Tuesday, May 17, 2011

புத்தர் சிலையும் சிலத் துளிகள் ரத்தமும் - சிறுகதை

கண்ணில் குருதி வழிந்தோடி வானுயர்ந்து இருக்கும் புத்தர் சிலையை, மண்ணோடு மண்ணாக்க காடு மேடு எல்லாம் தாண்டி ஓடி வருகின்றேன். என்னுடன் ஓடிவருபவர்கள் பிண்டங்களாய் சிதறி விழுந்தாலும் ரத்தசகதியில் நான் மட்டும் ஓடிவருகின்றேன். இதோ இன்னும் சில அடிதூரம்தான்.புத்தர் சிலையை தகர்த்து எனது சோழதேசத்து புலிக்கொடியை நடப்போகின்றேன். என்ன ஒரு முரண், பிடித்தமான புத்தரின் சிலை கீழேவிழுந்து சுக்குநூறாக விழுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கின்றதே!!. புலிக்கொடி பட்டொளி வீசிப்பறப்பதை ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில் “ராஜ ராஜ சோழன் நான், எனை ஆளும் காதல்தேசம் நீ ” பாடல் கனவைக் கலைத்தது. கீர்த்தனா தான் கூப்பிடுகிறாள். நேரத்தைப் பார்த்தேன் சுவீடன் நேரம் விடியற்காலை 3 மணி. இந்தியா மூன்றரை மணி நேரம் முன்னதாக இருக்கின்றது.கீர்த்தனாவிற்கும் எனக்கும் ஒரு உடன்பாடு என்னவெனில் உயிர்ப்போகின்ற விசயத்தைத் தவிர வேறு எந்த விசயத்திற்காகவும் அதிகாலை நேர உறக்கத்தை கலைக்கும் விதத்தில் தொலைபேசியில் அழைக்கக்கூடாது என்பதுதான். என்ன பிரச்சினையோ என யோசித்துக்கொண்டே “குட் மார்னிங் அம்மு' என்றேன்.


கார்த்தி, இப்போதாண்டா பேப்பர்ல பார்த்தேன், சுட்டுக்கொன்னுட்டாங்கன்னு போட்டு இருக்கு,கவலையா இருந்துச்சுடா, அதுதான் கூப்பிட்டேன்'

அம்மு, டோண்ட் வொர்ரி, அவரை இதுவரைக்கும் ஏகப்பட்ட தடவை கொன்னு இருக்காங்க,கடைசியா சுனாமி வந்தப்பக்கூட ஒரு தடவை செத்துப்போனாரு..”


கடந்த ஒருவார காலமாக போர்க்கள செய்திகளை இணையத்தில் படிக்கும் போது மனதுக்குப்பாரமாகவே இருக்கிறது. எது நடக்கக்கூடாது என்றெல்லாம் மனது தவிக்கின்றதோ அவைப்பற்றிய செய்திகள் தாம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இரண்டு நாளுக்கு முன்னர் இவைப்பற்றி நான் கீர்த்தனாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது


கார்த்தி, நீ அங்கே படிக்கப்போயிருக்க, படிக்கிற வேலையை விட்டுட்டு சும்மா, தமிழ் , இனம்,போராட்டம் அப்படி இப்படின்னு எதுனாச்சும் உளறிக்கிட்டு இருந்தீன்னா, அப்ரப்டா உன்கிட்ட பேசுறதை நிறுத்திடுவேன்”

என சொன்னவள் இப்பொழுது அவளேக்கூப்பிட்டு கேட்பது வியப்பாய் இருந்தது.


அம்மு, அவர் உலகத்தில எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்வார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு”


சரி கார்த்தி, நான் ஆபிஸுக்கு ரெடியாகனும், உன்னைத் தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி”


பரவால்ல அம்மு, ஹேவ் எ நைஸ் டே”

எனச்சொல்லிவிட்டு மனதைப் பிசையும் வலியுடன் மடிக்கணினியை திறந்து வழக்கமாக செய்திவாசிக்கும் இணையதளங்கள் எதிலும் உள்ளேப் புகாமல், இன்றைக்கான பாட அட்டவணையை மட்டும் குறித்துக்கொண்டு மடிக்கணினியை அணைத்தேன்.

காலை எட்டு மணிக்கே முதல் பாடவேளை, கணிப் பொறியியலில் எப்படி ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தொடர்ந்து நான்குமணி நேரப்பாடம். கட்டாய வகுப்பு கிடையாது என்றாலும் வீட்டில் இருந்தால் செய்திகளைப் படித்து வருத்தங்கள் மேலும் அதிகமாகும் என்பதால் கல்லூரிக்கு கிளம்பினேன். ப்ரூன்னஸ்பார்க் காட்டுவழியே வாடைக்காற்று முகத்தில் அடிக்க பழைய நினைவுகள் வந்தன.


ஒரு கோடைவிடுமுறை தினத்தன்று வீட்டின் நடுவே பெரியாருக்கு அருகில் மாட்டி இருந்த அவரின் புகைப்படத்தை என் அப்பா அகற்றியபோது , யாரோ திரையுலகக் கதாநாயகன் என நினைத்துக்கொண்டிருந்தேன். பின்னொரு நாள் வரலாற்று நாயகன் மீசையின்றி எம்மொழியில் பன்னாட்டு ஊடகங்கள் முன்னிலையில் பேசும் நேரலையைக் கண்டு கொண்டிருக்கையில் ”அப்பா,போட்டோவை திரும்ப ஹால்ல வச்சா என்ன?”


எனக்கும் ஆசைதான்.. ஆனால் அனாவசிய பொல்லாப்பு வேண்டாமுன்னுதான் வைக்கல” என வருத்தத்தோடு அப்பா சொன்ன பதிலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பின்பு , முதன் முறையாக சுவீடன் வரும்பொழுது ஃபிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இணைப்பு விமானத்திற்காக காத்திருக்கையில் அருகில் இருந்த டேனிஷ் காரர், நான் தமிழ் பேசுபவன் என்று தெரிந்தவுடன் ‘டைகர்' எனச்சொன்னபோது மனதுக்குள் பெருமிதமாக இருந்தது. மனதுக்குள் ஆதரிப்பதை எந்த தேசத்தின் சட்டதிட்டங்களும் கட்டுப்படுத்த முடியாதல்லவா!!யோசித்துக்கொண்டே நடக்கும்பொழுது லேசாகப் பசி எடுத்தது.


வகுப்பு ஆரம்பிக்க 15 நிமிடங்கள் இருந்தன. நிசந்த வோட இந்திய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு செல்ல நேரம் இருக்கும். நிசந்த வோட முழுப்பெயர் நிசந்த விக்கிரமசிங்கே, போர்க்காலத்தில் அகதி என்ற போர்வையில் சுவீடன் வந்தவர். இந்திய உணவகம் என்ற பெயரில் அரிசி சாதம், சப்பாத்தி போன்ற வகையறாக்களை இங்கு சுவீடிஷ் மக்களுக்கு ஏற்ற வகையில் காரம் குறைவாகப் பரிமாறி உணவகம் நடத்துபவர். எங்கள் குடும்பத்திலேயே சுமாராக சமைக்கும் அத்தையின் சாப்பாட்டை விட சுவைக் குறைவாக இருந்தாலும் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. உள்ளே நுழைந்ததும் 'வாங்க கார்த்தி, இன்றைக்கு எல்லோருக்கும் இனிப்பு இலவசம்”' என்று சுவீடீஷ் மொழியில் சொன்னபொழுது விசயம் புரிந்து விட்டது. நிசந்த விற்கு தமிழ் ஓரளவுக்குத் தெரியும்.நான் தமிழ் பேசுபவன் என்றுத் தெரிந்தாலும் தமிழில் என்னிடம் பேசமாட்டார். ஆரம்பத்தில் ஏதோ இவரின் உணவகத்தில் அன்னதானத்தில் வந்து சாப்பிடுவதைப்போல நடந்து கொண்டதை நிறுத்தியது அவர் கார்ல்ஸ்க்ரோனா இரவு மதுவிருந்து விடுதியில் எங்களிடம் ஏற்கனவே வம்பு செய்து இருந்த இரண்டு அரபு இளைஞர்களிடம் அடிவாங்கிக் கொண்டிருந்தபோது நானும் அன்பரசனும் காப்பற்றியபின்னர்தான்.


என்னப்பா இது, அவனும் அகதி , நானும் அகதி, இந்த நாய்ங்க என்னை அடிக்குதுங்க' என நீண்ட நேரம் உளறிக்கொண்டிருந்தார்.


'இனிப்புக்கான காரணத்தை ஊகித்துக்கொண்ட நான் “ஹே- டோ”' எனக்கூறிவிட்டு வெளியேறிய பொழுது நிசந்தா வேகமாக வந்து 'இன்று மாலை என் குழந்தைக்குப் பிறந்த நாள், நீ கண்டிப்பாக வரவேண்டும்”' என்றார் திரும்பவும் சுவிடீஷ் மொழியில்.


நிச்சயமாக” ' என நான் ஆங்கிலத்தில் பதிலளித்துவிட்டு வகுப்புக்கு வந்தேன். வகுப்பில் மனம் பாடத்தில் செல்லவில்லை. பசியும் வயிற்றைக் கிள்ளியது. எங்கோ நடக்கும் விசயத்திற்கு நிசந்தவை நொந்து கொள்வதில் என்ன பயன். காந்தியை மானசீகமாக ஏற்றுக்கொள்ளும் நான் இப்படி நடந்து இருந்திருக்கக்கூடாதே .. வெறுப்பு என்பது முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய விசயம் அல்லவா!! இல்லை நான் காட்டியது வெறுப்பு இல்லை. எதிர்ப்புக் கூட கிடையாது. இயலாமை.குறைந்த பட்சம் என் 50 க்ரோனர் என் மக்களைக் கொன்றுபோடுகின்ற தேசத்திற்குப்போக வேண்டாமே!! இனி நிசந்த வின் உணவகத்தில் சாப்பிடக்கூடாது என முடிவு செய்தேன். அதே சமயம் நிசந்த வின் பழக்கத்தில் எந்த வித மாறுதலும் காட்டக்கூடாது. இன்று மாலை கண்டிப்பாக அவரின் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ச் செல்ல வேண்டும். வகுப்பு முடிந்த பின்னர் மூலைக்கு ஒன்றாக ரோன்னிபே நகரத்தில் இருக்கும் அரபு பீட்சா உணவகத்தில் ஒரு பீட்சாவை விழுங்கிவிட்டு அருகில் இருந்த கடையில் குழந்தைக்கு என்ன பரிசுப்பொருள் வாங்கலாம் எனத் தேடினேன். வெண்ணிறத்தில் அழகான புத்தர் சிலை இருந்தது. அட ,இடதுக்கண்ணில் சிறியதாக சிவப்புக்கோடு கீழ் நோக்கி.. பிடித்திருந்ததால் 100 க்ரோனர் கொடுத்து வாங்கிக்கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்றேன். எனது புத்தர் சிலைப் பரிசை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட நிசந்தவின் மகள் அதை நிசந்த விடம் கொடுத்தாள். கண்ணில் இருந்த சிவப்புக் கோட்டை கையால் அழித்துவிட்டு என்னைப் பார்த்து “' கார்த்தி இதில் மட்டும் அல்ல, எங்கள் நாட்டிலும் சிவப்பு என்பது இனிக்கிடையாது ” ‘ 'என்றார்.

அது சாதாரணக் கோடு அல்ல , குருதியில் எழுதப்பட்ட வரலாறு, வரலாறுகள் திரும்புவதை பலமுறைப் பார்த்திருக்கின்றோமே' எனச் சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லாமல் குழந்தையை வாழ்த்திவிட்டு ஏதும் சாப்பிடாமல் இல்லம் திரும்பினேன்.


ராஜராஜ சோழன் நான், எனை ஆளும் காதல் தேசம் நீதான்”' என கீர்த்தனாவின் அழைப்பு வர “அம்மு சொல்லுடா!!”

'கார்த்தி , நமக்கு ஃபர்ஸ்ட் பையன் பிறந்தா அர்ஜுன்னு மட்டும் வைக்க வேண்டாம் , அவர் பெயரையும் சேர்த்து அர்ஜுன் பிரபாகரன் என வைக்கலாம் ..... ஒகேவா!! ”

-------

இந்தக் கதை தமிழோவியம் இணைய இதழில் (ஆகஸ்ட் 6, 2009) வெளிவந்தது. தமிழோவியம் இணைய இதழைப் பார்வையிட இங்கேச் சொடுக்கவும்

16 பின்னூட்டங்கள்/Comments:

said...

சிங்களர்களும்,ஈழத்தமிழர்களும் பெருமளவில் இருக்கும் இங்கும் கூட என்னால் கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளை உணரமுடிகிறது !

//பின்னொரு நாள் வரலாற்று நாயகன் மீசையின்றி எம்மொழியில் பன்னாட்டு ஊடகங்கள் முன்னிலையில் பேசும் நேரலையைக் கண்டு கொண்டிருக்கையில் ”அப்பா,போட்டோவை திரும்ப ஹால்ல வச்சா என்ன?”
“எனக்கும் ஆசைதான்.. ஆனால் அனாவசிய பொல்லாப்பு வேண்டாமுன்னுதான் வைக்கல” என வருத்தத்தோடு அப்பா சொன்ன பதிலை//

பல நண்பர்களின் உணர்வுகளும் அந்த காலகட்டத்தில் இதை போன்றே இருந்து கண்டிருக்கிறேன் !

said...

ராஜ ராஜ சோழன் புத்தர் சிலையை தகர்க்க சொன்னதாக நான் படித்தது கிடையாது. நாம் வன்முறையாளர்கள் என்ற குற்றசாற்றை ஏற்று கொள்வதாக முதல் பத்தி அமைந்து உள்ளது.

said...

கதை நல்லா வந்திருக்கு செல்வா... இன்றைய இளைஞர்கள் பலரின் மனதிலும் உள்ளது தான். ஆனாலும், வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு பெரும் சோகம் மனதில் கவ்வியுள்ளதும் உண்மை.

கதையைப் பொருத்த வரை, நான் ஒரு முறை மின் அரட்டையில் சொல்ல வந்ததைப் போல வெளிநாட்டில் உள்ள அனைத்து சிங்களவர்களும் அரச பயங்கரவாதத்தின் பின் இல்லை. JVP கிளர்ச்சியை ஒடுக்கும் போது அங்கு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞ்ர்களின் குடும்பத்தார், இராணுவ ஆளெடுப்புக்கு பயந்து வெளிவந்தவர்கள், இராணுவச் சித்திரவதைக்கு ஆளானோர் என அவர்களிலும் பல வகையினர் உண்டு. சிங்களப் பேரின்வாதத்துடன் கை கோர்த்து நிற்கும் நபர்கள் தான் பிரச்சனைக்குறியவர்கள்.

இங்குள்ள சில தமிழர்கள் தாங்களின் குடும்ப விழாவிற்கு கூட ஒரு சில சிங்களக் குடும்பங்களை அழைத்திருந்தனர்.

Anonymous said...

கதை நல்லா இருக்கு. புத்தரை பின்பற்றுகிறோம் என்பவர்கள் புத்தர் கண்ணில் ரத்தம் வருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது :(

said...

வணக்கம் நண்பா

நிதர்சன தரிசனங்களை உங்களின் படைப்புக் காட்டிருக்கு. வாசித்து முடித்ததும் ஒரு பெருமூச்சு தான் வந்தது.

said...

என்ன சொல்றதுன்னு தெரியலை செல்வா. :(

said...

I am really fail to understand. May be I am incapable of understanding.....

said...

எப்பவும் போல அழகா மனதைத்தொடுகிற மாதிரி வ்ந்திருக்கு!பூஙகொத்து!

said...

பேரை சொல்ல முடியாது... உரிமையா பேச முடியாது... வன்முறையே கூடாது.. பொறுமை அதிகமா வேணும்.. புத்தருக்கு கொலை செய்ய கத்து கொடுக்கனும்... பொருளில்லாம இருக்கலாம்...

வாய்ப்பும் நேரமும் இருந்தால்...
http://karuveli.wordpress.com/2009/01/13/

said...

இது கதையல்ல.... ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் உறைந்து கிடக்கின்ற உணர்வுக் கல்வெட்டுக்கள்! தூரம் அதிகமில்லை.... நம் மண்ணோடும்... அவரோடும் சேர்ந்து கொண்டாட...
அழியா கனவு(நிஜங்)களுடன்...

இந்தியனல்லாத ஒரு தமிழன் - அமெரிக்கா

பி.கு. தாங்கள் முடிந்தால் தொடர்ந்து தங்களின் ஆக்கங்களை அதிகாலை இணையத்திற்கு editor@adhikaalai.com அனுப்பவும். வாழ்த்துக்கள்!

said...

இது கதையா இல்லை உண்மை நிகழ்வா.......மனதைத் தொட்டது...

said...

ஆப்கனில் தாலிபன்களின் ஆட்சிக் காலத்தில், இந்தியாவின் வேண்டுகோளையும் நிராகரித்து புத்தர் சிலைகள் போபர்ஸ் பீரங்கியால் தகர்க்கப்பட்டது. இது நடந்து மிகக் குறுகிய காலத்தில் அதே ஆப்கன் நாடு தீவிரவாதி வேட்டையில் சக்தி வாய்ந்த ஏவுகனைகளால் சல்லடையானது உலக வரலாறு...
சிலைகளைத் தகர்த்தற்கே இப்படியென்றால், தமிழர் உயிர்களைக் குடித்தவர்கள் கதி...
விரைவில் அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் கண்டு புத்தரும் வருந்த மாட்டார்...
சரித்திரப் புருஷர்கள் விரைவில் அவதரிப்பர்...வரலாறும் திரும்பும்...
---------
கடுவன்...

said...

“அம்மு, அவர் உலகத்தில எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்வார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு”

நம்பிக்கைகள் எல்லாருக்குள்ளும்....ஆனால் எல்லாம் பொய்த்து எங்கள் இனம் இன்று கடும்மழை வெள்ளத்தில் நின்று சாகிறது. காக்கவும் ஆளின்றி கவனிக்கவும் நாதியின்றி அவன் இல்லா இடம் எங்களுக்கு வெற்றிடமாய்...எவராலும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடமாய்....

நல்லதொரு கதை பாராட்டுக்கள்.


சாந்தி

said...

மனதைத் தொட்ட நல்ல கதை

said...

ம்ம்ம் மீள்ப்திவா!!!

said...

தங்களின் தமிழ் உணர்விற்கு என் நன்றி. நாம் இன மகளை அழித்த அழிக்க துணை நின்றவன் எவனாயுனும் அவன் நம் துரோகியே....இனிமேல் தங்களை நாம் இன எதிரிககள் நாட்டு பொருளை புறக்கணிக்குமாறு உணர்வு பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன்