Sunday, May 30, 2010

மாற்றுத்திறனாளிகளும் சுவீடனும்
அனைவருக்கும் சம உரிமைகளை , ஏனோதானோ என ஏட்டில் மட்டும் அல்லாமல் நடைமுறையிலும் சம உரிமை என்ற பதத்தின் அர்த்தத்தை அப்படியே செயற்படுத்த அதீத முயற்சி எடுப்பவை ஸ்கான்டிநேவியா நாடுகள். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள்(People with disabilities) சமுதாயத்தில் சுதந்திரமாக தன்னிச்சையாக வாழ அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகள் அலாதியானது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களோ, கேட்கும் திறன் , பார்வை அற்றவர்களோ யாருடைய துணையும் எந்தவித தயக்கங்களும் இன்றி பிரயாணங்கள் செய்யும் வகையில் பெரும்பாலான ரயில்களும் பேருந்துகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது அருமையான விசயம்.

அணுகுதிறன் இல்லாத (Accessibility) பேருந்துகள், ரயில்களை அனைவரும் பயன்படுத்தும் தக்கவகையில் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சக்கரநாற்காலிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான பெரிய கார்களை அனுப்பி வைப்பார்கள். எல்லா நகராட்சிகளிலும் இத்தகைய வசதிகளை உடைய தனியார் டாக்ஸிகள் குறைந்தது நான்காவது இருக்கின்றன.


அனைவருக்கும் சமச்சீரான வாழும் சூழலைத் தரவேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் சட்டங்களை இயற்றிவரும் சுவீடன் அரசாங்கம் 'நோய்வாய்ப்பட்டவர்களிலிருந்து குடிமக்கள்'என்ற திட்டத்துடன் இயங்கி வருகின்றது. என்ற வரும் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தகைய வசதிகளை மறுப்பது 'பாகுபாடு' (Discrimination) சட்டத்தின் கீழ் கொண்டு வர ஒரு முன் வரைவு கொண்டு வரப்பட உள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் இப்படிப்பட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பது பாகுபாடு சட்டத்தின் கீழ் ஏற்கனவே வருகிறது. தற்பொழுதைய முன்வரைவு எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
சுவீடனைப் பொருத்த மட்டில் எந்த ஒரு பழமையான அருங்காட்சியமாகட்டும், தேவாலயங்கள் ஆகட்டும் , அரசு அலுவலங்கள் , ஏன் மதுபானங்கள் வாங்கும் சரக்குகடைகள் ஆகட்டும் சுயமாக மாற்றுத்திறனாளிகள் அவற்றை பயன்படுத்த இயலும். அது வெறும் 10 பேர் வருவதாகட்டும் 10000 பேர் வருவதாகட்டும், அந்த இடம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தெளிவான வடிவங்கள், சாய்வு மேடைகள் (Ramps), மின்தூக்கிகள் (Elevators), தேவையான இடங்களில் பிரெய்லி எழுத்துப் பலகைகள் என வசதிகள் சரிவர அமைக்கப்பட்டிருக்கும். வயதானவர்களும் இத்தகைய வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் முக்கியமான ஒன்று.
வசதிகள் இல்லாத இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத இடங்கள் என தெளிவாக அவற்றின் இணைய தளங்களிலும் அறிவிப்புகளிலும் குறைந்த பட்சம் இடம்பெறும். அதேபோல எத்தகைய வசதிகள் இருக்கின்றன என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

இன்னும் சிறுநகரங்களில் உணவகங்கள், சிறிய கடைகள் ஆகியவற்றில் பொருளாதார நடைமுறைச் சிக்கல்களினால் இத்தகைய வசதிகள் செய்யப்படாமல் இருந்தாலும், பாகுபாடுச் சட்டத்தின் கீழ் வரும்பொழுது ஒட்டு மொத்த சுவீடனும் எல்லோராலும் அணுக முடியும் ஒரு நாடாக இருக்கும்.

கவனிக்கத்தக்க விசயம் என்னவென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடத்துனர்களோ ஒட்டுனர்களோ எந்தவித எரிச்சலும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்திற்குச் சற்றும் பங்கம் வராமல் நடந்து கொள்வதுதான்.

பொருளாதார வளம், குறைவான மக்கள் தொகை, அரசாங்கத்தின் தொலை நோக்குப் பார்வை, மனித விழுமியங்களை மரியாதை செய்யும் கலாச்சாரம் ஆகியனவற்றால் சுவீடனை உள்ளடக்கிய ஸ்காண்டிநேவிய நாடுகள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை சரிவரச் செய்ய முடிகிறது. தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு முன் இருந்த சூழல் நூலிழை அளவு மாறி, பெருநகரங்களின் வணிகமையங்கள், சில திரையரங்கள் , உணவகங்கள் ஆகியன மாற்றுத்திறனாளிகளும் அணுகும்படி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது என்ற போதிலும் இன்னும் நாம் செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கின்றது. ஒட்டு மொத்தமாக மாற இன்னும் சிலப்பல ஆண்டுகள் ஆனாலும், அரசாங்கம் எந்த எந்த இடங்கள்(வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் , உணவகங்கள், சுற்றுலா இடங்கள் ) மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படுத்த வகையில் ஏதுவாக இருக்கின்றன என்பதைக் குறிப்பிடும் தகவல்களை இணையதளங்களில் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.


சுதந்திரத்தின் முழுமை நள்ளிரவில் ஒரு பெண் தனியாக நடக்கமுடியும் என்ற பொழுது மட்டும் பூர்த்தியாகாது, சமதர்மச் சமுதாயத்தின் பூரணத்துவம் மாற்றுத்திறனாளிகள் எந்த இடத்தையும் அணுக முடியும் என்ற நிலைவருவதிலும் உள்ளடங்கி இருக்கின்றது.

Sunday, May 23, 2010

டென்மார்க்கையும் சுவீடனையும் இணைக்கும் ஒர்சன் பாலம்(Øresundsbron)

ஒருவொருக்கொருவர் புரிந்துகொள்ள கூடிய மொழிகளையும் கலாச்சாரத் தொடர்புகளையும் காலங்காலமாக கொண்டிருந்தாலும் வெறும் 16 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட நீரிணைப்பு இரண்டு நாடுகளை ஏனோ நூற்றாண்டுகளாக தள்ளியே வைத்திருந்தது. இதனை மாற்றிய பெருமை மனிதனின் பொறியியற் அறிவுக்குச் சவால் விடப்பட்டு கட்டப்பட்ட ஒர்சன் பாலத்தையேச் சாரும்.


19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் டென்மார்க்கையும் சுவீடனையும் இணைத்து ஒரு பாலம் இருந்தால் நன்றாக இருக்குமே இரு நாட்டவர்களுக்கும் தோன்றினாலும் உலகப்போர்கள், பொருளாதாரக் காரணிகளால் பாலம் ஒரு கனவாக இருந்து வந்தது. நார்டிக் ஒப்பந்தங்கள், ஐரோப்பா ஒரு ஒன்றியமாக இணைய ஆரம்பம் ஆதல், முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் , பூகோள ரீதியில் தனிமைப்பட்டிருக்கும் சுவீடன் , நார்வே நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் இருந்து செல்ல தரைவழியாகவும் இணைக்கப்பட வேண்டிய தேவைகள் ஆகியன 90களின் ஆரம்பத்தில் பாலம் அமையவதற்கான முகாந்திர வேலைகள் துவங்கப்பட்டன.

உலகத்தின் வியாபர மையமாக கிடுகிடுவென வளர்ந்து வந்த டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகர் மக்களுக்கு தேவையான மலிவான குடியிருப்புகள் , சுவீடனின் மூன்றாவது பெரியநகரமான மால்மோ வாழ் மக்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் ஆகியனவற்றை இந்தப் பாலம் ஒரு சேர பூர்த்தி செய்யும் என்பதால் இருநாட்டு மக்களிடையேயும் பாலம் அமைக்கும் திட்டம் பெரு வாரியான வரவேற்பைப் பெற்றது.

சேவைநோக்குடன் ஆரம்பிக்கப்படும் விசயங்கள் அரசின் கையில் மட்டுமே இருக்கவேண்டும் என்பதற்கு இணங்க டென்மார்க் , சுவீடன் அரசாங்கங்கள் இணைந்து Øresundsbro Konsortiet என்ற கூட்டமைப்பு நிறுவனத்தை ஆரம்பித்தன. இதை நிர்வகிக்கும் கூட்டுப் பொறுப்பு சுவீடன் தரப்பில் SVEDAB AB என்ற அரசாங்க நிறுவனத்திற்கும் A/S Øresund என்ற டேனிஷ் அரசாங்க நிறுவனத்திற்கும் கையளிக்கப்பட்டன. பொதுவாக பெரும் தடைக்கற்கள் எனக் கருதப்படும் உள்ளூர் , உள்ளடி அரசியல்களை எல்லாம் அனயாசமாக கடந்த இந்தத்திட்டத்திற்கு நிஜமான சவால் கட்டுமானத்திட்டத்தை வடிவமைப்பதில் தான் இருந்தது.
பால்டிக் கடலை வட அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய நீரிணைப்பான 'சத்தம்' எனப் பொருள்படும் ஒர்சன் நீரிணைப்பு டென்மார்க்கையும் சுவீடனையும் பிரிக்கின்றது. இந்தப் பாலம் அமைக்கப்படும் முன்னர் கழுத்தைப்போன்ற குறுகலான இடம் என்ற பொருள் படும் பெயர்களைக் கொண்ட ஹெல்சிங்கர்(டென்மார்க்) - ஹெல்சிங்கர்போரி (சுவீடன்) நகரங்களுக்கு இடையேயான இரண்டரை கிலோமீட்டர்கள் தொலைவை 20 நிமிடங்களில் கடக்க சிறுகப்பல்களைத் தான் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஏற்கனவே சொன்னபடி, கோபன்ஹேகன், மால்மோ பெரியநகரங்களை இணைத்தால் கிடைக்கும் அரசியல்,பொருளாதார ஆதயங்களினால் பாலத்திற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டு 1995 ஆம் ஆண்டின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டன.

பால வடிவமைப்பிற்கு இரண்டு பிரச்சினைகள் காத்திருந்தன. முதலாவது ஒர்சன் நீரிணைப்பின் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துப் பாதிக்கப்படக்கூடாது. அதாவது பாலம் மிகப்பெரிய கப்பல்கள் கடந்து செல்லும் அளவிற்கு உயரமானதாகவும் அகலமானதாகவும் கட்டப்பட வேண்டும். இரண்டாவது டென்மார்க் நிலப்பகுதியில் அமைந்திருந்த கோபன்ஹேகன் - காஸ்ட்ரப் பன்னாட்டு விமானநிலையம். கடலுக்கு மேல் உயரமாக பாலம் அமைக்கப்படும்பொழுது தரையிறங்கும் விமானங்கள் , தாழ்வாகப் பறக்கையில் உயர்ந்த கோபுரங்களை கொண்டு தாங்கும் பாலத்தின் மேல் மோதி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டும். முழுக்க முழுக்க கடலுக்கு அடியில் கட்டலாம் என்றாலும் செலவு இதைவிடப் பன்மடங்கு ஆகும்.

இதனால் பொறியியலாளர்கள் கோபன்ஹேகன் விமான நிலையத்தின் அருகே வரும் கடல் பகுதியில் சில கிலோமீட்டர்கள் பாலத்தை கடலுக்கடியிலும் , அதன் பின்னர் கடலுக்குமேலும் பாலத்தை அமைக்கலாம் எனத் திட்டமிட்டனர். ஆனால் நடுக்கடலில் , அடியில் இருக்கும் பாலத்தை எப்படி கடலுக்கு மேல் கொண்டு வருவது, அடுத்தச் சிக்கல் ஆரம்பித்தது. நடுக்கடலில் இருக்கும் உப்புத்தீவில்(saltholm) கடலுக்கடியில் இருந்து கடலுக்கு மேல் மாற்றிவிடத் முதலில் திட்டமிடப்பட்டது.
ஆனால் முதலாம் உலகப்போருக்குப்பின்னர் ஆளரவமற்ற தீவாகிவிட்ட உப்புத்தீவில் சாலைகளையும் ரயில் பாதைகளையும் அமைக்கும் செலவைக் காட்டிலும் , ஏற்கனவே நீரின் வேகத்தைக் குறைக்க, தோண்டப்பட்ட மண்ணைக் கொண்டு செயற்கைத் தீவை உருவாக்கும் செலவு குறைவாகப் பட்டதனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக செயற்கைத் தீவு உருவாக்க திட்டமிடப்பட்டது. செயற்கைத் தீவிற்கு Salt and Pepper என்ற சொற்றொடரை மதிப்புச் செய்யும் வகையில் மிளகுத்தீவு(Peberholm) எனப் பிற்பாடு பெயரும் சூட்டப்பட்டது.

4 கிலோமீட்டர்கள் கடலுக்கடியிலும், 4 கிலோமீட்டர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவிலும், மீதி எட்டு கிலோமீட்டர்களை கடலுக்குமேல் பாலத்தையும் அமைத்து நூற்றாண்டுகள் கனவை நிஜமாக்கலாம் என பொறியியளாலர்கள் திட்டமிட்டனர்.

பொதுவாக கப்பல் பாலத்தின் அடியில் போக வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 60 மீட்டர்களாவது பாலம் உயரமாக இருக்க வேண்டும். அகலம் 450 மீட்டர்களாகவது இருக்க வேண்டும். இவ்வகையில் மிகப்பிரம்மண்டமான பாலத்தை கட்ட வேண்டுமெனில் வளைவுப் பாலம் அல்லது தொங்கு பாலம் வடிவமைப்புகளே தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் வளைவு பாலத்தை அமைத்தால் கப்பல் போக்குவரத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதாலும், ரயில் போக்குவரத்தின் அதிர்வுகளை தொங்குபாலங்களால் தாங்க இயலாது என்பதாலும் இரண்டு வடிவமைப்புகளும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பாலத்தை வடிவமைக்கும் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தி இரண்டு உயரமான தூண்களில் இருந்து கம்பிகளால் இறுக்கமாக பிணைக்கப்பட்டு இருக்கும் தற்போதைய வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் ஜார்ஜ் ரோத்னேசுற்றுப்புறச் சூழல் விதிமுறைகளை மீறாமல், அகழந்து தோண்ட முடியாத நடுக்கடலில் கொட்டிக்கிடந்த கோபன்ஹேகன் சுண்ணாம்புக் கற்களை ராட்சச இயந்திரங்களை வைத்து உடைத்தெடுத்தாலும் பிரச்சினை வேறு வடிவில் காத்துக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் இருந்த டென்மார்க் மீது பிரிட்டன் வீசிய குண்டுகளில் சிலவை ஆழ்கடலில் வெடிக்காமல் உயிர்ப்புடன் அப்படியே இருந்தன. டேனிஷ் கடற்படையினரின் தொடர்ந்த தேடுதல்களினால் 16 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கப்பட்டன.

இதனிடையில் கடலுக்கடியில் சுரங்கம் அமைக்கும் பணிகளும் இணையாகத் தொடங்கப்பட்டிருந்தன. நிலத்துக்குமேல் கட்டுவதுபோல அத்தனை சுலபமாக கடல் மட்டத்திற்கு கீழ் நீரின் மத்தியில் கட்டுமாணம் செய்வது அத்தனை சுலபமில்லை. 8.6 மீட்டர்கள் உயரமும் 38.8 மீட்டர்கள் அகலமும் கொண்ட 22 மீட்டர்கள் நீளமும் கொண்ட கட்டுமாணங்கள் கடலுக்குள் இறக்கப்பட்டு இணைக்கப்பட்டன. மூன்று மாடி நடுத்தர குடியிருப்புக் கட்டடம் நகர்த்தி நீருக்கடியில் வைப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுபோல ஒன்று இரண்டல்ல, மொத்தம் 160 கட்டுமாணங்கள் கடலின் அடியில் இறக்கப்பட்டு ஏறத்தாழ முன்றரை கிலோமீட்டர்களுக்கு சுரங்க ரயிலுக்கான கட்டுமானங்களும் அமைக்கப்பட்டன.
பாலத்தை தாங்கி கம்பீரமாக நிற்கும் நான்கு தூண்களின் அடித்தளம் நிலத்தில் உருவாக்கப்பட்டு, மறுமுனையில் சுரங்கங்கள் கடலினுள் இறக்கப்பட்டதுபோல, இறக்கப்பட்டன. பின்பு நடுக்கடலில் 204 மீட்டர்கள் உயரத்தில் கட்டப்பட்டு, இரண்டடுக்கு பாலங்கள் பகுதி பகுதியாக கொண்டுவரப்பட்டு இணைக்கப்பட்டன. அதாவது 12 மீட்டர்கள் மடங்கின் உயரத்தில் வரும் இரும்புக் கம்பிகளுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டன.


ஆகஸ்ட் 14 , 1999 அன்று கடைசிப் பாலத்துண்டு பொருத்தியவுடன் முதன்முறையாக டென்மார்க்கும் சுவீடனும் இணைக்கப்பட்டது. நடுப்பாலத்தில் சுவீடனின் இளவரசி விக்டோரியாவும் டென்மார்க் இளவரசர் பிரட்ரிக்கும் சந்தித்துக் கொண்டபொழுது நூற்றாண்டுகால ஸ்காண்டிநேவியக் கனவு நிறைவேறியது.
சிறிய சிறிய தடைக் கற்களான ரயில் சமிஞைகள், மின்னழுத்த, மின்னோட்ட தரக்காட்டுப்பாடு சிக்கல்கள் மென்பொருள்கள் உதவியுடன் களையப்பட்டன. திட்டமிட்டக் காலத்தில், திட்டமிட்டதற்கு மேலாக செலவு ஆகாமல் குறித்தக் காலத்தில் மக்களுக்கு பயன்பாட்டிற்குத் திறந்த்துவிடப்பட்டது.

2000 ஆம் ஆண்டுக் கணக்குப்படி 30 பில்லியன் டேனிஷ் குரோனர்கள் செலவிடப்பட்டத் தொகையைத் திரும்பப் பெற பாலத்தைக் கடக்க கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் அதிகமான கட்டணத்தினால் பயன்பாடு குறைவாக இருந்தபோதிலும், டேனிஷ்காரர்கள் மால்மோ சுற்றுப்புறங்களில் வீடு, நிலங்களை வாங்கிக் குடியேறி, தினமும் கோபன்ஹேகனிற்கு தினமும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டதாலும் ,டென்மார்க்கில் இருக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் சுவிடீஷ் மக்களை அங்கு நகர்த்த ஆரம்பித்துள்ளதாலும் இந்தப் பாலத்தின் பயன்பாடு எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 2035 ஆண்டில் செலவிடப்பட்டத் தொகை திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பரமாரிப்புகளுக்காக ரயில் அடுக்கு கீழே அமைக்கப்பட்டிருக்கும் பாதைகளில் பணியாளர்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் செல்ல வழிவகுக்கப்பட்டிருக்கிறது. வாகனப்போக்குவரத்தையும் பாலத்தின் பாதுகாப்பையும் கண்காணிக்க அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளுடன்(256 கேமராக்கள்) கட்டுப்பாட்டு மையமும் உண்டு.

பாலம் வந்தால் எல்லாம் நாசமாய் போகும் எனக் கதறிய சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களுக்கு நல்ல செய்தியாக பாலம் அமையப்பட்டிருக்கும் 51 தூண்களும் அதில் உருவாகும் பாசிகளும், கடற்புற்களும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எதிர்பாராத புகலிடமாக அமைந்த்துவிட்டன. இயற்கை சிலப்பல சமயங்களில் மனித சமுதாயத்திற்கு தேவையான முன் முயற்சிகளுக்கு ஏற்றாற்போல தன்னையும் தகவமைத்துக்கொள்ளும். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மிளகுத்தீவில் மனிதநடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு.மனித முயற்சிகள் இல்லாமல் நூற்றுக்கணக்கான தாவரங்கள் இதுவரை உருவாகி இருப்பதாக தாவரவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் தங்குமிடமாகவும் இது அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அருகில் சுவீடனின் முனையில் இருக்கும் ஃபோல்ஸ்டர்ப்ரோ ஒரு பறவைகளின் சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தின் மிகப்பெரும் நீருக்கடியில் இருக்கும் கான்க்ரீட் சுரங்கம், நீளமான இரண்டடுக்கு போக்குவரத்துப்பாலம் , உயரமான கோபுரங்களைக் கொண்ட பாலம் ஆகிய பெருமைகளைக் கொண்ட இந்த இணைப்பு இரண்டு நாடுகளையோ மட்டும் இணைக்கவில்லை, ஒட்டுமொத்த ஐரோப்பாவை மேலும் நெருக்கமாக்கியது என்பது மிகையில்லை.இந்த பத்தாண்டுகளில் டென்மார்க்கின் ஜிலாந்து, சுவீடனின் ஸ்கோனே மாநிலங்கள் இணைந்து ஒர்ரெசன் என்ற பலம் வாய்ந்த பொருளாதர நிலப்பரப்பாக அமைய காரணமான இந்த கம்பீரமான பாலம் நமக்கு சொல்லாமல் சொல்வது ஏராளம். நூறு வருடங்களுக்கு முன் சாத்தியமில்லை என ஒத்திப்போடப்பட்ட விசயம் இன்று விசுவரூபமாய் நம் முன் நிற்கிறது. குறுகிய நோக்கங்களுடன் உப்பிச்சப்பில்லாத காரணங்களுக்காக , தொலைநோக்குத் திட்டங்களை கிடப்பில் போடப்படாமல் செயற்படுத்தடும்பொழுது அடையும் பயன்களை பறைசாற்றும் நிகழ்கால சாட்சியாக இந்தப் பாலம் இருக்கிறது. இக்கட்டுரையை வாசிக்கும்பொழுது கீழ்கண்ட வரைபடம் உங்களின் நினைவுக்கு வராமல் இருக்காது.


இதே தொலைவு,இதே போல ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டாலும் தனித்தன்மை வாய்ந்த இனங்கள், ம்ம் பார்க்கலாம். பலசமயங்களில் வரலாறுகள் திருத்தி எழுதப்படுகின்றன. மீன் கொடியும் புலிக்கொடியும் பாலத்தின் மையத்தில் பறக்கும் காட்சியை ,நம் வாழ்நாளின் இறுதிப்பகுதிகளிலாவது பார்க்கும் வாய்ப்பு இருக்கும் என நம்புவோம்.

தரவுகள்
2. National Geograpic Channel - Mega Structures

Tuesday, May 18, 2010

Do not say yes when you have to say no - சிறுகதை

கடவுள், பேய்களுக்கு அடுத்தபடியா சுவாரசியமானது தற்கொலை !!கற்பனையில் மட்டுமே சாத்தியமாகும் முதலிரண்டைப் போல அல்லாமல் தற்கொலையை பரிட்சித்துப் பார்க்க முடியும். என்னுடைய இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடைவெளி இதோ இன்னும் சில அடிகள்தான்,அப்படியே இங்கே இருந்து பால்டிக் கடலில் குதித்தால் சில மூச்சுத்திணறல்களுக்குப் பின்னர் இந்த வேதனையில் இருந்த்து ஒரேயடியாகத் தப்பித்துவிடலாம். அப்படி எனக்கு என்ன வேதனை என கேட்கிறீர்களா? அட கழுதை கெட்டால் குட்டிச்சுவர், காதல் தோல்வி தான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஞானம் ஒரே இரவில் வந்து, அடுத்த ஜென்மத்தில் சேர்வோம் என வழக்கமான வசனத்தை, அம்மு அழுதுகொண்டே ஒப்பித்துவிட்டு தொலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டாள்.

அம்மு இல்லாமல் வாழ முடியாது என்பற்காக இந்த முடிவு அல்ல, அவளின்றி இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் என்னுள் இருக்கும் வன்முறையாளன் விசுவரூபம் எடுக்கின்றான். என்னுடைய தியாக உள்ளத்தை சமாதனப்படுத்துவதற்காக, கல்யாணத்திற்கு முன் அவளுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு விட வேண்டும். அவளுக்குப் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை அம்முவைக் கைவிட்டுவிட வேண்டும், இப்படியாக ஒரு விபரீதக் கற்பனை. அடுத்து எதிர்காலத்தில் அவள் விதவையாகி குழந்தையுடன் வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இப்படி எல்லோருக்குமே தோன்றும் என நினைக்கிறீர்களா !! மாபியா ரேஞ்சிற்கு ஒன்று யோசித்தேன், சொன்னால் என் மேல் பரிதாபப்பட மாட்டீர்கள், நீங்களே வந்து என்னைத் தள்ளிவிட்டு விடுவீர்கள். கூலிப்படையை வைத்து அம்முவின் குடும்பத்தையே ஒழித்துக் கட்டிவிடலாம் என்ற எண்ணம் குரூரத்தின் உச்சத்தைத் தொட்டவுடன் எடுத்த முடிவு தான் இது.

அட, சாகப்போற நேரத்துல என்ன இது ஒரு எஸ்.எம்.எஸ், அம்முவாக இருக்குமோ !!இல்லை அவளிடம் இருந்து வரவில்லை. இந்த எஸ்.எம்.எஸ் பத்தி கடைசியாச் சொல்றேன். சரி என் கதையைக் கேளுங்க. தோனி பத்து சிக்சர்கள் அடித்து இலங்கையை ஓட ஓட விரட்டுன ஆட்டம் ஞாபகம் இருக்கா, அன்றைக்குத்தான் திருப்பரங்குன்றம் சன்னதித் தெருவில், வைரமுத்துவின் கவிதைப் போல ஆறு டிகிரியில் அவள் தலைச் சாய்த்து செய்த புன்னகையில் மெல்ல படிப்பிலும் வாழ்விலும் எழ ஆரம்பித்த நான், வெறும் நட்போடு நிறுத்தி இருந்தால் இந்நேரம் மெரினா கடற்கரையில் என் முறைப்பெண்ணை மனைவியாக்கி சுண்டல் சாப்பிட்டுக் கொண்டு இருந்திருப்பேன்.


"நோ" என்பதற்குப் பதிலா "எஸ்" னு சொல்லுவது இப்படித்தான் நிர்க்கதியா மூலையில போய் உட்கார வைத்துவிடும். எனது நான்காம் ஆண்டு தொடக்கத்தில்,

"கார்த்தி, நீ என் அத்திம்பேர் மாதிரி பாரின்ல பி.எச்.டி பண்ணனும், அதுக்கு முதல்ல நீ மாஸ்டர்ஸ் படிக்கனும்"

"நான் படிச்சி என்னப் பண்ணப்போறேன், கேம்பஸ் ல வேலைக் கிடைச்சிடுச்சின்னா, ஜம்முன்னு செட்டிலாயிடலாம்னு இருக்கேன்"

"இல்லடா, அப்போதான் என் வீட்டுல பேசமுடியும்"

"நீ எதுக்காக வீட்டுல பேசனும்" சொல்லி முடிப்பதற்குள் பொறித் தட்டியது. பெண்கள் தங்களைக் காதலைச் சொல்லும் அழகே அழகு. முன்ன ஒரு தடவை 'அடுத்த ஜென்மத்தில உன்னோட அத்தைப் பொண்ணா பொறக்கனும்'அம்மு சொல்லியபொழுது ஏதோ விளையாட்டாகச் சொல்கிறாள் என்றுதான் நினைத்தேன். மீசையை முறுக்கும் அப்பா, மாநிறத்திற்கும் சற்றுக்குறைவான நிறத்தில் இருக்கும் முறைப்பெண் எலலாரும் நினைவுக்கு வந்தனர்.

என் கல்லூரியின் கதாநாயகியே என்னிடம் வந்து கேட்கும்பொழுது என்ன செய்வது, "ஆமாம், அப்போதான் வீட்டுல ஒத்துக்குவாங்க, படிப்பு பெரிய ஈக்வலைசர்".

ஜீ.ஆர்.இ, டோஃபல், ஐஈஎல்டிஎஸ் தேர்வுகளுக்காக ஹாக்கி, கலாச்சார விழாக்கள், கவிதைக் கிறுக்கல்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. 60
விழுக்காடுகளில் இருந்த நான், சொன்னால் நம்ப மாட்டீர்கள் கடைசி இரண்டு செமஸ்டர்களில் 85 விழுக்காடுகளைத் தொட்டேன். சுவீடன் பல்கலைகழகம் கூட அம்முவின் தேர்வுதான். அவளுக்காக என்னுடைய சுயசிந்தனையை சமரசம் செய்து கொண்டு, அவள் எனக்காக எல்லாமுமாக இருப்பாள் என நம்பிக்கொண்டிருந்தபொழுது, இப்படி நட்டாற்றில் விட்டுவிட்டுப் போனால் நடுக்கடல் தானே முடிவு. அவள் கடைசியாக எனக்கு அனுப்பி இருந்த ஆங்கில மின்னஞ்சலின் தமிழாக்கம் இதுதான்

"திக்கற்ற காட்டில் இருந்த உன்னை, உன்னை வழிநடத்தி இத்தனைத்தூரம் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன், இதோ உன் படிப்பு இனிமேல் விளக்காக
வழிகாட்டட்டும். என்னைவிட பாக்கியசாலி ஒருத்தி வந்து உன்னை வழிநடத்திச் செல்வாள்.உன்னை நல்லதோர் வீணையாக்கி விட்டேன், இனி உன் பொறுப்பு"

பொறுப்பாம் பொறுப்பு !!வெறும் பானையில் விளக்கெண்ணெய் கூட வாராது. நெருப்புத்திரியும் எண்ணெயும் இல்லாமல், வெறும் தூண்டுகோலினால் விளக்கு எரியாது. இவளின் சுயலாபத்திற்கு என்னைத் தீண்டி, தூண்டிவிட்டு நல்லதோர் வீணையாக்கி அதை நடுமண்டையில் அடித்து உடைத்து விட்டுப் போய்விட்டாள். அவ்வளவுதான் என் கதை முடியப்போகுது. இறந்துப்போனவர்களில் நல்லவர்கள் சாமியாகவும் கெட்டவர்கள் பேயாகவும் மாறிடுவாங்கன்னு எங்க பாட்டி ஒரு கதை சொல்லி இருக்காங்க. நான் பேயாகத்தான் ஆவேன். பாண்டிச்சேரி போய் அவளைப் பயமுறுத்தனும்.

பார்த்துக் கொண்டே இருங்க , குதிக்கப் போறேன். என், த்வோ, த்ரே, ஃபியரா... அடச்சே இன்னொரு எஸ்.எம்.எஸ்

"ப்ளீஸ் டோண்ட் டு எனிதிங் சில்லி, நுவ்வு வொஸ்தானெண்டே நேனு ஒத்தண்டானா"

தெலுங்கை அப்படியே ஆங்கிலத்தில் வாசுகி அனுப்பித்து
இருந்தாள்.படித்து முடிப்பதற்குள் மற்றுமொரு எஸ்.எம்.எஸ்

"எவரு வெல்லிப்போயினா, நேனு நா ஜீவிதம் நீதொனி உண்டானு, ஐ லவ் யூ" .

வாசுகி ரெட்டி விசாகப்பட்டினத்து பொண்ணு, என் கூடத்தான் படிக்கிறாள். அம்முவிற்குப் பின் தன்னைத் தான் பிடிக்க வேண்டும் என சமீபகாலமாக என் பின்னாடியே வருபவள், என் மரணவாக்குமூலத்தை கைப்பட ஆங்கிலத்தில் எழுதி சரியாக 4 மணிக்குப் படி என அவளிடம் தான் கொடுத்து வந்திருந்தேன். அவசரக்குடுக்கை முன்னமே படித்துவிட்டு இதோ கைபேசியில் அழைக்கிறாள். மரணப்படுக்கையில் உன் நினைவுகள் மறக்காது என அல்லவா அம்முவிடம் சொல்லி இருந்தேன். ஆனால் அம்முவிட்ட இடத்தில் வாசுகியைத் தொடர வைக்கலாமா என சபலம் அல்லவா தட்டுகிறது. வாசுகியின் காதலுக்கு சம்மதம் சொல்லிடவா !! சம்மதம் சொன்னால் இன்றைக்கு பால்டிக் கடல் முனையில் நிற்பது போல, நாளைக்கு வங்காள விரிகுடாவில் நிற்க வாய்ப்புகள் அதிகமே. அட அதை அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். அப்படி ஒன்றுநடந்தால், அங்கேயும் வாங்க, இதைவிட சுவாரசியாமாக வாசுகி கதையையும் சொல்றேன்!! இப்போ என் வாசுகிகிட்ட பேசனும், நீங்க கிளம்புங்க.
Friday, May 14, 2010

சுயதம்பட்டம் - ஆனந்தி மே மாத இதழ் - சிகரங்களின் சிகரம் சச்சின் டெண்டுல்கர்

கணினியில் உட்கார்ந்து ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் தமிழில் எழுதினாலும் கைகளில் குழந்தையைப்போல தவழும் அச்சு ஊடகங்களில் நாம் எழுதியதை வாசிக்கையில் வரும் மனநிறைவுக்கு ஈடு ஏதுமில்லை.டெஸ்ட் ஆட்டம்போல பக்கம் பக்கமாக கூட எழுதிவிடலாம், இருபதுக்கு இருபது ஆட்டம்போல அச்சு ஊடகத்திற்காக வார்த்தைகளை கட்டுக்குள் வைத்து எழுதுவது சிரமமாகத்தான் இருக்கிறது. கிரிக்கெட்டின் இமயமான சச்சின் டெண்டுல்கரைப் பற்றி எழுதிக் கொடுக்கும் படி 4தமிழ்மீடியாவின் ஆனந்தி சஞ்சிகைக் குழுமம் கேட்டபின், மட்டைபந்தாட்டத்தின் மாவீரனை அரைப்பக்கத்திற்குள் சுருக்கி எழுதியது இந்த மே மாத ஆனந்தி இதழில் வெளிவந்துள்ளது.ஆனந்தி சஞ்சிகையைப் பற்றி நான் எழுதி அனுப்பி இருந்த சில வார்த்தைகளும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது.என்னுடைய நேரிடையான படைப்புகள் இதுவரை எதுவும் வெகுசன அச்சு ஊடகங்களில் வெளிவராவிடினும் புதியதலைமுறையின் சுவீடன் கட்டுரையைத் தொடர்ந்து, ஆனந்தியிலும் என் எழுத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.


ஆனந்தி மே மாத இதழை இணையத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்

Thursday, May 13, 2010

நடு இரவில் - திரைப்படக் கண்ணோட்டம்

தமிழில் சஸ்பென்ஸ்-திரில்லர் வகையில் வந்தத் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் சிறப்பான சிலத் திரைப்படங்கள் ஜெய்சங்கரோ ரவிச்சந்திரனோ நடித்து 60 களிலேயே வந்துவிட்டன. அதிர்ச்சியூட்டும் முடிச்சுகள் இருந்தாலும் ரசிகர்களை மறுமுறை திரையரங்கத்திற்கு வரவழைக்கவும் படத்தின் வியாபர மதிப்பைக் கூட்டவும் கவர்ச்சி நடனங்களும் வலுவில் திணிக்கப்பட்ட பாடல், சண்டைக் காட்சிகளும் இருக்கும். அப்படியானக் காலக் கட்டத்தில் கவர்ச்சி நடனமோ , சண்டைக் காட்சிகளோ இல்லாமல் கதைக்கு தேவையான வெறும் இரண்டு பாடல்களுடன் வெளிவந்த படம் தான் 'நடு இரவில்'.

ஒரு பெரிய மாளிகை ,அங்கு வசிக்கும் பணக்கார தம்பதியினர் , அவர்களின் குடும்ப டாக்டர், சில வேலைக்காரர்கள், தம்பதியினரின் உறவினர்கள், சிலக் கொலைகள் ஆகியனவற்றுடன் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாகச் செல்லும் 'நடு இரவில்' படத்தின் இயக்குனர் எஸ்.பாலசந்தர். தானே ஒரு இசை விற்பன்னராக இருந்தாலும் 'அந்த நாள்' படத்தில் பாடல்களை எதுவுமே வைக்காமல் சமகால உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர். பிற்காலத்தில் வீணை எஸ்.பாலசந்தர் என வீணை மீட்டலில் சக்கரவர்த்தியான இவர் இயக்கிய கடைசிப் படம் 'நடு இரவில்'. கலையுலகில் இருப்பவர்கள் எல்லாம் கடைசியில் கரை சேரும் இடம் என சினிமாவை நினைத்துக் கொண்டிருக்கையில் , சினிமாவில் அசத்தலானப் படங்களைக் கொடுத்தபின்னர், தனது சங்கீதத் தேடலை வீணையில் தொடர, திரைப்பட உலகை விட்டு தூரம் சென்றது , திரைரசிகர்களுக்கு ஒரு இழப்புதான்.

வல்லவனுக்கு வல்லவன் அல்லது வல்லவன் ஒருவன் படங்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்த பொழுது எதேச்சையாக 'நடு இரவில்' படம் சிக்கியது. அந்த நாளில் அசத்தலாக கதை சொன்னவரின் படம் என்பதால் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. துப்பறியும் படங்களில் நிஜக்குற்றவாளி யார் என ரசிகனால் எவ்வளவு தாமதமாக ஊகிக்க வைக்க முடிகிறதோ அந்த அளவிற்குப் படத்தின் வெற்றி இருக்கிறது. முடிச்சு அவிழ 5 நிமிடம் இருக்கும் பொழுதுதான் குற்றவாளியை ஊகிக்க முடிந்தது.

தாழ்த்தப்பட்ட பெண்ணை மணந்து கொண்டதால் உடன் பிறந்தவர்களால் மிகுந்த துன்பத்துக்குள்ளான செல்வந்தர் தயானந்தம் (மேஜர் சுந்தர்ராஜன்), உறவுகளை வெறுத்து தனித்தீவு மாளிகையில் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பொன்னியுடன் (பண்டரிபாய்) வாழ்ந்து வருகிறார். பராமரிப்புகளுக்காக சில வேலைக்காரர்கள்( கொட்டாப்புளி ஜெயராமன், சோ, ராமானுஜம் மற்றும் சரோஜா ).

தயானந்தத்தின் நண்பரும் , குடும்ப மருத்துவருமான சரவணன் (எஸ்.பாலசந்தர்) தயானந்தத்திற்கு ரத்தப் புற்றுநோய் சிலவாரங்களில் இறந்துவிடுவார் எனச்சொல்லுவதுடன் படம் துவங்குகிறது. கோடிக்கணக்கான சொத்துகள் வாரிசு இல்லாமல் போய்விடக்கூடாதே என்றும், பொன்னியை எதிர்காலத்தில் கவனிக்க ஒருவர் வேண்டும் என்பதற்காகவும் தயானந்தம் வெறுக்கும் உறவுகளை, டாக்டர் சரவணன் வரவழைக்கின்றார்.
அண்ணன்(சி.வி.வி. பந்துலு), அண்ணனின் மகள்(வி.ஆர்.திலகம்) மற்றும் அவளின் கணவன்(கோபாலகிருஷ்ணன்), கோபக்காரத் தம்பி (ஈ.ஆர்.சகாதேவன்), அவரின் மனைவி (எம்.எஸ்.எஸ்.பாக்கியம்), மகள் (கல்பனா), கண்பார்வை இழந்த மற்றும் ஒரு தம்பி (வி.எஸ்.ராகவன்), அவரின் மகள் (சௌகார் ஜானகி), இரண்டு மகன்களுடன் (விஜயன், சதன்) வரும் மற்றொரு தங்கை (எஸ்.என்.லட்சுமி), இறந்துபோன மற்றொரு அண்ணனின் மனைவி (எஸ்.ஆர்.ஜானகி) , அவரது மகன் (மாலி) என ஒட்டு மொத்த உறவுகளும் தீவு பங்களாவிற்கு வந்து சேர்கின்றனர்.
என்னடா இது படத்தில் நடிக்கும் அத்தனை பேரையும் சரியாக எழுதி இருக்கின்றதே எனப் பார்க்கின்றீர்களா !! படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்குப்பிறகு அனைத்து கதாபத்திரங்களையும் ஒவ்வொருவராக கதையின் ஓட்டத்துடன் அறிமுகப்படுத்தி பெயர் போடும் உத்தியினால் விளைந்த உபயம். படத்தில் இவர்களைத் தவிர வருபவர்கள் கடைசியில் வரும் நான்கு போலிஸ்காரர்கள். அவர்களுக்கு வசனம் கிடையாது. ஆக மொத்தம் 24 கதாபாத்திரங்கள் மட்டுமே.

அன்றைய இரவில் யாருமே இல்லாமல் பியானாவில் தானாகவே இசை வாசிக்கப்படுதல், காற்றடித்து திரைச்சீலைகள் நகர்ந்து நிழலுருவங்கள் தெரிவது என திகிலுடன் வந்திருக்கும் உறவினர்களுக்கு மாளிகை வாழ்வு ஆரம்பிக்கின்றது. அடுத்த சில தினங்களில் மேஜர் சுந்தர்ராஜனின் அண்ணியை அனைவரும் தேட, எல்லோரும் அமர்ந்திருக்கும் சாப்பாட்டு மேஜையின் அடியிலேயே கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டு கிடைக்கிறார். அடுத்ததாக மூத்த அண்ணன் தற்கொலை செய்து கொள்ள, மேஜர் சுந்தர்ரஜனின் மீதும் அவரது டாக்டர் நண்பரின் மேலும் சந்தேகம் விழுகிறது. இதனிடையில் சௌகார் ஜானகி , பண்டரிபாயின் மேல் பிரியமாய் இருக்க, உறவினர்கள் தீவை விட்டு வெளியேற விரும்பியும் மேஜர் சுந்தர்ராஜன் அனுமதிக்க மறுக்கிறார்.
பணம் , நகைகளைத் திருட நினைக்கும் தங்கை மகனும் அண்ணன் மகனும் , நகைகள் இருக்கும் பீரோவில் எஸ்.என் லட்சுமியை பிணமாகப் பார்க்கின்றனர். படகுத்துறையில் தப்பிக்க நினைக்கும் ஈ.ஆர்.சகாதேவன் சுட்டுக்கொல்லப்படுகிறார். பியானோ வாசிக்கப்படும் மர்மம் விலக, கண் தெரியாத வி.எஸ்.ராகவன் மடிப்படிகளில் இருந்து உருட்டிவிடப்படுகிறார். அடுத்து மொட்டை மாடியில் இருந்து பண்டரிபாயும் தள்ளிவிடப்பட்டு சாகடிக்கப்படுகிறார். அடுத்து யார் கொல்லப்படுவோமோ என திகிலுடன் எஞ்சிய உறவினர்கள் நாட்களை நகர்த்த, சௌகார் ஜானகியை பின்னாலில் இருந்து கொல்ல வரும் உருவத்தை மேஜர் சுந்தர்ராஜன் சுட, சுடப்பட்ட உருவம் டாக்டராக இருக்கும் என நினைக்கையில் மாடியில் இருந்து டாக்டர் 'ஏதோ துப்பாக்கிச் சத்தம் கேட்டதே ' எனக் கேட்டபடி வெளியே வருகிறார்' . (டைரக்ஷன் - எஸ்.பாலசந்தர் என இங்குதான் போடப்படுகிறது ) கொலைகாரன் யார் எனத் தெரிகையில் உறவினர்களுக்கு மட்டுமல்ல , பார்க்கும் நமக்கும் தான் அதிர்ச்சி.
சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி, சோ, எஸ்,என்.லட்சுமி ஆகியோரைத் தவிர ஏனையவர்கள் தற்கால ரசிகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள். இறுக்கமான படத்தில் சோ, மாலி, சதன் ஆகியோரின் கதையுடன் ஒன்றிய நகைச்சுவை கொஞ்சம் புன்னகைக்க வைக்கின்றது. அந்தக்காலத்து அஷ்டாவதனியாக கதை, இசை, தயாரிப்புடன் இயக்கி டாக்டர் சரவணனாக வரும் எஸ்.பாலசந்தரே படத்தில் நம்மை கவர்பவர். உதட்டில் சிகரெட்டை வைத்துக் கொண்டே இவர் பேசும் பாணி, ஆங்கில வசனங்களின் உச்சரிப்பு மனிதர் நிஜமாகவே பின்னி இருக்கிறார். இயக்குனராக மட்டும் அல்ல, நடிகராகவும் எஸ்,பாலசந்தரை இசைக்குப் பறிகொடுத்து இருக்கிறது தமிழ்த் திரையுலகம். (சாதனைக்கு சினிமா, ஆராதனைக்கு வீணை என அடிக்கடி எஸ்.பாலசந்தர் சொல்லுவாராம்)
நூறு வயலின்கள் கதறுவதை விட, தொடர்ந்த மவுனம் தான் திகிலுக்கு சரியான பின்னணி இசைக்கோர்வையாக இருக்க முடியும். பல இடங்களில் நிசப்தமே பயமூட்டுகின்றது. கேமராக் கோணங்கள், குறிப்பாக ஈ.ஆர்.சகாதேவனின் பிணத்தை நடு வீட்டில் போட்டு வைத்து அனைவரும் அழுது கொண்டிருக்கும் பொழுது தொங்கு விளக்கின் கோணத்தில் உச்சியில் இருந்து காட்டுவது அபாரம். பண்டரிபாய் மாடியில் தள்ளப்படுவதற்கு முன் கொலைகாரனாக வரும் கேமரா, ஒரு மனிதன் நின்றால் சத்தமில்லாமல் நடந்து வந்து நின்றால் ஏற்படும் தள்ளாட்டங்களையும் காட்டி நிற்பது அருமை.

அடுத்தடுத்து வரும் கொலைகளும் அதனால் வரும் பாத்திரங்களுக்கு வரும் பயத்தைக் காட்டியிருக்கும் விதமும், படத்தில் எட்டிப்பார்க்கும் நாடகத் தன்மையை எட்டித்தள்ளி விடுகின்றன. இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பங்கள் போல் ஏதும் இல்லா காலக் கட்டங்களில் இருப்பதை வைத்து ஒரு நிறைவான படத்தைக் கொடுத்த வீணை எஸ்.பாலசந்தர் தமிழில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியவர். படம் வெளியாகி 45 ஆண்டுகளுக்குப் பின்னரும் சலிப்பின்றி ஒரு முறை இந்தப் படத்தை நிச்சயமாகப் பார்க்கலாம்.

அதிவேக இணைப்பு இருப்பவர்கள் இந்தச் சுட்டியில் படத்தை பார்க்கலாம்
Tuesday, May 11, 2010

கடவுள் வருகிறார் - சிறுகதை

கடவுள் வரப்போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. நாளிதழ்கள், சஞ்சிகைகள், பண்பலை ஒலிப்பரப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதை எடுத்தாலும் பக்கத்திற்குப் பக்கம் கடந்த ஒரு வாரமாகவே கடவுளைப் பற்றிய செய்திகள்தாம். சென்ற மாதம் தர்மசாலாவில் வாழ்ந்து வரும் பத்து வயது திபெத்தியச் சிறுவன் கண்ட கனவை ஒரு வட இந்தியப் பத்திரிக்கை வெளியிட்டபொழுது யாரும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

மற்றும் ஒரு மறுபிறப்பு, அவதாரம் போன்ற கட்டுக் கதைகளில் ஒன்று என என்னைப்போலவே உலகமும் நினைத்தது. பூமியைச் சுற்றி இரு வளையங்கள் ஒன்றுக்குன்று செங்குத்தாக உருவாகும், அதன் பாதையில் கடவுள் வருவார் என்பதுதான் அந்தக் கனவின் சாராம்சம். இருவளையங்கள் தோன்றுவது வரைத் தெளிவாகச் சொன்ன சிறுவனால் அந்தப் பாதையில் தலாய்லாமாவைப் போல ஒருவர் வந்தார் என்ற பொழுது சீனாவிற்கான பதில் தும்மலாக இருக்குமோ என சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டது. இந்தக் கனவுச் செய்திப் பரவிய சிலதினங்களில் தென்னமெரிக்காவின் மையத்தில் இருக்கும் பராகுவே நாட்டில் கைதுச் செய்யப்பட்ட ஒரு போராளியின் கனவிலும் இதேக் காட்சி இருவளையங்கள், இங்குத் தலாய்லாமாவிற்குப் பதிலாக செகுவேரா.

தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் ஒற்றை செல் உயிரி அமீபா பல செல்கள் உயிர்களாக மாற்றம் அடைந்து உலக உயிர்கள் உருவானவை என்றக் கருதுகோளை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சி செய்யும் உலகத்தின் மிகப்பெரும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளன் ஆன எனக்கு கடவுள் வருவார், கடைசி தீர்ப்பு தருவார் போன்ற விசயங்கள் எல்லாம் கவுண்டமணியின் நகைச்சுவையை விட அதிக சிரிப்பைத்தான் தந்தன. கனவாம் கடவுளாம் !! ஒரு செல்லுக்குள் உலகத்தையே அடங்க வைக்க முடியுமா, என கடவுளையும் கடந்த்துயோசித்துக் கொண்டிருக்கையில், வேலையற்றவன் கண்ட கனவு இப்படி அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றதே என்ற எரிச்சல் தான் மிகுதியாய் இருந்தது.

பிள்ளையார் பால் குடித்த கதையாய், நடிகர், நடிகைகள், குடும்பத்தலைவர்கள்,தலைவிகள், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஊழல் வழக்கில் விடுதலையான அரசியல்வாதிகள், நிஜ சாமியார்கள்,போலிகள், நாத்திகர்கள் , பிச்சைக்காரர்கள், சமூக சேவகர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என சமூகத்தின் பல்வேறு அடுக்கு மக்களுக்கும் ஒரே மாதிரியான கனவு வருவதாக, நாடுகள், மொழிகள் கலாச்சாரங்கள் கடந்து முதலில் செய்தியாகவும், பின் வதந்தியாகவும் கடைசியில் பீதியாகப் பரவ ஆரம்பித்ததும் அந்தக் கனவு வராதவர்கள் பாவிகள் என்றாயினர். ஒரு மாதத்தில் பாவிகளின் எண்ணிக்கை சில ஆயிரத்திற்குள் வந்தது. கடவுளே மனிதனின் மிகச் சிறப்பான கண்டுபிடிப்பு என்ற அடிப்படை புரிதலுடன் இருக்கும் எனக்கு கனவிலாவது கடவுள் எப்படி இருப்பார் எனத் தெரிந்து கொள்ள ஒரு ஆவல். என் மனைவி அம்முவிற்கோ தான் நம்பும் கடவுள் தான் நம்பியபடியே இருப்பாரா என அறிய ஆர்வம்.


'நமக்கு எப்போடா அந்த ட்ரீம் வரும்' , தான் தாய்மை அடைவது தள்ளிப்போவதைக் கூட இவ்வளவு வருத்தத்துடன் அம்மு கேட்டதில்லை.

வேறொரு இரவில் 'கார்த்தி, நம்மைச் சேர்த்து வச்சது கூட கடவுளின் வசனம்தான்டா'

'ஞாபகம் இருக்குடா குட்டிமா !! அன்னைக்கு மட்டுமில்ல இப்பவும் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்றேன்...உனக்கு மட்டும் '

'கார்த்தி நம்ம வாழ்க்கையே கடவுளோட கனவுதான்னு என் பாட்டி சொல்லுவாங்க'

அதற்கு மேல் நான் ஏதும் பேசாமல் தூங்கிவிட்டேன்.

சாமானிய மக்களுக்குத் தோன்றிய கனவு, உலகத் தலைவர்கள் சிலருக்கும் ஏற்படத் தொடங்கியதும் உடனடியாக ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. வளையங்கள் தோன்றுவது வரை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் கனவு, கடைசியில் கடவுளுக்குப் பதிலாக அவரவர்கள் விரும்பும் மனிதர்கள் அந்த வளையங்களில் இருப்பது போல பதிவான பின்னர் கடவுள் பற்றிய செய்திகளுக்கு சுவாரசியம் சேர்ந்தது. நிலவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வான்வெளி ஓடம் எடுத்து அனுப்பியப் புகைப்படங்களில் பூமியைச் சுற்றி இரு வளையங்கள் உருவாக ஆரம்பித்திருப்பது புலப்பட்டதும் சுவாரசியத்துடன் அதிர்ச்சியும் கைக்கோர்த்துக்கொண்டது.


கடைசி ஒரு வாரத்தில் உலகில் எந்த மூலையிலும் ஒரு குற்றம் கூட நடைபெறவில்லை.போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறல்கள் இல்லாமல் செயலுக்கு வந்தன. பாலஸ்தீனமும் ஈழமும் அங்கீகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.காவிரியில் கரைத் தொட்டு நீரோடியது. சென்னையில் இருந்து அகமதாபத் செல்லும் ரயில் கராச்சி வரை நீட்டிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் வெள்ளையர்கள் இந்தியர்களையும், இந்தியர்கள் கருப்பர்களையும் கேலி செய்வது நின்றது. எங்குமே குண்டு வெடிக்கவில்லை. விமானநிலையங்களில் தாடி வைத்திருக்கும் , பர்தா போட்டிருக்கும் பயணிகள் நீண்ட காலத்திற்குப்பின்னர் சகபயணிகளைப்போல நடத்தப்பட்டனர். உலக மக்களால் ஒரு வாரத்தில் நல்லவர்களாக முடியும் என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது. பயத்தால் நிரப்பப் பட்டிருந்தாலும் , உலகம் அன்பால் நிரம்பி வழிவதைப் போல தோற்றமளிக்க ஆரம்பித்தது.

'கடவுளுக்கு இவ்வளவு மகிமைன்னா, நியு இயர் மாதிரி வந்துட்டுப்போகலாம்' சொன்னபோது என சக ஆராய்ச்சியாளன் முன்னாள் முழு நாத்திகன் ஆன நீல்ஸ் ஆன்டர்சன் அவ்வளவாக ரசிக்கவில்லை. குடி கும்மாளம், பெண்கள் என கொண்டாட்டமாக வார இறுதிகளில் வாழும் ஆன்டர்சன், இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனவு வந்தபின்னர் , தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டான். கைக்கடக்கமான பைபிள் ஒன்று அவனது மேசையை அலங்கரிக்க ஆரம்பித்தது. ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் நேரிடையானத் தொடர்பு உண்டா என்ன !!

'கடவுள் வரவேண்டாம், நீயே ஜீஸஸ் மாதிரிதான் இருக்கே' என்றதையும் அவன் விரும்பவில்லை.

வெறுங்கண்களுக்கே அந்த வளையங்கள் புலப்பட ஆரம்பித்த நாளுக்கு முந்தைய இரவு, எனக்கும் அம்முவிற்கும் அந்தக் கனவு வந்தது. அவளுக்கு சிறு குழந்தையும் எனக்கு அம்முவும் அந்த வளையங்களில் தோன்றினர். இயற்கையின் சூட்சுமங்களின் மேல் எப்பொழுதும் நம்பிக்கை இருந்தாலும், பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக கடவுள் என ஒருவர் இருக்க வாய்ப்பு இருக்க என்ற எண்ணம் மெலிதாக எட்டிப்பார்த்தது.

அந்த இரு வளையங்களும் நாளுக்கு நாள் பெரிதாக பெரிதாக மக்களின் மனதில் திகிலும் பயமும் அதிகமாகத் தொடங்கியது. பூமிக்குமேல் இருக்கும் வளிமண்டல அடுக்குகளில் கடைசி அடுக்கான எக்ஸாஸ்பியரில் இருந்து தெர்மாஸ்பியர் வரை பரவ உலகின் எந்த முலையில் இருந்துப் பார்த்தாலும் இரு வட்டங்களில் ஏதேனும் ஒரு வளையம் தெரிய ஆரம்பித்தன. பகலில் சிவப்பு, கருப்பு வண்ணங்களில் தெரிபவை இரவில் பளபளக்கும் மஞ்சளாக மாறி இயற்பியல் ஒளிச்சிதறல் விதிகளைப்பொய் என்றாக்கியது.

வளையங்களை ஆராய அனுப்பப்பட்ட இயந்திரங்கள் உலகத்திற்கு அழிவுச் செய்யும் எந்தக் கதிர்வீச்சோ நச்சுப் பொருட்களோ அதில் இல்லை என உறுதிச் செய்தன.வளையங்களின் உள்வடிவம், அடர்த்தி, அழுத்தம், வெப்பம், அங்கிருந்து விண்வெளிக்கு சிதறடிக்கப்படும் சமிஞைகள் நம் விஞ்ஞானிகளுக்குப் புரியும் படி இல்லை, நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஏதோ ஒன்று அதனைக் கட்டுப்படுத்துகின்றன எனவும் இன்றில் இருந்து மூன்றாவது நாள் அந்த வட்டப்பாதைகளில் ஏதோ ஒரு மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாகவும் நாசாவும் இஸ்ரோவும் ஒப்புக்கொண்டன

அறிவியலின் எல்லையில் கடவுளின் அரசாங்கம் , ஆன்மீகமும் அறிவியலும் இணையும் புள்ளியில் கடவுள் என நாளிதழ்கள் தலைப்புச் செய்தியிட்டன. இல்லாதக் கடவுளை சொந்தமாக்கிக் கொள்ள நூற்றாண்டுகளாகச் சண்டைப் போட்டவர்கள், வரப்போகும் கடவுளைத் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள வட்டங்கள் சம்பந்தபட்ட அனைத்து மத வரிகளுக்கும் புதுப்புது விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு விளக்கமும் தனித்தனியேக் கேட்கும்பொழுது ஏற்றுக்கொள்ளும்படித்தான் இருந்த்தன. கடவுள் கூடாது என்பதில்லை, கயமையின் முகத்திரையாக கடவுள் இருந்துவிடக்கூடாது என்று சொன்னவர்களின் கவலை ஒரு வேளைக் கடவுள் வரவில்லை என்றால் உலகம் கலவர பூமியாகிவிடுமே என்பதுதான். வல்லரசு நாடுகளும் ஒரு வேளை கடவுள் வராமல் போனால் ஏற்படும் கலவரத்தைக் கட்டுப்படுத்த தத்தமது ராணுவங்களைத் தயார்படுத்தி வைத்திருந்தன.

' கடவுள் எப்படிடா கார்த்தி இருப்பாரு... மனுஷங்க மாதிரி வருவாரா !! லைட் மாதிரி உருவமே இல்லாம வருவாரா'

'ம்ம்ம், அருண்கோவில் இல்லாட்டி நிதிஷ் பரத்வாஜ் மாதிரி இருப்பாரு அம்மு'

'ஏன் என்.டி.ஆர் மாதிரியோ இல்லாட்டி கே.ஆர்.விஜயா மாதிரி இருக்கக் கூடாதா'

இறுக்கமான மனநிலை கொஞ்சம் இலகுவான பின்னர், நான் தீங்கிழைத்த ஒவ்வொருவராக தேடிக் கண்டுபிடித்து நட்புப் பாராட்டிக்கொண்டிருந்தேன். நான் எட்டாம் வகுப்பில் தேர்வுத்தாள்களைக் கிழித்து எறிந்து இரண்டாமிடத்திற்கு வரவழைத்த விவேக்கைக் கூப்பிட்டு பேசினேன். சாதி ரீதியாக திட்டியச் சிலரையும் , நடத்தையை குறை சொல்லி நான் அழ வைத்த காதலிகளையும் அழைத்து மனதார மன்னிப்புக் கேட்டேன். அம்முவும் அதுபோல சிலரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்கும் சில மின்னஞ்சல்கள் வந்திருந்தன. கடவுளுக்கும் மனிதனுக்குமான நேர இடைவெளி குறைய குறைய அன்பு அதிகமாகி பயம் குறைந்து கொண்டே வந்தது. சக மனிதர்களின் உணர்வுகள் மொழியின் தேவை இல்லாமலேயே புரிய ஆரம்பித்தது போன்ற உணர்வு.

கடவுள் தோன்றப்போகும் நாளுக்கு முந்தைய நாள், நிலவில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களை சக விஞ்ஞானிகள் எனக்கும் அனுப்பி இருந்தனர். அதைக் கண்டதும் சாத்தானைக் கண்டதைப்போல உறைந்துப் போனேன். ஆமாம் நிலவில் இருந்து பன்மடங்குப் பெரிதாகத் தெரியும் பூமி, நேற்றையப் புகைப்படங்களில் ஆயிரத்தில் ஒரு மடங்காக சுருங்கி இருந்தது. தொடர்ந்து அடுத்து சில மணி நேரங்களுக்கு பெறப்பட்டு கொண்டிருந்த படங்களில் புவியின் வடிவமும் வளையங்களின் அமைப்பும் மேலும் சுருங்கி இருந்தன.

தலைமையலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு, ' வீ ஆர் ஷ்ரிங்கிங் எக்ஸ்பொனன்ஷியல்லி ' ஆமாம், பூமியும் பூமியைச் சுற்றி இருக்கும் வளையமும் ஒவ்வொரு நொடிக்கு கடும் வேகத்தில் சுருங்கிக் கொண்டே இருப்பதை விஞ்ஞானம் தெரியாதவனால் கூட உணர முடிந்தது. எல்லோரும் ஒரு மையப்புள்ளியை நோக்கிச் சுருங்கிக் கொண்டே வந்தோம். நானும் அம்முவும் ஒன்றாய் , பின்னர் எங்களால் நேசிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராய் ஒன்றினைந்தோம் அதன் பின்னர் எங்களால் வெறுக்கப்பட்டவர்கள் இப்பொழுது விருப்பமாய், தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், அசையும் கடல்கள், அசையா கட்டிடங்கள் என அனைத்தும் அடர்த்தியாய் ஒன்றானது.

பல பில்லியன் டன்கள் எடையுடன் இருந்த பூமிப்பந்து கண்ணுக்குத் தெரியாத சிறுபுள்ளியில் ஒட்டுமொத்தமாகச் சுருங்கப் போகும் சில மைக்ரோ வினாடிகளுக்கு முன்னர், நிலவில் இருந்து கடைசியா வந்திருந்த புகைப்படத்தில் , சிறுபுள்ளியாய் உட்கருவைப்போல பூமி, அந்த இரண்டு வளையங்களும் இணைந்து உருவாகி இருந்த அமீபாவின் வடிவம் என்னுள் இருந்த அனைவருக்கும் ஒரு சேர விளங்கியது

சுவீடன் மேற்படிப்புக்காக வங்கிக் கடன் கோரும்பொழுது தேவையான கோப்பு

சுவீடனில் மேற்படிப்புக்கு அனுமதி கிடைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நிறைய மாணவர்கள் புதிய தலைமுறையில் நான் எழுதிய சுவீடன் மேற்படிப்புக் கட்டுரையையும் இந்த வலைமனையில் எழுதப்பட்டிருந்தப் பதிவையும் வாசித்து விண்ணப்பித்தவர்கள் என அறியும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. கட்டுரையைப் படித்த பின்னரும் ஆலோசனை மையங்களை அணுகி தண்டமாகச் செலவு செய்து அனுமதிக் கிடைத்தவர்களுக்கும் வாழ்த்துகள். அனுமதிக் கிடைத்தச் சிலர் கல்விக் கடனுக்காக வங்கிகளை அணுகி இருப்பீர்கள். அவர்கள் வழக்கம்போல இந்தப் பல்கலைகழகம்/கல்லூரி உண்மையானது என எப்படி நம்புவது, அங்கீகரிக்கப்பட்டதா என கேள்விகளைக் கேட்டுத் துளைத்திருப்பார்கள்.அவர்களின் கேள்விகளிலும் நியாயம் இருக்கின்றது. இணையதளங்களைக் குறிப்பிட்டாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இத்தகைய சூழலில் சுவீடனில் மேற்படிப்பு படிக்க அனுமதி கிடைத்தவர்கள் உணர்ச்சிவசப்படாமல், வங்கிகளில் கல்விக் கடன் கோரும்பொழுது கீழ்கண்ட கோப்பை தரவிறக்கம் செய்து தாளில் அச்சிட்டுக் கொள்ளவும். இந்தக் கோப்பில் சுவீடன் மேற்படிப்புப் பற்றிய சட்டத் திட்டங்களும்,கல்லூரிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கிறது. இந்தத் தரவு வங்கி அதிகாரிகளுக்குப் போதுமானதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்.

கோப்புக் கிடைக்கும் சுவீடன் அரசாங்கத்தின் தளம் http://www.sweden.gov.se/sb/d/7868/a/21541

முழுக்கோப்பும் இங்கே http://www.sweden.gov.se/content/1/c6/02/15/41/92fc8fff.pdf

Tuesday, May 04, 2010

கால்கமார்க்கன் - சிறுகதை

எதிரில் இருக்கும் பெண்ணை கண்ணாலேயே காமுற்றுக் கொண்டிருக்கும்பொழுது அந்தப் பெண் "உனக்கு பேய்கள் மேல் நம்பிக்கை இருக்கின்றதா?" எனக் கேட்டால் எப்படி இருக்கும்.இதோ அவள் அழகில் சில வினாடிகள் முன் வரை புல்லரித்துப் போய் இருந்த நான், தற்பொழுது பயத்தில் மயிர் கூச்செறிய எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணத்தில் உட்கார்ந்து இருக்கிறேன்.

அவள் சுவிடீஷில் கேட்டது புரிந்தாலும் ஒரு முறை உறுதி படுத்திக் கொள்ள "வாட் டிட் யு ஸே" என்றேன்.

"இந்த உலகத்தில் பேய்கள் இருக்கின்றது என நம்புகின்றாயா" என மறுபடியும் ஆங்கிலத்தில் பதில் சொன்னாள்.

இவள் அரபிஸ்காவா , செர்பிஸ்காவா அல்லது தலைமுடியைக் கருப்பாக்கி இருக்கும் ஸ்வென்ஸ்க் மங்கையா என யோசித்துக் கொண்டே கண்களால் அவளைக் கட்டவிழ்ப்பு செய்து கொண்டிருந்ததை ஒரு வேளை கண்டுபிடித்து விட்டதனால்தான் இப்படி கேட்கிறாளோ. இவளைச் சரிகட்டிவிட்டால் அம்முவை எப்படிக் கழட்டி விடலாம் எனும் அளவிற்குச் சென்ற எண்ண ஓட்டத்திற்கு இவளின் இந்தக் கேள்வி அணைபோட்டது.

"சிறுவயதில் நம்பி இருக்கின்றேன், ஆனால் இப்பொழுது இல்லை, பேய்களை விட உன்னைப்போன்ற அழகான பெண்களிடம் தான் அதிகம் பயம் இருக்கின்றது" பேய் பயத்திலும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு என்னுடைய முதல் கடலை விதையை தூவினேன்.

"நான் விளையாட்டிற்குக் கேட்கவில்லை, அந்த தானியங்கி கதவுகளைப் பார்த்தாயா !! தானாகவே திறந்து மூடுகின்றன, எனக்கு என்னமோ நம்மிருவரைத் தவிர இந்த அறையில் வேறு யாரோ ஒருவரும் உள்ளது போல தோன்றுகிறது" என்றாள் நிதானமான சுவிடீஷில்.

அவள் சொல்லுவதற்கு முன்னமே அந்த தானியங்கிக் கதவுகள் யாரும் உள்ளே வராமல் தானாகவே திறந்து மூடுவதைக் கவனித்திருந்தேன். காற்று அதிகம் இருப்பதனால் பறந்து வரும் இலைகள் அகச்சிவப்புக் கதிர் ஓட்டத்தை தடைப்படுத்துவதால் தானாகவேத் திறந்து மூடிக் கொண்டிருக்கின்றன என்ற எனது அறிவியல் அறிவு எப்பொழுதோ விளக்கி விட்டிருந்தது. எனது கடலையை அடுத்த நிலைக்குத் தள்ள ஒரு வாய்ப்பு கொடுத்த அவளின் பேய்க் கேள்விக்கு மானசீகமாக நன்றிச் சொல்லிவிட்டு , ஒரு இலையை எடுத்து நுழைவு வாயிலின் கதவின் முன் காட்டி அவளுக்கு நிறுபித்ததோடு மட்டுமல்லாமல், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவளின் தோளோடு தோளாக இருமுறை வேண்டுமென்ற உரசியும் பார்த்தேன். கோதுமை மாவு கணக்காய் வழுவழுவென இருந்தாள்.

நள்ளிரவு 12 மணிக்கு கார்ல்ஸ்க்ரோனாவிற்கான கடைசி ரயிலைப் பிடிக்கத்தான் இவளும் காத்திருக்கின்றாள் என்பது புரிந்தது. நானும் அதே ரயிலுக்காகத்தான் காத்திருக்கின்றேன். அம்மு குடிப்போய் இருக்கும் புதிய வீட்டில் தனியாக இருக்க பயமாக இருப்பதனால் கிளம்பி வரச்சொல்லி இருந்தாள். மணிரத்னம் படங்களில் வருவதைப்போல இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொள்வாள், கன்னத்தில் சில சமயங்களில் முத்தம் கொடுப்பாள், சில சமயங்களில் கன்னத்தைக் கடித்துக் கூட வைத்து விடுவாள். ஆனால் அதற்கு மேல் நான் இறங்க முயற்சித்தால் உனக்காக என் அப்பாவின் நம்பிக்கையை குலைக்க முடியாது என அழுகையுடன் சண்டை ஆரம்பிக்கும். கட்டிப்பிடித்தல் கண்ணத்தைக் கடித்தல் அப்பாவின் நம்பிக்கையை குலைப்பது ஆகாதா எனக் கேட்டால் கிடைப்பதுக் கூட கிடைக்காமல் போய்விடும் என்பதனால் தருவதைத் தரட்டும் எனவிட்டுவிடுவதுண்டு.


அவள் இருக்கும் தெருவின் பெயர் கால்கமார்க்கன்,கால்க என்ற சுவிடீஷ் சொல்லின் அர்த்தம் தூக்கில் இடுவது என்பதாகும்.சென்ற நூற்றாண்டில் அங்கு இருக்கும் தெருவில் தான் குற்றவாளிகளைத் தூக்கில் இடுவார்களாம். இதைச் சொன்னதால் தான் அம்முவுக்கு பயம்.
ஏற்கனவே வயதானவர்களின் அழு குரல்கள் கேட்பது போல இருக்கு அவளின் பயத்தோடு இதுவும் சேர்ந்து அவளின் பயத்தை இரு மடங்காக்கியது.வயதானவர்கள் கத்துவதுபோல இருப்பதற்கான காரணமும் எனக்குத் தெரியும். அம்மு இருக்கும் கால்கமார்க்கன் தெருவிற்கு
பின் சில அடிகள் தொலைவில் பால்டிக் கடல். பனிக்காலம் முடிந்து விட்டதால் கடலில் நீள் உறக்கத்தில் இருந்த சீல்கள் வெளியே வந்து தனது துணைகளை அழைக்க இப்படி கூச்சலிடும். அது நோய்வய்யப்பட்டவர்கள் கொஞ்சம் சத்தமாக முன்குவதைப்போல இருக்கும். ஆனால்
இதைச் சொல்லவில்லை. சொல்லாமல் கொஞ்ச நேரம் கெஞ்ச விட்டு, வந்தால் உதட்டில் முத்தம் கொடுப்பதாக அவள் உறுதி அளித்ததானால் சடுதியில் கிளம்பி இங்கு வந்தால் இப்படியான அதிர்ச்சி கலந்த இன்பமான திருப்பம். அங்கு பழம் என்றால் இங்கு பழத்தோட்டமே காத்திருக்கின்றதே!!

12 மணியாக இன்னும் 15 நிமிடங்களும், அதன் ரயில் பயணம் 15 நிமிடங்களும் இருப்பதனால் இவளிடம் எப்படியும் மின்னஞ்சல் வாங்கிவிடலாம் என மனதில் திட்டமிட்டுக் கொண்டே இந்த முறை அவளின் எதிரில் உட்காரமல் வலப்பக்கமாக நெருக்கமாகவே அமர்ந்து கொண்டேன். அளவான செய்ற்கை நறுமணத்துடன், பெண்ணின் வியர்வை வாசமும் கலந்து அடிக்கும் வாசனைதான் அவர்களின் அழகை மெருகூட்டுவதே !! அம்முவின் வாசத்தை விட இவளின் வாசம் உணர்ச்சிவசப்பட வைப்பதற்கான வீச்சு அதிகமாக இருந்தது.

ரயில் வரும் வரையில் நடந்த உரையாடல்களில் நான் தெரிந்து கொண்டவை, அவள் போலாந்து நாட்டைச் சேர்ந்தவள், அவளின் தாத்தா வீடு ரோன்னிபேயின் புறநகர்ப்பகுதிகளில் இருக்கின்றது, அவளின் தாத்தா இரண்டாம் உலகப்போரின் போது கொல்லப்பட்டார். வீடு அரசாங்கத்தின் பரமாரிப்பில் இருக்கின்றது. அம்முவின் வீட்டிற்குச் செல்ல நான் இறங்கப்போகும் ரயில் நிறுத்தமான பெரிஓஸா நிலையத்தில் தான் அவளும் இறங்கப்போகிறாள். ரயிலில் ஏறியபின்னரும் அவளின் அருகில் இருக்கும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டேன்.

"நதியும் குன்றும் சந்தித்துப் பேசிக்கொள்ளும் இடம் என பெரிஓஸா வைப் பொருள் கொள்ளலாம்" என சுவிடீஷ் புலமையைக் காட்டி அசத்தலாம் என்ற பொழுது,

"தெரியும், குன்றும் நதியும் மட்டும் அல்ல, நானும் எனது நண்பர்களும் அங்கு தான் பேசிக்கொள்வோம்" எனச் சொல்லிச் சிரித்தாள். ரயில் பரிசோதகர் வர,அடுத்தப் பெட்டியில் அவளின் நண்பர்கள் இருப்பதாகச் சொல்லி சென்று விட்டாள். பயணச்சீட்டு எடுக்காமல் இருந்திருக்கலாம். பரிசோதகர் என் முன் அவளிடம் கேட்டால் அவளுக்கு அவமானமாக இருக்கும் சென்றிருப்பாள் என நினைத்துக் கொண்டேன்.

தோட்டத்தின் பழங்கள் தன் வசப்படாவிட்டால் ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என , கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என அம்முவை நினைத்தபடியே அடுத்த சில நிமிடங்கள் ஓட, நான் இறங்கும் நிறுத்தம் வந்ததும் , குறைந்த பட்சம் போய் வருகிறேன் என்று சொல்லி விடைபெற அந்த போலாந்துப் பெண்ணைத் தேடினேன். அவளைத் தேடி முடிப்பதற்குள் ரயில் நிறுத்த நடைமேடையில் அம்மு நின்றுகொண்டிருப்பதை பார்த்து விட்டு விடுவிடுவென இறங்கி

"நீ ஏன் ஸ்டேஷனுக்கு வந்த"

"ரொம்ப பயமா இருந்துச்சு, அதுதான் உன்னை ரிசீவ் பண்ண இங்கேயே வந்துட்டேன்"

இந்த ரயில் நிறுத்தத்திற்கும் கால்கமார்க்கன் தெருவிற்கும் 10 நிமிட நடைதான்.

"அந்த அழுவுற வாய்ஸ் சீல்கள் தன்னோடா பார்ட்னர்ஸைக் கூப்பிட கொடுக்கிற சிக்னல்டா அம்மு"

"தெரியும் கூகிள்ல கண்டுபிடிச்சேன், நம்ம ஊருல காக்கா முன்னோர்கள்னு சொல்ற மாதிரி, இங்கே சீல்கள் இறந்து போன ஆன்செஸ்டர்ஸாம்"

அம்முவின் வீடு இருக்கும் குடியிருப்பின் முனையை அடையும் பொழுது,

"கேம்பஸ் பின்னாடி இருக்கிற கடல் மேட்டுல வச்சி உனக்கு கிஸ் கொடுக்கவா" முகத்தை பவ்வியமாக வைத்தபடியேக் கேட்டாள்.

முழுநிலவு, கடல்காற்று, இதற்குமேலும் ரம்மியமான சூழல் கிடைக்காது என கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் கடல்பகுதிக்கு அம்முவை அழைத்துச் சென்றேன். குவிந்த அம்முவின் உதட்டின் அருகே மெதுவாக என் உதடுகளைக் கொண்டுச் சென்றபொழுது என்னை விலக்கிவிட்டு,

"நம்ம இரண்டு பேரைத்தவிர வேற யாரோ இங்க இருக்கிற மாதிரி இருக்குடா"

அந்தப்போலாந்து பெண் சொன்னதைப்போலவே அம்முவும் சொல்ல, பயம் மனதில் மெதுவாக கவ்வ ஆரம்பித்தது.

"இந்தக் கடல்ல சீல்களைத் தவிர வேற யார் இருக்கப்போறாங்க" என மீண்டும் அம்முவை முத்தமிட எத்தணித்தேன். காமம் பயத்தை ஓட வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அணைக்கப்பட்ட முதுகு எண்ணைய் பசையில் இருக்கும் சப்பாத்தி மாவு போல இருக்க, போலாந்துப் பெண்ணின் மணம் என் நாசிகளில் மெதுவாக ஏற ஆரம்பித்தது. இறந்தவர்கள் சீல்களாக மறுபிறப்பு எடுப்பார்கள் என்ற நம்பிக்கையைப் பற்றி படித்தது மின்னலென வந்து மறையவும், எனது உடலும் பிசுபிசுப்பாக சீலாக மாறவும் சரியாக இருந்தது. அந்த பெரிஓஸா கடற்பகுதி முழுவதும் சீல்களின் கூட்டங்கள் ஓலமிட ஆரம்பிக்க,"இதோ கேம்பஸ் வரை போயிட்டு வரேன்னு" சொன்னவனை இன்னமும் காணவில்லையே என அம்மு கலக்கத்துடன் கால்கமார்க்கன் வீட்டில் தூங்க ஆரம்பித்தாள்.

Saturday, May 01, 2010

ஸுஸு - Zozo - அரபி/சுவிடீஷ் மொழிப் படம் - திரைப்பார்வை

போரின் கொடுமைகளையும் அதன் தாக்கத்தையும் விளக்கும் படங்களின் வன்முறைக்காகவே குழந்தைகளின் உடன் அமர்ந்து பார்க்க இயலாது. ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக போரின் தாக்கத்தையும் புலம் பெயர்ந்த இடத்தில் ஏற்படும் சில மனத்தாங்கல்களையும் ஒரு சிறுவனின் பார்வையில் அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம் தான் ஸுஸு. தொன்னூறு சதவீதம் அரபியிலும் பத்து சதவீதம் சுவிடீஷ் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை உள்நாட்டுப்போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த லெபனான் நாட்டில், எண்பதுகளின் இறுதியில் இருந்து துவங்குகிறது.

எலும்புக் கூடாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் பெய்ரூட் நகரத்தில் எஞ்சியிருக்கும் அடுக்கு மாடி நகர்ப்புற குடியிருப்புகளினில் ஒன்றில், சிலவாரங்களில் சுவீடனுக்கான விசா கிடைத்து நிம்மதியான வாழ்க்கையைத் தொடங்கிவிடலாம் என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் லெபனானிய மத்திய வர்க்க குடும்பத்தின் இளையமகனாக கதையின் நாயகன் சிறுவன் ஸுஸு அறிமுகமாகின்றான்.

போர்ச்சூழலிலும் இயல்பாக இருக்கும் அல்லது இருக்க முயற்சிக்கும் பெற்றோர், பதின்ம வயதில் இருக்கும் அக்கா, ‘விமானத்தில் இடம் இல்லையாம், அதனால அடுத்த முறை சுவீடன் கூட்டிட்டுப்போய் நிச்சயமாய் திருமணம் செய்து கொள்கிறேன்‘ என எதிர்வீட்டில் இருக்கும் பெண்ணுடன் ஈர்ப்பாய் இருக்கும் மூத்த சகோதரன் ஆகியோருடன் , சுவிடீஷ் கனவுகளுடன் நாட்களை நகர்த்தி வரும் ஸுஸுவின் வாழ்வில் இடி வீட்டின் மேல் குண்டாக வந்து விழுகிறது.

சுவீடன் கிளம்பும் அன்று தனது குடும்பத்தினரை போரின் குண்டு வீச்சுகளுக்கு பலி கொடுத்து மூத்த சகோதரனுடன் தப்பி ஓடி, அவனையும் ஒரு கட்டத்தில் இழந்து நிராதரவாய் இருக்கும் ஸுஸுவிற்கு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் கீர்த்தனாவைப்போல ஒரு சினேகிதி, நல்மனம் படைத்த ராணுவ அதிகாரி ஆகியோரின் உதவி கிடைத்து சுவீடனுக்குப் பயணமாகின்றான்.

குடும்பமே வரும் என எதிர்பார்த்திருந்த தாத்தா பாட்டிக்கு, கடைசிக் கிளையாவது எஞ்சியதே என ஒற்றை ஆறுதலுடன் அவனை சுவிடீஷ் பள்ளியில் சேர்க்கின்றனர். பள்ளியில் ஏனையோருடன் அன்பாக இருக்க நினைக்கும் ஸுஸுவிற்கு வன்முறையே பதிலாக கிடைக்கின்றது.

“யார் அடித்தாலும் திருப்பி அடி, என் பேரன் அடி வாங்கி திரும்பக்கூடாது ” என அடிக்கு அடி பழிக்குப் பழி போதிக்கும் பிரியமான தாத்தாவின் பேச்சையும் மீறி கடைசி வரை வன்முறையை எடுக்காமல் வரும் தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ளும் ஸுஸுவிற்கு சக சுவிடீஷ் மாணவனின் நட்பு கிடைப்பதுடன் படம் நிறைவேறுகிறது.

படத்தின் நாயகனைப்போலவே 10 வயதில் லெபனானில் இருந்து சுவீடனுக்குப் புலம்பெயர்ந்த இயக்குனர் ஜோசப் பரேஸ், ஸுஸு வின் பார்வையில் தன் வாழ்க்கை அனுபவங்களை இயக்கி இருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பல பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் இடம் பெற்று பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கின்றது.

இழந்ததை இழந்துவிட்டோம், பேரனிடம் குடும்பத்தைப் பற்றிக் கேட்டு அவனை வருத்தப்படுத்துவதை விடுத்து நம் துக்கத்தை ஜீரணித்து அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்வொம் என வரும் தாத்தா பாட்டி உரையாடல்கள், நமது ஈழத்துத் தோழமைகளின் துயரங்கள் கண்ணில் நிழலாடிச் சென்றது. சிறுவன் ஸுஸுவின் இடத்தில் தமிழ் பேசும் சுபர்ணனையோ அல்லது தமயந்தியையோ வைத்துப் பார்த்த பொழுது மனதைக் கவ்விக்கொண்ட holocaust survivor’s guilt, கண்ணில் ஓரத்தில் நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தவுடன் (வழக்கம்போலவே )விலகியது.

முதல் 60 நிமிடங்களுக்கு, கதை லெபனானில் நிகழும் வரை தொய்வில்லாமல் நகரும் திரைப்படம் , சுவீடனுக்கு நகர்ந்த பின்னர் தொந்தரவு செய்யும் மூத்த மாண்வர்கள், நட்புப் பாராட்டுபவர்கள் காட்டிக்கொடுக்க, எரிச்சல் அடையும் கதாநாயகச் சிறுவன் என வழக்கமான பாணியில் பயணம செய்கின்றது. பிற்பாதியில் இதைச் சரி செய்யும் ஒரே காட்சி, மூத்த மாணவர்கள் தொந்தரவு செய்ய கோபத்தின் உச்சிக்கு செல்லும் ஸுஸுவின் முன் மாயையாக விரியும் சுவிடீஷ் பள்ளிக் குண்டு வெடிப்புக் காட்சி தான். “ஏனம்மா, என்னை விட்டுட்டுப்போனாய்” என அந்தக் காட்சியில் தன்னைக் காப்பாற்ற வரும் அம்மாவிடம் கேட்பதுடன் தனது தந்தை, சகோதரன், சகோதரியையும் பார்க்க தனது மனதை மீண்டும் அன்பால் நிரப்பி தொந்தரவு செய்தவர்களை விட்டுச் செல்கின்றான்.

ஸுஸுவின் குடும்பத்தினர், தாத்தா, பாட்டி, சிறுவயது தோழி ரீட்டா, சிலக்காட்சிகளிலேயே வரும் கதாபாத்திரங்கள் என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் அளவில் தேர்ந்தெடுத்தமைக்காக இயக்குனரை நிச்சயமாகப் பாராட்டலாம். இவரின் படங்களுக்குத் தங்களின் உறவினர்களையே நடிக்க வைப்பாராம்.

படம் முடிந்தபின்னரும் நீண்ட நேரத்திற்கு ஸுஸுவாக நடித்த இமாத் கிரெய்டியின் பாசம், மிரட்சி, சோகம், ஏக்கம் என அனைத்தையும் காட்டும் கண்கள் நம் கண்களில் நிற்கும். ரீட்டா கேன் ரீட்டா (Rita kan rita ) ரீட்டாவினால் படமும் வரைய முடியும் என ஸுஸு சுவிடீஷில் சிலேடையாகக் கூறுவது, ஆப்பிளில் உப்புத் தடவிச் சாப்பிடுவது, பெண் தோழமையைப் பற்றி பேசிக்கொள்வது என ஆங்காங்கே மனதிற்கு இலகுவான காட்சியமைப்புகளும் உண்டு.

ஒரு பக்கம் அகண்ட சிரியாவை அமைக்கும் கனவுடன் இருக்கும் சிரியா, மறுப்பக்கம் யூதக் குடியரசை மேற்காசியாவில் மேலும் வலுப்படுத்த எதையும் செய்ய துணியும் இஸ்ரேல், வேறொரு பக்கம் அழையா விருந்தாளிகள் பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் என உள்நாட்டுப்போரினால் சின்னா பின்னமான லெபானான் நாட்டில் நடக்கும் கதையில் , பள்ளியில் பிரெஞ்சு சொல்லிக் கொடுப்பது, (ஒட்டோமான் பேரரசு வீழ்ந்தபின் பிரெஞ்சு காலனியாக லெபனான் இருந்தது) ஸுஸுவையும் அவனது சகோதரனையும் துரத்தும் படையினர் முகமுடி அணிந்திருப்பது(ஹிஸ்புல்லாவைக் குறிக்கிறதோ), பின்னணியில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள், உதவி செய்யும் ராணுவம் (லெபனானின் ஒரு பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்தது) என சில நுண்ணரசியல்களும் உண்டு. ஏனைய மேற்காசிய அரபு நாடுகளைப் போல லெபனானில் பெண்கள் முழு அங்கி அணிந்துதான் வர வேண்டும் என்றக் கட்டுப்பாடு எல்லாம் கிடையாது என்பதை இங்கு சுவீடனில் வசிக்கும் ஒரு லெபனான் பெண் சொல்லி இருந்த போதிலும் இந்தப் படத்தைப் பார்த்த பின் உறுதியானது.
போரினால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளையும் புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்படும் அடையாளச்சிக்கல்களையும் மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் சொல்ல வந்ததன் சாராம்சத்தை ஸுஸுவின் பார்வையில் ஜோசப் பெரஸ் தந்து இருப்பதைப்போல , யாராவது ஒருவர், வணிக ரீதியிலான எந்த அம்சத்திலும் சிக்கிக் கொள்ளாமல் நம் மக்களின் வலியையும் வரலாற்றில் திரைப்படமாகப் பதிவு செய்ய மாட்டார்களா எனத் தோன்ற வைத்ததும் இந்தப் படத்தின் வெற்றி.

-------

லெபனானைப் பற்றியும் அங்கு ஏற்பட்ட உள்நாட்டுச் சிக்கல்களைப் பற்றி அறிய கீழ்கண்ட சுட்டிகளை வாசிக்கலாம்