Sunday, May 30, 2010

மாற்றுத்திறனாளிகளும் சுவீடனும்
அனைவருக்கும் சம உரிமைகளை , ஏனோதானோ என ஏட்டில் மட்டும் அல்லாமல் நடைமுறையிலும் சம உரிமை என்ற பதத்தின் அர்த்தத்தை அப்படியே செயற்படுத்த அதீத முயற்சி எடுப்பவை ஸ்கான்டிநேவியா நாடுகள். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள்(People with disabilities) சமுதாயத்தில் சுதந்திரமாக தன்னிச்சையாக வாழ அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகள் அலாதியானது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களோ, கேட்கும் திறன் , பார்வை அற்றவர்களோ யாருடைய துணையும் எந்தவித தயக்கங்களும் இன்றி பிரயாணங்கள் செய்யும் வகையில் பெரும்பாலான ரயில்களும் பேருந்துகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது அருமையான விசயம்.

அணுகுதிறன் இல்லாத (Accessibility) பேருந்துகள், ரயில்களை அனைவரும் பயன்படுத்தும் தக்கவகையில் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சக்கரநாற்காலிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான பெரிய கார்களை அனுப்பி வைப்பார்கள். எல்லா நகராட்சிகளிலும் இத்தகைய வசதிகளை உடைய தனியார் டாக்ஸிகள் குறைந்தது நான்காவது இருக்கின்றன.


அனைவருக்கும் சமச்சீரான வாழும் சூழலைத் தரவேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் சட்டங்களை இயற்றிவரும் சுவீடன் அரசாங்கம் 'நோய்வாய்ப்பட்டவர்களிலிருந்து குடிமக்கள்'என்ற திட்டத்துடன் இயங்கி வருகின்றது. என்ற வரும் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தகைய வசதிகளை மறுப்பது 'பாகுபாடு' (Discrimination) சட்டத்தின் கீழ் கொண்டு வர ஒரு முன் வரைவு கொண்டு வரப்பட உள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் இப்படிப்பட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பது பாகுபாடு சட்டத்தின் கீழ் ஏற்கனவே வருகிறது. தற்பொழுதைய முன்வரைவு எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
சுவீடனைப் பொருத்த மட்டில் எந்த ஒரு பழமையான அருங்காட்சியமாகட்டும், தேவாலயங்கள் ஆகட்டும் , அரசு அலுவலங்கள் , ஏன் மதுபானங்கள் வாங்கும் சரக்குகடைகள் ஆகட்டும் சுயமாக மாற்றுத்திறனாளிகள் அவற்றை பயன்படுத்த இயலும். அது வெறும் 10 பேர் வருவதாகட்டும் 10000 பேர் வருவதாகட்டும், அந்த இடம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தெளிவான வடிவங்கள், சாய்வு மேடைகள் (Ramps), மின்தூக்கிகள் (Elevators), தேவையான இடங்களில் பிரெய்லி எழுத்துப் பலகைகள் என வசதிகள் சரிவர அமைக்கப்பட்டிருக்கும். வயதானவர்களும் இத்தகைய வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் முக்கியமான ஒன்று.
வசதிகள் இல்லாத இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத இடங்கள் என தெளிவாக அவற்றின் இணைய தளங்களிலும் அறிவிப்புகளிலும் குறைந்த பட்சம் இடம்பெறும். அதேபோல எத்தகைய வசதிகள் இருக்கின்றன என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

இன்னும் சிறுநகரங்களில் உணவகங்கள், சிறிய கடைகள் ஆகியவற்றில் பொருளாதார நடைமுறைச் சிக்கல்களினால் இத்தகைய வசதிகள் செய்யப்படாமல் இருந்தாலும், பாகுபாடுச் சட்டத்தின் கீழ் வரும்பொழுது ஒட்டு மொத்த சுவீடனும் எல்லோராலும் அணுக முடியும் ஒரு நாடாக இருக்கும்.

கவனிக்கத்தக்க விசயம் என்னவென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடத்துனர்களோ ஒட்டுனர்களோ எந்தவித எரிச்சலும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்திற்குச் சற்றும் பங்கம் வராமல் நடந்து கொள்வதுதான்.

பொருளாதார வளம், குறைவான மக்கள் தொகை, அரசாங்கத்தின் தொலை நோக்குப் பார்வை, மனித விழுமியங்களை மரியாதை செய்யும் கலாச்சாரம் ஆகியனவற்றால் சுவீடனை உள்ளடக்கிய ஸ்காண்டிநேவிய நாடுகள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை சரிவரச் செய்ய முடிகிறது. தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு முன் இருந்த சூழல் நூலிழை அளவு மாறி, பெருநகரங்களின் வணிகமையங்கள், சில திரையரங்கள் , உணவகங்கள் ஆகியன மாற்றுத்திறனாளிகளும் அணுகும்படி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது என்ற போதிலும் இன்னும் நாம் செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கின்றது. ஒட்டு மொத்தமாக மாற இன்னும் சிலப்பல ஆண்டுகள் ஆனாலும், அரசாங்கம் எந்த எந்த இடங்கள்(வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் , உணவகங்கள், சுற்றுலா இடங்கள் ) மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படுத்த வகையில் ஏதுவாக இருக்கின்றன என்பதைக் குறிப்பிடும் தகவல்களை இணையதளங்களில் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.


சுதந்திரத்தின் முழுமை நள்ளிரவில் ஒரு பெண் தனியாக நடக்கமுடியும் என்ற பொழுது மட்டும் பூர்த்தியாகாது, சமதர்மச் சமுதாயத்தின் பூரணத்துவம் மாற்றுத்திறனாளிகள் எந்த இடத்தையும் அணுக முடியும் என்ற நிலைவருவதிலும் உள்ளடங்கி இருக்கின்றது.

19 பின்னூட்டங்கள்/Comments:

said...

யோசிக்க வேண்டிய விஷயம் ...இதை ஏன் நீங்கள் மாண்புமிகு துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் இணைதளத்தில் ஆலோசனைப் பிரிவில் தெரிவிக்க கூடாது ?


http://www.mkstalin.net/

said...

ஒரே வார்த்தையில். அருமை !!!

said...

//கவனிக்கத்தக்க விசயம் என்னவென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடத்துனர்களோ ஒட்டுனர்களோ எந்தவித எரிச்சலும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்திற்குச் சற்றும் பங்கம் வராமல் நடந்து கொள்வதுதான்.//
athu thaanga mukiyam .,
my salute to them

said...

கண்டிப்பாக பாரட்டபட வேண்டிய விஷயம்.

said...

'' சுவீடன் அரசாங்கம் வரும் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தகைய வசதிகளை மறுப்பது 'பாகுபாடு' (Discrimination) சட்டத்தின் கீழ் கொண்டு வர ஒரு முன் வரைவு கொண்டு வரப்பட உள்ளது ''
சுவீடன் அரசாங்க தோழர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் ...
அவர்கள் ஒட்டு மொத்த உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கிறார்கள் ...
நன்றி தோழரே !

said...

இங்கே சிங்கப்பூரிலும் இதை அமல் செய்கிறார்கள், வீல் சேர் அக்சஸ் இல்லாத டிசைன்கள் ரிஜெக்ட் செய்யப்படுகின்றன, நிறைய மாற்று ஏற்பாடுகள் செய்கின்றார்கள்... ஊரில் இது குறித்த விழிப்புணர்வு வரவேண்டும்

said...

//செந்தழல் ரவி said...

ஒரே வார்த்தையில்... அருமை !!!
//

வழிமொழிகிறேன்..

said...

பாராட்டப்படவேண்டிய விசயம்...அருமையான பகிர்வுக்கு நன்றி...

said...

நல்ல விஷயம்.. மிக்க நன்றி தகவலுக்கு

Srini

said...

பாரட்டபட வேண்டிய நல்ல விஷயம்.

said...

மிகவும் நல்ல விடயம்.

said...

படங்களுடன் பகிர்ந்ததிற்கு நன்றி செல்வா.

இங்கு பிரான்ஸிலும் பெரும்பான்மையான இடங்களில் (இரண்டாம் நிலை நகரங்களில்) நீங்கள் குறிப்பிட்டுள்ள வசதிகள் இருப்பினும், பாரிஸ் போன்ற பழங்கால மெட்ரோ வசதிகள் கொண்ட ஊர்களில் ஏராளமான மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நான் இருக்கும் மாநிலத்தில், பார்வைத்திறன் அற்றவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட Golden Retriever நாயும் அரசினால் வழங்கப்படுகிறது.

பொருளாதார வசதியினை விட, //அரசாங்கத்தின் தொலை நோக்குப் பார்வை, மனித விழுமியங்களை மரியாதை செய்யும் கலாச்சாரம்// போன்றவைகளே இது போன்ற மாற்றங்களை நமது சமூகத்தில் ஏற்படுத்தும்.

said...

"சுதந்திரத்தின் முழுமை நள்ளிரவில் ஒரு பெண் தனியாக நடக்கமுடியும் என்ற பொழுது மட்டும் பூர்த்தியாகாது," actualla idhu kuda inum seriya nadakala...
:(

said...

பூங்கொத்து!

said...

மகிழ்ச்சியான செய்தி. சிங்கப்பூர், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற வசதிகளைக் கண்டுள்ளேன். பாகுபாட்டுச் சட்டம் இயற்றும் அளவுக்குச் செல்வது முன்னோடிச் செயல்பாடு.

அழகு தமிழில் படங்களுடன் நன்றாக எழுதி உள்ளீர்கள்.

said...

தமிழகத்தில் தற்சமயம் அரசு அலுவலகங்களை புதிதாக கட்டும் போது மாற்று திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்

--

ஆனால் நீங்கள் சொல்லும் அளவு இங்கு வர சில ஆண்டுகள் ஆகலாம்

said...

கவனிக்கத்தக்க விசயம் என்னவென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடத்துனர்களோ ஒட்டுனர்களோ எந்தவித எரிச்சலும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்திற்குச் சற்றும் பங்கம் வராமல் நடந்து கொள்வதுதான். //

படிப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது செல்வா. அடிப்படை படிப்பும் நல்ல வளர்ப்புமே இதற்கு காரணம் என்பேன். ஆங்கிலத்தில் வேல்யூஸ் என்பார்களே அது இல்லாத படிப்பு வெறும் வீண்.

இங்கு அந்த இரண்டுமே இல்லை.

said...

மனித நேயம்!!!!!!
பாராட்டப்பட வேண்டிய விஷயம்.....

said...

That's a wonderfully written blog entry, nalla thamizh paditha sandosham...valarga ungal thamizh!!