Monday, October 29, 2007

வாழ்க்கையில்(ன்) சில விசயங்கள் - சிறுகதை

"மனிதனாய் மரத்துப்போய் வீழ்வதைக்காட்டிலும் மழைத்துளியாய் மண்ணில் வீழ்ந்திருக்கலாமோ" எங்கோ படித்த கவிதையின் மீள்நினைவா அல்லது என்னையும் அறியாமல் கவிதை வருகிறதா என்று புரியாமல் , புரிய விருப்பமும் இல்லாமல் மனதிற்கினிய இசைபோல் நிதானமாக பெய்து கொண்டிருந்த மழையை கல்லூரி நூலக
விறாந்தாவில் நின்று ரசித்துக் கொண்டிருக்கும்பொழுது, "கார்த்தி," என்ற குரல் கேட்டு திரும்பினேன்.

"என்னடா உள்ளே வராமல் ,, இங்க நின்னு மழையை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க, இன்னக்கி எதாவது கான்செப்ட் சொல்லப் போறியா ? "

"அதெல்லாம் ஒன்னுமில்லை,, புக்ஸ் எடுத்திட்டியா , வா போகலாம். "

"இல்லை மழை நிக்கட்டும் , அடுத்த வாரம் எக்ஸாம் வேற.. மழையில நனஞ்சு ஃபீவர் எதாவது வந்துட்டா என்ன பண்றது?"

நான் ரம்யாவுக்கு மட்டும் எதிர்ப்பேதும் சொல்வதில்லை. அவள் சொன்னால் நான் கேட்டுக்கொள்வேன். பிடிக்கவைல்லை என்றாலும் கூட .. ரம்யா என்னிடம் முதன் முதலில் பேசியது , கன்யாகுமரியில் , இரண்டு வருடங்களுக்கு முன், துறை சார்ந்த சுற்றுலா என்று வழக்கமான கதை விட்டு திருவனந்தபுரம் சென்று திரும்புவழியில் கன்யாகுமரி கோயிலுக்குள் எல்லோரும் போக நான் மட்டும் உள்ளே வரவில்லை என்று சொன்ன போது என்னை ஆச்சரியமா பார்த்த அவள் , சுற்றுலா முடிந்த அடுத்த வாரம் முதல் தடவையா என்னிடம் பேசினாள்.

"கார்த்தி, எல்லோரும் கோயிலுக்கு உள்ளேப் போனப்ப நீ மட்டும் ஏன் வரலேன்னு சொன்ன?, அஜீஸ் கூட உள்ளே வந்தான், if you dont mind may i know the reason?"

"சாமி, பூதம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை.."

நான் பூதத்துடன் சாமியை சேர்த்து சொன்னவுடன் அவள் முகம் சுண்டிபோனது.

முதல்முறையாகப் பேசும் பெண்ணிடம் நான் அப்படி பேசி இருக்கக்கூடாது தான் என்ன செய்வது.. சிறுவயதில் இருந்து கடவுள், பக்தி , பிராயசித்தம் என்ற பெயரில் என் அம்மா அப்பா ஆடிய ஆட்டங்கள் என்னையும் அறியாமல் இந்த விசயங்களை விட்டு விலக வைத்தது. விவரம் தெரிந்த பின், இந்த மாதிரி விசயங்களை கண்டால்
வெறுப்புதான் மிஞ்சுகிறது. இன்னமும் என் வீட்டில் என் அப்பாவின் மாத சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு கடவுளுக்குக் கொடுக்கப்படுகிறது. கடவுள் அப்படி திருப்பி என்னத்தான் கொடுக்கிறார் என்று தெரியவில்லை.

மறுநாள் நானே வலியச் சென்று ரம்யாவிடம் "ஹாய்" சொன்னேன். அவள் ஏதும் கோபமின்றி சிரித்து திரும்ப "ஹாய்" சொன்னாள்.

"கார்த்தி, உனக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை"

"சிம்பிள் லாஜிக் ரம்யா, கடவுள் இருக்கிறது அப்படி நம்பறதுனால வர்ற பிரச்சினைகளை விட, கடவுள் இல்லைன்னு சொல்றதுனால வர்ற பிரச்சினைகள் கம்மி, எது குறைச்ச பிராப்லம்ஸ் தருதோ அதை எடுத்துக்கிட்டேன்"


"அப்படி இல்லை கார்த்தி, பக்தி மனுசனைப் பக்குவப்படுத்தும்.. நம்மள மாதிரி படிக்கிற பசங்களுக்கு கான்சண்ட்ரேசன் பவரை இன்கிரீஸ் பண்ணும்" ரம்யா அடுக்கிக் கொண்டே போனாள். இது எல்லாம் நான் ஏற்கனவே என் அம்மா அப்பா சொல்லக் கேட்டிருந்ததால் ஆரவமின்றி அவள் சொல்வதை தலையாட்டிக்
கொண்டே கேட்டிருந்தேன். அதன் பிறகு நல்ல நண்பர்களாயினோம். சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் ரம்யா, கடவுள் நம்பிக்கை, பக்தி பேச்சுக்களை ஆரம்பிப்பாள். ஆன்மிகம் மனிதனுக்கு எவ்வளவு தேவை என்று அவள் விளக்கமாக நிறைய உதாரணங்கள் கொடுத்து பேசுவதைக் கேட்க சுவாரசியமத்தான் இருக்கும். என்னதான் இருந்தாலும் கோயில் குருக்கள் பொண்ணாயிற்றே!!

"கார்த்தி நீ எங்கப்பா பேசுறதைக் கேட்டிருக்கனும், அவர் பேச்சைக்கேட்டா இந்த நிமிஷமே ஆத்திகத்திற்கு மாறிடுவே"

அவளின் அப்பாவுடன் ஒரு முறை பேசியிருக்கின்றேன். நான் உருவகப்படுத்தி வைத்திருந்த வழக்கமான குருக்கள் போல் இல்லை. சகஜமாகவே பேசினார்.

"உன்னைப் பத்தி ரம்யா நிறைய சொல்லி இருக்காள், நாத்திகமும் ஒரு அருமையான பாதை தான், அதில் பிடிப்போடு இரு,அதுவும் நல்ல மார்க்கம்னுதான் நம் முன்னோர் சொல்லி இருக்காங்க " என்று வாழ்த்தினார்.

அவர் அப்படி சொல்லியது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. மழையின் சலசலப்பு சத்தம் நின்றவுடன் நினைவுச்சுழலில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தேன்.

"கார்த்தி, என் கூட கோயிலுக்கு வர்றீயா?" என்று ரம்யா கேட்க புருவத்தை உயர்த்தி வியப்பு மேலிட அவளைப் பார்த்தேன்.இதுவரை இப்படிக் கேட்டதில்லை.

"சரி போகலாம், " என்று நூலகப்படிகளில் இறங்கி கல்லூரி சாலையில் நடக்க ஆரம்பித்தோம். ஆடவர் விடுதி கடக்கும்பொழுதெல்லாம் எங்கள் இருவரைக் கண்டால் முன்பு சத்தம் போடும் மாணவர்கள் இப்பொழுதெல்லாம்
எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. ஒரு வேளை எங்களைப் பற்றி கிண்டலடிப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று நினைத்து இருக்கலாம். இன்னும் கல்லூரி முடிய 3 மாதம்தான் என்பதால் போனால் போய்ட்டு போகுது
என்று விட்டும் இருக்கலாம். திருப்பரங்குன்றம் நுழைவாயில் வரும் வரை அவள் எதுவும் பேசவில்லை.
நானும் அமைதியாக அவளுடன் நடந்தேன். செருப்பிற்கு காசு கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.மழை இருந்தும் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முருகனை கண்ணைமூடிக்கொண்டு வேண்டிக்கொண்டாள்.

எல்லோரும் கைக்கூப்பி வேண்டிக்கொண்டிருக்கும்பொழுது நானும் அப்படி செய்யவில்லை என்றால் நல்லா இருக்காது என்று கைக்கூப்பினேன்.

கோயிலில் இருந்து திரும்பும் போது

"கார்த்தி, வெற்றிவேல்ல சாப்பிட்டு போவோண்டா!!, ஒரு குட்டி டீரீட் உனக்கு"எனக்குத்திரும்பவும் ஆச்சரியம். வழக்கமான ரம்யாவைப் போல் இல்லாமல் அவள் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது.

சாப்பிடும்பொழுது,

"கார்த்தி, ஒரு குட் நியுஸ், ஃபைனல் செமஸ்டர் முடிந்தவுடன், எனக்கு மேரேஜ், என் அத்தைப் பையன் தான். அவர் பேரு மோகனகிருஷ்ணன், ஸ்டேட்ஸ் ல இருக்காரு.."

எனக்கு தலைப் புரை ஏறியது. தண்ணீரைக் குடித்தவுடன்

"கங்கிராட்ஸ் ரம்யா" இதை என்னால் முழுமனதோடு சொல்ல முடியவில்லை. இத்தனைக்கும் ரம்யாமேல் எனக்கு காதல் அப்படி எல்லாம் இதுவரை தோன்றியதில்லை. எங்களோட துறைத்தலைவர் இதைப் பற்றி கேட்டபொழுது
கூட சிறு உணர்வு கூட வரவில்லை. ஏன் இப்படி இப்பொழுது? ஒரு வேளை அவளின் திருமணம் எங்கள் இருவரின் நட்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடும் என்ற நினைப்போ!!
இல்லை என்றால் என்னையுமறியாமல் அவளை நேசிக்க ஆரம்பித்திருக்கின்றேனா?

"கார்த்தி, நீ இன்னைக்கு சாமி கும்பிட்டதை பார்த்தேனே!!" என்று குழந்தையின் குதுகலத்துடன் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

"அது கடவுளுக்காக இல்லை, கல்லை சிற்பமாக்கிய கடவுளை நினைத்து"

"ம்ம்ம்.... எனக்கு ஒரு ஆசை என்னக்காவது ஒரு நாள், உன்னை கடவுள் நம்பிக்கை உள்ள ஆளாப்பார்க்கனும்"

"may be in next ஜென்மம்"

நாட்கள் கடகடவென ஓடியது. எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்தவுடனேயே ரம்யாவின் கல்யாணம் முடிந்தது.ரம்யாவின் கணவன் மோகன கிருஷ்ணன் நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். பேச்சிலும் நல்ல கனிவு இருந்தது. ரம்யா கொடுத்து வைத்தவள்தான். திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களிலேயே அவள் அமெரிக்கா
போய்விட்டாள். அதன்பிறகு அவளின் தொடர்பு துண்டித்துப் போனது. எனது usa.net மின்னஞ்சல் சேவையை நிறுத்திவிட்டதால் அவளை மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவளும் usa.net மின்னஞ்சல் சேவைதான் வைத்திருந்தாள்.

படித்து முடித்தவுடன் வேலை இல்லாமல் இருந்தால் எவ்வளவு அவமானம் என்பதை உற்றம் சுற்றம் கேள்விகளால் துளைத்தெடுக்கும்பொழுதுதான் உணர்ந்தேன். பகீரத பிரயாத்தனம் செய்தும் வேலை என்பது தள்ளிப் போய் கொண்டே இருந்தது. மெட்றாஸ் போய் தங்கி வேலை தேடலாம் என்றாலும் அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை. அம்மா ஒரு நாள் என்னிடம் வந்து

"பழனிக்கு ஒருமுறை மாலை போட்டுட்டு போய் வாடா!! எல்லாம் நல்லபடியா நடக்கும்,," என்று பாவமாய் கேட்க அம்மாவிற்காக போகலாம் என்று முடிவெடுத்தேன்.

பழனி முருகன் சன்னிதானத்தில் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. "கடவுள் கிட்ட அப்படியே சரணாகதி அடைந்துவிடும் அளவுக்கு வேண்டுப்பா.. அவர் எல்லாம் தருவார்" ..

மனமுருக எனக்கு நல்ல வேலை தரும்படிக்கேட்டேன். என்ன ஆச்சரியம் அடுத்த இரண்டாவது வாரத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஏதோ ஒரு சக்தி இருப்பதை நான் நம்ப ஆரம்பித்துவிட்டதாக என் மனது சொல்லியது. அதன்
பின் அடிக்கடி கோவில் போக ஆரம்பித்து இந்த ஐந்தாறு வருடங்களில் பக்தியின் மறு உருவமாகவே மாறிவிட்டேன். நான் எப்போவெல்லாம் கோயிலுக்கு போறேனோ அப்போதெல்லாம் ரம்யாவின் ஞாபகம் வரும். நான் இப்படி இருப்பதை பார்த்தால் நிச்சயம் சந்தோசப்படுவாள். கடவுள் நம்பிக்கை பிரச்சினை அல்ல...
பிரச்சினைகளை சந்திக்க நாம் நாமே கொடுத்துக் கொள்ளும் ஆன்மபலம். எனக்கு பெண் தேடும் விளம்பரத்தில் கூட இறைபக்தியில் நம்பிக்கை உள்ளவர் வேண்டும் என்பதை அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.

அன்று, அலுவலகத்தில் வேலை அதிகம் இல்லை... எல்லோரும் ஓர்குட்டில் மூழ்கி இருந்தனர். சும்மாதானே இருக்கிறோம் என்று ஓர்குட்டில் என் ஜிமெயில் மின்னஞ்சல் கொடுத்து உள்நுழைந்தேன். ரம்யா மோகனகிருஷ்ணன் என்று தேடிப்பார்த்தேன். ஏகப்பட்ட பேர்கள் இருந்தார்கள். அப்படியே ஒன்றின் பின் ஒன்றாகப் பார்த்த்துக்
கொண்டே வந்தேன். "முருகா, ரம்யா கிடைக்கவேண்டும் " என்று வேண்டிக்கொண்டே அட... அங்கு இருந்தாள்.

கடவுளுக்கு நன்றி சொன்னேன். அதே முகம் ..கொஞ்சம் முகத்தில் சதை போட்டிருந்தாள். ஊர் பெங்களூர்.. அட நான் இருக்கும் இதே ஊரில் தான் இருக்கிறாள். அவளின் புகைப்படங்கள் இருக்கும் பக்கத்திற்கு போனேன்..

"My Life line" என்று சொல்லி தன் குழந்தையுடன் புகைப்படத்தில் இருந்தாள். உடனடியாக அவளுக்கு ஒரு என் மின்னஞ்சல் முகவரியைக் குறுந்தகவலாக ஆர்குட் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு வேறு வேலை பார்க்கலானேன். சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது. தனது கைத்தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு, முடிந்தால் அந்த வார இறுதியில் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தாள். வார இறுதியில் சந்திப்பை உறுதி செய்துகொண்டு அவளின் இல்லத்திற்கு சென்றேன். போகும் முன் என் நெற்றியில் சந்தனக்கீற்றை வைத்துக்
கொண்டே கிளம்பி இருந்தேன்.

ரம்யா என்னை உற்சாகமாக வரவேற்றாலும் கண்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழுதுவிடும் போல் இருந்தது. கண்களிலும் வீட்டிலும் வெறுமை இருந்தது. வீட்டைச்சுற்றி கண்களை சுழல விட, கடவுளே என்ன இது
மோகனகிருஷ்ணனின் புகைப்படத்திற்கு மாலை போடப்பட்டிருந்தது.

நான் அதைப்பார்ப்பதைக் கவனித்துவிட்ட ரம்யா,

"நீ அப்ப சொல்லுவியேடா, அது எல்லாம் கரெக்ட் கடவுள்னு எதுவுமே கிடையாது.. அப்படி இருந்திருந்தால் கடைசிவரை கடவுள் தாசனாகவே இருந்த எங்க அப்பாவை சாகடிச்சுட்டு அந்த கோயில் நகைகள் திருடுபோய் இருக்காது... கடவுள்னு ஒருத்தர் இருந்திருந்தா நாள் கிழமை தவறமா எல்லாம் செஞ்ச என்னை இப்படி
தண்டிச்சுருக்க மாட்டாரு, எல்லாம் பொய்டா.. எதுவுமே கிடையாது.. எல்லாம் ஹம்பக், பூஜை புண்ஸ்காரம் எல்லாம் நம்மளை நாமே ஏமாத்திக்கிறது"

"மோகனுக்கு!!" எனக்குக் கேட்கையிலேயே நாதழுதழுத்தது...

"போன வருஷம் திருநள்ளாறு கோயிலுக்குப் போறப்ப ஆக்ஸிடெண்ட்.. " உடைந்து அழ ஆரம்பித்தாள். அழுதுத் தீர்த்தவுடன் தன் குழந்தையைக்கூப்பிட்டு

"இந்த பிள்ளைக்காகத் தான் வாழ்றேன்.. ம்ம் சரி நாளைக்கு உனக்கு நேரம் இருந்தால் பக்கத்தில ஒரு முதியோர் ஆசிரமம் இருக்கு . உன்னால வர்றமுடியுமா? இப்பொவெல்லாம் வீக் எண்ட்ல அவங்களோடதான் ஸ்பெண்ட்
பண்றேன்."

"ம்ம் ஸ்யூர்" மேலும் சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு என்வீட்டிற்கு வந்தவுடன் ஊருக்குத் தொலைபேசினேன்.

"இப்போதைக்கு பொண்ணு பார்க்கிறதை நிறுத்தி வைங்க... கொஞ்ச நாளாகட்டும்.. நானே சொல்றேன்"

ம்ம்ம்.. வாழ்க்கையில் சில விசயங்கள் புரிவதே இல்லை என்று நினைத்துக் கொண்டே, வழக்கமாக இரவு தூங்கும் முன் கும்பிடும் சாமியை வணங்காமலேயே தூங்கிப் போனேன்.

====== முடிந்தது =====

Saturday, October 27, 2007

பறவையே எங்கு இருக்கிறாய் - "கற்றது தமிழ்" படத்தில் இருந்து ஒரு பாடற்காட்சி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.முழுபடத்தின் தரத்தை இந்த ஒருபாடலின் வாயிலாகவே அறிந்து கொள்ளும் வகையில், காட்சியமைப்பு , நாயகன் நாயகியின் உண்ர்வுகளை வெளிக்காட்டும் முகபாவங்கள்,அதை படம் பிடித்தவிதம் இசையமைப்பு, இசைக்கான வரிகள் இவையனைத்தையும் அருமையாக திரையில் கொடுத்தமைக்காக "கற்றது தமிழ்" படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்பாடலை யூடியூப் தளத்தில் ஏற்றி வைத்திருந்த "இசைத்திரு" விற்கு நன்றி

Friday, October 26, 2007

தமிழர் தொழில் - வணிகச் சிறப்பு மாநாடு, திருப்பூர் 28/10/2007

உலகத்தமிழர் பேரமைப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நாளை, 28.10.2007, ஞாயிறன்று திருப்பூரில் தமிழர் தொழில் வணிகச் சிறபு மாநாடு நடைபெறவிருக்கிறது. உலகத்தமிழர் பேராளர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் , தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் பங்கேற்கின்றனர்.

சக பதிவர் திரு. மா. சிவக்குமார் தொழில் வளர்ச்சியில் கணினி என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.

நடைபெறும் இடம் :
ஆர்.வி குமாரசாமி திருமண மண்டபம்
தொடர்வண்டி நிலையம் , பேருந்து நிலையம் அருகில்,திருப்பூர்

Thursday, October 25, 2007

மதத்தின் பெயரால் - அம்பலப்படுத்தியது தெகல்ஹா

"வரலாறு இதுவரை பார்த்திராத விசயமாக இருக்க வேண்டும்"

"இதை செய்வதற்கு நீங்கள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்"

அவர்களைக் கொன்ற பின் , என்னை நான் "மகாராணா பிரதாப்பாக உணர்ந்தேன்."

இது எல்லாம் மன்னர் ஆட்சியில் போர்க்களத்தில் சொல்லப்பட்ட வசனங்கள் அல்ல..

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மேல் திட்டமிட்டு வன்முறையை கடவுளின் பெயரால் ஏவி விட்ட பின் வன்முறைக்கூட்டம் கொக்கரித்தவை

மனதை உறைய வைக்கும் ஆதாரங்களுடன் தெகல்ஹா இந்த திட்டமிட்ட தாக்குதலை ரகசிய புலனாய்வின் மூலம் அம்பலப்படுத்தி உள்ளது.

விவரங்களுடன் படிக்க இங்கே சொடுக்கவும்

HeadLines Today ஆங்கில தொலைக்காட்சியில் இதை இப்பொழுது ஒளிபரப்பி வருகின்றனர்.

அசாருதீன் - டெண்டுல்கர் ஜோடி ஆட்டம், கேப்டவுன் டெஸ்ட் , வீடியோ

முகமது அசாருதீன் , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இந்தியாவை மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் வழிநடத்தி சென்றவர். இவரின் ஆட்டத்தை காண்பதே அந்தக்கால கட்டங்களில் அலாதியான அனுபவம். தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக கேப்டவுனில் இவர் ஆடிய அசூர ஆட்டத்தை இந்த வீடியோவில் காணலாம். 58/5 என்ற நிலையில் இருந்து இந்திய அணியை இவரும் டெண்டுல்கரும் மீட்டெடுப்பர். 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அசார் மின்னல் வேகத்தில் ரன்கள் குவித்திருப்பார். குலுஸ்னர் மேல் தனி பாசம் வைத்து அவரை சிறப்பாகக் கவனித்து இருப்பார். இதே டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் தொடா கனேஷின் பந்துகளில் தொடர்ச்சியாக குலுஸ்னர் 3 பவுண்டரிகள் அடித்து சதமடித்து இருப்பார். அவர் மூன்று அடித்தால் நாங்க ஐந்தாக அடிப்போம் என்று கவாஸ்கரின் வர்ணனையை கவனிக்கலாம்.பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 49 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அசார் ஆட்டமிழந்த போது , டெண்டுல்கர் தனது சிறப்பான ஆட்டத்தால் சதமும் அடித்து பாலோஆனில் இருந்து மீட்டெடுப்பார். 26 பவுண்டரிகளுடன் டெண்டுல்கர் 169 ரன் எடுத்து ஒரு அருமையான கேட்சினால் ஆட்டமிழக்கப்பட்டிருப்பார்.டெண்டுல்கரின் சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று என நிச்சயமாகக் கூறலாம்.
இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்ற போதும் அசாருதீன் - டெண்டுல்கரின் இந்த இணையாட்டம் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பெற்றிருக்கும்

நன்றி : www.youtube.com

Wednesday, October 24, 2007

கார்த்தி, ஜெனி மற்றும் மோகன் - சிறுகதை

வழக்கமான ஞாயிற்றுக்கிழமை காலை போல் தூங்கி வடியாமல், பெண்கள் விடுதி பரபரப்பாய் இருந்தது. ஜெனி தடதடவென இரண்டாவது மாடியில் இருந்து படிகளில் இறங்கி ரம்யாவின் அறைக்கு ஓடினாள். அசந்து தூங்கி கொண்டிருந்த ரம்யாவை வேகமாக உலுக்கி எழுப்பினாள்.

"ரம்யா, கார்த்தி, சூசைட் பண்ணிக்கிட்டானாம்"

"வாட்... "

தூக்கத்தில் பாதியில் எழுப்பப்பட்ட அதிர்ச்சியுடன், இந்த செய்தி மேலும் ரம்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"எப்படிடி ஆச்சு, ஃபிரைடே ஈவ்னிங் கூட அவன்கிட்ட பேசினேனே...பட் அன்னைக்கு கூட அவன் டல்லாதான் இருந்தான், இன்னும் கொஞ்சநேரம் இருந்து பேசிட்டு போக சொன்னான், நான் தான் கிளம்பி வந்துட்டேன் "

ரம்யாவின் படபடப்பு அதிகமானது

"ஆமா, ரம்யா, நேத்து காலைல எனக்கு போன் பண்ணான், ஒரு முக்கியமான விசயம் பேசனும், லைப்ரரி வர்றமுடியுமான்னு கேட்டான், அவன் ஏற்கனவே எனக்கு புரோபஸ் பண்ணி இருக்குறதுனாலா, திரும்ப ஏதாவது சொல்லிடுவானோன்னு நான் தான் போகல"

"ஒரு வேளை, அவன் சொல்ல வந்ததைக் கேட்டிருந்தா அவனைக் காப்பாத்தி இருக்கலாமோ?"

தற்கொலை செய்து கொண்ட கார்த்தி, ரம்யா ஜெனியுடன் ஒரே வகுப்பில் கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவன். ஜெனி, கார்த்தி பெயர்கள் வரிசைப்படி அடுத்தடுத்து வருவதால் ஆய்வக வகுப்புகளில் ஒரே அணியில் இருப்பார்கள், இரண்டாமாண்டில் ஏற்பட்ட அறிமுகம், கார்த்தி ஜெனியை காதலிப்பதாக சொல்லும் வரை நன்றாகவே போனது. போன அரையாண்டில் அவன் தனது விருப்பத்தைச் சொல்லப்போக , முகம் திருப்பிப் போன ஜெனி, விடுமுறை முடிந்து கல்லூரி மீண்டும் ஆரம்பித்து . இந்த ஒரு வாரத்தில் கார்த்தி எவ்வளவோ முயன்றும், அவனிடம் பேசவில்லை.

கார்த்தியின் இந்த ஒரு தலைக் காதலுக்கு "வில்லன்" மோகன், மோகனும் கார்த்தி ஜெனியுடன் தான் ஆய்வக சோதனைகளைச் செய்தாக வேண்டும். ஜெனிக்கு ஆரம்பத்தில் மோகனின் "கலாட்டா செய்யும் போக்கு" பிடிக்கவில்லை என்றாலும், போக போக உள்ளூர அவனை நேசிக்க/ரசிக்க ஆரம்பித்தாள். நிறைய இடங்களில் வெளிப்படையாகவே கார்த்தி எதிரிலேயே மோகனிடம் நெருக்கமாக இருப்பதைக் காட்டிக் கொள்வாள். எரிச்சல் கோபம் இயலாமை எல்லாம் சேர்ந்து கார்த்தியை கடந்த இரண்டு மாதங்களாக பித்துப்பிடித்தவன் போல் அலைய வைத்தது. தேர்வில் மிகவும் மட்டமான மதிப்பெண்களையேப் பெற்றிருந்தான்.

"ரம்யா, கார்த்தி எதாவது லெட்டர் எழுதி வச்சிட்டு செத்துப் போய் இருப்பானா, நான் தான் காரணம்னு எழுதி இருப்பானா?" என்று பயத்துடன் அழ ஆரம்பித்தாள்.

"அப்படி எல்லாம் எதுவும் இருக்காதுடி, சரி, வா பாய்ஸ் ஹாஸ்டல் போய்ட்டு வரலாம், மோகன் வந்துட்டானா? "

"இன்னும் வரல.. அவன் கூட சாட் பண்ணி 15 நாள் ஆகுது, அவங்க அப்பாகூட மொரிஷியஸ் ல இருக்கான்"

ரம்யா, ஜெனி இருவரும் உடை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு அடுத்த முனையில் அமைந்திருந்த ஆடவர் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

கல்லூரி பிள்ளையார் கோவிலின் வாசலில் நின்று கொண்டிருந்த மோகனைப் பார்த்த ரம்யாவும் ஜெனியும்,

"மோகன் எப்போ வந்தே!! விசயம் கேள்விப்பட்டியா? கார்த்தி சூசைட் பண்ணிக்கிட்டான்"

"நான் வந்து ரெண்டு நாளாச்சு, ம்ம் தெரியும்.. அவன் ஒரு கவர்ட், பயந்தாங்கொள்ளி, ஐ ஹேட் ஹிம்"

"மோகன் , நீ எங்க கூட வாடா, பாய்ஸ் ஹாஸ்டல் வர்றைக்கும் போய்ட்டு வந்துடலாம்" ஜெனிக்கு இன்னும் நடுக்கம் விடவில்லை.

"நீங்க போயிட்டு வாங்க, நான் இங்க வெயிட் பண்றேன்".

---

"முடிந்தது என்று நினைத்த விசயம், மீண்டும் வந்ததனால் நான் போகின்றேன்" இதுதான் கார்த்தி விட்டுச்சென்ற குறிப்பு. கல்லூரியின் தாளாளர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மாணவ, மாணவிகள் யாரையும் விசாரணை என்ற பெயரில் அதிக தொந்தரவுக் கொடுக்காமல் பார்த்துக் கொண்டார்.

ஜெனிக்கு தான் தான் காரணமோ என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்தாள். அடுத்த இரண்டு நாட்கள் ரம்யாவும் ஜெனியும் கல்லூரிக்குப் போகவில்லை. ஜெனியைத் தேற்றுவதிலேயே ரம்யா நேரத்தைச் செலவிட வேண்டியதாக இருந்தது.
புதனன்று காலையில் ஜெனி எழுந்தவுடன் ரம்யாவிடம்,

"நேத்து நைட், கார்த்திக்கிட்டே இருந்து கால் வந்தது, அவன் தான் பேசினான் ஸ்யூர்"

"உளறாதே!!ஜெனி அவனோட செல்போன் தான் போலிஸ் கிட்ட இருக்கு, சான்ஸே இல்லை.. உன்னோட பிரமை...சரி வா இன்னக்கி நாம கிளாஸ் அட்டெண்ட் பண்ணலாம் சீக்கிரம் கிளம்பு"

"இல்லை ரம்யா, நான் சத்தியமா சொல்றேன்,கார்த்தி தான் பேசினான். அவனோட வாய்ஸ்தான்..மோகன் பத்தி ஒன்னு சொல்றேன்னு ஸ்டார்ட் பண்ணான், நான் பட்டுன்னு போனை வச்சுட்டேன்"

ரம்யாவுக்கு ஜெனியைப் பார்க்கையில் பாவமாக இருந்தது.

"சரி காலேஜுக்கு கிளம்பு"

"இல்லை ரம்யா, நான் வரல.. நான் இங்கேயே இருக்கேன்"

தனது அறையிலேயே ஜெனியை விட்டு விட்டு, ரம்யா தனது துறை அலுவலகத்திற்கு வந்தாள். அங்கு மோகனின் அம்மா, அப்பா இருவரும் நின்று கொண்டிருந்தனர். முகத்தில் ஏதோ சோகம் இருந்தது.

"ஆண்டி, மோகன் எங்க?" ரம்யா கேட்க,

மோகனின் அம்மா அழ ஆரம்பித்தார்.பத்து நாட்களுக்கு முன் கடலில் நீச்சலடிக்கப் போனவன் வெறும் உயிரற்ற சடலமாகத் திரும்பினான் என மோகனின் அப்பா சொன்னார்.

ரம்யாவுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. அப்படியே அருகில் இருந்த நாற்காலியில் சரிந்தாள். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
ஏதேனும் விபரீதம் நிகழும் முன் ஜெனியை அழைத்துக் கொண்டு ஊருக்குப் போய் விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே கல்லூரியில் இருந்து விடுதிரும்பும் போது, ரம்யாவின் கைத்தொலைபேசி மணி அடித்தது..

"ஹலோ, ரம்யா, நான் கார்த்தி பேசுறேன், மோகனைப் பத்தி ஒன்னு சொல்லனும்,"

ரம்யாவுக்கு வியர்த்துக் கொட்டியது.

"எல்லாம் எனக்குத் தெரியும்.,, பிளீஸ் இனி போன் பண்ணாதே... எங்களை விட்டுடு"

அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாக பிள்ளையார் கோயில் நெருங்குகையில்,

அய்யோ.. அங்கு மோகன் , கார்த்தி ஜெனி மூவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.மூவரும் ஒரே சமயத்தில் ரம்யாவைத் திரும்பிப் பார்த்து மெலிதாக சிரித்தனர்.

"கடவுளே... அங்க யாரும் இல்லை சும்மா பிரமை... இன்னைக்கு நைட் நல்லா தூங்கிட்டா சரி ஆயிடும்..." என தனக்குத் தானே நினைத்தபடி வேகமாக ரம்யா விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். விடுதியில் ரம்யாவின் அறை முன் பதட்டமாக விடுதி பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

------முடிந்தது-------

Saturday, October 20, 2007

ஜாகிர்கான், முரளிகார்த்திக் வெற்றி பார்ட்னர்ஷிப், - வீடியோ

வெற்றிக்கு இன்னும் 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ,பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிகார்த்திக் ஜாகிர்கானுடன் இணைந்து இந்தியாவை ஆறுதல் வெற்றி அடைய செய்தார்.இவர்கள் ஆடிய ஆட்டம் சில வருடங்களுக்கு முன்னர் பெங்களூரில் ஜவஹல் ஸ்ரீநாத்தும் அனில் கும்ப்ளே 9வது விக்கெட்டுக்கு இதேபோல் 50 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற செய்ததை நினைவுப் படுத்தியது.பிரெட் லீ ஜாகிர் கானை வம்பிழுக்க , ஜாகிர் கான் அடுத்த பந்தை தேர்ந்த பேட்ஸ்மேன் சிக்ஸருக்கு செலுத்தும் காட்சியும் உண்டு.வர்ணனையாளார் சிவராமகிருஷ்ணன் , நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியும் , என்று அந்த பெங்களூர் ஆட்டத்தை நினைவுப்படுத்துகிறார்.வெற்றிகான ரன்களை அடிக்கும் வீடியோ கீழேநன்றி : http://www.crickethighlights.info/

Wednesday, October 17, 2007

மும்பை வான்கடே மைதானமும் , முரளி கார்த்திக் மற்றும் ஆஸ்திரேலிய அணியும்


முரளி கார்த்திக் , ரயில்வே அணிக்காக முதற்தர போட்டிகளில் விளையாடிய இவர், 2000 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக முதன்முறையாக பன்னாட்டு கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
கங்குலி கேப்டனாக இருந்தபோது, அவருக்கு இடது கைசுழற்பந்து பந்து வீச்சாளர்களின் இருந்த மேல் நம்பிக்கையின்மையினால் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படவில்லை. இருந்த போதிலும் சோர்வடையாமல் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார்.
இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணம் 2004 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வந்தது, முதற் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 3 விக்கெட்டுக்களயும் வீழ்த்தி இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்ட வீடியோ இதோஇன்று, மும்பை வான்கடே மைதானத்தில் மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்துவிட்டார் முரளி கார்த்திக். இந்த முறை ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கடைசி ஒருநாள்போட்டியில் ஆறுதல் வெற்றி அடையக் காரணமாய் இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுவிட்டார். பாராட்டுக்கள் முரளி கார்த்திக்


Tuesday, October 16, 2007

கற்கை நன்றே - சிறுகதை

ரம்யாவுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள், சரி அவளுக்கு ஒரு புத்தகம் வாங்கி அதை பிறந்த நாள் பரிசாகக் கொடுக்கலாம் என்று நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் அந்த புத்தகக் கடையினுள் நுழைந்தேன். ரம்யாவுக்கு "Fiction" வகையான புத்தகங்கள் பிடிக்காது. சரி, கலை, கலாச்சார வரலாறு சம்பந்த பட்ட புத்தகங்கள் எதாவது வாங்கலாம் என்று தேடினேன்.

பெரிய புத்தக மையங்களில் இது தான் பிரச்சினை .. எதை வாங்குவது, எதை விடுவது... சடாரென சுதா மூர்த்தியின் "Wise and other wise" கண்ணில் பட்டது. புத்தகத்தை எடுத்து பின் அட்டையைப் பார்த்தேன் . சுவாரசியமாகத்தான் இருக்கும் போல இருந்தது, அதை கையில் எடுத்துக் கொண்டு, தமிழ் புத்தகங்கள் இருக்கும் பிரிவிற்கு வந்தேன்.

தமிழ் பிரிவில் ஆன்மீகப் பகுதியில் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் அதிகம் பேர் தென்பட்டனர். ம்ம் மக்களின் ஆன்மீகத் தேடல் அதிகம் ஆகிவிட்டது என நினைத்துக்
கொண்டே தமிழ் புதினங்களை நோட்டமிட்டபடியே வந்த பொழுது , ஒடிசலான தேகத்துடன் , ஏழ்மை உடையில் தெரிய ஆனால் முகத்தில் படிப்புக் களையுடன் ஒரு பையன், 20, 21 வயது இருக்கும். சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடியே ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்.

நீண்ட நாட்களாகவே அந்த புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தேன். வேறு ஏதேனும் பிரதி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன் . ம்ஹூம் இல்லை.

நான் மிகவும் தயங்கியபடி, அந்த பையனிடம்

"தம்பி, நீங்க இந்த புக்கை வாங்கப் போறிங்களா, "

"இல்லை சார், சும்மா பார்த்துட்டு இருந்தேன், உங்களுக்கு வேணுமா?" அவன் சொல்லும்போதே ஒரு வருத்தம் தெரிந்தது.

"யெஸ், வாங்கலாம்னு இருக்கேன்" என்றேன் நான்.

"ஒரு டென் மினிட்ஸ் தர்றீங்களா, இந்த அத்தியாயத்தில 3 பேஜ் பாக்கி இருக்கு, வாசிச்சுட்டு தந்துடுறேன் சார்"

10 நிமிடத்திற்கு முன்னதாகவே அந்தப் பையன் என்னிடம் கொடுத்தான்,

"சார், இந்த புக் வாங்கிட்டு போகலாம்னுதான் ஆசை சார், புக் கொஞ்சம் காஸ்ட்லி, நானுறு ரூபாய் கூட எனக்குப் பெரிய விசயம்"

அவனுக்கு உம் கொட்டிக்கொண்டே பணம் செலுத்தும் இடத்தை நோக்கி நகர்ந்தேன்.

"வாரத்தில இரண்டு நாள் சாயங்காலம் வந்து கொஞ்சம் கொஞ்சமா வாசிச்சுட்டு இருந்தேன்... கால்வாசி தான் முடிச்சு இருக்கேன், இன்னொரு காப்பி எப்போ வருதோ..."

ஏதோ அவனுக்கு சொந்தமான பொருளை நான் தூக்கிச் செல்வது போல விஷ்ணுபுரம் புத்தகத்தையேப் பார்த்து கொண்டிருந்தான்.

பணம் செலுத்திவிட்டு அந்த பையனை தேடினேன். அந்த புத்தகக் கடையின் மேலாளர் அவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

முன்பைவிட சோகமாக வெளியே வந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தன.

நான் அவனைக்கூப்பிட்டு

"அந்த மானேஜர் என்ன சொன்னார்?"

"புக் வாங்குறதுன்னா வா, சும்மா ஓசில வந்து படிச்சுட்டுப் போக வராதே... இது லைப்ரரி இல்லைன்னு சொன்னாரு சார்"

"நீ என்ன படிக்கிற"

"எம்.ஏ தமிழ் சார், பர்ஸ்ட் இயர்"

"ம்ம் சரி, இந்த புக்கை நீ படிச்சுட்டு எனக்குக் கொடு" என சொல்லி புத்தகத்தின் முதற் பக்கத்தில் என் அலுவலக முகவரியைக் எழுதிக் கொடுத்தேன்.

"சார், இல்லை வேண்டாம் சார்.. "

"இட்ஸ் ஓகே , நீ படிச்சுட்டு மறக்காம திரும்பக் கொடு" என அந்த தடிமனான புத்தகத்தை அவன் கையில் தந்துவிட்டு அவ்விடத்தை விட்டுக் கிளம்பினேன்.

ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. அந்த பையன் இடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. 400 ரூபாய் பெரிய விசயமாக எனக்கு இல்லாததால் அவன் புத்தகத்தை தராமல் ஏமாற்றினாலும் பெரிய நட்டமில்லை என்று அதைப் பற்றி யோசிப்பதே இல்லை.

ஒரு நாள் மாலை, மணி 5 இருக்கும், எனது அலுவலக வரவேற்பாளர் , என்னைப்பார்க்க ஒருவர் வந்திருப்பதாகக் கூற மாடியில் இருந்து கீழே வந்தேன்.

அட அந்த பையன்.கையில் புத்தகத்துடன் என்னைக் கண்டவுடன் எழுந்து நின்றான்.

"சாரி, சார் ரொம்ப நாள் ஆக்கிட்டேன். இந்த முழுபுத்தகத்தையும் நிறைய ஒரு குயர் நோட்டு வாங்கி, எல்லாத்தையும் எழுதிட்டேன் அதுதான் உங்க கிட்ட ரிடர்ன் பண்ண லேட்டாகிடுச்சு சார்"

அவன் என்னை ஏமாற்றிவிட்டானோ என்று மனதில் நினைத்துக் கொண்டதற்கு என்னை நானே கடிந்து கொண்டேன்.

அவனை முதுகில் தட்டி பாராட்டிவிட்டு, "சரி வா, ஒரு இடத்திற்குப் போய்ட்டு வரலாம்" என்று அவனை என் காரில் ஏற்றி நேராக அவனை அந்த புத்தக நிலையத்திற்கு கூட்டி வந்தேன்.

அவனுக்கு விருப்பமான சில புத்தகங்களை வாங்கி கொடுத்து ,

"இதை எல்லாம் நோட் புக்ல எழுதாதே, எல்லாம் உனக்குத்தான், நல்லா படி, உன்னோட ஆர்வமும் உன் அறிவும் நீ படிக்கிற தமிழும் உனக்கு நல்ல பேர் வாங்கித்தரும் " என அவனை தட்டிக்கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நான் வீட்டிற்கு போவதற்கும், அங்கு ஏற்கனவே நான் வரச்சொல்லி இருந்த கொத்தனார் வருவதற்கும் சரியாக இருந்தது.

"சார் இந்த திண்ணையை, லெஃப்ட்ல பாதி இடிச்சுட்டா போதும், கார் ஷெட் ரெண்டு நாள்ல முடிச்சுடலாம்."

"வேண்டாம், கார் ஷெட் வேண்டாம், திண்ணை அப்படியே இருக்கட்டும், திண்ணையை சுத்தி சுவர் கட்டிடுங்க"

கொத்தனார் போன பிறகு ரம்யாவைக் கூப்பிட்டு

"நாளைக்கு புக்ஸ் வைக்கிற மாதிரி நாலும் ஸ்டீல் ஸெல்ஃப்ஸ அண்ணாச்சி கடையில ஆர்டர் பண்ணிடு, அப்படியே மாடியில இருக்கிற டேபிள்ஸை , சுவர் கட்டின பிறகு திண்ணையில கொண்டாந்து போட்டுடு"

ரம்யா என்னை ஒரு குழப்பமான பார்வையுடன் பார்த்தாள்.

"நம்ம கிட்ட இருக்கிற புக்ஸை இங்க கொண்டாந்து வச்சு ஒரு மினிலைப்ரரி ஆக்கிடுவோம், உள்ளே அலங்காரமா இருக்கிறதைவிட இங்க நாலு பேருக்குப் பயன்படுறமாதிரி இருக்கட்டும். வீக் எண்ட்ஸ்லேயும் ஈவ்னிங்லேயும் நம்ம தெருவில இருக்கிற படிக்கிற பிள்ளைங்க பயன்படுத்திக்கட்டும், என்ன ரம்யா நான் சொல்றது கரெக்ட் தானே!"

ரம்யாவுக்கே உரித்தான புன்னகையுடன் நான் சொன்னதை அவள் ஆமோதித்தாள்.

Monday, October 15, 2007

கன்னடம் - தமிழ் - ஹிந்தி - இளையராஜா

இசையை எந்த மொழி வடிவில் கேட்டாலும் இதயத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கும். அதிலும் இளையராஜாவின் இசையை சொல்லவே வேண்டாம். இந்த குறிப்பிட்ட இசை வடிவமைப்பு மூன்று மொழிகளில் வெளிவந்து மூன்றிலும் சக்கைப் போடு போட்டது.

1980 ஆம் ஆண்டு வெளிவந்த "கீதா" என்ற கன்னடப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த "ஜோதியளி" எனத்தொடங்கும் இந்த பாடல் கன்னட ரசிகர்களால் பெரிதும் இன்றும் விரும்பிக் கேட்கபடும் பாடல்.
எஸ்.பி.பி ஜானகி இருவரின் குரலுக்கு வாயசைத்து நடித்து இருப்பவர்கள் சங்கர்நாக், அக்ஷதாராவ்.

1984 ஆம் ஆண்டு, மணிவண்னன் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்திற்கு இளையராஜா இதே மெட்டைப் பயன்படுத்தி விழியிலே எனத்தொடங்கும் பாடலை அமைத்திருப்பார். அதே எஸ்.பி.பி ஜானகி குரலுக்கு வாயசைத்து நடித்தவர்கள் மோகன் நளினி.

முதன் முறையாக இசையமைத்து 27 வருடங்களுக்குப் பிறகு இதே பாடல், பல விளம்பரப் படங்களை இயக்கிப் புகழ் பெற்ற பாலகிருஷணன் என்ற பால்கி இயக்கிய சீனிகம் என்ற ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சன் , தபு நடிக்க ஸ்ரேயா கோஷலின் குரலில் மீண்டும் இசை ரசிகர்களின் செவிகளில் தவழத்தொடங்கியது. மெட்டை மாற்றாமல் ஆனால் புதிய பின்னணியை சேர்த்து இளையராஜா இந்தப்பாடலை அட்டகாசப்படுத்தி இருப்பார்."புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே!!" என ஒரு பாடலில் இளையராஜா வருவார். பழைய ராகங்களை அதன் சுவை மாறாமல் மறு அவதாரம் தருவதும் பெரிய விசயமே. இளையராஜாவின் காலத்தில் நாமும் இருப்பது நமக்குப் பெருமையே

தமிழ் கன்னட வீடியோக்களை வலையேற்றி வைத்திருந்த vasanthfriend அவர்களுக்கு நன்றி

ஹிந்திப்பாடலுக்கா veerpradeep அவர்களுக்கு நன்றி

உன் கனவு என் நினைவு - சிறுகதை

தலைவலியாக இருந்ததனால், சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிட்டேன். வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மாத்திரைகளை விழுங்கும் பொழுது, சின்ன உள்ளுணர்வு.. யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல். சன்னல் திரைச்சீலைகளை விலக்கிப் பார்த்தேன். வீட்டிற்கு வெளியே யாரும் இல்லை.
"ம்ம், தலைவலியுடன் கூட இருந்த உடற் அயற்சியினால் ஏற்பட்ட பிரமையாக இருக்கும். “ என நினைத்துக் கொண்டேன்.

தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி ஓடைகளை மாற்றி மாற்றி பார்க்கும் பொழுது, மீண்டும் அதே உள்ளுணர்வு, யாரோ மிக அருகில் என்னை உற்றுக் கவனிப்பது போல... பாசத்துடன் உற்று நோக்குவதாக... யாரோ என் கண்களுக்குத் தெரியாமல் என்னிடம் எதோ சொல்ல முயற்சிப்பதாக அந்த உள்ளுணர்வு சொல்லியது.

என்னையும் அறியாமல் ஒரு பயம் மனதைக் கவ்விக் கொண்டது. வெந்நீர் வைத்துக் குளித்துவிட்டு அருகில் இருந்த கோவிலுக்குப் போனேன். யாரோ என்னைப் பின் தொடர்வது போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன் யாரும் நூறடி தூரத்திற்கும் என் பின்னே நடந்து வரவில்லை.

வேகவேகமாக கோவிலுக்குள் நுழைந்தேன். கோவிலில் சாமி கும்பிடும்போதும், அந்த உணர்வு தொடந்தது. யாரோ எனக்கு இடப்புறம் நின்று என்னுடன் சேர்ந்து கைக்கூப்பி சாமி கும்பிடுவது போல இருந்தது. கடவுளே!!! கோயிலில் கூடவா,

திடிரென உரைத்தது... யாரவது நமக்கு நெருக்கமானவர்கள் இறந்துவிட்டால் , அவர்களின் உயிர் பிரியும்பொழுது நாம் அவர்களுடன் இல்லை என்றால் நம்மை தேடி வருவார்கள் என்று என் பாட்டி சொல்லக் கேட்டு இருக்கேன்.

கோவிலை விட்டு வெளிவந்தவுடன், முதல் வேலையாக வீட்டிற்குக் கூப்பிட்டு அம்மா , அப்பா தம்பி எல்லோரிடமும் பேசிய பின் தான் எனக்கு மீண்டும் மூச்சு வந்தது போல இருந்தது. என்னோட அலுவலக மனேஜருக்கும் தொலைபேசினேன். நல்ல வேளை அவருக்கும் எதுவும் இல்லை. என்னை முக்கியமாக நினைக்கும் என் சில நண்பர்களிடமும் பேசினேன்.

யாரேனும் விட்டுப் போய் இருக்கிறார்களா!!! ஒரு வேளை ஜெனியாக இருக்குமோ!! ஜெனி நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட பெண் இரண்டு வருடத்திற்கு முன் அவளுக்கு கல்யாணம் ஆகி அமெரிக்காவில் குடிபெயர்ந்துவிட்டாள். கடைசியாக அவளின் கல்யாணத்தின் போது கோயம்புத்தூரில் பார்த்தது. அதன் பிறகு அவளை நான் தொடர்பு கொள்ளவில்லை. அவளும் தான்.

அடுத்து ரம்யாவின் ஞாபகமும் வந்தது. வீட்டிற்குக் போக மனமில்லாமல் மீண்டும் அலுவலகத்திற்கே வந்தேன். ரம்யாதான் என்னோட இப்போதைய விருப்பம். அவளிடம் என் திருமண விருப்பத்தைச் சொல்ல ஒரு நல்ல நேரத்தை எதிர்பார்த்துக் கொன்டிருக்கிறேன். ரம்யா அவளது இருக்கையில் அமர்ந்து சுவாரசியமாக ஆர்குட்டில் தனக்கு வந்த "ஸ்கிராப்புகளை" பார்த்துக் கொண்டிருந்தாள்.

நானும் ஆர்குட்டிற்குப் போய் நீண்ட நாட்கள் ஆகிறது, ஆர்குட்டினுள் நுழைந்தேன். ஒரு புதிய நட்பு அழைப்பு கிடந்தது.... அட, அது ஜெனிபர் வேதநாயகம் ...அவளிடம் இருந்து ஒரு ஸ்கிராப்பும் வந்து இருந்தது அவளின் புரைபைல் போய் பார்த்தேன்... அவளின் கணவன் ஒரு வயதுக்குழந்தை ஆகியோருடன் ஜெனி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்திருந்தாள். ம்ம்ம் அவளின் சந்தோசத்தை அந்தப் புகைப்படங்கள் உறுதிபடுத்தின.

அவளின் ஸ்கிராப்பிற்கு பதில் அனுப்பினேன். உடனடியாக பதில் வந்தது. அவள் தன்னுடைய ஜிடாக் ஐடியைத் தந்து , சாட்டிற்கு வருமாறு அழைத்தாள்.

உடனே ஜிடாக்கில் அவளை இணைத்து,

“ஹலோ ஜெனி, எப்படி இருக்க"

“நல்லா இருக்கேன் கார்த்தி , you know, just got up from my bed, உன்னைப் பத்தி ஒரு கனவு வந்து தூக்கத்தை கலைச்சிடுச்சு , அந்த கனவு என்னன்னா, நீ ஒரு வீட்டில் தனியாக இருக்கிற, அங்க வந்து நான் உன்னைப் பார்க்கிறேன், நீ என்னைக் கண்டுக்க மாட்டுற, உன்னை ஃபாலோ பண்றேன்,, நீ என்னை திரும்பிப் பார்த்துட்டு போயிடுறஅப்புறம் வேற சிச்சுவேஷன்ல நீ கோயில்ல இருக்க ..அங்கேயும் என்னை நீ கண்டுக்கல, “

“ம்ம்ம்ம்"

"ரொம்ப நாள் கழிச்சு உன் ஞாபகம் வந்துடுச்சு, ஆர்குட்ல நீ இருப்பேன்னு தேடிப் பார்த்தேன்.. சர்ப்ரைஸா உன்னைத் திரும்ப கண்டுபிடிச்சுட்டேன், சரி நீ எப்படி இருக்க?!!"

அவள் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.

=========== முடிந்தது======

Wednesday, October 10, 2007

வெளிர்நீலநிற முழுக்கை சட்டை - சிறுகதை

சலவைக்கு கொடுத்து வாங்கிய துணிகளை அடுக்கி வைக்கும்பொழுதுதான் அந்த வெளிர்நீலநிற முழுக்கை சட்டை என் கண்களில் பட்டது. அந்த சட்டையைப் பார்த்தாலே எனக்கு அலர்ஜி. எப்பொழுது அந்த சட்டை அணிந்தாலும் , அன்றைய பொழுது எனக்கு துரதிர்ஷ்டமாகவே அமையும்.ஒன்று அலுவலகத்தில் திட்டு வாங்குவேன் இல்லை ஏதாவது பிரச்சினையில் வசமாக சிக்கிக் கொள்வேன், பலமுறை அந்த சட்டையை அணியும் பொழுதெல்லாம் இப்படி நிகழ்ந்து விடுவதால் , அந்த சட்டையைப் பார்த்தாலே எனக்கு ஒரு நடுக்கம் வந்துவிடும்.யாரிடமாவது கொடுத்துவிடலாம் என்று நினைத்தாலும், ரம்யாவின் நினைவாக அது ஒன்றுதான் இருப்பதால் எனக்குக் கொடுக்கவும் மனமில்லை.

பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் என் பிறந்த நாளுக்கு அவள் பரிசளித்தது. அந்த சட்டையின் பையில் அவள் "karthi" என்று ஒரு எம்பிராய்டரி ஒன்றை தன் கைப்பட செய்து கொடுத்து இருந்தாள். யார் கண் பட்டதோ, அந்த சட்டை பரிசளித்த அடுத்த வாரம், அதை அணிந்து கொண்டு , நான் அவளிடம் "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று புரொபோஸ் பண்ண, "உன்னால் ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன், நீயும் என்னை
தோழியாக இழந்துவிட்டாய்" என்று ஆங்கிலத்தில் கோபமாக சொல்லிப் போனவள் அதன் பின் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. நான் அனுப்பிய ஒரு மின்னஞ்சலுக்கு
"I dont want to talk to mad people" என்று அவள் பதில் அனுப்பிய பின் நானும் அவளை தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டேன்.

ஆயிற்று 6 மாதங்கள் நானும் மெட்றாஸ் வந்து, ரம்யாவும் மெட்றாஸில் தான் இருப்பதாகவும், சத்யம் தியேட்டரில் பார்த்ததாகவும் என் சீனியர் மோகன் ஒரு முறை ஜிடாக் சாட்டில் சொன்னார்.

"நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம், இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம், வருங்காலம் வசந்தகாலம் , நாளும் மங்களம்" என்று நிழல்கள் பாட்டு என் கைத்தொலைபேசியில் பாட நிகழ்காலத்துக்கு வந்தேன்.

"ஹலோ, சொல்லுப்பா"

"கார்த்தி, நாளைக்கு ரவி மாமாவோட பையன் இண்டர்வியூக்கு வர்றான், உன் அட்றஸ்தான் கொடுத்து இருக்கேன், வீட்டிலே தங்க வச்சுக்கோ"

"சரிப்பா" என கைத்தொலைபேசியை துண்டித்தேன்.

இந்த ரவி மாமா என் சொந்த மாமாவெல்லாம் இல்லை, என் அப்பாவின் பால்ய தோழர், சின்ன வயதில் இருந்தே அவரை அப்படிக் கூப்பிட்டு பழகிபோய்விட்டது. எங்க வீட்டுக்கு ரவி மாமா வந்தாலே ஏதாவது கடன் வாங்கத்தான் வருவார். அவராலேயே என் அம்மா அப்பாவிற்கு இடையில் அடிக்கடி சண்டை வரும். இந்த சண்டைகளுக்கு காரணகர்த்தாவாக அவர் அமைந்துவிடுவதால் அவரை எனக்குப் அவ்வளவாக பிடிக்கவே பிடிக்காது. ரவி மாமாவின் பையன் எப்படியோ இஞ்சினியரிங் முடித்து ஒரு நேர்முகத்தேர்வுக்காக, நாளை இங்கு வருகிறானாம்.

மறுநாள் விடிந்தும் விடியாததுமாய் , வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
கசங்கிய சட்டையுடன், கண்களில் பயணக்களைப்புடன் ரவி மாமாவின் பையன்..

"வா, உள்ள வா,"

செருப்பை வெளியே கழட்டிப்போட்டவனை, "பரவாயில்லை உள்ளே வந்து கழட்டிப்போடு" என்றேன். கண்களில் ஒரு வித மிரட்சியுடன் உள்ளே வந்தான்.
அவன் மிரண்ட விதம் , என்னை எனக்கு ஞாபகப்படுத்தியது.நானும் முதன்முறை பெங்களூருக்கு வேலைக்காகப் போனபோது இப்படித்தான் பயந்து பயந்து என் பெரியம்மா பையன் வீட்டில் தங்கினேன்.

"உன் காலேஜ்லே கேம்பஸ் இருக்குல்ல, " இந்த கேள்வி அவனை சங்கடப்படுத்தி இருக்கக்கூடும்.

"இருந்துச்சுண்ணே, மூன்று கடைசி ரவுண்டு வரை போய், கம்யூனிகேஷன் சரி இல்லைன்னு சொல்லிட்டாங்க, என்னோட பேட் லக்"

"டோண்ட் வொரி, இந்த டைம் உனக்கு நல்ல டைம் தான், குளிச்சிட்டு ரெடியாகு, மெஸ்லேந்து சாப்பாடு வரும்"

அவன் குளித்து வந்த பிறகு , அவன் பையில்ருந்து சட்டையை மடிப்புக்கலையாமல் எடுத்து வெளியே வைத்தான்.

அந்த சட்டை நேர்முகத்தேர்வுக்கு போட்டு செல்வதற்கு உகந்ததாக எனக்குத் தோன்றவில்லை.

அவனைக்கூப்பிட்டு நான் அடுக்கி வைத்திருந்த சட்டைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறு சொன்ன போது , மிகுந்த தயக்கத்துடன் ரம்யா கொடுத்த வெளிர்நீலநிற சட்டையை எடுத்து அணிந்து கொண்டான்.

அய்யோ இந்த சட்டை துரதிர்ஷ்டமானதே, என்று சொல்ல தோன்றினாலும், வேண்டாம், பையன் நல்ல விசயத்திற்குப் போகிறான். அதை சொல்லி அவனை மீண்டும் ஒரு முறை சங்கடப்படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

----
அன்று மாலை,கைத்தொலைபேசியில், ரவி மாமாவின் பையன்

"கார்த்தி அண்ணே, எனக்கு இந்த வேலை கிடைச்சுடுச்சு, "

"ஹே கங்கிராட்ஸ், நான் தான் சொன்னேன்ல, இந்த வேலை உனக்கு கிடைச்சுடும்னு"

அலுவலகத்தில் வேலை இருந்தும், அவனுக்காக சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட்டேன். ரவி மாமாவின் பையன் ஏக குஷியில் இருந்தான்.

"அண்ணே, இன்னக்கி எனக்கு கிடைச்ச ஃபீட்பேக், என்னோட கம்யூனிகேஷனை ஆபிஸ் என்விரான்மெண்ட் ல இம்ப்ரூவ் பண்ணிடலாம், நான் டெக்னிக்கலி ரொம்ப ஸ்ட்ராங்க்னு சொன்னாங்க... "

எனக்கும் சந்தோசமா இருந்தது. அவன் அன்றே ஊருக்குப்போவதற்கு பிடிவாதமாய் இருந்தான்.போவதற்கு முன்

"கார்த்தி அண்ணே, அந்த ப்ளூ கலர் சட்டையை நானே எடுத்துக்குவா, உண்மையிலேயே எனக்கு ராசியான சட்டை அண்ணே"

"ம்ம் சரி எடுத்துக்கோ" முழுமையான சந்தோஷத்துடன் சொன்னேன்

அவன் ஊர் போய் சேர்ந்தவுடன், ரவி மாமாவின் குடும்பமே என்னை தொலைபேசியில் கூப்பிட்டு நன்றி சொன்னது.. என்னவோ நானே வேலை வாங்கிக் கொடுத்தது போல.

அந்த வார இறுதியில், வடபழனியில் ஒரு கடையில்,

வார இதழில் ஒரு சாமியார் தொடராக எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பு புத்தகமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த போது,

எதோ பரிச்சயமான குரல்,

"டு யூ ஹாவ் மொழி சிடி" ஒரு இளம்பெண் கடை மேலாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்

அட, அது ரம்யாவே தான்,

போய் பேசலாமா, ஒரு வித தயக்கத்துடன் அருகில் போய் நின்று

"ஹலோ ரம்யா"

என்னை சற்றும் எதிர்பாராவிதமாய்,

"கார்த்தி, திங் ஆஃப் தெ டெவில் ... உன்னைப் பத்தி தான் நினைச்சுட்டு இருந்தேன்.... "

எனக்கு படு ஆச்சரியமாய் இருந்தது.

"ஜஸ்ட் எ செகண்ட், " அவள் மொழிப்பட சிடியையும் மீதி பணத்தையும் வாங்கி தனது கைப்பையில் போட்டுக் கொண்டு ,

"லெட்ஸ் கோ, உன்கிட்ட கொஞ்சம் பேசனும் , நீ எதாவது வாங்கனுமா, ஐ வில் வெயிட்"

"இல்லை , நாம போகலாம்"

அருகில் இருந்த ஒரு உணவகத்துக்குபோய் உட்கார்ந்தோம்.

"இந்த வீக் ஃபர்ஸ்ட் டைமா, நான் ஒரு கேண்டிடேட்டை இண்டர்வியு எடுத்தேன், பையன் டெக்னிகலி ஸ்ட்ராங், இங்கிலீஷ் கொஞ்சம் தடுமாறினான், பட் ஐ ஹேட் செலக்டட் ஹிம், நான் உனக்கு கொடுத்த சர்ட்டை வேற யாருக்காவது கொடுத்திட்டியா, அந்த பையன் அந்த ஷ்ர்ட் போட்டிருந்தான்... நான் உனக்காக கண் முழிச்சு போட்டுக் கொடுத்த கார்த்தி எம்பிராய்டரி டிசைன்.. ரொம்ப நாள் கழிச்சு உன் ஞாபகம் வந்துச்சு... உன் பழைய
மெயிலுக்கு மெயில் அனுப்பினேன் இட் வாஸ் பவுன்ஸ்ட் பேக் , ஓர்குட் ல கூட உன் பேர் போட்டு தேடுனேன்"

"இல்லை, நான் ஆர்குட்ல இல்லை... பழைய ஐடி எக்ஸ்பையர் ஆகிடுச்சு, நீ இண்டர்வியு எடுத்த பையன் என் அப்பாவோட பிரண்டோட பையன், அவன் நல்லா வருவான்..."

"யெஸ், ஐ யம் ஸ்யூர் அவன் டேலண்டட்... இன் ஃபேக்ட் நான் இண்டர்வியூ எடுக்க போறதுக்கு முன்ன, நீ அடிக்கடி சொல்லுவியே, டெக்னிகல் ஸ்கில்ஸ் இருந்தா போதும், இங்கிலிஷ் பெரிய அளவுக்கு எதிர்பார்க்க வேண்டியதில்லைன்னு, அதை ஞாபகம் வச்சுக்கிட்டேன்"

"ஸோ நைஸ் ஆஃப் யூ ரம்யா, "
ரம்யா படு சகஜமாகப் பேசினாலும், நான் கொஞ்சம் வார்த்தைகளை அளந்துதான் பேசினேன்.

"கார்த்தி, உன் மொபைல் நெம்பர் கொடு, நான் உன்னை இன்னக்கி நைட் கால் பண்றேன்"

என்னால் கனவா நினைவா என்று நம்ப முடியவில்லை, எல்லாம் தடாலடியா நடந்து முடிந்தது.

அன்றிரவு நானும் ரம்யாவும் நீண்ட நேரம் பேசினோம்... பேச்சின் முடிவில்,

"கார்த்தி, இந்த இரண்டு வருசத்துல நான் புரிஞ்சுகிட்டது known devils are better than unknown angels, உன் புரோபசலை கன்சிடர் பண்ணலாம்னு இருக்கேன், உனக்கு ஸ்டில் என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருந்தால் , நாளைக்கு நான் கொடுத்த ப்ளூகலர் சட்டை போட்டுட்டு வா, நான் புரிந்து கொள்கிறேன், நாளைக்கு அதே ரெஸ்டாரண்ட்ல ஈவ்னிங் 7 க்கு மீட் பண்ணுவோம்"

கடவுளே, என்ன இது, அதே நிற சட்டை போட்டுப்போகாமல் இருந்து, என் சம்மதத்தை சொன்னாலும் அவள் ஏற்றுக் கொள்வாள. இருப்பினும் அதே சட்டையை இன்றே ஊருக்குபோய் ரவிமாமா பையனிடம் இருந்து வாங்கி வரவேண்டும் என்று ஒரு வாடகைக்காரை அமர்த்திக் கொண்டு நேராக என் வீட்டிற்குகூடப் போகாமல் ரவி மாமா
வீட்டிற்கு போய் அந்த வெளிர்நீலநிற சட்டையை வாங்கிய போது அகில உலகயையும் நான் வென்றது போல ஒரு உணர்வு.

நல்ல வேளை சட்டையை சலவை செய்து வைத்திருந்தார்கள். அவர்களின் வீட்டில் என்னை ஒரு மாதிரிதான் பார்த்தார்கள். ஒரு சட்டைக்காகவா இவ்வளவு சிரத்தைஎடுத்து இவன் வருவான் என்று.

என் வீட்டில் குளித்து, நீல நிற சட்டையை பெருமிதத்துடன் அணிந்து கொண்டு, மதிய சாப்பாட்டை முன்னதாகவே முடித்துவிட்டு மீண்டும் அதே காரில் மெட்றாசை நோக்கி கிளம்பினேன்.

சீக்கிரம் போக வேண்டும் என்று கார் ஓட்டுனரை வேகமாக ஓட்டச்சொன்னேன். இரவு முழுவது தூங்காத அசதியில் இருந்த ஓட்டுனர், ஒரு நிமிடம் கண்ணசந்தார். எதிரே ஒரு லாரி, இடதுபுறமாக காரை ஒடிக்க முயற்சிக்க.. பலனில்லை... என் வெளிர்நீலநிற சட்டையில் சிவப்பு ரத்தம் படர ஆரம்பித்தது.

-----------முடிவு-------

Saturday, October 06, 2007

அஹங்காரே நகரே , அட்டகாசமான சிங்களப்பாடல்பாடற்தொகுப்பு : திவ்யபுரா(All my life)
பாடல் அமைப்பு ; ரணிது லங்கேஜ் , இராஜ் வீரரத்னே

2004 ஆம் ஆண்டில் வெளிவந்து, இலங்கையில் இளம் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்ட இந்த பாடல் பிபிசி யின் அதிகாரப்பூர்வ ஆசிய இசைப்பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டது. எம்.டிவி இந்தியா , வீ சேனல், ஜீ மியுசிக் சேனல்களின் வாயிலாக இந்தியாவில் ஒளிபரப்பு செய்யபட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றது, தமிழ் இடம்பெறும் சேனல்கள் மட்டும் பார்ப்பவர்கள் , எஸ்,எஸ் மியுசிக் சேனலில் இந்த பாடலைப் பார்த்து இருக்கலாம்.
இந்த பாடல் தான் ரனிது மற்றும் இராஜ் இருவருக்கும் பெரும் புகழை ஈட்டித்தந்தது. இசை மொழிகளைக் கடந்தது. அதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம்

நன்றி : www.youtube.com மற்றும் இந்தப்பாடலை வலை ஏற்றி வைத்து இருந்த kumaranworld