கத்தை எதிர்த்து குரல் எழுப்பிய விளையாட்டு வீர்ர்கள் யாராவது இருக்கின்றனரா எனப்பார்த்தால், ஜிம்பாப்வே முன்னாள் அணித்தலைவர் ஆண்டி பிளவரும் அதே அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஒலங்காவும் கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்களாக தென்படுகின்றனர்.

2003 ஆம் உலகக்கோப்பைப்போட்டிகள், பிப்ரவரி 10, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தனது முதற்போட்டியை நமீபியா அணிக்கு எதிரான ஆட்டம் ஆரம்பிக்க சிலநிமிடங்கள் இருக்கையில் பத்திரிக்கையாளர்கள், வர்ணனையாளர்கள் மத்தியில் பரபரப்பு., ஆண்டி பிளவரும் ஒலங்காவும் ஒரு அறிக்கையை வெளியிடுகின்றனர்.

"நாங்கள் தொழில்ரீதியான கிரிக்கெட் ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும், எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களை, படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இய்லாது. எங்களது மவுனம் , எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னி, இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பை, உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம். இதன் மூலமாக நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த செயல் எங்கள் நாட்டின் புனிதத்தையும் கண்ணியத்தையும் மீட்டுத்தரும் என நம்புகின்றோம்” என்ற உள்ளடக்கத்துடன் வெளியான அறிக்கை கிரிக்கெட் உலகைமட்டுமல்ல, அனைவரையும் ஒரு சேர திரும்பிப் பார்க்க வைத்தது. ஹென்றி ஒலாங்கா ஜிம்பாப்வே அணிக்காக ஆடிய முதல் கருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையில் மனசாட்சியுடன் ஹென்றி ஒலங்காவும் இருந்தமை, இலங்கையின் சனத் ஜெயசூரியா தமிழினப் படுகொலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தால் எப்படி இருந்திருக்குமோ அவ்வகையிலானது.
ஆண்டி பிளவர் ஓய்வு பெற அறிவுறுத்தப்பட்டார். ஹென்றி ஒலாங்காவுக்கு கைதானை பிறப்பிக்கப்பட்டது. மரண தண்டனைக்குரிய தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். நாட்டைவிட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் ஊடகத்துறையிலும் பணி புரிந்து வருகின்றார். ஆண்டி பிளவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்கின்றார். ஆண்டி பிளவரின் கிரிக்கெட் சாதனைகள் முறியடிக்கப்படலாம், ஹென்றி ஒலாங்காவை விட தேர்ந்த பந்துவீச்சாளர் நூற்றுக்கணக்கில் வரலாம். முகமது அலியைவிட பலசாலிகள் மைக்டைசன்களாகவும் ஹோலிபீல்டுகளாகவும் உலகை மிரட்டலாம். சகமனித உயிர்களுக்காக , உயிர்களின் உரிமைகளுக்காக போராட முடியாமால் போனாலும், குறைந்த பட்சம் எதிர்ப்பையாவது பதிவு செய்யும் ஆளுமைகள், அவர்களின் புள்ளிவிவரங்கள் முறியடிக்கப்பட்டு மறக்கப்பட்டு விட்டாலும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பார்கள்.
“என்னை ஊக்குவிக்க உற்சாகப்படுத்த வந்திருக்கும் ஜனாதிபதி ராஜபக்சேவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்ற முத்தையா முரளீதரன் சமீபத்தில் 800 விக்கெட்டுகளை தனது வீச்சில் எடுத்திருக்கிறார் என்பது இந்தத் தருணத்தில் நினைவுகூறத்தக்கது. விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தாலும் இந்த சாதனை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
சாதனையை பாராட்டும் அதே தருணத்தில் முரளீதரனை கண்டனமும் செய்யத் தோன்றுகிறது. தமிழின உரிமைக்காக அவரை களப்போராட்டம் செய்ய அழைக்கப்போவதில்லை, குறைந்த பட்சம் தமிழினப் படுகொலைகளுக்குக் காரணமான நவீன ஹிட்லரைப் புகழாமலாவது இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இவரின் எறிதல் குற்றச்சாட்டுக்களுடன் இந்த சார்புண்ணி வார்த்தைகளும் தமிழின உணர்வுகள் எரிதழலாய் உள்ளவரைஅழியாமல் இருக்கும் என்பதை வரும்காலம் பறைசாற்றும்.

கட்டுரைக்கு சம்பந்தமில்லாத பின் குறிப்புகள் : 1988 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க நிறவெறி அரசாங்கத்தின் அழைப்பில் அங்கு சென்று ஆடி வந்த இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் , இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த அணியில் இடம் பெற்றிருந்ததால் , இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ரத்து செயதது. கடைசி இரண்டு வருடங்களாக இந்தியா அணி அதிக முறை விளையாடியது இலங்கை அணியுடன் தான்.