Tuesday, July 24, 2007

ஆறாவது மாடி - சிறுகதை

இரண்டு வார அலைச்சலுக்குப் பின் நகர எல்லைக்குள்ளேயே ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு கிடைத்தது,
வீட்டின் சொந்தக்காரர் லண்டனில் இருப்பதால், அவரின் மாமனார் கோவில்பட்டியில் இருந்து வந்து, சாவியை ஒப்படைத்தார். 6 வது மாடியில்தான் வீடு என்றாலும், ரம்யாவுக்கும், என் அம்மா அப்பாவுக்கும் வீடு பிடித்திருந்தது.

"கார்த்தி, பால்கனில இருந்து பார்த்தா டிரெயின் டிராக் தெரியுது,அந்த சைட் பாரு ஒரு ஸ்கூல் கிரவுண்ட்,இந்த சைட் பிஸி ரோடு இனி நல்லா பொழுது போகும், இங்கே இருந்து போட்டோஸ் ஆ எடுத்து தள்ளிடுவேன்"

இரண்டு படுக்கையறைகள் அட்டாச்ட் பாத்ரூம், சின்ன ஹால் மற்றும் ஒரு பால்கனி, ஓரளவுக்கு வசதியான வீட்டிற்கு மிகக்குறைவான வாடகையே வீட்டின் சொந்தக்காரர் தொலைபேசியில் சொன்ன போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

அம்மாவும் அப்பாவும் இரண்டு நாட்கள் எங்களுடன் இருந்து விட்டு ஊருக்கு சென்றுவிட்டனர். வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை வெளியேக் கூட்டிட்டுப் போ என்று அடம்பிடிக்கும் ரம்யா, கையில் கேமராவுடன் பால்கனியிலேயே செட்டில் ஆகி போட்டோக்களாக எடுத்து தள்ளிக் கொண்டிருந்தாள். இந்த ஒரு மாதத்தில் 10 ரோல்களை காலி பண்ணி இருக்கிறாள்.

"கார்த்தி, அடுத்த வாரம் எல்லாத்தையும் டெவலப் பண்ணனும், நான் எடுத்த போட்டோஸ் எல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும்"

மறுநாள் ஆபிஸ் விட்டு வீட்டிற்கு வந்த போது ரம்யா முகம் வாடிப் போய் இருந்தது.

"என்ன ஆச்சு, உடம்பு சரியில்லையா?"

"இல்லை, கார்த்தி. பக்கத்து வீட்டு ஆண்டி இன்னக்கி வீட்டுக்கு வந்து இருந்தாங்க, அவங்க ஒரு விசயம் சொன்னங்க, அதிலேந்து மனசு கஷ்டமாக இருக்கு, இந்த வீட்டிலே முன்னாடி குடி இருந்த ஒரு பொண்ணு இந்த பால்கனிலே இருந்து கீழே விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாளாம், நைட்ல அடிக்கடி ஒருவித அலறல் சவுண்ட் கேட்குமாம்"

"அப்படி எல்லாம் இல்லை ரம்யா, இங்க பாரு நாம குடி வந்து ஒரு மாசம் ஆகுது, எதாவது அசம்பாவிதமா நடந்து இருக்கா, பேய் பிசாசு எல்லாம் கிடையாதுமா.. நீ கவலைப்படாதே..."

அன்றிலிருந்து ரம்யா பால்கனி பக்கம் போறதேயில்லை. வீட்டைக்காலி பண்ணிடலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தாள். ஒரு நாள் துக்கத்தில் இருந்து எழுந்து ரம்யா அலற. வேறு வழியின்றி அவசரம் அவசரமாக வேறு வீடு பார்க்க ஆரம்பித்தேன்

தற்போதைய வாடகையை விட 1500 ரூபாய் அதிகமாக ஒரு வீடு கிடைத்தது. வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்கும் முன் எதாவது பேய், பிசாசு பயம் இருக்கா என்று வீட்டு உரிமையாளரிடம் நான் சிரியசாக கேட்க என்னை எரித்துவிடுவது போல பார்த்தார்.


பழைய வீட்டின் அட்வான்சை ரம்யாவை பயமுறுத்திய பக்கத்து வீட்டு ஆண்டியிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று லண்டனிலிருந்து வீட்டின் உரிமையாளர் சொல்லிவிட, ஆபிஸிலிருந்து சீக்கிரமாகவே கிளம்பி அங்கே போனேன். நாங்க இருந்த வீட்டைக் கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

"ஆண்டி, யார் குடி வர்றாங்க, "

"என் தம்பி தான் குடிவர்றான் கார்த்தி, அவனும் அவன் பொண்டாட்டியும் தைரியாசாலிகள் பக்கத்துலேயே இருக்கட்டுமேன்னு தான் நான் இங்கேயே வர்ற சொல்லிட்டேன்"

பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்கு மேல் அங்க நிற்க விரும்பாமல் சீக்கிரம் கிளம்பினேன்.

சே, என்ன உலகமடா இது, நல்லா இருக்கிற குடும்பத்திலே பயத்தைப் புகுத்தி, வீட்டைக் காலி செய்ய வைக்கும் கயவாளித்தனம்... வெறுப்பாய் இருந்தது.


வீட்டிற்குப் போகும் வழியில, டெவலப் பண்ணக் கொடுத்திருந்த போட்டோக்களை வாங்கி சரி்பார்க்கையில் ஐஸ்கத்தியை சொருகுவது போல் இருந்தது.

பால்கனியிலிருந்து எடுத்த போட்டோக்கள் சிலவற்றில் ஒரு வித வெள்ளை உருவம் போட்டோவின் நடுவில் இருந்தது. டெவலப் பண்ணியபோது ஏற்பட்டக் கோளாறா? அல்லது உண்மையிலேயே அந்த ஆண்டி சொன்ன விசயமா? போட்டோ டெவலப் பண்ணியவரிடம் கேட்கலமா? வேண்டாமா ?

இதைப் பற்றிக் கேட்க வேண்டாம் என்று மனதில் நினைத்துக் கொண்டு சிறு உதறலுடன், அந்த போட்டொக்களை மட்டும் தனியாக எடுத்து கிழித்துப் போட்டு மீதியை வீட்டுக்கு எடுத்து வந்தேன்.

Monday, July 23, 2007

Pay It Forward - சிறுகதை

"மோகன் டீ குடிக்க போகலாமா?"

RMCOBOL கம்பலைரில் மூழ்கி இருந்தவர், நான் கூப்பிடுவதைக் கேட்டதும் இருக்கையை விட்டு எழுந்து வந்தார்.

"கார்த்தி, மேலே கேண்டின் போய் மெஷின் ல குடிச்சிடலாமே, போயிட்டு வர எப்படியும் 20 நிமிஷம் ஆயிடுது, நேத்து பி.எம் கூட கேட்டாரு எங்க போயிட்டு வர்றீங்கன்னு"

"அந்த ஆளை விடுங்க, வீட்டிலேந்து ஃபிளாஸ்கில காபி எடுத்துட்டு வந்துடுறாரு, பிரச்சினை இல்லை, நாம தான் சுத்தம் பண்ணி பல நாள் ஆகிற மெஷின்ல குடிக்க வேண்டியாதா இருக்கு, தினமும் எப்படியும் 9 மணிவரை அந்த ஆளு நம்மளை உட்கார வச்சுடுறார்ல, இந்த டைமிங் எல்லாம் அதுல சரியா ஆயிடும் நீங்க வொரி பண்ணாதிங்க"

"கார்த்தி, நீ கிண்டல் பண்ற அந்த மெஷின் டீ, காபி சத்யம் லேயும் மாயாஜால் தியேட்டர்லேயும் 15 ரூபாய், தெரியுமா?"

மோகனை எப்படியோ பேசி, டீக்கடைக்கு இழுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மோகன் எங்க அலுவலக்த்திலேயே கொஞ்சம் வித்தியாசமானவர். நடுத்தர வயதைத் தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனாலேயே என்னவோ பெரும்பாலான நேரங்களில் அலுவலகத்திலேயே இருப்பார். மேஜையில் விவேகானந்தரின் புத்தகங்கள் இருக்கும். ஆனால் ஒரு நாள் கூகிளில் பெரியார் சம்பந்தபட்ட வலைத்தளங்களைத் தேடிக் கொண்டிருந்தார். இப்படி சில சமயங்களில் முரணாக தோன்றும் விசயங்களை செய்து கொண்டிருப்பார்.

ஒரு முறை இதைப் பற்றி நேரடியாகவே கேட்டபோது, “வாழுற கொஞ்ச நாள்ல எல்லாத்தைப் பத்தியும் தெரிஞ்சு வச்சுக்கலாமே, நிறைய மக்களால் ஒருவர் நிஜமாகவே நேசிக்கப்படுகிறார் எனும்போது அவரைப் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும் " என்றார்.

மோகனைப் பற்றிய எண்ணங்கள் என் மனதினுள் ஓடி முடிப்பதற்குள்ளாகவே நாங்கள் இருவரும் டீக்கடையை வந்தடைந்தோம்.

இரண்டு வடை, டீ வாங்கி கொண்டு தினத்தந்தியை மேய்ந்து கொண்டிருக்கையில்

"சார், நான் விழுப்புரத்தில ஒரு காலேஜில படிக்கிறேன், அடுத்த செமஸ்டர் ஃபீஸ் கட்டனும், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்" என்ற ஒரு குரல் கெஞ்சலாகக் கேட்க,

எளிமையான உடையில் ஒரு பையன் மோகனிடம் உதவிக் கேட்டுகொண்டிருந்தான்.
மோகன் கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அவனிடம் நீட்டி, நல்லா படி என்று தட்டி அனுப்பினார்.

டீக்கடையிலிருந்து திரும்பும் போது

“என்ன சார், கொஞ்சம் கூட யோசிக்காம பணத்தை எடுத்துக் கொடுத்திட்டிங்க, இந்த காலத்தில எல்லாம் ஃபிராடு , புதுப்புது டெக்னிக்கா கண்டுபிடிக்கிறானுங்க, என்கிட்ட மட்டும் கேட்டிருந்தான்னா அடிச்சே விரட்டி இருப்பேன்"

“கார்த்தி, நீ சொல்றது வாஸ்தவம்தான், 99 பேர் ஏமாத்திறான் என்பதற்காக ஒரு தகுதியான ஆளுக்கு உதவியை மறுத்துவிடக் கூடாது அது தான் என் எண்ணம்.நூறு பேர்ல ஒருத்தன் நம்முடைய சின்ன உதவினால ஒரு அடி வாழ்க்கையிலே முன்னேறுகிறான் அப்படின்னாலே பெரிய சந்தோசம்தான்,நாம மத்தவங்களுக்கு செய்யுற உதவி ஒரு நாள், நமக்கோ அல்லது நமக்கு வேண்டியவங்களுக்கோ திரும்ப எதாவது ஒரு வகையில் கிடைத்துவிடும்.“

எனக்கென்னமோ மோகன் சொன்னதுல உடன்பாடே இல்லை. ஒருத்தனை மிதிச்சுட்டு அவன் மேலே ஏறி முன்னேறி போய்கிட்டே இருக்கிற இந்த காலத்திலே இது எல்லாம் சாத்தியப்படாது .

இதே மாதிரி இன்னொரு நாள் நாங்க டீக்கடைக்கு போகும் வழியில் ஆபிஸ் முன்னாடி ஒருத்தன் அனுமார் வேசம் போட்டு கொண்டு பணம் கேட்டுக் கொண்டிருந்தான். ஒருத்தரும் காசு கொடுக்காம எரிச்சலுடன் அவனை விட்டு விலகிச் செல்வதிலேயே குறியாய் இருக்க மோகன் வழக்கம் போல பணம் கொடுத்தார்,

“என்ன சார், கடவுளுக்கு காணிக்கைக் கொடுத்திட்டிங்களா? கடவுளை எப்படி எல்லாம் பயன்படுத்துறாங்க பார்த்திங்களா?”

அவர் பதில் சொல்லவே இல்லை.

நாங்க கடைக்குப் போன சில நிமிடங்கள் கழித்து, அந்த அனுமாரும் வந்து சேர்ந்தார். நாலு வடை வாங்கி அரக்கப்பறக்க அவர் சாப்பிட்ட விதம் காலையிலே ஒன்றுமே சாப்பிடவில்லை என்று சொல்லியது. அனுமார் சாப்பிட்டுப் போகும்போது அவர் கண்களில் நன்றியுடன் மோகனைப் பார்த்தது சில விசயங்களை சொல்லாமலேப் புரிய வைத்தது.

அன்று மாலை,

“என்ன மோகன், நீங்க இந்த வாரம் நம்ம டீம் பிளான் பண்ண வீக் எண்ட் டூருக்கு வரலேன்னு சொல்லிட்டிங்க"

“இல்லை, கார்த்தி, பொதுவாக எனக்கு இந்த மாதிரி பொழுதுபோக்கு கொண்டாட்டங்களிலே நாட்டமில்லை, இந்த சனி ஞாயிறு வேறு சில வேலைகள் இருக்கு, யூ ஹேவ் அ நைஸ் டைம்"

திங்கள் கிழமை நாங்க வழக்கமா டீக்குடிக்கும் கடை அங்கில்லை. திடிரென்று காலி பண்ண சொல்லிட்டாங்களாம். அந்த ஆளு சனிக்கிழமையே கடையை காலி செய்துவிட்டு போய் விட்டதாக எங்க ஆபிஸ் செக்யூரிட்டி சொன்னார்.

வேறுகடைகள் எதுவும் அருகில் இல்லாததால் நானும் மோகனும் கேண்டின் போய் மெஷின் டீ குடித்தோம்.. ஒரு நாள் திடிரென்று மோகன் வேலையை விட்டு ராஜினாமா செய்தார். போதுமான அளவு சம்பாதித்து விட்டதாகவும், சில கனவுக் கடமைகளுக்காக கோயம்புத்தூர் போய் செட்டில் ஆகப் போவதாகவும் சொல்லி சென்றார். அதன்பிறகு அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். சிறிய அளவில் சமூகப்பணிகள் செய்து வருவதாக சொல்வார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஜெனியுடன் மாயாஜாலில் படம் பார்த்துவிட்டு நீலாங்கரை தாண்டி வந்து கொண்டிருந்த பொழுது திடிரென்று வண்டி பஞ்சர் ஆனது. வண்டியை தள்ளிக் கொண்டே சில மீட்டர்கள் வந்து கொண்டிருந்தபோது "சார், சார் " என யாரோ என்னைக் கூப்பிடுவதை கவனித்த ஜெனி என் முதுகைத் தட்டினாள்.

அட , அது எங்க ஆபிஸ் அருகே டீக்கடை வைத்திருந்தவர்,

“என்ன சார், நல்லா இருக்கீங்களா, இப்போ இங்க சின்னதா ரெஸ்டாரண்ட் வச்சு இருக்கேன், எல்லாம் மோகன் சார் செஞ்ச ஹெல்ப் தான். அங்க டீக்கடை காலி பண்ண சொல்லிட்டப்ப இங்க கடை போட பணம் கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டு இருக்கேன். என் வண்டியை எடுத்துட்டு போங்க சார், நாளைக்கு நான் உங்க வண்டியை பஞ்சர் போட்டுட்டு ஆபிஸ்ல கொண்டு வந்து விட்டுடுறேன்".

அவரின் ரெஸ்டாரண்டில் என் வண்டியை நிறுத்திவிட்டு அவரின் பைக்கை எடுத்துக் கொண்டேன். கடைப் பெயரைக் கவனித்தேன். “Pay it Forward”

“என்னது இது கடைக்கு இங்கிலிஷ் பேரு வச்சிருக்கீங்க"

“மோகன் சார் தான் இப்படி வைக்க சொன்னாரு, நான் வாழ்க்கையிலே வளரும்போது எனக்குக் கிடைத்த உதவிகளை நான் தேவைப்படுற மற்றவங்களுக்கு செய்யனும்னு சொன்னாரு, அதை அடிக்கடி ஞாபகப்படுத்துற விதமா இந்த பேரு"

மோகன் மேல் நான் மனதில் வைத்திருந்த மரியாதை பலப்பட்டதை இன்னும் உறுதியாக உணர முடிந்தது.

இந்த சம்பவத்திற்குப் பின் மோகனை நானே அடிக்கடி தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தேன். ஒரு முறை கோயம்புத்தூர் வர சொன்னார்.

அடுத்தடுத்த வாரங்களில் கோயம்புத்தூர் போகலாம் என்று நினைக்கும் பொழுதெல்லாம், ஜெனியுடன் செலவழிக்கும் வார இறுதிகள் முன்னுரிமைப் பெற்றது.

ஒரு வார இறுதியில் கடற்கரையில் நானும் ஜெனியும் இருந்த போது,

இரண்டு சிறுவர்கள் எங்கள் அருகில் வந்து என்னிடம் ஒரு அட்டையை நீட்டினார்கள் அதில் அவர்களிருவருக்கு வாய் பேச , காது கேட்க முடியாதென்றும் , படிப்புக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. நான் பாக்கெட்டிலிருந்து இரண்டு பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

அவர்கள் போன பிறகு ஜெனி என்னிடம்

“கார்த்தி, இது எல்லாம் ஃபிராடுங்க, பிச்சை எடுக்கிறதுல இதுவும் ஒரு டெக்னிக், நீ இல்லாம என்கிட்ட வந்து கேட்டு இருந்தால் அந்த கார்டை கிழிச்சு அந்த பசங்க தலையிலே போட்டிருப்பேன்"

நான் பதில் சொல்லாமல் மெலிதாக புன்னகைத்தேன். கோயம்புத்தூர் போகும்போது ஜெனியையும் கூட்டிட்டுப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். சிறிது நேரம் கடற்கரையில் இருந்துவிட்டு கிளம்பினோம். ஜெனியை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வரும் வழியில் ஒரு சிறிய ஸ்டேஷனரி கடையின் பெயர் பலகை அந்தக் கடையின் அருகே நிற்க வைத்தது.
கடையின் பெயர் Pay It Forward

Saturday, July 21, 2007

அம்மா

முன்பொரு சமயம் கௌதமின் தடலாடிப் போட்டிக்காக "அம்மா" என்ற தலைப்பில் எழுதியவை.

மொழி தெரியாத ஊர், உடல் நடுக்கும் குளிர், மடிக்கணினியை அருகில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கையில், அதை ஒருவன் எடுத்துக்கொண்டு ஓட, அவனை நான் துரத்தி முகத்தில் ஒரு குத்து விட்டவுடன் "அம்மா" என்ற அவனின் கத்தல், முதன் முறையாக ஒரு திருடனிடம் உட்கார்ந்து பேச வைத்தது,
------------------------------------------------
1. இ-கலப்பையை தரவிறக்கம் செய்க.
2. இ-கலப்பையை கணினியில் நிறுவவும்.
3. Alt + 2 தட்டச்சு செய்யவும்
4. ammaa - அம்மா
------------------------------------------------
நாளை முடிக்க வேண்டிய வேலைகள் இருப்பினும், அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்ற எனது சக ஊழியனுக்கு விடுப்பு வழங்கினேன், கடைசி காலத்தில் அம்மாவை சரியாக பராமரிக்காத நான்.

Sunday, July 15, 2007

நாங்க பேய் - ஒரு நிமிடக்கதை

சுடுகாட்டை அடுத்துள்ள ஒரு பாலத்தைக் கடக்கையில் இரண்டு இளைஞர்கள் எதிரே வர அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்ததும்,

"அண்ணே, உங்களை இந்த ஊரில பார்த்ததில்லையே, நீங்க ஊருக்குப் புதுசா?"

"ஆமாம் தம்பி, நமக்கு வெளியூரு, இந்த ஊரில சொந்தக்காரர் ஒருத்தரை கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்"

"சரிண்ணே!!, இந்த நேரத்தில எதுக்கு இந்த சுடுகாட்டுப் பாதையில வர்றீங்க, பேய் பிசாசுங்க எல்லாம் உலவுற நேரம்"

"என்ன தம்பி, நீங்க இரண்டு பேரும் இந்த நேரத்தில அதுவும் சுடுகாட்டுப் பக்கமா தைரியமா வர்றீங்க அப்படி இருக்க எனக்கு எதுக்குப் பயம்"

"அய்யோ அண்ணே!!! எங்களுக்குப் பயமெல்லாம் கிடையாது, நாங்க செத்துப் போய் ரெண்டு வருஷம் ஆச்சு, அந்த ரயில்வே டிராக்ல, பைக்ல கிராஸ் பண்றப்ப அடிபட்டு செத்துப் போயிட்டோம், அடிக்கடி இங்க வந்து நாங்க பழைய கதைகள் எல்லாம் பேசிக்குவோம் " என்றான் மற்றொருவன்.

அவர்கள் இருவரும் ஒரு முறை என்னை ஏளனமாகப் பார்த்துவிட்டு நமுட்டு சிரிப்புடன் கடந்து சென்றார்கள்.

அவர்கள் தூரத்து இருட்டில் காணாமல் போக, சின்னப் பசங்க, பயமுறுத்த வேண்டாம், என்று நினைத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து காற்றோடு காற்றாக மறைந்தேன்.

Wednesday, July 04, 2007

காதலியின் அண்ணன் - சிறுகதை

"யாரோ யாருக்குள் இங்கு யாரோ .... யார் தந்தாரோ" பாடல் தான் மதியக் காட்சி பார்த்துவிட்டு திரையரங்கத்திலிருந்து ஜெனியுடன் வெளிவருகையில் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

"ஜெனி, இங்கயே வெயிட் பண்ணு, காரை எடுத்துட்டு வந்துடுறேன்"

"ஹே கார்த்தி ஒரு நிமிஷம், அந்த கேட்டு பக்கத்துல எங்க அண்ணன் நிற்கிற மாதிரி தெரியுது... நான் ஆட்டோலேயே போய்க்கிறேன்"

ஆமாம், அங்கே ஒருத்தன் எங்களை முறைத்தபடி நின்று கொண்டிருந்தான். அட இவனை என்னோட தெருவில பார்த்திருக்க்கிறேனே..

"ஜெனி, யு நெவர் கீப் யுவர் பிராமிஸ், என்கூட டின்னர் சாப்பிடுறேன்னு சொன்ன"

"இல்லை கார்த்தி, இது சம்திங் சீரியஸ், உனக்கு ஒரு நாள் சொல்றேன், என் அண்ணனைப் பத்தி, பை பை"
--------

மறுநாள் எனது பழைய அலுவலகத் தோழி ரம்யாவுடன் மதிய உணவை அருகில் உள்ள நட்சத்திர உணவு விடுதியில் சாப்பிட்டு வெளியே வந்த பொழுது,
ஜெனியின் அண்ணன் தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு எங்களை இருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் எதேச்சையாக கவனித்தேன்.
அதன் பின் அடிக்கடி அவனை நான் பார்ப்பேன்..அவன் என்னை பின் தொடர்கிறானோ என்ற நினைப்பு ஆத்திரத்தை வரவழைத்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, கல்லூரித் தோழர்களுடன் கடற்கரையில் இருந்த போது சில அடி இடைவெளியில் மீண்டும் ஜெனியின் அண்ணன், என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். கடுப்புடன் அவனிடம் நேரடியாகவே எதற்கு என்னைப் பின் தொடர்கிறாய் என கேட்கவேண்டும் என்று வேகமாக அவனை நோக்கி நடக்கையில் ஜெனியின் தொலைபேசி அழைப்பு வந்தது.

"ஹலோ கார்த்தி, கொஞ்சம் வீட்டுக்கு வர்றீயா, அப்பா உன்கிட்ட பேசனும்னு சொல்றார், நம்ம விசயத்தை அப்பாக்கிட்ட சொல்லிட்டேன்"

"ம்ம்ம், அடுத்த ஹாஃப் அன் அவர்ல வர்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தவுடன் ஜெனியின் அண்ணனை தேடினேன். அவன் அங்கில்லை. தூரத்தில் போய் கொண்டிருந்தான்.


ஜெனியின் வீட்டில், அவளின் அப்பா எதிர்பார்த்ததை விட நட்பாகவே பேசினார்.

"கார்த்தி, நீங்க ஜெனி ஆபிஸ் ல சேர்ந்த அன்னக்கி செமையா ஜொள்ளு விட்டீங்களாமே" இது ஜெனியின் தங்கை நான்சி,

"நீங்க விடாது காதலா மூனு டைம் புரோபஸ் பண்ணக் கதையை அடிக்கடி சொல்லி சொல்லி சிரிப்பாள்" அவளே தொடர்ந்தாள்.

ஜெனி வீட்டிலே எல்லோரும் கலகலப்பாக பேசினார்கள். அவங்க வீட்டிலேயே இரவு சாப்பாடு சாப்பிட்டேன். ஜெனியின் அண்ணன் வரவே இல்லை. ஒரு வேளை ஒன்றுவிட்ட அண்ணனாக இருப்பானோ? வீடு திரும்பும் வழியில் எங்கேனும் தென்படுகிறானா என்று பார்த்தேன். ம்ஹூம் இல்லல.

மறுநாள் அலுவலகத்தில், ஜெனி தனது குடும்பப் புகைப்படங்கள் இருக்கும் ஆல்பத்தை கொண்டு வந்து மேஜையின் வைத்து ஒவ்வொரு படமாக விளக்கிக் கொண்டிருந்தாள்.

கடைசிப்படத்தைத் திருப்பும் போது அவளையறியாமல் கைநடுங்கியது,

"இது தான் எங்க அண்ணன் திலீப், என் மேலே கொள்ளைப் பாசம் அவனுக்கு, நான் நம்ம ஆபிஸ்ல சேருவதற்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் ஒரு ஆக்சிடெண்ட்ல எங்களை விட்டுட்டுப் போயிட்டான், யூ னொ சம்திங்,, அடிக்கடி அவனை நான் பார்க்கிற மாதிரி எனக்குத் தோணும், அப்போ எல்லாம் அவன் நேர்ல இருந்தா எப்படி நடந்துக்குவேனோ அப்படியே நடந்துக்குவேன். அன்னக்கி படம் பார்த்துட்டு வந்தப்பக்கூட அதே ஃபீல் ஏற்பட்டுச்சு, அதனாலதான் என்னையும் அறியாம நான் எங்க அண்ணன் நிக்கிறான்னு சொல்லிட்டு ஆட்டோல வந்துட்டேன்"

"ம்ம்ம்ம்ம்.."
இவன் தான் கடந்த சில காலமாக என்னை பின்தொடர்கிறான் என்பதை சொல்லி பாசத்தை பயமாக்க விரும்பாமல் அவளைத் தேற்றினேன்.

ஒன்று சொல்ல வேண்டும், ஜெனியின் வீட்டிற்குப் போய் திருமணத்திற்கு சம்மதம் வாங்கிய பின் ஜெனியின் அண்ணன் என் கண்களில் படுவதே இல்லை. ஜெனிக்கூட ஒரு முறை சொன்னாள் அவள் அண்ணனின் உருவம் இப்போதெல்லாம் மனதினில் தோன்றுவதேயில்லை என்று.

Sunday, July 01, 2007

ரசித்த ஆறு + ஆறு விசயங்கள்

எல்லோரும் எட்டு எட்டாய் அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்க, தாமதமாக பழைய "Sixer" ஒன்றை அடிக்க இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. திரு.டி.பி.ஆர் ஜோசஃப் வெகுநாட்களுக்கு முன்னர் எழுத அழைத்திருந்த ரசிக்கப்பட்ட ஆறு விசயங்கள் தொடர் பதிவு இதோ.

1. பேசும்படம் என்ற மவுனபடத்தில் கமல்ஹாசன் ஒரு பிச்சைக்காரரிடம் தான் வைத்திருக்கும் காசை சுண்டிவிட்டு பெருமையாகக் காட்டப் போக, அதற்கு அந்த பிச்சைக்காரர் தான் அமர்ந்திருக்கும் கோணியை நகர்த்தி ஏராளமான பணத்தைக் காட்டுவார். அதே பிச்சைக்காரர் இறந்துப்போக,பிணத்தை விட்டு பறக்கும் பணத்தின் பின்னால் மக்கள் போகும் காட்சியைப் பார்த்து கமல் திருந்துவார். இந்தப் படம் முழுவதுமே அழகிய கவிதைத்துவமான காட்சிகளால் நிரம்பியது.

2. நடுக்கும் குளிரிலும், பிரயாணக் களைப்பி்னால் சோர்வாக இருந்தாலும் தாஜ்மகாலைப் பார்த்த அந்த தருணங்கள், அந்த பிரம்மாண்டத்தின் முன்னால் அனைத்து சோர்வுகளும் பறந்துப் போயின.

3. வேலையை விட்டு போன பின்னரும், வாங்கிய 300 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுத்த பழைய வாட்ச்மேனின் நேர்மை.

4.என்னோட கதைளிலேயே நான் மிகவும் ரசித்து எழுதிய
இந்தக் கதை
சோர்வடையும் பொழுதெல்லாம் இந்தக் கதையை அடிக்கடி மறுவாசிப்பு செய்வதுண்டு.

5. காணமல் போன துரதிர்ஷ்டசாலி பெண்ணை, ஒரு துரதிருஷ்டசாலி நபரின் மூலம் கண்டுபிடிக்கும் La Chèvre என்ற பிரெஞ்சுப் படம்.

6. "உலக அழகி நான் தான் " என்ற பாடலுக்கு எண்ணெய் முகத்தில் வழிய, பிறப்பு படத்தின் நாயகி காட்டும் முகபாவங்கள்


Misc :

a. கதைகளில் ஜெனி கதாபாத்திரத்துக்கு என்னால் கொடுக்கப்படும் முகங்கள்
b. தமிழ்மணத்தின் புதியமுகப்பு
c. குட்டீஸ் ஹெல்மெட் போட்டுட்டுப் போனது
d. பெர்முடா அணியின் சுழல் பந்து வீச்சாளார் லெவரக்கின் கேட்ச்.
e. கிப்ஸின் ஆறு சிக்ஸர்கள்
f. "சீனி கம்" படத்தின் பாடல்கள்

இது சூப்பர் எட்டு இல்லீங்க .. சுமாரான எட்டுதான்

எட்டு தொடர் ஆரம்பித்த வாரத்திலேயே கப்பி பயலிடமிருந்து அழைப்பு வந்தது. பிறகு டி.பி.ஆர் ஜோசஃப் சார் , ராதா ஸ்ரீராம் ஆகியோரிடமிருந்து அழைப்பு வர, சரி இனியும் தாமதிக்கக் கூடாது ,உடனே பதியவேண்டும் என்ற எண்ணத்துடன் இதோ சுமாரான எட்டுக்கள்.

1. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

பொதுவிலோ அலுவலிலோ யார் எந்த எந்த விசயத்தை சிறப்பாக செய்வார்கள் என்று அனுமானித்து செயல்படுவது, பெரும்பாலும் அனுமானங்கள் சரியாகவே இருக்கும்.

2. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

பெரும்பாலும் கடும் - சுடு சொற்களை தவிர்ததுவிடுவது்.தன்னை சுடும் அதே
சொற்கள், பிறரையும் அதே அளவு சுடும்தானே... ஆகையால் பெரும்பாலும் நல்ல இனிமையான வார்த்தைகளுடனே பேச முயற்சிப்பது(நிறைய நேரங்களில் திகட்டினால் கூட)

3. இன்னாசெய் தாரை றுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

எதிரி என்று கருதப்படுபவருக்கு அன்போ/நல்லதோ செய்ய வாய்ப்புக்கிட்ட்டும்போது அதை தவறவிடுவதே இல்லை. இதை விட எப்படி சிறப்பாகப் பழி வாங்க முடியும்.

4. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

சிறிய உதவி என்றாலும் அவர்களை மறக்காமல் நினைவில் வைத்து, "Pay it forward" முறையில் வேறு யாருக்கேனும் அதை செய்ய சந்தர்ப்பம் அமையும்போது சரியாக செய்துவிடுவது அல்லது யாரால் செய்ய முடியுமோ அவரிடம் வழிகாட்டி விடுவது(over to point number one)

5. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

இவ்வுலகம் கட்டமைத்துள்ள பல "தீய" விசயங்களில் இருந்து விலகி இருப்பது.எது "potential" பிரச்சினை தருமோ அதிலிருந்து தள்ளி இருப்பது. இதுக்கு ஒரு "Exception" அடுத்தது..

6. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

சில நல்ல பொய்கள் அடிக்கடி சொல்லி பிறருக்கு நல்ல காரியங்கள் நடக்க ஒரு காரணியாக இருப்பதுண்டு.

7. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.

எதை விதைக்கிறமோ அதை நாம் தான் அறுவடை செய்தாக வேண்டும். இந்த பயத்தாலேயோ என்னவோ அடுத்தவருக்கு கேடு செய்யும் எண்ணம் எழும்பொழுதெல்லாம் அதை ஒரு கட்டுக்குள் வைக்க முடிகிறது.

8. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது யர்வு.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

அதிகபட்ச நேர்மறையான(Positive) எண்ணங்களுடன் தன்னையும் சுற்றம் இருப்பவர்களையும் வைத்துக்கொள்ள முயற்சிப்பது.

பெருமையாக நினைத்துக் கொள்ளும் இந்த எட்டு விசயங்களும் கடைசி வரை உடன் இருக்கவேண்டும் என்பதே அவா.


அடுத்து எட்டு போட போறவங்க

1.குழலி
2.முத்து(தமிழினி)
3.பூர்ணிமா
4.சென்ஷி
5.நந்தா
6.யோசிப்பவர்
7.சிவஞானம்ஜி
8.வெற்றி